ஈராறுகால் கொண்டெழும் புரவி – 6

[ 6 ]

இரண்டுமாதங்கள்வரை ஞானமுத்தனின் அந்த தோட்டத்துக் குடிசையிலேயே இருந்தார் பிள்ளைவாள். அந்த தோட்டத்தில் அவர் நட்டு வளர்த்த மலர்ச்செடிகள் இலைதழைத்து தளிர்விட்டு மேலெழுந்தன. சிலசெடிகள் மலர் சிரித்தன. தினமும் அதிகாலையில் எழுந்து அருகே உள்ள ஓடையில் இருந்து நீர் மொண்டு தோட்டம் முழுக்க நனைப்பார். அதன்பின் குளியல். அப்போது ஞானமுத்தன் வீட்டிலிருந்து உணவு வந்துசேர்ந்திருக்கும். அதைச் சாப்பிட்டுவிட்டு மரக்கூட்டங்களுக்குள் எங்காவது இலைநடனத்தைப் பார்த்துக்கொண்டு காற்றைக் கேட்டுக்கொண்டு வேளிமலையில் இருந்து பாண்டிநாட்டுக்கு தவழும் யானைப்படை போலச் செல்லும் மேகங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். மந்திரமும் நீறும் மறந்து மனம் வெட்டவெளியாகக் கிடந்தது. கற்றசாத்திரங்களும் உற்ற தத்துவங்களும் வரண்டு பஸ்மமாகக் காற்றில் பறந்துவிட்டிருந்தன.

மலைப்பாறையின் மௌனமான பொருளின்மையை மனம் அடைந்துவிட்ட நாட்களில் ஒன்றில் அவருக்குக் காய்ச்சல் கண்டது. காலையில் எழுந்தபோது உடம்பு கனமாக பாயில்படிந்திருப்பதை உதடு வரண்டுபோயிருப்பதை உணர்ந்தார். இருமுறை எழமுயன்றும் உடல் எடை தாளாமல் மீண்டும் படுத்துக்கொண்டார். மதியம் ஞானமுத்தனின் வேலைக்காரப் பையன் வந்து கஞ்சியை அருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டிருந்தான்.  அவர் கண்விழித்தபோது அதைக் கண்டாலும் கை நீட்டி எடுத்துக் குடிப்பதற்கு மனம்கூடவில்லை. அவ்வளவுதான் என்று தோன்றிவிட்டது. மனமாமி கனவாகி மாய்கையாய் உள்ளிருந்து நினைவாகி நின்ற நிலை நிறைவறியப்போகிறது. ஒரு வெறும் சருகு. அவ்வளவு இயல்பாக காற்றால் மரத்தில் இருந்து கொய்தெடுக்கப்படுகிறது. அவ்வளாவு சகஜமாக மண்ணில் பொருந்து மட்கியழியப்போகிறது.

இரண்டாம்நாள் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு அவ்வழிவருகையில் தோட்டம் காய்ந்துகிடப்பதைக் கண்டு ஜென்ஸி உள்ளே வந்து கதவை மெல்லத்தள்ளித் திறந்தபோது பாயில் தாடி காற்றில் பறக்க வாய்திறந்து பிள்ளைவாள் கிடப்பதைக் கண்டு ”ஏசுவே, ராசாவே” என்று வீரிட்டு மார்பைப் பற்றிக் கொண்டாள். ஓடிப்போய் வெளியே பார்த்து அப்பகுதியில் யாருமில்லை என்று உணர்ந்து திரும்பிவந்து பைபிளை ஜன்னல்படியில் வைத்துவிட்டு பிள்ளைவாள் அருகே குனிந்து அவரைத் தொட்டபோது அவரில்  உயிர்வெப்பம் இருப்பதை உணர்ந்தாள். பரபரப்புடன் திரும்பி மண்கூஜாவில் நீர் இருப்பதைக் கண்டு அதை அள்ளி அவர் முகத்தில்  வீசினாள்.

