பகுதி மூன்று : இருகூர்வாள் – 5
அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது மந்திரசபை முழுமையாக கூடிவிட்டிருந்தது. அவனை நோக்கி வந்த அவைக்கள அமைச்சர் சபரர் வணங்கி மெல்லிய குரலில் “பிந்திவிட்டீர்கள் இளவரசே” என்றார். அது ஒரு கண்டனம் என அர்ஜுனன் உணர்ந்தான். “பிதாமகர் பலமுறை கேட்டார்” என்றார் சபரர் மீண்டும். அர்ஜுனன் “சற்று உடல்நலமில்லை” என்றுசொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.
மந்திரசபையின் சிறியகூடத்தில் பீடங்களில் பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் திருதராஷ்டிரர் அமர்ந்திருந்தார். அவரது வலப்பக்கம் சகுனி. மறுபக்கம் விதுரர். அருகே சௌனகர் நின்றிருந்தார். அவர்களுக்குப்பின்னால் இருந்த வரிசையில் திருதராஷ்டிரரின் பின்பக்கம் துரியோதனனும் கர்ணனும் அமர்ந்திருக்க பிற கௌரவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
பீஷ்மருக்குப்பின்னால் தருமன் அமர்ந்திருக்க பீமன் கைகளைக் கட்டியபடி நின்றிருந்தான். நகுலனும் சகதேவனும் இளைய கௌரவர்களுடன் சேர்ந்து நின்றிருப்பதை அர்ஜுனன் கண்டு புன்னகை செய்தான். அவனைக் கண்டு சகதேவன் புன்னகை செய்து குண்டாசியை தொட்டு ஏதோ சொன்னான். குண்டாசி எஞ்சிய சிரிப்பு ஒளிரும் கண்களுடன் நிமிர்ந்துநோக்கிவிட்டு பதறி விழிகளை திருப்பிக்கொண்டான். அவர்கள் அதுவரை தன்னைப்பற்றித்தான் ஏதோ கேலியாக பேசிக்கொண்டிருந்தனர் என்று அர்ஜுனன் உணர்ந்தான்.
வெண்பட்டுத்திரைச்சீலை மறைத்த பகுதியில் குந்தியும் காந்தார அரசியரும் இருப்பதை அர்ஜுனன் அறிந்துகொண்டான். திரையிடப்பட்டதனாலேயே அவர்களின் இருப்பு மிக அழுத்தம் மிக்கதாக ஆகிவிட்டிருந்தது. அவர்களின் மூச்சு அந்த அறையை முழுமையாக நிறைத்திருப்பதாகவும் ஒவ்வொருவரையும் அவர்கள் நோக்கிக் கொண்டிருப்பதாகவும் தோன்றியது.
சாளரங்களின் திரைச்சீலைகள் காற்றில் மெல்ல அசைந்துகொண்டிருந்தன. வெளியே நின்ற காவல் வீரர்கள் மெல்ல குறடுகள் ஒலிக்க நடந்துகொண்டிருக்கும் ஓசை கேட்டது. இடைநாழிக்கும் உள்ளரங்கத்துக்கும் அப்பால் பெருங்குடிச்சபையில் இருந்து எழுந்த மக்களின் பேச்சொலியின் முழக்கம் அருவியோ கடலோ போல வந்து காற்றின் அலைகளுக்கேற்ப எழுந்தமைந்தது.
“குலமுறைகள் என்பவை எப்போதுமே…” என்று பீஷ்மர் சொல்லிக்கொண்டிருந்த சொற்றொடரின் நடுவேதான் அர்ஜுனன் உள்ளே புகுந்திருந்தான். அனைவரும் திரும்பி அவனை நோக்க பீஷ்மர் “…விதிவிலக்குகளின் வழியாக புரிந்துகொள்ளப்படவேண்டியவை” என்று தொடர்ந்தார். “ஏனென்றால் குலங்கள் என்பவை குடிகளின் தொகுதிகள். குடிகளோ குடும்பங்களின் தொகுதிகள். ஒவ்வொரு குடியும் குடும்பமும் அதற்கே உரிய வழிமுறைகளைக் கொண்டுள்ளது. விதிவிலக்குகளை உருவாக்கி அவற்றை விலக்கி விலக்கி எஞ்சுபவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்ட விதிகளால் ஆனதே குலநீதி என்பது.”
“ஆம் பிதாமகரே. நாம் விதிவிலக்குகளைத்தான் முதலில் நோக்கவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆணை பிறப்பிக்கப்படுகையிலும் விதிவிலக்குகளைக் கோரியபடி பலர் கிளம்பி வருகின்றனர். நம் எல்லைப்பழங்குடிகளில் ஒன்றில் குடித்தலைவன் மறைந்தால் அவனுடைய வயதடைந்த இறுதி மைந்தனே அரசனாகவேண்டும் என்று நெறி உள்ளது” என்றார் சௌனகர். “எப்போதும் அவர்களின் அரசியலை தனியாகவே அணுகவேண்டியிருக்கிறது.”
