«

»


Print this Post

பனித்துளியின் நிரந்தரம்


அன்புள்ள ஜெ,

வணக்கம். நம் மனித வாழ்க்கை ஏன் எனும் கேள்வி சமீபமாக என்னை குடைகிறது. மற்றுமொரு விலங்கான மனிதன் மட்டும் ஏன் விலங்கல்லாத வாழ்வை வாழ்கிறான்? மனித வாழ்வனைத்தும் சம்பாதிப்பதும் அதை செலவழிப்பதும் மட்டுமே என ஆகியுள்ளது. அந்த பொருளீட்டில் தான் மனிதன் வகைபட்டு உள்ளான். நம் வாழ்வின் பயன் தான் என்ன? உலகமயமாக்கலின் பொருளீட்டல்-செலவழித்தல் என்ற மாபெரும் சக்கரத்தில் மாட்டி உழலும் ஓர் அற்ப வாழ்வே நமதா? இதில் நாம் தனித்து இயங்க இயலுமா?

நம் சமூகத்தின் எண்ணிலடங்கா கட்டுப்பாடுகளும் நடைமுறைகளும் தனி மனித வாழ்வை நகல் வாழ்வாக மட்டுமே ஆக்கியுள்ளது. பொருள்/பதவி/புகழ்/அதிகாரம்/வசதிகள் ஆகியவற்றை மட்டுமே நோக்கி நகர்த்துகின்றது. நகல் வாழ்வை வாழ நாம் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்?

நீங்கள் சொல்வதை போல அள்ளிப்பதுக்குகின்றோம். சுயத்திற்காக மட்டுமே செலவழிக்கின்றோம். பதவி அல்லது செல்வத்தின் மூலம் சமூக அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்கிறோம். கல்யாணம் குழந்தை என அடுத்த தலைமுறையை இதே நகல் வாழ்விற்கு தயார் செய்கிறோம்.

சுருக்கமாக இந்த மனித பிறவியின் வாழ்க்கை பயன் யாது? வாழ்வாங்கு வாழ்பவர் யார்?

-ரெ.மோ.ச

பி.கு.: நான் எந்த ஒரு விரக்தியிலோ அல்லது இயலாமையிலோ இவற்றை கேட்கவில்லை. :-)

அன்புள்ள சதீஷ்குமார்,

ஏதேனும் ஒரு கணத்தில் சிந்திக்கும் எவருக்கும் ஆழமாக வந்து தைக்கும் வினா இது. என்ன பிரச்சினை என்றால் விடையை பிறிதொவர் சொல்லிவிடமுடியாதென்பதே. விடைநோக்கிச் செல்லும் பாதையை அமைப்பவையே இலக்கியங்கள், தத்துவங்கள்… விடை ஓர் அனுபவமாக மட்டுமே அமைய முடியும். ஒரு கருத்தாக, கோட்பாடாக அது இருக்க முடியாது.

1987ல் ஒரு பலவீனமான தற்கொலை முயற்சிக்குப்பின் நான் காசர்கோட்டில் கும்பளா என்ற ஊரில் இருந்து காசர்கோடு நகர் நோக்கி ரயில்தண்டவாளம் வழியாக நடந்துகொண்டிருந்தேன். அதிகாலை. மெல்ல கீழே கடல்வெளியில் ஒளி பெருக ஆரம்பித்தது. புதிய வானத்தில் புத்தம் புதிய மேகங்கள் பொன்னொளி பெற்றன. என்னைச்சுற்றி ஒவ்வொரு இலையும், ஒவ்வொரு கூழாங்கல்லும் ஒளிபெறுவதைக் கண்டேன்.

அந்தக் கணத்தில் அனுபவமான ஒன்றை மொழியினூடாக பிறருக்கு அனுபவமாக ஆக்க முயல்வதே என் கலை என்று சொல்வேன். அன்று ஒளி ஊடுருவும் ஓர் இலைப்புழு போல் என்னை உணர்ந்தேன். அப்போது சொல்லிக்கொண்டேன், இந்தப்பிறவியில் இனி ஒருபோதும் நான் துயரம் கொள்ளப்போவதில்லை. இந்தப்பிறவியில் இனி எனக்கு இறந்த காலம் இல்லை, எதிர்காலமும் இல்லை. அந்ததக்கணங்களே வாழ்க்கை. அவற்றின் ஒவ்வொரு துளிகளிலும் அனைத்து இருப்புடனும் முழுமையாக நிலைப்பதென்பதே என் யோகம்.

வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களில் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். ஒவ்வொரு தருணத்திலும். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது.

இதோ இந்த அறைக்கு வெளியே குயில்கள் கூவுகின்றன. குயில்கூவும் பருவம் ஆரம்பித்துவிட்டது. வெயில் எரியும் மதியம். நிழலுக்குள் எங்கோ இருக்கிறது குளிர்ந்த குயில். இப்போது அதனுடன் அந்த நிழலுக்குள் சில கணங்கள் இருக்க முடிகிறது. இந்த நாதத்தில் இக்கணத்தில் என் முழுமையை நான் உணர்கிறேன். இன்னும் சற்றுநேரத்தில் காகங்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். இரவு வரும். சீவிடுகளின் நாதம் இருக்கும்…. இத்தகைய கணங்களாலான ஒரு முழுமானுடவாழ்க்கை எனக்கிருக்குமென்றால் இதைவிடப்பெரியதோர் பொருளை நான் கோருவது போல் அபத்தம் ஏதும் உண்டா என்ன?

ஆம், எனக்கும் இருக்கிறது உலகியல் சிக்கல்கள். சவால்கள், வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள்… இந்த சக்கரத்தில் என் பிறப்புக்கணம் முதலே நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இவை ஒவ்வொன்றையும் நான் நிகழ்த்தியாகவேண்டும். இவையனைத்திலும் நான் என் முழுத்திறமையுடன் வெளிப்பட்டாக வேண்டும். அதற்காக நான் எப்போதுமே முயல்கிறேன். ஆனால் நான் இவையல்ல. இவை என் வெளிப்பாடுகள் மட்டுமே. இவற்றுக்கப்பால் நான் ஒவ்வொரு கணத்திலும் விழித்திருக்கிறேன். ஒவ்வொரு துளியாக இந்த உலகை அருந்திக்கொண்டிருக்கிறேன்.

கவலைப்பட நேரமில்லை என்ற உணர்ச்சி எப்போதும் என்னுடன் இருக்கிறது. வீணடிக்க நாட்கள் இல்லை. விரிந்து பரந்து கிடக்கிறது அனுபவப்பெருவெளி. ஓர் இமைப்பொழுதில்கூட நான் எதையோ இழந்துகொண்டிருக்கக் கூடும்.  இந்த இருபத்துமூன்றுவருடக்காலத்தில் நான் சோர்ந்திருந்த கணங்களே இல்லை.என்  என் உச்சகட்ட சோர்வுகளைக்கூட எழுத்தால் கொண்டாட்டமாக ஆக்கிக் கொண்டிருக்கிறேன். ஊக்கம் குன்றிய என்னை எவரும் பார்க்கப்போவதில்லை. கணமும் சோராத நிலையே நான். நான் அடைவதொன்றும் இல்லை, இங்கே அடையப்படும் எதிலும் எனக்கு மதிப்பும் இல்லை. ஆயினும் செயலாற்றலில் நான் பேரின்பம் கொள்கிறேன்.

செயலாற்றியும் செயலற்றிருந்தும் நான் அறியும் ஆனந்தம் நிறைந்த இந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்தான் நானடையும் பரிசுகள். உயிரின் இயல்பு ஆனந்தம் என்று கற்பிக்கிறது நம் மரபு. ஆகவேதான் அது இடைவிடாது ஆனந்தத்தை நாடுகிறது. தடைகளை அளிப்பவை நம் அகங்காரத்தின் விளைவுகளே. அவற்றை சற்றேனும் களைந்தால் நம் அகத்துக்கு ஆனந்தமாக இருப்பதெப்படி என்று சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை. மனித வாழ்க்கையின் இலக்கென்ன என்றால் ஆனந்தமாக இருப்பது மட்டுமே. 