நீர்பட்டு கண்திறந்த பிள்ளைவாள் சிவந்த கண்களால் அவளை ஆயிரம் காதம் அப்பாலிருந்து பார்த்தார். அவள் ”சாமீ…சாமீ” என்று அவரைக் குலுக்கியபோது அவரது வாய் பிளந்து காய்ச்சலில் காய்ந்த நாக்கு வெளிவந்து வெடித்த உதடுகளை நக்கிச் சென்றது. அவள் கூஜாவை இடக்கையால் எடுத்தபடி வலக்கையால் அவரை மெல்லத்தூக்கி தன் மார்புடன் சேர்த்து நீர்விளிம்பை அவர் உதடுகளுக்குக் கொண்டுவந்தாள். குளிர்ந்த நீர் அவரது வரண்ட அகம் முழுக்க நனைத்து நனைத்து நனைத்து சென்று இறங்கித்தேங்கி நரம்புகளில் ஓடி சித்தத்தில் பரவி வெம்மை தணிவித்தது. மூச்சு வாங்க போதும் என்று கைநீட்டினார். திரும்பி கூஜாவை ஓரமாக வைத்தபோது அவள் கனத்த மார்பகமொன்று அவர் முகத்தை முட்டி அழுத்தியது.

பிள்ளைவாள் தன் உடலெங்கும் எழுந்த உயிரை, அவ்வுயிரின் மையமாக எழுந்த மூலாதாரபிந்துவை, அதில் திகழ்ந்த நாதத்தை உணர்ந்தார். மெல்லிய முனகலுடன் அவர் உடலில் ஒரு இறுக்கமும் வலிப்பும் கூடியது. சொற்களென பெருகிய சித்தத்தில் எங்கெங்கோ சிலம்பொலித்தது, கைவளை சிரித்தது. மணி மின்ன, அணி மின்ன, மலர் வாசமெழ, சாடைகள் ஆயிரம் சாயல்கள் ஆயிரமென எழுந்தெழுந்த அலைகளில் அவர் மீண்டும் மீண்டும் சொற்களையே அள்ளி அள்ளிக்குடித்துக்கொண்டிருந்தார். மங்கல செங்கலசந்திகழ் கொங்கை. நேரிழையாவாள் நிரதிசயானந்தப் பேருடையாள்! மணிகடல்யானை வார்குழல்மேகம் அணிவண்டுதும்பி வளைபேரி கையாழ்… இக்கணம் இக்கணம்….செல்லும் சதகோடிக் கணங்களை உண்டு தான் தானென்று நிற்கும் இக்கணம்.

