இந்தியப் பயணம் 7 – மகாநந்தீஸ்வரம்

செப்டம்பர் ஆறாம் தேதி அகோபிலத்திலிருந்து கிளம்பும்போது மணி பன்னிரண்டு. நேராக ஸ்ரீசைலம் வரவேண்டுமென்று திட்டம். மலைக்கோயிலுக்கு சென்றது உற்சாகமாக இருந்தது. ஓட்டுநர் ரஃபீக் பாபு புத்துணர்ச்சியுடன் ஓட்ட நேராக  ஆலகட்லா வந்தோம். அங்கே சாலையோரமாக சிற்பங்கள் செய்யும் சிற்பசாலைகளில் கிளிக்கொஞ்சல்கள் போல உளிச்சத்தம். நந்தியால் வழியில் மகாநந்தீஸ்வரம் என்ற கோயில் இருப்பதாகச் சொன்னார்கள். ”மஞ்சி குடி” என்றார் ஒருவர். ”புராண குடியா?”என்று வசந்த குமார் இருமொழி கலப்பில் கேட்டார். ஆமாம் என்றார்கள்

காடு அடர்ந்த குன்றுகள் சூழ நின்ற மகநந்தீஸ்வரம் கண்களுக்கு இனிய கோயில். புதுப்பிக்கப்பட்டு சுத்தமாகப் பேணவும் படுகிறது. முக்கியமான ஒரு புனிதத்தலமாக இருக்க வேண்டும், கோயில் முன்னால் ஒரு கடைவீதி உருவாகியிருந்தது. வளையல் சோப்பு சீப்பு பூஜைப்பொருட்கள். மகநந்தீஸ்வரம் காட்டுக்குள் தனியாக இருக்கும் கோயில். அங்குள்ள எல்லாமே கோயிலைச் சார்ந்தவைதான். ஏராளமான தங்கும்விடுதிகள். பெரும்பாலும் காலியாகவே கிடந்தன. சிவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் பெருங்கூட்டம் வரக்கூடும்.

நாங்கள் போனபோது மகாநந்தீஸ்வரத்தில் நடை சாத்திவிட்டார்கள். உள்ளே இருந்த கும்பல் வெளியே வந்துகொண்டிருந்தது. வெளியே வரும் வழியில் சென்று நின்று உள்ளே விடும்படி கெஞ்சிப்பார்த்தோம். பேரவில்லை. வெளியே இலவச உணவு பந்திகள் நடந்துகொண்டிருந்தன. அங்கே போய்  சாப்பாடு கிடைக்குமா என்று கேட்டோம். தர்சன டிக்கெட் வேண்டும் என்றார் அங்கிருந்தவர். ஆகவே லட்டுமட்டும் வாங்கி சாப்பிட்டோம். திருப்பதி லட்டின் அதே சுவை.

கோயிலைச்சுற்றி பெரிய பிராகாரங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. கோயிலுக்குள் பெரிய குளம் ஒன்று இருந்தது. அதிலிருந்து வந்த நீர் வெளியே உள்ள இன்னொரு குளத்தில் நிறைந்து வெளியேறியது. நல்ல தெள்ளத்தெளிந்த நீல நீர். அதில் சில மொட்டைகள் நீராடினார்கள். பழமையான கோயில். அப்பகுதி முழுக்க செஞ்சு பழங்குடியினருக்குச் சொந்தமான இடம். அவர்களின் கோயிலாக இருக்கலாம். அவர்களில் சைவர்களும் அதிகம். ஸ்ரீசைலமே அவர்களின் கோயில்தான். விஜயநகர கால கட்டத்தில் மறு அமைப்பு செய்யப்பட்ட கோயில் இது.

கோயிலின் மையக்கோபுரம் வடக்கத்தி நகர பாணியில் அமைந்தது. வளைந்த விளிம்புகள் கொண்ட கூம்புபோல பலநூறு சிறு சிகர அடுக்குள். மேலே பெரிய கல்குவடு போல கலசம். வெளிக்கோபுரங்கள் தட்சிண பாணியிலான ஒட்டி நிமிர்ந்த கோபுரங்கள். உள்ளே போய் பார்க்க முடியவில்லை என்பது துரதிருஷ்டமே. மாலைதான் கோயில் திறக்கும் என்றார்கள். வேறு வழியில்லை. கிளம்பிவிட்டோம்.

