«

»


Print this Post

அக்ரஹாரத்தில் கழுதை


வலைப்பதிவர் சுரேஷ் கண்ணனின் வலைப்பக்கத்தில் [  http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html ]தொலைக்காட்சியில் ஜான் ஆபிரகாமின் அக்கிரஹாரத்தில் கழுதை என்ற படம் வெளிவரப்போவதைப்பற்றிய பரவசம் மிக்க அறிவிப்பு [அய்யாங்! அக்கிரஹாரத்தைலே கழுதை!] பார்த்தபோது சிரிப்பை அடக்கிக் கொண்டேன். அனேகமாக வாயே திறக்காமல் இருந்துவிடுவார் என்றுதான் எண்ணினேன். எண்ணங்களை பதிவுசெய்திருக்கிறார். வாழ்க.

சினிமாத்துறையினர் பலர் ஜானைப்பற்றி சில கருத்துக்களை இணையம் மூலமும் செவிவழியாகவும் பெற்றிருந்திருக்கிறார்கள். படத்தை பத்து நிமிடம் பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு ”என்ன சார் இது…இதுக்கா தேசிய விருது?” என்றார்கள். பலருக்கு பேசிக்கொண்டிருக்கும்போதே சிரிப்பு பீரிட்டது.

”அந்தக்காலத்திலே பயங்கர சர்ச்சையை கெளப்பின படமாமே சார்!” என்றார் ஒருவர். எந்தக்காலத்திலும் இந்தப்படம் வெளிவரவே இல்லை.  மிகச்சில திரைமாணவர்கள் அன்றி எவருமே இதைப்பார்த்ததில்லை. இதைப்பற்றிய புகழ்ச்சிகள் எல்லாமே திருமந்திரத்துக்கு அந்தக்காலத்து பிள்ளைமார் ‘மனதுக்கெட்டா’ பொருள் சொல்வதைப்போலத்தான்.

இதற்கு தேசியவிருது கிடைத்தது ஒரு வேடிக்கை. க.நா.சு அப்போது நடுவர் குழுவில் இருந்தார். அவர் சினிமாவே பார்ப்பதில்லை. மொத்தமே பத்து படம் பார்த்திருந்தால் ஆச்சரியம். இந்தப்படத்தையும் அவர் பார்க்கவில்லை. ஆனால் இதன் திரைக்கதையை அவர் வாசித்திருந்தார். அது அவருக்குப் பிடித்திருந்தது. ஆகவே அவர் படத்துக்கு வாக்களித்தார். இன்னொருவரையும் வாக்களிக்க வைத்தார்.

வெங்கட் சாமிநாதனின் திரைக்கதை ‘அக்ரஹாரத்தில் கழுதை’ நூலாக வெளிவந்திருக்கிறது. அது டெல்லி வாழ் நண்பர்க்குழு ஒன்றின் கூட்டு முயற்சி என்று சொன்னார்கள். அது ஒரு நல்ல திரைக்கதை என்றே நான் நினைக்கிறேன். ஆனால் சுந்தர ராமசாமி அதை ஒரு அமெச்சூர் முயற்சி என்று எழுதியிருக்கிறார். கண்டிப்பாக அமெச்சூர் திரைக்கதைதான். ஆனாலும் ஒரு நல்ல முயற்சி.

அதைப் படமாகப் பார்த்தபோது சாமிநாதன் ஆடிப்போய்விட்டதாகச் சொன்னார். முன்னாளில் கிரேஸி பாய்ஸ் ஆ·ப் த கேம்ஸ் என்று ஒருபடம் வந்தது. அதில் ஒரு ‘சிற்பி’ ஒருவரை கையில் சுடருடன் நிற்கச்செய்து கணம் தோறும் கூர்ந்து நோக்கி சிற்பம் செதுக்குவார். அசையாதே என்று அடிக்கடி குரல் வேறு. கடைசியில் பார்த்தால் சம்பந்தமே இல்லாமல் மேஜையும் நாற்காலியும் கலந்தது போல ஒருவடிவம். அதுதான் ஜானின் படம்.  