பொன்னொளி கொண்டெழுந்தது ஏரிக்கப்பால் புதியதோர் சூரியன். ஏரியின் நீல அலைகளில் பாய்ந்து அடித்தட்டில் அலையடிக்கும் ஒளியில் துழாவிச் சென்றார். மென்கதுப்பாகச் சதுப்பு பரவிய அடித்தளத்தில் ஏதோ நுண்ணுயிர்களெழுதிய வரிகள். ஒவ்வொன்றையும் அப்போது தொட்டுத்தொட்டு வாசிக்க முடிந்தது. ஒவ்வொன்றிலும் அவர் வாழ்க்கை ஒவ்வொரு பக்கமாக எழுதப்பட்டிருந்தது. ”என்னாண்ணு இப்டி பாக்குதியோ? நேரமாகுதில்லா?” ”நேரமாகாத நேரமுண்ணு ஒண்ணுண்டா?” ”தொடங்கியாச்சு… இனி இதே பாடுதான். தெரியாமப்போச்சே”. ”என்ன தெரியல்ல?” ”உங்களுக்கு என்னத்துக்கு கெட்டினவளும் குடியும்? ஒரு துணியில படம்வரைஞ்சு கையில குடுத்தா போராதோ?” துணியில் ஓவியமெதற்கு, ஏட்டில் சொல்லோவியமிருக்கையில்? கண்டதையெல்லாம் காண்கையிலேயே சொல்லாக்கும் சித்தம் எனக்கிருக்கையில் நீயும் எனக்கொரு சொல் மட்டுமே . பொருள் மீது தாமரையிலை நீர் போல ஒளிர்ந்து உருண்டோடும் சொல். ”பொன்னையும் பூவையும் எதனால மனுசப்பய அப்ப்டி ஆசைப்படுதான்னு இப்பல்லா தெரியுது” வெட்கிச்சிவந்து ”ஒண்ணும் வேண்டாம்… எனக்கு ஒருமாதிரி இருக்கு” ”என்னது?” ”கோயிலுக்குள்ள இருட்டுக்குள்ள அம்மன்சாமியா நிண்ணு மந்திரத்த கேட்டுட்டே இருக்கமாதிரி இருக்கு” அக்கணத்தில் மூக்குத்தி மின்னும் நீள்முகத்துடன் அவள் கருவறைச் சிலையானாள். கைநடுங்க பின்னிழுத்து ”ஆமா..சில சமயம் எனக்கும் அப்ப்டித்தான் தோணுது…” ”அய்யே, என்னது இது..சும்மா ஒருபேச்சுக்குச் சொன்னா…” ”இல்லட்டீ…நான்” ”சும்மா கெடயுங்கோ…” விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி . ஒழிந்த முதல் ஐந்தும் ஈரைந்தோடு ஏறிச்செல்லும் பொற்படிக்கட்டுகளில் ஒன்று இரண்டு மூன்றென செம்பவளமணிகள் வெண்பளிங்குமணிகள் உருள குளம்படியோசை வெடிப்பெழ வெண்புரவி பின்வர செம்புரவி நடுவர கரும்புரவி பின்வர சென்று சென்று சென்று… இருட்டுக்குள் பிணையும் இரு உடல்களில் ஒன்று நான், ஒன்று நீயெனப்படுவதெல்லாம். புணர்ச்சியுள் ஆயிழைமேல் அன்புபோல் உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கி சொல்லிழந்து மௌனத்தால் குலாவி உலாவி அணைத்தலும் இன்பம்….விடாய்க்கு இது வெய்யநீர். வெய்யநீர் தன் வழியறியும் தருணங்கள். வெய்யநீர் ஓடும் வழிகள். அதற்கப்பால் அந்த வெய்யநீர்க்குளம். அதில் கைசுருட்டி கால்சுருட்டி கண்மூடிக் கிடந்தார். சுஷ¤¤ப்தி. கனாநிலையில் கருவாகி கையிலிருந்தது ககனம்.