“அது ஏன் என்பதை அவர்களை நோக்கினால் உணரலாம்” என்று பீஷ்மர் தாடியை நீவியபடி சிப்பிகள் போல நிறம் மங்கியிருந்த வெண்பற்கள் தெரிய நகைத்தார். “அவர்களுக்கு பதினைந்துவயதிலேயே முதல் மைந்தன் பிறந்துவிடுகிறான். எண்பது வயதுவரை மைந்தர்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். தந்தை மறையும்போது மூத்தமைந்தனும் முதியவனாகவே இருப்பான். அவனை மன்னனாக்கினால் சிலவருடங்களிலேயே அடுத்த மன்னனை தேடவேண்டியிருக்கும். நாலைந்து வருடத்திற்கு ஒரு மன்னன் வீதம் வந்துகொண்டே இருப்பார்கள். மன்னன் பதவியேற்பதே ஒரு அன்றாடச்சடங்காக ஆகிவிடும்.” சபையில் மெல்லிய சிரிப்பொலி எழுந்தது. “இளையோனை தேர்ந்தெடுத்தால் ஒரு தலைமுறைக்கு ஒரு மன்னனே இருப்பான்.”
“அது நல்ல வழக்கமென படுகிறதே” என்றார் கிருபர் “இங்கே சில குலங்களில் வருடம்தோறும் கிழவர்கள் அரசராகிறார்கள்.” பீஷ்மர் “ஆசிரியரே, அப்படி ஒரு முறை உருவாவதற்கு அதற்கான காரணம் இருக்கும். இந்த எல்லைப்பழங்குடியினர் வெறும் வேடர்கள். மலைகளில் பலநூறு காதம் பயணம்செய்து கொண்டே இருப்பவர்கள். ஆகவே உடலூக்கம் கொண்ட அரசன் அவர்களுக்குத்தேவை. பல்வேறு குடிகளும் குடும்பங்களும் கலந்து உருவான பழங்குடிக்குலங்களில் அனைவரையும் அணைத்துச்செல்ல வேண்டியிருக்கும். அதற்கு அனுபவமும் முதிர்ச்சியும் உடைய மூத்த தந்தைவடிவமே அரசனாக தேவைப்படும்” என்றார்.
அவர்கள் பொதுவானவற்றைப் பேசி தங்களை எளிதாக்கிக்கொள்வதாக அர்ஜுனன் நினைத்தான். ஆனால் அந்தப்பேச்சுமே அவர்கள் அறியாமல் அரசுரிமை சார்ந்ததாகவே ஆகிக்கொண்டிருந்தது. எங்கு தொட்டாலும் அங்குதான் வந்து சேரும் என்று தோன்றியது. “இளையோரால் ஆளப்பட்டு முதியோரால் வழிநடத்தப்படும் அரசே வலிமையானது” என்றார் கிருபர். “ஆசிரியரே, ஓர் அரசு யானையா இல்லை பூனையா என்பதைப்பொறுத்தது அது” என்றார் விதுரர்.’ யானை கூட்டமாகவே வாழும். பூனை தனித்தது. யானைக்குத் தாய் பூனைக்குத் தந்தை’
தருமன் அர்ஜுனனிடம் “எங்கு சென்றாய்? உன்னை பலமுறை பிதாமகர் கேட்டார்” என்றான். “நான் சற்று உடல்நலமில்லாமல்…” என ஆரம்பித்த அர்ஜுனனை நோக்கி பீமன் புன்னகைசெய்தான். அர்ஜுனன் கர்ணனை நோக்கினான். கர்ணன் நீண்ட குழலை கட்டிச்சுருட்டி அதில் ஒரு நீலமலரைச் சூடியிருந்தான். அவனுடைய விழிகள் இமைசரிந்து பாதி மூடியிருக்க அவன் உயரம் காரணமாக கீழிருந்து நோக்குகையில் நீளமான முல்லைமலர்கள் போலத் தெரிந்தன.
பீஷ்மர் அர்ஜுனனை நோக்கி திரும்பவேயில்லை. ஆனால் அவன் அமர்ந்ததும் அவனுக்காகவே காத்திருந்தது போல “நாம் இப்போது முதன்மையான முடிவுகளை எடுத்தாகவேண்டிய இடத்தில் இருக்கிறோம்” என்றார். “பேரமைச்சரே, அறைவாயில்கள் மூடப்படட்டும். முடிவு எடுக்கப்பட்டபின்னர் நாம் ஒன்றாக வெளியே பெருங்குடி சபைக்குச் சென்று முடிவை அறிவிப்போம். எந்த முடிவாக இருந்தாலும் அஸ்தினபுரியின் அரசகுலத்தின் ஒரேகுரலிலான முடிவாக அது இருந்தாகவேண்டும். அத்தனை மாற்றுக்கருத்துக்களும் இங்கேயே பேசி முடிக்கப்பட்டுவிடவேண்டும்” என்றார். துரோணர் “ஆம்” என்றார்.
விதுரர் “இறுதி முடிவெடுக்கவேண்டியவர் மாமன்னர் திருதராஷ்டிரர். நாம் இங்கு நம் விருப்புகளையும் வாதங்களையும் ஆலோசனைகளையும்தான் சொல்லவந்துள்ளோம்” என்றார். “ஆம், சௌனகரே, இங்கு நாம் பேசப்போகும் பொருளை அறிவித்து சபையை துவக்கிவையும்” என்றார் பீஷ்மர்.