‘அக்ரஹாரத்தில் கழுதை’ பற்றி அல்லது ஜான் பற்றி ஆகா ஓகோ என்று கருத்து சொல்பவர்கள் பெரும்பாலும் அந்தப்படத்தைப் பார்க்காதவர்கள், ஜானை அறியாதவர்கள். இன்னொருவகை உண்டு பார்த்தாலும் புரியாத, ஓடும் செம்பொன்னும் ஒப்பவே நோக்கும் பரிபக்குவமடைந்த, ‘அறிவுஜீவிகள்’. ஜானின் எல்லா படங்களும் தழுவல்கள், எல்லா படங்களும் எந்தவிதமான பொறுப்பும் உழைப்பும் இல்லாமல் எடுக்கப்பட்டவை. எந்தபப்டத்தையுமே உலகத்திரைப்படங்களில் சில நல்ல படங்களையாவது எடுத்த எவருமே பொருட்படுத்த மாட்டார்கள்.

தன்னுடைய படமென ஜானே சொல்லிக்கொள்ள விரும்பாத ‘வித்யார்த்திகளே இதிலே’ என்றபடம் எந்த ஒரு திரைக்கல்லூரி மாணவனின் தேர்வுப்படத்தைவிடவும் சாதாரணமானது.  அது ஒரு இத்தாலியப்படத்தின் நகல் என்று ஜானே சொன்னார். அதை ஒரு காவியம் என்று ஒரு தமிழ் அறிவுஜீவி எழுதி வாசித்தேன். இலக்கிய ரசனையில் அவர் ஒரு பள்ளிப்பையன் என்பது என் அபிப்பிராயம். சினிமாவிலுமா என்று எண்ணிக்கொண்டேன்.

ஜான் கேரளத்தின் நக்சலைட் இயக்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் உருவான மனச்சோர்வுக்காலத்தில் அவர்களின் அடையாளமாக ஊடகவியலாளர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். உருவாக்கியவர்களின் பெயர்களையே என்னால் கூறமுடியும். இப்படி எளிதாக ஒன்றை உருவாக்கி கணிசமானவர்களை ஏமாற்ற முடிகிறதென்பதே என் இளமையில் ஊடகங்கள் மீதான என் அவநம்பிக்கையை உருவாக்கியது.

ஏன் ஜான் ஒரு சாராரில் செல்லுபடியாகிறார்? அவர்கள் மிகப்பெரும்பாலும் சராசரி வெள்ளைச்சட்டை ஆசாமிகள். உண்மையான படைப்பூக்கம் மூலமோ அறிவார்த்தம் மூலமோ தன்னை கண்டடையமுடியாதவர்கள். ஆகவே ஒரு பகற்கனவுத்தளத்தில் தங்களை கலகக்காரர்களாக அல்லது தோற்கடிக்கப்பட்ட புரட்சியாளர்களாக காட்டிக்கொள்ள விழைகிறார்கள். அதற்கு ஜான் ஒரு முகாந்திரம்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ஜானின் கலகம் பற்றிப் பேசுபவர்கள் அந்த கதையும் திரைக்கதையும் வெங்கட் சாமிநாதனால் எழுதப்பட்டது என்பதை விட்டுவிடுவார்கள். இவர் குடிக்கமாட்டாரே. சாமிநாதனின் பெயரே சொல்லப்படாமல்கூட தமிழில் ஒரு ‘அக்ரஹாரத்தில் கழுதை’ பதிப்பு வந்திருக்கிறது, ஜானின் பெயரில்!

இந்தச் போலிச்சித்திரங்களுக்கு அப்பால் ஜான் அபாரமான படைப்பாளுமை கொண்ட ஒரு மனிதர். துல்லியமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவர். கவிதைக்கு மிக நெருக்கமாகச் செல்லக்கூடியவர். ஆன்மீகத்தின் உயர்கவித்துவமும் உயர் அங்கதமும் முயங்கும் தளத்தில் உலவும் திராணி கொண்டவர். இன்று அவரை விதந்தோதும் எவரும் அந்த ஜானின் மனநிலையின் விளிம்பைக்கூட எட்ட முடியாது.

ஜானின் நல்ல சிறுகதைகளில் [கோட்டயத்தில் எத்ர மத்தாயி உண்டு?]  அவரது அங்கதம் பதிவாகியிருக்கிறது. கவனமின்றி வைக்கப்பட்டவையானாலும் அவரது ‘செறியாச்சன்றெ க்ரூர கிருத்யங்கள்’ போன்ற படங்களில் சில இடங்களில் அந்த அங்கதம் வெளியாகிறது. ஜானின் ஊடகமான சினிமா மிகக்கடுமையான உழைப்பைக் கோருவது. அவரோ மிகச்சிறிய அளவில்கூட கவனத்தையும் உழைப்பையும் குவிக்கமுடியாதபடி பலவீனமானவர். இதுவே அவரது பிரச்சினை.