இந்த வெம்மைமிக்க இருளில் நான் இன்புற்று இருவர் இசைவித்து வைத்த மண். போகத்தில் ஆங்கே புகுந்த புனிதன். என்பால் மிடைந்து நரம்புவரிக்கட்டி, செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து, அதனுள் அள்ளி அள்ளிவிட்டு தேக்கி ,அலைமேல் அலைநிறைத்து, ஒளிபெய்து நிறைத்த பேரானந்தம். கைசுருட்டி இறுக்கி கண்மூடி குவிந்து தலையால் தான் முட்டித்திறந்து வெளிப்போந்து சலமொழுகும் சகதியில் கிடந்தேன். என்னை நடுங்கும் கரத்திலெடுத்து என்முகத்தில் உன்முகம் காணும் உன்னை எத்தனை காலமாக அறிந்திருக்கிறேன். உன் முகம் உருகும் மெழுகாவதை, உன்சொற்களின் பெருங்குவை கரைந்தோடிய வெறுமையில் ஒரு கணம் நீ திகைத்து நின்றிருப்பதை, பின் நாற்புறமும் தத்தளித்து தடுமாறி ஆயிரம் அகக்கைகளால் அண்டமெங்கும் துழாவி எனக்கென ஒரு சொல்லை நீ கண்டடைவதை நான் கண்டேன். அச்சொல் பற்றி நின்று ஆசுவாசம்கொண்டு மூச்சு விட்டு திரும்பி ”பவளம் மாதிரில்லாட்டீ இருக்கான் பய” என்றாய். ”அதை அங்க போடுங்கோ…இன்னும் தலை நிக்கல்லை…”. ”நூறுசாமம் கடல்கொந்தளிச்சால் கரையிலே ஒருதுண்டு பவளம் ஒதுங்குமிண்ணாக்கும் சொல்லு. பவளமணி எண்ணைக்குமே பெரிய ஒரு பவளத்திலே இருந்து உடைஞ்ச துண்டாத்தான் கிடைக்கும். அந்தப் பெரிய பவளமணி அதைக்காட்டிலும் பெரிய ஒரு பவளத்துக்க துண்டு. அங்கே கடலுக்குள்ள பவளப்பெருமலை ஒண்ணு இருக்குண்ணு சச்சிதானந்தம்பிள்ளை சொல்லுவார். அந்தப் பெரும்பவளம் பிறக்க அலைகடல் எந்தளவுக்கு கொந்தளிச்சிருக்கணும்…ஆயிரம் பல்லாயிரம் சதகோடி காலம் கொந்தளிச்சிருக்குமோ?” ”பிச்சும்பேயும் சொல்லாம பயலுக்கு ஒரு பேரச்சொல்லுங்கோ”’ ”வேறெ என்ன பேரு? அம்பது வருசம் நூறு வருசம் ஆயிரம் வருசம் முன்னாலே பேரு வச்சாச்சே…பயபேரு சொடலைமாடம்புள்ளை..” ”அய்யே” ”என்ன அய்யே. நீ முகம்சுளிச்சா எனக்க பாட்டாவுக்கபேரு மாறிப்போயிருமா? இது சொடலைமாடம்புள்ளை. இவனுக்க குட்டிக்குஞ்சாமணியிலே இருக்காரு எங்கப்பா உமையொருபாகம்பிள்ளை. இவனுக்க நெஞ்சில இருக்கப்பட்ட தீயில இருக்கேன் நான்…இன்னும் அம்பதுவருசம் நூறுவருசம் தாண்டி பிறந்து விழுந்து கிய்யாமிய்யான்னு கத்தி கைய கால ஆட்டிட்டு தொட்டிலிலே கிடக்கதுக்கு… அன்னையெத்தனை அன்னையோ அப்பன் எத்தனை அப்பனோ பின்னை எத்தனை பெண்டிரோ…. பவளமுண்ணு நான் விளிக்கட்டாட்டீ இவனை?”

இட்டும்தொட்டும் கவ்வியும் துழந்தும் சிறுகை அளாவிய கூழுண்டு இதந்ததரு மனையில் வீற்றிருந்து எண்ணியெண்ணி நாட்கள் செல்கையில் தொட்டுத் தொட்டு விரையும் அப்புரவிகளின் குளம்படியோசை கேட்காமலானதென்ன! பூவின் மணத்தை பொருந்திய வாயு புவனத்தை ஒரு பூவாக ஆக்கியதுபோல. எத்தனை எத்தனை சொற்கள். சொற்களில் விளைந்தது சொல்லரும் பெருங்கனி. ”எளவு இவனைப்பெத்ததுக்கு ஒரு தென்னம்பிள்ளையப் பெத்திருந்தா நாலு காயானாலும் கிட்டியிருக்கும்”. ”பின்ன, போயி தென்னமரத்த கெட்டிகிடவேண்டியதுதானே? என்னெளவுக்கு வடிவீஸரம் வந்து சம்பந்தம் பேசினியோ” ”அதுக்கு நான் கண்டேனா இப்பிடியொரு வேதாளமாக்கும் நமக்குண்ணு காத்து கெடக்குததுண்ணு” ”வித்துகொணம் பத்துகொணம்…” ”எளவு இவனாலே எனக்கு தலைநிமுந்து நடக்கப்பளுதில்லியே…நாட்டில நாலுபேரு நாலுவிதமாட்டுல்லா கேக்கான்…ஏட்டி, தெரியாம கேக்கேன். இவன் ஒரு செவப்புக்கோமணத்த கம்பில கெட்டி பிடிச்சுட்டு தெருவோடி போனா நாட்டுல இருக்கப்பட்ட பாவப்பட்டவனெல்லாம் நல்லாயிடுவானா…என்னமோ வெள்ளைத்தாளில விரிச்சுவச்ச எளுத்தைப்படிச்சுட்டுல்லா அலையுதான்…” ”அதிப்பம் ஆகிவந்த கொணமாக்குமே. எளுதி வச்சதை படிச்சுட்டு எளகியாடுதது… நீங்க சும்மா மொளவிடிச்ச உரலில் மூடு உரைச்ச நாயி மாதிரி பத்துபதறி அலையாம ஒரு பாகத்திலே இருந்து ஒரு வாயி இடியப்பம் சாப்பிடுங்க.. எடுக்கட்டா?” ”தேங்காப்பாலு இருக்கா” ”இருக்கு” ”மாங்காப்பாலுண்டு மலமேலிருப்போர்க்கு…” ”அய்யோ, தொடங்கியாச்சா…”