திருதராஷ்டிரர் மெல்ல அசைந்து அமர்ந்து தன் கனத்த கரங்களைக் கோர்த்து மார்பின் மேல் வைத்து தலையை கோணலாக திருப்பிக்கொண்டார். அவரது காது அவையை நோக்கி இருந்தது. மெல்வதுபோல கனத்த தாடை இறுகி அசைந்தது. இருகைகளிலும் விரல்கள் பின்னி அசைந்தன. விதுரர் குனிந்து ஏதோ கேட்க அவர் வேண்டாம் என்று தலையசைத்தார். வெண்பட்டுத்திரைக்கு அப்பால் மெல்லிய பேச்சொலி கேட்டது. காந்தார அரசியரின் அணிகளின் ஒலியும் பேச்சொலி போலவே ஒலித்தது.
சகுனி சுண்ணத்தால் செய்யப்பட்ட சிலை போல அசைவோ உணர்ச்சியோ இல்லாதவராக அமர்ந்திருந்தார். அர்ஜுனன் அவரது முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தான். செந்நாய் பிடரிபோலச் சுருண்ட தாடியில் நரை கலந்திருந்தது. தோளில் விழுந்த குழலிலும் ஓரிரு கற்றைகளில் நரை தெரிந்தது. தொடர்பயிற்சியினால் இறுகிப்போன தோள்கள் அவரது உடலமைப்புக்கு ஏற்ப சற்றே முன்னோக்கி வளைந்திருந்தன. வெண்ணிறமான தோளில் நீலநரம்பு ஒன்று இறங்கி முழங்கைகளை அடைந்து புறங்கையில் விரிவது தெரிந்தது. மலைமேலிருந்து நோக்கினால் தெரியும் நதிபோல என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.
ஆனால் நினைவறிந்த நாள்முதலே அவரது முகம் மாறாமலிருப்பதுபோலவும் அவனுக்குத் தோன்றியது. அந்தமுகத்தின் உணர்ச்சிகூட சித்திரம் போல அப்படியே நிலைத்திருந்தது. சினம் எழுப்பும் எதையோ எண்ணிக்கொண்டு அதை முழுமையாக மறைத்து அமர்ந்திருப்பதுபோல. எதையோ சொல்லவருபவர் போல. அச்சொல்லை அவன் அறிந்திருப்பதாகக்கூட எண்ணிக்கொண்டான் “அவர் முகத்தைப் பார்த்தாயா? வெண்பட்டால் மூடப்பட்ட வாள் போல” என்றான் தருமன். அர்ஜுனன் புன்னகைத்தான். உடல்கள் நெருக்கமாக இருந்தால் உள்ளங்களும் ஒன்றாகிவிடும் என்று நினைத்ததும் பீமன் திரும்பி புன்னகை செய்தான்.
சௌனகர் “புண்ணியபூமியான பாரதவர்ஷத்தின் பதாகைச்சின்னமும் தெய்வங்களுக்கு உகந்ததுமான சந்திரகுலத்தின் புகழ் நீடூழி வாழ்க! மாமன்னர் ஹஸ்தியால் அமைக்கப்பட்ட அஸ்தினபுரி வாழ்க! அவைகொண்டு அமர்ந்து நம்மை வாழ்த்தும் பிதாமகரும் அசிரியர்களும் வாழ்க! முடிகொண்ட மாமன்னர் திருதராஷ்டிரர் வாழ்க!” என்று வாழ்த்தி வணங்கியதும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். அவைக்கூட முகட்டில் அந்த ஓங்காரம் எழுந்து அடங்கியது.
“அவையோரே, நாம் இங்கே நமது அரசின் முடிக்குரிய இளவரசரை தெரிவுசெய்வதற்காக கூடியிருக்கிறோம்” என்றார் சௌனகர். “இளவரசுப்பட்டம் கட்டுவதைப்பற்றி இரண்டு வகையான கருத்துக்கள் இங்கே இருப்பதனால்தான் நாம் கூடியிருக்கிறோம். அனைவருக்கும் உகந்த முறையில் அவற்றை விவாதித்து முடிவெடுப்போம். குருவருள் துணையிருப்பதாகுக!” என்று அவர் வணங்கியதும் திருதராஷ்டிரர் கைகூப்பினார்.
சௌனகர் கைகாட்டியதும் சேவகன் ஒருவன் நீதிநூல்களின் சுவடிக்கட்டுகள் அடுக்கப்பட்ட ஒரு பெரிய மூங்கில்தாலத்தை கொண்டுவந்து அவைநடுவே பீடத்தில் வைத்தான். அதன்மேல் உருவிய ஒரு வாளும் மலர்ந்த ஒரு தாமரையும் வெண்சங்கும் வைக்கப்பட்டது.
“அவையோரே, இங்கு நம்மை ஆளும் நீதிநூல்கள் அவைகொண்டிருக்கின்றன. துணிக்கவும் வாழ்த்தவும் அறைகூவவும் திறன்கொண்ட முன்னோரின் சொற்கள் அவை. அவை வாழ்க!” என்றார் சௌனகர். “அவையோரே, இச்சபையினர் அறியாதது அல்ல என்றாலும் இங்கே இக்குலமரபின் நீதியையும் நெறிமுறையையும் வகுத்துரைக்க ஆணையிடப்பட்டுள்ளமையால் உரைக்கிறேன்” என்றார்.