நானறிந்த மென்மையான கவித்துவமான ஜானை, குடிக்காத போது குடிக்க நேர்ந்ததைப்பற்றி மனமுடைந்து அழுகிற ஜானை, தன் கலையை குடி அழித்ததைப் பற்றிச் சொல்லி பாட்டிலை காசர்கோடு தொலைபேசி நிலைய வராந்தாவில் வீசி உடைத்து விம்மிய ஜானை , நினைத்துக்கொள்கிறேன். இப்போது ‘அக்ரஹாரத்தில் கழுதை’யை பார்த்திருந்தால் ” என்றெ ஈஸோயே, ஈ புத்திஜீவிகளேக்கொண்டு ஒரு கிலோ பீ·பின்றே பிரயோஜனமும் இல்லல்லோ” என்று சிரித்திருப்பார்.

http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்

ஜான் ஆபிரகாம்:மீண்டும் ஒரு கடிதம்

மலையாள சினிமா ஒரு பட்டியல்

மலையாள சினிமா கடிதங்கள்

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6456

13 comments

Skip to comment form

 1. sivasakthi

  ஏனையா ஜே எம்

  பிள்ளைமாருக மேல அப்படி என்ன கோவம்? சும்மா சாடிகிட்டே இருக்கேகளே

  siva

 2. sureshkannan

  அன்புள்ள ஜெயமோகன்,

  ஜானைப் பற்றி முன்னமே எழுதப்பட்டிருந்த உங்கள் கட்டுரையை வாசித்திருந்த போதிலும் சற்று அதீதமாக உற்சாகப்பட்டது தவறுதான். அதற்காக இப்படியா பழிவாங்குவது? :-)

 3. Krishnan_D

  ஜெ,
  சில ஆண்டுகளுக்கு முன்னாள் பார்த்த படம். வெகு சுமார். இதை இணையத்தில் கொண்டாடுவதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது. வணிக சினிமாவின் கூறுகள் இல்லாமல் எந்தப் படம் வந்தாலும் அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்கிற உயரிய குறிக்கோளோடு இங்கே பல ‘அறிவுஜீவிகள்’ உலவிக் கொண்டிருக்கிறார்கள். (உண்மையிலேயே ஒரு நல்ல, உலகத்தரம் வாய்ந்த திரைப்படம் பார்த்தால் இவர்களுக்கு ஒன்றும் புரியாது என்பது வேறு விஷயம்)

  பி.கு: பின்னூட்ட மட்டுறுத்தல் (வார்த்தைப் பிரயோகம் சரிதானே?) கொண்டு வர முயற்சிக்கலாமே? சம்பந்தமே இல்லாமல் எதாவது உளறி விட்டுப் போகும் அன்பர்களிடம் இருந்து தப்பிக்கலாமே?

 4. Arangasamy.K.V

  சுரேஷ் கண்ணன் ,

  ஜெமோ பதிவை முதலிலேயே படித்திருந்தும் இப்படி ஓவரா உணர்ச்சிவசப்பட்டது தப்புதானே … :):)

  //
  இன்று காலை ‘THE HINDU’ நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது சந்தோஷ அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டேன். ஆம். இன்றிரவு கழுதை தானாகவே வீடு தேடி வரப்போகிறது. //

 5. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ,

  அக்ரஹாரத்தில் கழுதை படம் 1978ல் வெளிவந்தது. அந்தக்காலப் படங்களை கறுப்புவெள்ளையில் இப்போது பார்த்தால் அபத்தமாகத்தான் இருக்கிறது. இன்றைய ஒளிப்பதிவு உத்திகள் ஒன்றும் அப்போது இல்லை அல்லவா? அக்காலத்தில் நடிப்பும் அப்படி செயற்கையாகத்தான் இருக்கிறது. அதைவைத்து நிராகரிப்பது சரியா? மேலும் ஜான் ஆபிரகாம் அந்தப்படத்தை குறைவான வசதிகளைக்கொண்டு எடுத்தார் என்று சொல்கிறார்கள்