தட்டுப்பந்தலில் மதியவெயில்வட்டம் காசுபரப்ப, பட்டுவேட்டி உடுத்து, அட்சதை அரிசியும் பூவும் முடியில் சிதறியிருக்க, வேர்வையும் மூச்சும் சந்தனமும் புத்தாடையும் புழுங்கிநாற, குரவை ஒலிக்க, பெண் கைப்பிடித்து நிலைவிளக்கு சுற்றிவந்து,  தாலத்தில் புடவைகொடுத்து, தாலியணிவித்து, தாயம் வலம் வந்து தாள்பணியும் இவனை நானே நடித்திருக்கிறேன். மீண்டும் மீண்டும். மீண்டும் மீண்டும். சலிப்பறியாமல் இதையே ஆடிக்கொண்டிருக்கிறான் அரங்கேறிய அண்ணல். ஏயம் கலந்த இருவர் தம் சாயத்து பாயும் கரு தன் உருவெடுக்க கொள்ளும் எளிமையான நாட்டியம். மாயம் கலந்த மனோலயம்.பால்வளர்ந்து உள்ளே பகலவன் பொன்னுருப்போல் எழுந்த இன்னொரு முகம். ”லே, வீணாப்போனவனே.ஒருநடை தொழியுழவுக்கு போயி பாத்துட்டு வான்னா நிண்ணு புஸ்தகமா படிக்கே.. படிச்சு படிச்சு பாழாப்போனியே… உன் காலுபட்டா குடிவெளங்குமா” கைகால் உதைத்து கீறிய வாய் பிளந்து கிடந்து தவழ்ந்து எழுந்தார் சிவசுடலை. ”ஏலே சுடலை, எங்க அய்யால்ல நீ…எங்க அப்பன்ல நீ…ஏலே.. அய்யய்ய, .ஏளா இங்க வா…இங்கபாரு … எடுத்துக்கிட்டுப்போ” ”பிள்ளைண்ணாக்க ஒண்ணுக்குவிடத்தான் செய்யும்…அதுக்கா இந்த கூப்பாடு…” ”சீ போட்டீ…பஞ்சாயத்தாப்பீஸிலே மூத்திரவாடையோட போயி நிண்ணா எனக்குல்லா லீக்கு ஒளுகுதுண்ணு நெனைப்பான்…நீ இன்னொரு வேட்டியும் நேரியதும் எடுத்து வையி” ”மூத்து நரைச்சாச்சு மாப்பிள்ளைக்கோலத்துக்கு ஒண்ணும் கொறையில்லை…”