வழியெங்கும் கால்வாய்கள். கிருஷ்ணாவின் பெரும் கால்வாயில் நீர் சுழித்துச் சென்றது. இறங்கி குளிக்கலாம் என்றார் செந்தில். கடுமையான இழுப்பு இருக்கும் வேண்டாம் என்றார் சிவா. அரை மனதாக தாண்டிச் சென்றோம். சிவா குளிக்கலாமென்று சொன்ன கால்வாய் சிறு ஓடை. அது வேண்டாம் என்று நான் சொன்னேன்

நந்தியால் நகருக்கு வெளியே வந்து ஓட்டலில் சாப்பிட்டோம். ஆந்திர உணவு. காரசாரமான சட்டினியும் மிளகாய்ப்பொடியும் தயிரும். ஆனால் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. நந்தியாலுக்குள் நுழைந்தோம். நரசிம்ம ராவ் இடைத்தேர்தலுக்கு நின்று ஜெயித்த தொகுதி ஆதலால் அறிந்த பெயர். என்.டி.ராமராவ் அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை ஒரு தெலுங்கர் பிரதமராவதில் உள்ள பெருமிதம் காரணமாக.

எருமைகளாக வந்துகொண்டிருந்தன. நகரைத்தாண்டியதும் மேடேறியபோது ஒரு மாபெரும் ஏரி கண்ணெட்டிய தூரம் வரை நீலநீர் நெளிய பரந்து கிடந்தது. ”ஹாய்! எந்தா ஒரு சீன்!” என்றார் கல்பற்றா. ஏரிக்கு அப்பால் அபப்டியே கேரள நிலம் போல வாழைகளும் நெல்லும் செழித்த வயல்வெளி திறந்துகொண்டது. பச்சைதான் எங்கும் நிறம். வயல்கள் அப்படி விரிந்து வானில் தொடுவதை தஞ்சையில்கூட பார்க்க முடியாது. சில இடங்களில் நடவு நடந்து கொண்டிருந்தது. பல வயல்களில் பச்சை நாற்றுக்கள் காற்றிலாடின. வயல்கள் சிறு துண்டுகள் அல்ல. ஒவ்வொன்றும் நாலைந்து ஏக்கர் வரக்கூடியவை. இப்பகுதியில் அடிக்கடி கண்ணில் படும் வாகனமே டிராக்டர்தான்.

பின்னர் காடு வர ஆரம்பித்தது. மேய்ச்சல்காடு என்று சொல்லவேண்டும். பசுமையான புல்வெளிக்குமேல் குட்டை மரங்கள் நிற்கும் காடு. ஒரு பெரிய ஏரி மேடு வந்தது. அது ஓரு பெரிய தடுப்பணையின் சுவர். அதன் மதகு வழியாக நீலநீர் பீரிட்டு கால்வாயில் சுழித்தோட பையன்கள் உற்சாகமாகக் குளித்துக்கொண்டிருந்தார்கள். காரை நிறுத்திவிட்டு இறங்கி மேலேறி அணையை பார்த்தோம். தடுப்பணையானாலும் மிகப்பெரிய ஏரிபோன்ற நீர் தேக்கம். நீர்நீலம் வான் நீலத்தில் கலக்கும் கண்கூசும் ஒளி. அது கிருஷ்ணாவில் இருந்து ஒரு கிளை. தெலுங்கு கங்கா திட்டம். தெலுங்குகங்கா என்றே அழைக்கிறார்கள். கண்டலேறுவிற்கு செல்லும் பல கிளைகளில் ஒன்று. நாம் பணம்கொடுத்து கட்டிய ஓடை, அணை. சென்னைக்குதான் நீர் வந்து சேரவில்லை. அதைப்பற்றி நம் அரசியல்வாதிகள் வாயே திறப்பதில்லை.