  அன்பரசன்

  அன்புள்ள அன்பரசன்,

  அக்ரஹாரத்தில் கழுதைக்கு இருபதாண்டுகளுக்கு முன்னதாகவே அதைவிட மிகத்தேர்ந்த மலையாளப்படங்கள் வந்துவிட்டன. 1958ல் தேசியவிருபெற்ற ‘நீலக்குயில்’ அதன் நடிப்பு, காமிராக்கோணங்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாவற்றுக்கும் இன்றைக்கும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. அப்படி குறைந்தது 50 படங்கள். வின்செண்ட், சேதுமாதவன்…

  மலையாளத்தில் மிகமிகமிகக் குறைவான செலவில் யு.கெ.குமாரன் [அதிதி,இனியும் மரிச்சிட்டில்லாத நம்மள்] பி.ஏ.பக்கர் [கபனிநதி சுவந்நப்போள்,சாப்ப]போன்ற பல நல்ல படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஒளிப்பதிவுத்தரம் குறைவாக இருக்கும். படத்தொகுப்பில் எகிறல்கள் இருக்கும். ஆனால் படச்சட்டங்கள், காட்சி நகர்வு, நடிப்பு ஆகியவை சிறப்பாக இருக்கும். காரணம் அவற்றை வைத்துத்தான் இயக்குநரை மதிப்பிடுகிறோம். அப்படங்களின் திரைக்கதை மேலும் சிறப்பான ஒரு படத்துக்கான சாத்தியங்களைக் காட்டும் மிகச்சிறந்த இலக்கிய வடிவமாக இருக்கும். குறிப்பாக அதிதி , இனியும் மரிச்சிட்டில்லாத நம்மள் போன்ற திரைக்கதைகளை பெரும் படைப்புகள் என்றே சொல்லலாம்.

  ஜான் அவரது படங்களை குறைந்த செலவில் எடுக்கவில்லை. எல்லா படங்களும் இருமடங்கு செலவில் மும்மடங்கு கால அளவில் எடுக்கப்பட்டவை

  ஜெ

 6. M. Hariharan

  அக்ரஹாரத்தில் கழுதை படத்திற்கு ஜனாதிபதி விருது கிடைத்த போது தினத்தந்தியில் வெளியான ஒரு செய்திம் ஞாபகத்திற்கு வருகிறது – “……… இந்த படத்தில் ஒரு கழுதை நடித்துள்ளது. அது தேவர் படத்தில் வரும் விலங்குகளை போல் வீர சாகசங்கள் செய்யவில்லை. குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள்து !!!!”

 7. bala

  ஜான் பற்றி நினைவு வரும்போதெல்லாம், அவர் “புளிய மரத்து”க்குத் திரைக் கதை எழுதும் முயற்சிகளே நினைவுக்கு வருகிறது. ஜான் பற்றி யாரேனும் ஒரு திரைப் படம் செய்யலாம் – அது நிச்சயம் நன்றாக இருக்கும் –

 8. sarwothaman

  ஜெயமோகன் அவர்களுக்கு,
  ஏன் சார் இவ்வளவு குரூரம் . இது ஒரு குறைப்படம் தான். அவரின் சமூக நிறுவனங்களுக்கு எதிரான கோபம் நேர்மையானது.பாசாங்குகள் அற்றது.அதை இந்தப் படத்தில் மிக நிச்சியமாக ஒருவர் உணரக்கூடும்.முற்றிலும் நேர்த்தியே இல்லைதான்.நேர்த்தியாக எடுத்திருந்தால் மட்டும்.

  சர்வோத்தமன்.

 9. kuppan_yahoo

  இப்போது வந்துள்ள ஆயிரத்தில் ஒருவன், வில்லு போன்ற படங்களை விட அக்ரகாரத்தில் ஒரு கழுதை எவ்வளவோ மேல்.

  எம் ஜீயாரின் சினிமாக்கு கூட தேசிய விருது கொடுத்து உள்ளார்களாம்.

  சினிமாவும் குறுகிய கால வாழ்வு உடையது. முப்பது வருடங்களுக்கு முன்பு ரசித்து பார்த்த தங்கப் பதக்கம், நாடோடி மன்னன் போன்ற படங்களை இன்று ரசிக்க முடிவதில்லை.