“தொன்றுதொட்டு வரும் முறைப்படி இச்சந்திரகுலத்தின் மரபுரிமை என்பது யமஸ்மிருதியின் அடிப்படையிலும் பராசரநீதியின் அடிப்படையிலும் முடிவாகிறது. இவ்விரு நூல்களும் சொல்லாத ஒன்றுக்காக மட்டுமே பிற நூல்கள் கருத்தில்கொள்ளப்படும். பாரதவர்ஷத்தின் ஐந்து பெரும் குருமரபுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், வேதங்களை சுருதியாக ஏற்றுக்கொண்டதும், முன்னரே இச்சபையால் ஏற்கப்பட்டுவிட்டதுமான நூலே இங்கே வழிகாட்டு நூலாக அமைய முடியும். புதுநூல் நெறிநூலாகக் கொள்ளப்படவேண்டுமென்றால் அது குலக்குழுக்கள் அனைவரும் கூடிய அவையில் விவாதித்து ஏற்கப்பட்டிருக்கவேண்டும். இச்சபையில் எட்டு ஸ்மிருதிகளும் இருபத்திநான்கு நெறிநூநூல்களும் ஏற்கனவே ஏற்கப்பட்டவை.”
“அவையினரே, அந்நெறிநூல்கள் விடை சொல்லாத வினா என்றால் சந்திரகுலத்து மூதாதையரின் வாழ்க்கையை முன்னுதாரணமாகக் கொண்டு நீதி பெறப்படும். மூதாதையர் வாழ்விலும் விடை இல்லை என்றால் ரிஷிகளின் வாழ்க்கையில் விடை தேடப்படும். அங்கும் விடை இல்லை என்றால் அவைமூத்தார் பெரும்பாலானவர்களின் கருத்தே முடிவாகக் கொள்ளப்படும் என்றறிக” என்றார் சௌனகர்.
“அவையினரே, யமஸ்மிருதியின்படியும் பராசரநீதியின்படியும் அரசுரிமையின் முதல் விதி இதுதான். அரியணையில் அமர்ந்து செங்கோலேந்தி வெண்குடைகவித்து முடிசூடியிருக்கும் அரசரின் பட்டத்தரசிக்குப் பிறந்த முதல் மைந்தனே அடுத்து முடிசூடும் உரிமை கொண்டவன். அவனுடைய முடியுரிமையானது ஆதிதெய்வீகம் எனப்படுகிறது. தெய்வங்களால் அளிக்கப்பட்டதும் பிறப்பிலேயே அடையப்பெற்றதுமான அவ்வுரிமையை அவன் அடைவதற்கு வேறெந்த நெறியும் முறையும் தடையாக இருக்கமுடியாது. அவரது மரணம் மட்டுமே அப்பதவியில் இருந்து அவரை விலக்கமுடியும்” சௌனகர் சொன்னார்.
“அவரது முடியுரிமை இறைவிதி என்பதனால் அவர் முடிசூடமுடியாமலிருப்பதும் இறைவிதியினால் மட்டுமே அமையமுடியும். அவ்வாறு முடிசூடமுடியாமல் ஆவதற்கு மூன்று காரணங்களை மட்டுமே பராசரநீதி சொல்கிறது. சித்தம்பிறழ்தல், அரசாட்சி செய்யமுடியாதபடி புலன்கள் பழுதடைதல், தெய்வங்கள் தீச்சொல்லிடும் பெரும்பாவத்தைச் செய்து நால்வகைக் குடிகளாலும் கைவிடப்படுதல். நம் மாமன்னர் திருதராஷ்டிரர் இதில் இரண்டாவது விதியின் அடிப்படையில்தான் தன் முடியுரிமையை துறக்க நேரிட்டது. அவரது விழியின்மை ஒரு குறைபாடாகச் சுட்டப்பட்டதை அவைப்பதிவுகள் சொல்கின்றன.”
அர்ஜுனன் திருதராஷ்டிரரை நோக்கினான். கனத்த தாடையை அசைத்துக்கொண்டு விரல்களால் எதையோ துழாவிக்கொண்டு அவர் அமர்ந்திருந்தார். பார்வை இல்லாததனாலேயே முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படவில்லை. அல்லது பிழையாக வெளிப்பட்டன. கண்கள் அமைந்த குழிகள் ததும்பிக்கொண்டே இருப்பது அவர் கொந்தளிப்பதாக ஒரு மனச்சித்திரத்தை அளித்தது.