என் எல்லா எழுத்துக்களிலும் மீளமீள நான் இக்கேள்விக்கே பதில் தேடியிருக்கிறேன். நாவல்களில். கட்டுரைகளில். கீதைக்கும் குறளுக்கும் எழுதும் விளக்கங்களில். எங்கோ ஓர் உச்சநிலையில், மொழியும் அகமும் ஒன்றையொன்று கண்டடையும் தருணத்தில், நானறிந்ததை நிகழ்த்தியுமிருக்கிறேன். அவற்றில் தன்னை நிகழ்த்தும் வாசகனுக்கு அவை அனுபவ தரிசனமாகலாம். அதற்கு வெளியே நின்று அதைச் சொல்ல இயலாதென்றே உணர்கிறேன்

ஜெமறுபிரசுரம் முதற்பிரசுரம் ஜூலை 2010

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6454

8 comments

2 pings

Skip to comment form

 1. rajmohanbabu

  அன்புள்ள ஜெ,
  மிக தெளிவான பதில் ஒவ்வொருவரும் இது போல வாழ்கை வாழ வேண்டும். தங்களின் எழுத்து மிகபெரிய நம்பிக்கை அளிக்கிறது. தங்களின் கீதை தொடரை மிக விரைவில் எதிர் பார்க்கிறோம். பதஞ்சலியின் யோக சூத்திரம்மும் தொடரவேண்டும் என்று வேண்டுகிறேன்.
  நடராஜ குரு அவர்களின் கீதை எங்கு கிடைக்கும்?

  அன்புடன்,
  ராஜ்மோகன்

 2. sundaravadivelan

  //செயலாற்றியும் செயலற்றிருந்தும் நான் அறியும் ஆனந்தம் நிறைந்த இந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்தான் நானடையும் பரிசுகள் // இந்த ஒரு வரியே முழுக் கேள்விக்கும் பதில் சொல்லிவிடுகிறது.

 3. V.Ganesh

  சிறு வயதில் நான் என் அண்ணன் வாங்கி வரும் கோகுலம் இதழுக்காக காத்திருப்பது வழக்கம். அவன் ஒரு வருடம் கட்டபொம்மன்/நேசமணி யில் வேலை பார்த்தான். வாரம் ஒரு முறை வரும். இப்பொழுது அதே நிலைமைதான் உங்கள் வெப்சைட் படித்தே ஆகவேண்டும் .
  நிற்க.
  ஆனால் உங்களைப்போல் எனக்கு எழுத வராது. பத்து முதல் ஆறு வரை ஆபீஸ் வேலை அதற்கு மேலும் இருக்கலாம். அது மனதிற்கு பிடிக்க வேண்டும் என்பதில்லை. ஆனாலும் job satisfaction என்பது மனநிலை பொறுத்த விஷயம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்
  //
  செயலாற்றியும் செயலற்றிருந்தும் நான் அறியும் ஆனந்தம் நிறைந்த இந்தக் கணங்கள் ஒவ்வொன்றும்தான் நானடையும் பரிசுகள் //
  இந்த வரி முழுக்க புரியவில்லை. நாம் நினைப்பதை செய்வது தானே ஆனந்தம்?

 4. ramkathir

  குரு வணக்கம்,

  //அந்தக் கணத்தில் அனுபவமான ஒன்றை மொழியினூடாக பிறருக்கு அனுபவமாக ஆக்க முயல்வதே என் கலை என்று சொல்வேன்//

  ஆம், அரைநூற்றாண்டுகள் வாழ்ந்தாழும், அனுபவத்தில் தெரியநேரிடும் அல்லது தெரியாமல்போகும் மானுடதத்துவத்தை, மரபின் வேர்களை, பின்னிப்பினைந்து செல்லும் பிரபஞ்ச உயிரினநிகழ்வுகளை உங்களது ஆக்கங்களிலிருந்து கடந்த எட்டுமாதகால என்னுடைய வாசிப்பில் அறிந்துகொண்டிருக்கிறேன்.

  //அந்ததக்கணங்களே வாழ்க்கை//
  //நான் ஒவ்வொரு கணத்திலும் விழித்திருக்கிறேன். ஒவ்வொரு துளியாக இந்த உலகை அருந்திக்கொண்டிருக்கிறேன்//

  இந்தப்பொன்மொழிகள் என்றென்றும் என் மனதில் ஒளிர்ந்துகொண்டிருக்கும்.

  கதிரேசன், மஸ்கட்.