 10. jeevartist

  அக்ரகாரத்தில் கழுதை வெளிவந்த சில வருடங்களில் அதை பார்க்கும் வாய்ப்பு பெற்றேன். அதே காலகட்டத்தில் கன்னட, மற்றும் வங்க மொழியில் சில படங்களை பார்த்திருந்ததால் பெரும் ஏமாற்றம் அடைந்தேன்.

  இதற்க்கு பரிசு கிடைத்தபோது எழுந்த எதிர்ப்புக்குரல்களில் முக்கியமானது ஆர்.எம்.வீரப்பனது. அதற்கு காரணம் ‘திரைப்பட தொழிற்சங்க போராளியான ‘ எம்.பி.சீனிவாசன் படத்தின் கதாநாயகனாக நடித்திருந்ததுதான். வீரப்பன் அரசியலிலும் பட முதலாளிகள் சங்கத்திலும் முக்கிய பங்கு வகித்திருந்ததால் இந்த எதிர்ப்பு குரல்!

 11. sarwothaman

  ஜெயமோகன் அவர்களுக்கு,

  தோரே ஒத்துழையாமை பற்றி எழுதியிருக்கிறார்.Civil Disobedience என்ற வார்த்தையே அவர் மூலமாகத்தான் காந்தி அறிகிறார்.அந்த போராட்ட முறையை பற்றி அவர் முன்பே அறிந்திருந்தாலும்.ஆனால் தோரே வாழ்வில் ஒரு முறை ஒரு நாள் சிறையில் கழித்திருக்கிறார்.அதை வைத்து பார்த்தால் அவரது ஒத்துழையாமை கட்டுரைகளை ஒதுக்கிவிடலாமா.ஜான் ஆபிரகாம் புரட்சிவாதி அல்ல.கலகக்காரன் அல்ல.மனிதர்.பலவீனமான மனிதர்.ஆனால் அந்த பலவீனமான மனிதர் பித்தனும் கூட.அந்த பித்தமே அவரை சினிமாவை இயக்கவைத்திருக்கிறது.அவரது பலவீனங்கள் அதை குறைப்படங்கள் ஆக்கியிருக்கிறது.உங்களது கட்டுரைகள் அவரது பித்து நிலையை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே.வெங்கட் சாமிநாதன் எழுதிய பித்தமும் இயக்கமும் என்ற ஜான் பற்றிய கட்டுரையே அவரை பற்றி சரியான பிம்பத்தை அளிக்கிறது.அத்தகைய பலவீனங்களுடன் அவர் படங்களை இயக்கியதை ஒரு வகையில் பெரிய விஷயம்.அந்தக் கட்டுரையில் ஒரு இடத்தில் சுந்தர ராமசாமி சாமிநாதனிடம் சொல்கிறார்,’வேறு எல்லாவற்றையும் விடுங்கள் , இவரால் தனியாக வீடு போய் சேர முடியுமா’ என்று.ஆனால் உங்கள் கட்டுரையில் இல்லாத ஒரு கரிசனம் அதில் இருக்கிறது.சிவராம் காரத்தின் சுயசரிதை புத்தகத்தின் பெயர் கூட பித்தனின் பத்து தலைகள் தானே.
  பித்தனுக்குதான் பத்து தலைகள் இருக்க முடியும்.அப்போது தான் புதிதாக எதாவது செய்ய முடியும்.அவனே கலைஞன்.துரதஷ்டவசமாக ஜானிடம் தன் பித்தத்தை குவித்து நேர்த்தியான படமாக கொடுக்கமுடியவில்லை.அது அவரின் குறை.அவரின் ஆளுமையின் குறை.விமர்சனத்துக்கு உரியதுதான்.கைத்தட்டி ஆர்ப்பரித்து கேலி செய்வதுக்குரியதல்ல.அது கண்டனத்துக்குரியது.
  *
  ஞாநி கோலம் என்ற சினிமா இயக்கம் தொடக்க விழாவில் ஜான் பற்றி குறிப்பிட்டார்.மக்களிடம் இருந்து பனம் பெற்று ஒரு மாற்று திரைப்படத்தை உருவாக்க முடியும் என்கிற வகையில் அவரே முன்னுதாரனம்.அந்த வகையில் கோலம் இயக்கத்தின் முலமாக மாற்று திரைப்படங்கள் உருவாக்க வேண்டும் என்றார்.நீங்கள் விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்ததற்கு க.நா.சு, சி.சு.செல்லப்பா அவர்களின் தியாகங்களை கணக்கில் கொள்வீர்கள்தானே.இன்று வனிக இதழ்களில் உங்கள் எழுத்துக்கள் வரலாம் .ஆனால் ஏழாம் உலகம் தொடராக வரமுடியுமா.அதற்கான எல்லைகள் உண்டு.அது போல வனிக சினிமாவில் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு மேல் யாராலும் படம் எடுக்க முடியாது.ஆக மாற்று சினிமாவுக்கு ஜான் முன்னுதாரனம் தான் , அது எத்தனை குறைகள் கொண்டிருந்தாலும்.
  *
  மாற்று சினிமாவுக்கு ஒரு வெளி இருந்தால் தான் அங்கு பரிசோதானை முயற்சிகள் செய்ய முடியும்.இந்தியன் காபி ஹவுஸ் போல கூட்டுறவு அடிப்படையில் மாற்று திரைப்படங்களுக்கான சிறிய அரங்குகள் , மாவாட்ட அளவில் ஊருக்கு நூறு பேர் இருந்தால் ஆரம்பிக்கலாம்.அங்கு மக்களிடம் பணம் பெற்று மிக குறைந்த செலவில் படங்கள் உருவாக்கப்படலாம்.இது சாத்தியப்பட்டால் வட்டார அளவிலான சினிமா சாத்தியப்படும்.அதை செய்வதற்கு ஒருவர் பித்தனாகவும் இருக்க வேண்டும்.அந்த அடிப்படையில் ஜான் முக்கியமானவரே.