சௌனகர் தொடர்ந்தார் “அவைக்களத்தோரே, அத்தகைய பிறப்புரிமை இல்லாத நிலையில் வெவ்வேறு காரணங்களுக்காக ஓர் அரசர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றால் அது ஆதிமானுஷிகம் எனப்படுகிறது. மனிதர்களால் அளிக்கப்பட்ட அந்த முடியுரிமை மனிதர்களாலேயே நீக்கப்படவும் கூடியது. நான்கு பேர் ஆதிமானுஷிக முறைப்படி முடியுரிமையை அளிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். முடிக்குரியவர் தன் முடியுரிமையை உவந்து இன்னொருவருக்கு அளிக்கலாம். அரசகுடி மூத்தார் தங்கள் ஒத்த கருத்தின்படி அரசகுலத்தார் ஒருவருக்கு முடியுரிமையை அளிக்கலாம். குலச்சபைகள் தங்கள் பெரும்பான்மைக் கருத்தின்படி தங்களில் ஒருவருக்கு முடியுரிமையை அளிக்கலாம். ரிஷிகள் எவரையும் ஷத்ரியராக நீர்முழுக்காட்டி அரசை அளிக்கலாம். மாமன்னர் பாண்டு முதல் மூன்று முறைப்படியும் முடியுரிமையைப் பெற்றார் என்பதை அவைக்குறிப்புகள் காட்டுகின்றன.”
“இம்முடியுரிமையை நீக்கவும் நான்கு தரப்பினர் அதிகாரம் கொண்டவர்கள் என்கிறது பராசரநீதி. முடியுரிமை எவரால் அளிக்கப்படுகிறதோ அவரால் அது அளிக்கப்பட்ட முறையிலேயே நீக்கப்படலாம். முடியுரிமை அளிக்கப்பட்டமைக்கு அடிப்படையாக அமைந்த காரணங்கள் இல்லாதுபோனால் குலச்சபையினர் கூடி முடியுரிமையை விலக்கிக் கொள்ளலாம். முடியுரிமை கொண்டவர் முடியுரிமை அளிக்கப்படுகையில் அவருக்குச் சொல்லப்பட்ட நெறிகளையும் வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்கவில்லை என்றால் குலச்சபை கூடி முடியுரிமையை விலக்கிக் கொள்லலாம். ரிஷிகள் தாங்கள் அளித்த ஷத்ரியநிலையை முறையாக விலக்கிக்கொண்டால் அரசன் பதவியிழந்தவனாவான்.”
சௌனகர் தொடர்ந்தார் “மூன்றாவது முடியுரிமை பைசாசிகம் எனப்படுகிறது. வெறும் வலிமையை மட்டுமே கொண்டு அரசை வெல்வது அது. அது மூன்று வகை. படைபலத்தைக் கொண்டு நாட்டை வென்று அரசனைக் கொன்று மணிமுடியைக் கைப்பற்றி அணிவது ஷாத்ரம் எனப்படுகிறது.. அரசனை அல்லது அரசன் தன் சார்பில் அனுப்பும் வீரனை பொதுச்சபையில் ஒற்றையாள் போருக்கு அழைத்து அப்போரில் வென்று அதன் பரிசாக மணிமுடியை அடைவது வீரியம் எனப்படுகிறது. அரசனை சதியால் கொன்று மணிமுடியைக் கவர்வது மிருகீயம் எனப்படுகிறது.”
“முதல்முறை ஷத்ரியர்களுக்கு உகந்தது, எனவே உத்தமம். இரண்டாவது முறை மத்திமம். அந்தமுறைக்கு குலச்சபை அனுமதி இருந்தாகவேண்டும். மூன்றாவது அதமம். அதைச்செய்தவனைக் கொல்ல வாளேந்திய அத்தனை ஷத்ரியருக்கும் உரிமையும் கடமையும் உண்டு. அவன் தன்னை காத்துக்கொள்ளும் வரை வேறுவழியில்லாமல் அரசனாக இருப்பான்” என்றார் சௌனகர்.
“அவையோரே, அஸ்தினபுரியின் முடியுரிமையை ஆதிமானுஷிக முறைப்படி பெற்ற மாமன்னர் பாண்டு விண்ணேகியபோது இளவரசர்கள் வயதடையாமலிருந்தமையால் மணிமுடியும் செங்கோலும் காத்திருக்கலாமென மூத்தோர் முடிவெடுத்தனர். அதன்பின்னர் பன்னிரண்டு ஆண்டுகளாக மாமன்னர் திருதராஷ்டிரர் மணிமுடியும் செங்கோலும் இல்லாது அரசரின் பொறுப்பில் இருந்து அஸ்தினபுரியை ஆண்டுவருகிறார். அவரது இளவலும் பேரமைச்சருமான விதுரரின் ஞானமும் மூத்தவரான பீஷ்மபிதாமகரின் அருளும் அவருக்கு மணிமுடியாகவும் செங்கோலாகவும் அமைந்துள்ளன” என்றார் சௌனகர்.
“இப்போது மூத்த இளவரசர்கள் வயதடைந்துவிட்டனர். படைக்கலப்பயிற்சியும் குருகுலவாழ்வும் முடித்து குண்டலம் அணிந்து விட்டனர். இனி அவர்களில் ஒருவருக்கு இளவரசுப்பட்டம் அறிவிக்கப்படவேண்டும். வரும் முழுநிலவுநாளில் பட்டத்து இளவரசர் குடியரங்கில் தோன்றி வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்பது முறை. மன்னருக்கான ஏழுவகைப் பயிற்சிகளைப் பெற்றபின்னர் அவர் முடிசூடி அரியணை அமர்ந்து செங்கோலேந்தி அஸ்தினபுரியை ஆளலாம்” என்று சௌனகர் சொன்னதும் அதுவரை இயல்பாக அமர்ந்திருந்த அவையில் ஓர் அசைவு கடந்துசென்றது. ஓர் எண்ணத்தை கண்ணால் பார்க்கமுடியும் என்று அர்ஜுனன் நினைத்துக்கொண்டான். “அதன்பொருட்டே நாம் இப்போது இங்கே கூடியிருக்கிறோம்.”