பின்னர் இறங்கி கால்வாயில் நீந்தித் திளைத்துக் குளித்தோம். நீரின் அபார இழுப்புக்கு எதிராக நீந்த முயன்று பக்கவாட்டில் ஒதுங்குவதும், மேலேறி குதிப்பதுமாக. அகோபிலத்தில் மலையூற்று நீராக இருந்தாலும் கடின நீர். தலைமயிர் தேங்காய்நார் போல் இருந்தது. அலம்பிக்குளித்தபோது அப்படியே பட்டு போல் ஆகிவிட்டிருந்தது. அங்கே பிள்ளையார் ஊர்வலம் முடிந்து முகமெல்லாம் நிறங்களுடன் குளிக்க வந்த ஒருவன் விருதுநகர் பையன். முறுக்குபோட்டு விற்பனை செய்ய அங்கிருந்து வந்து குடியேறியிருக்கிறார்.

 ”எந்தூரு அண்ணே” என்று கூப்பிட்டு தமிழில் பேசினான். முகத்தில் அப்படி ஒரு பரவசம். சமீபத்தில் ஊருக்கு வந்தாயா என்றேன். அண்ணன் கல்யாணத்துக்காக போன வருஷம் வந்தேன். அண்ணி இப்போது கூடவேதான் இருக்கிறாள் என்றான். ஆந்திராவில் பிழைப்புக்காக குடியேறிய தமிழர்கள் இல்லாத இடமே இல்லை. குறிப்பாக செழிப்பான கிருஷ்ணா கரையோரம் முழுக்க தமிழர்கள். அவர்கள் இங்கே கிட்டத்தட்ட நிரந்தரமாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உள்ளூர் விழாக்கள் பண்டிகைகள் கொண்டாட்டங்கள் என்று கலந்துவிட்டிருக்கிறார்கள்

கால்வாய் ஓரமாகவே ஒரு சிவனடியார் டீக்கடை போட்டிருக்கிறார். கூடவே மனைவி உண்டு. பெரிய தலைமுடி சடாமகுடமாக திரண்டு நின்றது. பிளாஸ்க் டீதான். குளித்தபின் சூடான டீ இளைப்பாறும்படி இருந்தது. கிளம்பி குறுங்காடு வழியாக சென்று கொண்டிருந்தபோது சட்டென்று ஆயிரக்கணக்கான காளை, பசுக்களைப் பார்த்தோம். எல்லாமே கொம்பு குட்டையான வெள்ளைப்பசுக்கள். நந்தியால் இனம் என்றார்கள். அழகானவை. திடமாகவும் இருந்தன. பல இடங்களில் மேய்க்கப்பட்ட அவற்றை அங்கே திரட்டிக் கொண்டிருந்தார்கள். காலையில் மேலே ஏற்றி ஏரி நீரில் குளிப்பாட்டுவார்கள் போலும். அப்பகுதியே மாடுகளால் அழகாக ஆகிவிட்டது.

பலவிதமான அழகிய ‘போஸ்’கள். அலட்சியமன்ன மோன நிலைகள். ”இங்கே இருக்கும்போதுதான் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போலும். இது அவர்களின் மந்தை அல்லவா?” என்றார் கல்பற்றா. கிட்டத்தட்ட பரவச நிலைக்கே சென்றுவிட்டார். மாடுகள் மழைக்கால நீரோடைகள் பள்ளத்துக்கு வருவது போல பல இடங்களில் இருந்தும் வந்துகொண்டே இருந்தன. கார் மேலும் சென்றபோது அதேபோல ஆடுகளை சில்லவார் சாதியினர் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டிருப்பதைக் கண்டோம்.

ஸ்ரீசைலம் செல்லும் பாதை சீக்கிரமே காடு அடர்ந்த மேடாக மாறியது. மூங்கிலால் கட்டப்பட்ட செஞ்சுக்களின் குடிசைகள் ஆங்காங்கே வந்தன. அவர்கள் சாலையோரம் நெருப்பு போட்டு குளிர் காய்ந்துகொண்டிருந்தார்கள். மேலே ஏறிச்சென்றோம். நீலவானம் கருநீலமாகி இருண்டது. காட்டின் முழக்கம். ஒரு இடத்தில் கார் ஒன்று நின்றது. இருவர் பாய்ந்து கைகாட்டினார்கள். காரில் ஸ்டெப்னியை கழற்ற ஸ்பானர் இல்லையாம். இறங்கி உதவினோம். ஸ்ரீசைலம் விட்டு வருபவர்கள். வழி 20 கிமீ தொலைவுக்கு மிக மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். அது இரண்டாவது டயர் கிழிசலாம்.