  சர்வோத்தமன்.

 12. ஜெயமோகன்

  அன்புள்ள சர்வோத்தமன்,

  பொதுவாக ஒன்று சொல்கிறேன்.சமீபமாக நீங்கள் எழுதும் குறிப்புகளில் எதையாவது மாற்று சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தெரிகிறது. சொல்லும் வாதத்தின் பெறுமானம் குறித்த கவனமே இல்லை.

  இருந்திருந்தால் அக்கட்டுரை அல்லது குறிப்பை கவனமாக வாசித்து அதன் தொனியை புரிந்துகொண்டிருப்பீர்கள். இந்த எத்தனிப்பு காரணமாக எலிய விஷயங்கள்க்கூட உங்கல் கண்ணுக்கு படாமல் போகிறது.ஆகவே சம்பந்தமே இல்லாத ஏதோ திசையில் இருந்து நீங்கள் பேசுவது போல் இருக்கிறது.

  இந்தக்குறிப்பையே பாருங்கள். முதலில் தோரோ, ஒத்துழையாமை இதற்கெல்லாம் இங்கே என்ன சம்பந்தம்? தோரோ உருவாக்கியது ஒரு கோட்பாட்டை. அதன் நடைமுறையை.

  ஜான் ஆபிரகாம் பித்தர் என்பதனால் அவரைப் போற்ற வேண்டும் என்கிறீர்கள். நாட்டில் அவர் மட்டும்தானா பித்தர்? எல்லா பித்தர்களையும் போற்ற வேண்டுமா? எதற்காக? ஒருவர் பித்தனோ எத்தனோ அவரது பங்களிப்புதான் அளவுகோல். அந்தப் பங்களிப்பைப்பற்றித்தானே பேசமுடியும்?

  சிவராம காரந்தும் ஜானும் பித்தர்கள் என்கிறீர்கள். காரந்த் மாபெரும் கலைப்படைப்புகளை உருவாக்கியவர். அவருக்கும் ஜானுக்கும் என்ன ஒப்புமை? உலகமெங்கும் பித்தர்கள் கொண்டாடப்படுகிறார்கள், அவர்களின் கலையிலக்கிய படைப்புகளுக்காக. சும்மா பித்தாக இருந்தமைக்காக அல்ல.

  ஜானின் மீதான என் விமரிசனம் அவர் மீது பொய்யான, போலியான புகழ்மாலைகள் சூட்டப்படுவதற்கு எதிரானது மட்டுமே. ஒருவர் பித்தன் என்பதனால் அவர் எடுத்த மோசமான படங்களை கிளாசிக் என்று சொல்ல வேண்டுமா? எடுக்காத படங்களை கொண்டாட வேண்டுமா? என்ன சொல்ல வருகிறீர்கள்?