சிலகணங்கள் அமைதி நிலவியது. சௌனகர் சொன்னார் “அவையோரே, முடிசூடி இந்த அரியணையில் அமர்ந்திருந்தவர் மாமன்னர் பாண்டு. அவரது முதல்மைந்தரும் மார்த்திகாவதியின் யாதவர் குலத்தின் குலமுறையில் வந்தவருமான யுதிஷ்டிரர் ஐப்பசி மாதத்தின் ஐந்தாவது வளர்பிறை நாளில், கேட்டை நட்சத்திரம் சந்திரலக்னத்தில் அமைந்திருந்த விருச்சிகராசியில், சிம்மலக்னத்தில் பிறந்தவர். நிமித்திகர் அவரது பிறவிநூலைக் கணித்து முடிகொண்டு நாடாளும் நல்லூழ் கொண்டவர் என்றும் அவரது குடைக்கீழ் மானுடரும் உயிர்க்குலங்களும் தாவரங்களும் செழிக்கும் என்றும் பாதாளமூர்த்திகளும் தேவர்களும் மகிழ்வர் தெய்வங்கள் அருள்வர் என்றும் குறியுரைத்துள்ளனர். தருமபுத்திரர் என்று அவரை அவர்கள் வாழ்த்தினர். இவ்வரியணையில் பிறப்புரிமையாக அமரவேண்டியவர் தருமரே.”
“அவையோரே, ஆனால் அந்தப் பிறப்புரிமையை இந்த அவையில் காந்தார இளவரசரும் அரசரின் மைத்துனர் முறைகொண்டவருமான சகுனித்தேவர் மறுத்திருக்கிறார். திருதராஷ்டிர மாமன்னரின் முதல்மைந்தரும், காந்தார அரசரின் கொடிவழியில் தாய்முறைமை கொண்டவரும் ஆங்கிரீச வருடம் ஐப்பசி மாதம் தேய்பிறை ஒன்பதாவது நாளில் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவருமாகிய துரியோதனரே முடியுரிமைக்குரியவர் என்று அவர் கூறுகிறார். அதற்குரிய காரணங்களை அவர் முன்வைப்பார்” என்றபின் தலைவணங்கி அமர்ந்துகொண்டார் சௌனகர்.
அனைவரும் சகுனியை நோக்க அந்தப்பார்வைகளை உணர்ந்தவராக அவர் குனிந்து தன் கைகளை நோக்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் மெல்ல பெருமூச்சுவிட்டபடி எழுந்தார். தாடியை வருடிக்கொண்டு எவரையும் நோக்காமல் தரையில் பதிந்த விழிகளுடன் சிலகணங்கள் நின்றபின் மெல்லிய குரலில் பேசத்தொடங்கினார். “அவையோரே, மூத்தோரே, அரசே, வணங்குகிறேன். ஆதிமானுஷிக முறைப்படி பாண்டு அஸ்தினபுரியின் அரசைப்பெற்றார் என்று நாம் அறிந்துள்ளோம். ஆகவே அவரது முடிப்பொறுப்பு இறையுரிமை கொண்டது அல்ல. எனவே அவரது மைந்தரின் முடிப்பொறுப்பும் இறையுரிமை கொண்டது அல்ல. அது மானுடரால் அளிக்கப்படுவதும், மானுடரால் நீக்கப்படுவதும் ஆகும்.”
சகுனியின் கைகள் தாடியை வருடிக்கொண்டே இருந்தன. அந்த அசைவு மாறுபட்டிருந்தது. கழுத்திலிருந்து தாடியின் மென்மயிர்ச்சுருளை மேல் நோக்கி நீவினார். அர்ஜுனன் பீஷ்மரை ஓரக்கண்ணால் ஒருகணம் நோக்கினான். இடுங்கிய விழிகளுடன் அவர் கைகளை மார்பில் கட்டியவராக நிமிர்ந்து அமர்ந்திருந்தார். அவன் விழிகள் திரும்பி கர்ணனை நோக்கின. அவனும் மார்பில் கைகளைக் கட்டியபடி நிமிர்ந்த நோக்குடன் சிலையென நின்றிருந்தான். அங்குபேசப்படுபவை எப்படி அமைந்தாலும் பொருட்டில்லை என்ற உடல்மொழி அவர்கள் இருவரிலும் இருந்தது.