 5. sarvachitthan

  அன்புள்ள ஜெயமோகனுக்கு,
  வணக்கமும்,வாழ்த்துக்களும்,
  தங்கள் ஆக்கங்கள் அனைத்தையும் வசித்து வந்தாலும் அதுபற்றிய எனது கருத்தினை எழுதுவதில்லை. காரணம், ஓர் திறமையான மாணவனை மீண்டும் மீண்டும் புகழ்வதில் ஓர் ஆசிரியருக்கு ஏற்படும் ஒருவித சலிப்புணர்வுக்கு ஒப்பானதாக; இதனை எடுத்துக் கொள்ளலாம்.என்றாலும், ‘பனித்துளியின் நிரந்தரம்’ கூறும் தகவல்கள் தங்களை ஓர் அற்புத கலைஞனாக மட்டுமல்ல ‘கீதை’யில் பார்த்தசாரதி காட்டும் ‘யோகி’யாகவும் பார்க்கத்தூண்டுகிறது.தத்துவ விளக்கங்களை எளிமையாகப் பிறர் மனதில் தைக்கும்படி எழுதும் உங்களது ஆற்றல் பிரமிப்பினை அளிக்கிறது.வாழ்த்துக்கள்!

 6. Lakshmanan

  “ஆம், எனக்கும் இருக்கிறது உலகியல் சிக்கல்கள். சவால்கள், வெற்றிகள், தோல்விகள், ஏமாற்றங்கள்… இந்த சக்கரத்தில் என் பிறப்புக்கணம் முதலே நான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இவை ஒவ்வொன்றையும் நான் நிகழ்த்தியாகவேண்டும். இவையனைத்திலும் நான் என் முழுத்திறமையுடன் வெளிப்பட்டாக வேண்டும். அதற்காக நான் எப்போதுமே முயல்கிறேன். ஆனால் நான் இவையல்ல. இவை என் வெளிப்பாடுகள் மட்டுமே. இவற்றுக்கப்பால் நான் ஒவ்வொரு கணத்திலும் விழித்திருக்கிறேன். ஒவ்வொரு துளியாக இந்த உலகை அருந்திக்கொண்டிருக்கிறேன்.”
  கீதையின் சாரமாகவே இதைக்கொள்ளலாம். இது போன்ற மனத் தெளிவிற்காகவே காத்திருந்தது போன்ற ஓர் உணர்வு. நான் தினமும் வாசிக்கும் ஒரு தெளிவான அறிவு சார்ந்த வாக்கியமாகப் போயிற்று.
  லட்சுமணன் ஜெத்தா

 7. சங்கரன்

  அன்புள்ள ஜெயமோகன்,
  தங்களின் கூற்றுடன் சிறிது மாறுபடுகிறேன் . தாங்கள் கூறியபடி சிறு சிறு கணங்களிலான வாழ்க்கையை ஒவ்வொரு கணத்திலும் முழுமையாக வாழும் போது ஒரு உள்ளார்ந்த மகிழ்ச்சி கிடைக்கும் .வாழ்க்கை ஒரு பரிசு என்ற எண்ணம் மனக்காயங்களுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்து. ஆனால் அதனால் முழுமையான விடை கிடைக்காது என்றே நினைக்கிறேன்.

  தன் இயல்பான படைப்பூக்கம் வெளிப்படாத போது அல்லது அவ்வாறன வேளையில் இல்லாதபோதே இத்தகைய கேள்விகள் ( நான் யார், வாழ்க்கையின் அர்த்தம் என்ன ??) எழுகின்றன. தனக்கான, தன் இயல்புக்குரிய கடமையை யார் கண்டுகொள்கிராரோ, யார் தனது மனத்திற்கு உண்மையாக, நேர்மையாக இருக்கிறாரோ அவரது வாழ்வே ,ஒரு அர்த்தமுள்ள வாழ்வு என்பதே எனது கருத்து..

 8. va.srinivasan

  A rejuvenating piece. So well written.

  Two poems coming to my mind:-

  To see a World in a Grain of Sand
  And a Heaven in a Wild Flower
  Hold Infinity in the palm of your hand
  And Eternity in an hour.
  William Blake’s famous lines from his Auguries of Innocence, written in 1794

  AND

  Issa’s haiku:

  “This dew drop world –
  It may be a dew drop,
  And yet – and yet – “

  வ.ஸ்ரீநிவாசன்.

 1. சொல்வனம் » செம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்

  […] க்ளிம்ப்ஸ் ‘பனித்துளியின் நிரந்தரம்’ என்கிற ஜெயமோகன் அவர்களின் […]

 2. தேடியவர்களிடம் எஞ்சுவது

  […] பனித்துளியின் நிரந்தரம் அலைகளென்பவை கதைகளின் முடிவில் நான்குவேடங்கள் நான்குவேடங்கள் கடிதம் […]

Comments have been disabled.