  ஜான் பித்தன் அல்ல. அவர் ஒரு மது அடிமை. அதை புனிதபித்து என்றெல்லாம் ஆக்குபவர்கள் நம் போலிகள் மட்டுமே. இது ஜானை நேரில் அறிந்த என்னுடைய மதிப்பீடு. எந்தக்கலையையும் சுயமாக உணரும் திறன் இல்லாத, பிம்பங்களை மட்டுமே காணும் திறன் கொண்ட அரைவேக்காடுகள் உருவாக்கும் பிம்பங்களில் எனக்கு மதிப்பில்லை

  அவருடைய கலைத்திறன் மீது எனக்கு மதிப்பிருப்பதை, அவர் தனிப்பட்டக்லையை தேர்வுசெய்திருந்தால் சாதித்திருக்கமுடியும் என்பதை நானே சொல்கிரேன்.

  ஜானை ஒரு போலிப்பிம்பமாக ஆக்குவதைத்தான் நான் கண்டித்திருக்கிறேன். அவரது படங்களை பார்க்காமலேயே அடையும் புளகாங்கிதத்தை. அவற்றின் மீது சம்பந்தமில்லாத புகழ்மொழிகளைப் போடுவதை.

  இந்த போக்கு காரணமாக உண்மையான அர்ப்பணிப்புடன் தரமான ஆக்கங்களை அளித்த கலைஞர்களின் ஆக்கங்கள் மட்டம்தட்டப்படுகின்றன, அவமானப்படுத்தப்படுகின்றன. அதை தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

  அதற்கு மேல் ஜானின் தனிப்பட்ட ஆளுமையை நானறிந்தவரை மதிப்புடன் தான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதை கட்டுரையை வாசித்த எவருமே புரிந்துகொள்ள முடியும். ஏளனம் ஜானைப்பற்றி அபத்தமான பிம்பங்களை உருவாக்குபவர்கள் மீது

  இவற்றை புரிந்துகொள்ள என் கட்டுரையை சாதாரணமாக வாசித்தாலே போதும். நீங்கள் ஒருவகை வெட்டி விவாத மனநிலையில் வாசித்திருக்கிறீர்கள்

  வருந்துகிறேன்

  ஜெ

 13. sarwothaman

  ஜெயமோகன் அவர்களுக்கு,

  * கடந்த இரண்டு மூன்று மாதங்களில் உங்களுக்கு இரண்டு மூன்று மறுமொழிகள் தான் எழுதியிருக்கிறேன். காந்தியின் பிள்ளைகள் கட்டுரைகள் படித்த சில நாட்கள் கழித்து
  EPWவில் அது சம்பந்தமாக http://epw.in/epw/user/loginArticleError.jsp?hid_artid=14240 ஒரு கட்டுரை வந்தது.அதை படித்த போது சில விஷயங்கள் உங்களை கேட்ட வேண்டும் என்று தோன்றியது.கேட்டேன்.அப்படியாகத்தான் மற்றவையும்.வேண்டுமென்றே மாற்றாக என்று இல்லை.வேண்டுமென்றே மாற்றாக எழுதி என்ன செய்து விடப்போகிறேன்.
  .
  * பித்தன் என்பதை அதீத ஈடுபாடு என்ற பொருளில் தான் எழுதினேன்.நீங்களும் அப்படித்தான் எடுத்துக்கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்.அந்த அளவில் சிவராம் காரந்த் பற்றி குறிப்பிட்டேன்.சிவராம் காரந்த்துடன் ஒப்பிட வில்லை.கூடாது என்று எனக்கு தெரியும்.

  * ஜான் மிக சிறிய அளவிலெனும் மாற்று சினிமாவுக்கான களத்தை உருவாக்கியவர், அதன் அடிப்படையில் அவரை பொருட்படுத்தலாம் என்று என்று சொல்ல நினைத்தேன்.ஏன் பொருட்படுத்தலாம் என்பதற்கு என் அளவில் சில எளிய விளக்கங்கள் சொன்னேன்.

  * தோரேவை இழுத்ததும் அந்த அடிப்படையில் தான்.கடைசியாக ஜான் பற்றி மேலே சொன்னதை என்னளவில் மேலும் வலியுறுத்ததான்.

  * இவைகளை கோர்வையாக சொல்லத்தெரியவில்லை.ஆக இனி சொல்லாமல் விட்டுவிடலாம்.

  நன்றி,
  சர்வோத்தமன்.

Comments have been disabled.