காலன் வருகையில் கண்பஞ்சடைகையில் பாலுண் கடைவாய்படுகையில் மேல் விழுந்து உற்றார் அழுகையில் ஊரார் சுடு¨கையில் பற்றாமல் புகையும் படுதிரியென ஒருபெயர். அது உன் பெயர். என்பெயரும் ஆனபெயர். ”ஏட்டீ, எங்க பவளம்? மேலப்பத்துக்கு காளையும் மாடும் போயாச்சா?” குனிந்த முகங்கள். ”என்னமோ கேக்குதாரு…நாக்கு தளந்திருக்கு…” ”பவளம்…பவளம்” ”வெள்ளமுல்லா கேக்காரு…ஏட்டி கொஞ்சம் பாலெடுத்து வாயில விடுடீ போற உசிரு நனைஞ்சிட்டு போகட்டுமே” குனிந்து நோக்கும் இது என் அம்மை முகமல்லவா. குனிந்து என் மேல் நிற்பது எனையாளும் பெண்முகமல்லவா? விரிந்துகுவிந்து விளைந்த இம்மங்கை கரந்து உள்ளங்கிருக்கும் காரணி.  ஆம். சீறும் வினையது பெண்ணுருவாகித் திரண்டுருண்டு நின்று என்னைக்கொல்லும் பூரணி. அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி. மென்முலையொன்று மெத்தென்று தொட்டுச்சென்றது. மூலாதாரம் சுடரெழ கூம்பியத்தாமரைகளெல்லாம் இதழ் விரிக்க ஊனூறல் உய்வரை உச்சிமேல் வானூறல் பாயும் பொற்கணம்.”அப்பமே சொன்னேனே, பேத்தீண்ணாக்க அவாளுக்கு உயிராக்கும். கோலம்மைண்ணு வாயெடுத்து விளிக்கம்மாட்டாரே..அவ்வோ ஆச்சிபேருல்லா.. சின்னக்குட்டீண்ணுல்லா நாளிகைக்கு நாபது மட்டம் விளிப்பாரு…அவ கையால ஒருவாயி பாலு விளுந்துல்லா வாயடங்கிச்சு…போன ஜீவனுக்கு மேலவாசல் தெறந்திருக்கு. உம்மாணை” தொட்டதெல்லாம் கைவிட்டு, விட்டதெல்லாம் கைப்பற்றி… ஈராறுகால்களில் எழுந்தருளும் தேவன் வருக. அமுதப்புனல் வரும் ஆற்றங்கரை. ஆற்றில் புதுநுரைக்குமிழிகள். குமிழிக்கண்களில் வான்வெளி வண்ணங்கள். வளைந்த கரையோரக்காடுகள். இனி,பேரினைநீக்கி பிணமென்று பேரிடுங்கள். சூரையங்காட்டிடை சுட்டபின் நீரினில் மூழ்கி நினைப்பொழியுங்கள்.எல்லாம் நினைக்கில் வண்ணமுடன் உண்ணுவதும் உறங்குவதே ஆம்.

”என்னான்னு தெரியல்ல…வெள்ளம் குடுத்தப்ப என்னமோ சொல்லவந்தாரு..தேகத்திலே ஒரு நடுக்கம்..பின்ன ஒண்ணுமில்ல” என்றாள் ஜென்ஸி. ”குட்டிக்க கையாலே ஒரு வாயி வெள்ளம் குடிச்சு சாகணுமெண்ணாக்கும் விதியிருந்திருக்கு, கேட்டுதா” ஞானமுத்தன் குனிந்து தாடிபறக்கும் பிள்ளைவாளின் முகத்தையே பார்த்தபின் புன்னகை செய்தான். ஊர்கூடி எரியிட்டு ஒருபிடிச் சாம்பலாக்கிய பிள்ளைவாளின் எச்சத்துடன் அவன் மலையேறிவந்து அந்த மாமரத்தடியில் குழியெடுத்து அதை அடக்கினான். உப்பெனக்கரைந்து உள்நீரில் ஊறி ஆழத்து நதியையும் அதனுள் நெருப்பையும் நெருப்பெழும் வெறுமையையும் வெறுமையின் வெளியையும் பிள்ளைவாள் அறியலாகும் என்றெண்ணி அந்த மரத்தடியில் நின்று கீழே பார்த்தான். வழிந்து கிடந்த பசுமையின் நீர்மை முப்பதாண்டுகளுக்கு முன் சொன்ன சொல்லை மீண்டும் சொன்னது,  ஒன்றே என.

மறுவருடம் முதல் மாமரம் குலைகுலையாக காய்த்து கனத்து தழைய ஆரம்பித்தது. சித்தன்மரமென்று மலையேறி வந்து வணங்கி கனிகொய்து உண்டு இனிமையறிந்தனர்  மக்கள்.

 [முழுமை]

முந்தைய கட்டுரைஅக்ரஹாரத்தில் கழுதை
அடுத்த கட்டுரைமலை ஆசியா – 1