இரவில் காட்டுச்சாலையில் குளிர்காற்று உடலை அணைத்து திணறச் செய்ய சென்று கொண்டே இருந்தோம். கதை சொல்லுங்கள் சார் என்றார் கிருஷ்ணன். நான் பிரேம்சந்த், ஸ்ரீகாந்த் வர்மா, சகி [எச்.எச்.மன்றோ] தி.ஜானகிராமன் என்று சிறுகதைகளைச் சொல்லிக் கொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட 20 கதைகள் சொல்லியிருப்பேன். வழியில் தோரணாலா என்ற இடத்தில் நிறுத்தி சாப்பிடச்சென்றார்கள். நான் கிருஷ்ணன் சிவா மூவரும் பழங்கள் சாப்பிட்டோம். பச்சை வாழைப்பழமும் பேரீச்சையும். நேற்றும் முன் தினமும் பச்சைவாழைப்பழமும் கொய்யாவும். தமிழகம் தாண்டினால் வாழைப்பழம் என்றாலே பச்சை வாழைதான்.

தோரணாலாவில் ஒரு பெரிய அய்யப்பன் கோயிலை புதிதாகக் கட்டியிருந்தார்கள். பச்சை சிவப்பு நில நிறங்களில் கண்ணைப்பறித்தது. ஒற்றைக்கல்லாலன பதினெட்டுபடி. வெளியே ஒற்றைக்கல்லால் பதினாறடி உயரமான ஆஞ்சனேயர் சிலை. ஸ்ரீசைலம் கும்பல் ஒன்று அதனருகே இறங்கி புளிசாதம் தின்று கொண்டிருந்தது.

இரவு பத்துமணிக்கு ஸ்ரீசைலம் வந்தோம். வரும் வழியில் நல்ல அறைகள் உண்டு என்று வசந்தகுமார் சொல்லிக் கொண்டே வந்தார். ஆனால் கோயிலின் விடுதி நிர்வாக முகப்பிலேயே அறைகள் வாடகைக்கு இல்லை என்று பலகை மாட்டியிருந்தார்கள். சென்ற முறை நாங்கள் வந்தபோது 150 ரூபாய்க்கு மிகத்தரமான இரட்டை அறை கிருஷ்ணா நதிக்கரை ஓரமாகக் கிடைத்தது. இப்போது அறைகளே இல்லை. என்னசெய்யலாம் என்று விசாரித்தோம். எங்கும் அறை இல்லை. ‘நீங்கள் என்ன சாதி?’ என்றார் ஒருவர். ரெட்டி, கம்மா, காப்பு என எல்லா சாதிக்கும் தனித்தனியான விடுதிகள் இருக்கின்றனவாம்.

வசந்தகுமார் துணிந்து ரெட்டிகளின் விடுதிக்குச் சென்றார். சற்றே கிலியுடன் கூடச் சென்றோம். அங்கிருந்தவனிடம் பேசியபோது அவன் இவருக்கு தெலுங்கு தெரியாது என்று கண்டுகொண்டாலும் பொருட்படுத்தவில்லை. அறை கொடுத்துவிட்டான். இரண்டு அறைகள், முந்நூறு ரூபாய் வீதம் வாடகை. பரவாயில்லை ரக அறைகள்.

பதினொரு மணி. நான் என் மடிக்கணினியை எடுத்து  அன்றைய அனுபவங்களை தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன்.

 மகா நந்தீஸ்வரம், கிருஷ்ணனும் நானும்

கால்வாய் குளியல்

குளியலே போதை… நான், செந்தில் [உய்ரமானவர்],  சிவா

மாடுகள்… நான், கல்பற்றா நாராயணன்

 

மாடு மேய்க்கும் சில்லவர் பெண்கள் 

முந்தைய கட்டுரைஇந்தியப் பயணம் 6 – அகோபிலம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்