“பாண்டுவுக்கு அளிக்கப்பட்ட முடியுரிமையானது ஒரு முன்நெறி கொண்டது. அவரது மூத்தவரான திருதராஷ்டிரர் விழியிழந்தவர் என்பதனால் ஆதிதெய்வீக முறைப்படி அவர் பதவி ஏற்கமுடியாமலானார். அவரது முடி அவரால் இளையோனாகிய பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. அப்போது பதினெட்டாண்டுகாலத்திற்கு பாண்டு ஆட்சி செய்யவேண்டும் என்றும் அவ்வாட்சிக்காலம் முடிந்ததும் மணிமுடி திருதராஷ்டிரரின் கொடிவழிக்கே மீண்டுவரவேண்டும் என்றும் வாக்கு சொல்லப்பட்டது. திருதராஷ்டிரரின் மைந்தர் வயதடைவதற்காகவே அந்த பதினெட்டாண்டுகாலம். அந்த வாக்கின்படி பதினெட்டாண்டுகாலத்தில் மணிமுடி மீண்டும் திருதராஷ்டிரருக்கே வந்துவிட்டது. அது திருதராஷ்டிரரின் மைந்தராகிய துரியோதனனுக்கே உரியது.”
சகுனி தொடர்ந்தார் “அவையோரே, இருமுனையிலும் பாண்டுவின் முடியுரிமை அகன்றுவிட்டது. அவருக்கு எக்காரணத்தால் மணிமுடி அளிக்கப்பட்டதோ அக்காரணம் இன்றில்லை. விழியிழந்தவரான திருதராஷ்டிர மாமன்னருக்கு இன்று இரு ஒளிமிக்க விழிகளாக மைந்தர் இருக்கிறார். அவருக்கு மணிமுடியை அளித்தவர்கள் அன்றே சொன்ன வாக்கின்படி இன்று அது திரும்பப்பெறப்பட்டுவிட்டது. ஆகவே இன்று யுதிஷ்டிரர் மணிமுடிக்கு எவ்வகையிலும் உரிமைகொண்டவர் அல்ல. அஸ்தினபுரியின் முடி கௌரவமூத்தாரான திருதராஷ்டிரரிடம் வந்துவிட்டது. ஆகவே முடிக்குரியவர் இயற்கையாகவே இளவரசர் துரியோதனர்தான்.” சகுனி வணங்கி அமர்ந்துகொண்டார்.
சிலநொடிகள் அவை அமைதியாக இருந்தது. ஒருசில கங்கணங்கள் அசைந்தன. கிருபர் செருமிக்கொண்டார். காற்றில் திரைச்சீலைகள் எழுந்து அமைய முற்பகல்வெயில் பட்ட தழைகளின் வாசனை எழுந்தது. விதுரர் “பிதாமகர் பீஷ்மரின் எண்ணத்தை அறியவிரும்புகிறோம்” என்றார். பீஷ்மர் பெருமூச்சுடன் கலைந்து “அமைச்சரே, பாண்டுவுக்கு மணிமுடியை அளிக்கையில் நான் சகுனிக்கு ஒரு வாக்கு அளித்தேன். இம்மணிமுடி பதினெட்டாண்டுகாலத்துக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது, அவரது மருகன் வயதடைந்ததும் அவனே மன்னனாவான் என்றேன். அந்த வாக்கை இங்கே முன்வைக்க விரும்புகிறேன்” என்றார்.
சௌனகர் ஒருகணம் விதுரரை நோக்கிவிட்டு “ஆனால் நம்முடைய குடிக்கே மூத்த இளவரசர் யுதிஷ்டிரர். அவரையே குடிகளும் விழைகிறார்கள். இங்கு நாம் அவற்றை கருத்தில்கொள்ளவேண்டும். நாம் நூல்நெறியையும் குலச்சபையையும் மீறலாகுமா?” என்றார்.
சகுனி அவரை திரும்பி நோக்காமல் மெல்லிய குரலில் “சௌனகரே, குடிக்கு மூத்த இளவரசருக்கு பட்டம்கட்டும் வழக்கம் எங்குமில்லை. முடியுடைய மன்னனின் மூத்த மைந்தன் என்றே நூல்களில் சொல்லப்பட்டுள்ளது” என்றார். “அத்துடன் முடிமன்னரை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை குலச்சபைக்கு இல்லை. முடிக்குரியவரை நாம் தேர்ந்தெடுத்தபின் அவர்களிடம் அறிவிப்போம். அவர்களுக்கு ஏதேனும் மறுப்பு இருக்குமென்றால் அவர்கள் அதை நம்மிடம் தெரிவிக்கலாம். அதற்கான காரணங்கள் முறையானவையாக இருக்குமென்றால் நாம் அதை பரிசீலிக்கலாம். என்னென்ன காரணங்களின்படி குலச்சபை ஓர் அரசனை மறுக்கலாம் என்பதற்கு நூல்நெறிகள் உள்ளன. அந்தக் காரணங்களில் ஒன்றை அவர்கள் முறையாக அவையில் வைத்தாகவேண்டும்” என்றார்.
பீஷ்மர் “சகுனி சொல்வதே நூல்முறையாகும்” என்றபின் “இதற்கப்பால் நான் இச்சபையில் எதையும் விரிவாகப்பேச விழையவில்லை. என் வாக்கை இச்சபையில் முன்வைத்தாகவேண்டும், அது சகுனிக்கு நான் பட்ட கடன். என் வாழ்நாளின் இறுதிவரை அவ்வாக்குக்கு நான் கட்டுப்பட்டவன். முடிசூடினாலும் இல்லையென்றாலும் நான் திருதராஷ்டிரனையே மன்னனாக ஏற்பேன். அவன் மைந்தனையே வழித்தோன்றலாகக் கொள்வேன்” என்றார்.
மீண்டும் இறுகிய அமைதி அவையில் நிறைந்திருந்தது. அர்ஜுனன் விதுரரையே நோக்கினான். அவரது விழிகள் பீஷ்மரையும் துரோணரையும் கிருபரையும் தொட்டுச் சென்றன. “தங்கள் எண்ணத்தைச் சொல்லலாம் துரோணரே” என்றார் சௌனகர் . “என் கருத்து என்பது எப்போதும் பிதாமகரின் கருத்தே. இவ்வாழ்வில் அவர் எண்ணுவதற்கு மாறாக எதையும் எண்ண நான் சித்தமாக இல்லை” என்றார் துரோணர். கிருபர் “நானும் அவ்வண்ணமே” என்றார்.
விதுரர் துரோணரை நோக்கியபடி எழுந்து கைகூப்பியபடி “பிதாமகர் என்னைப் பொறுத்தருளவேண்டும். இக்குடியின் மூத்தோராக நீங்கள் இருக்கிறீர்கள். அஸ்தினபுரியின் அரியணைக்கு முதற்காவலனாக உயிருள்ளவரை இருப்பேன் என்பது தாங்கள் தங்கள் தந்தை சந்தனுவுக்கு அளித்த வாக்கு. அஸ்தினபுரியின் மணிமுடியைச்சூடிய எவரும் சந்தனுவின் பெயரைச்சொல்லி அக்கடமையை தங்களிடம் கோர உரிமை கொண்டவரே” என்றார்.
“ஆம், என் வாள் அஸ்தினபுரியின் அரசனுக்கே. அவன் யாராக இருந்தாலும். ஆனால் என் நெஞ்சு திருதராஷ்டிரனையே அரசனாகக் கொள்ளும். துரியோதனனையே இளவரசாகக் கொள்ளும். அதை நான் மாற்றிக்கொள்ளமுடியாது. என் சொல்லாக வந்தது நான் வணங்கும் தெய்வமென்றே அறிகிறேன்” என்றார் பீஷ்மர்.
விதுரர் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் சகுனி சினத்துடன் எழுந்து சற்று உரத்த குரலில் “அமைச்சரே, நீங்கள் பிதாமகரின் உள்ளம் எப்படி செயல்படவேண்டுமென வகுக்க முயல்கிறீரா என்ன?” என்றார். “அஸ்தினபுரியின் குலமூத்தவர் பிதாகமரே. மண்மீதிருக்கும் மூதாதை வடிவம் அவர். அவரது சொல் இங்கே வாழ்ந்தாகவேண்டும். இளையோர் அவர் சொல்லை மீறினர் என்ற பழி நிகழலாகாது. அதுமட்டுமே என் விண்ணப்பம்” என்றார். விதுரர் கைகூப்பி “ஆம், இக்குலம் உள்ளவரை பிதாமகரின் சொல்லே நின்றாளவேண்டும். அதுவே முறையாகும்” என்றார்.
அவையெங்கும் எழுந்தோடிய அசைவை அர்ஜுனன் கண்டான். அவைக்கூட்டம் முடிந்துவிட்டது என்ற உணர்வு அவ்வசைவில் தெரிந்தது. கிருபர் குனிந்து அவர் கொண்டுவந்திருந்த சிறிய மான் தோல் பையை எடுத்துக்கொண்டார். தருமன் குனிந்து அர்ஜுனனிடம் “விதுரர் சொன்னது எவ்வளவு சிறப்பு பார்த்தாயா? அனைத்தும் இயல்பாக முடிந்துவிட்டன” என்றான். அர்ஜுனன் நிமிர்ந்து தருமன் விழிகளை நோக்கினான். அவை உண்மையான மகிழ்வுடன் மலர்ந்திருப்பதைக் கண்டு சஞ்சலத்துடன் விழிகளை திருப்பிக்கொண்டான். அப்படியென்றால் முடியையும் நாட்டையும் விழைபவன் நானா? என் உள்ளம் ஏன் ஏமாற்றம் கொள்கிறது?
“பிதாமகரை வணங்கி வாழ்த்துகொள்கிறேன் பார்த்தா. நான் அவர் சொல்லைமீற ஒருகணமும் எண்ணவில்லை என்பதை அவர் அறியவேண்டும்” என்றான் தருமன். மிகமெல்ல உதடுகள் மட்டுமே அசைய சபையை நோக்கி நிமிர்ந்து நின்று அவன் பேசுவது துல்லியமாக தனக்குக் கேட்பதை அர்ஜுனன் வியப்புடன் எண்ணிக்கொண்டான். விதுரர் சௌனகரின் காதில் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க திருதராஷ்டிரர் தனக்கு பானம் கொண்டுவரச்சொல்லி கைகாட்டினார். சௌனகர் சால்வையை எடுத்துப்போட்டுக்கொண்டதைக் கண்டு அவர் எழுந்து அவையின் இறுதிமுடிவை கோரப்போகிறார் என்று நினைத்ததும் அவன் நெஞ்சு ஒலிக்கத் தொடங்கியது.
வெண்முரசு அனைத்து விவாதங்களும் கடிதங்களும்