செப்டம்பர் ஐந்தாம்தேதி இரவுதான் அகோபிலம் வந்துசேர்ந்தோம். தர்மாவரம் செல்லவேண்டுமென்ற திட்டமிருந்தாலும் அதை விட்டுவிட்டோம். ஊரைவிட்டுக்கிளம்பி இரண்டுநாள் ஆகிறதென்றாலும் நெடுந்தூரம் வந்துவிட்டோமென்ற உணர்வு உருவாகிவிட்டது. பலகாலமாக இப்படி பயணம் செய்துகொண்டே இருப்பது போல் ஓரு பிரமை. சாதாரணமாக நம் வாழ்க்கையில் ஒருநாளில் மனதில் நிற்கும் ஓர் அனுபவம் இருந்தால் அதிகம். பயணத்தில் அனுபவங்களால் நினைவுப்பெட்டகம் நிறைந்து வழிகிறது. காட்சிகள் மனதில் நிறைந்து கண்மூடும்போதெல்லாம் இமைகளுக்குள் விரிகின்றன. பயணங்களில் நாம் பலமடங்கு வாழ்கிறோம். அனுபவங்களை வைத்துத்தான் நம் அகம் காலத்தை எடைபோடுகிறதென்பதனால் பயணங்களில் நம் காலம் மிகப்பெரிது. ஆகவே அது அதிவேகமாக ஓடிச்செல்கிறது.
அகோபிலம்தான் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடம். தமிழ்நாட்டிலிருந்து வைணவர்கள் இங்கே வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்யாணம்,சிரார்த்தம் என்று. இதனால் இநத ஊரில் நல்ல தமிழ் எங்கும் ஒலிக்கிறது. சென்னையில் இருந்து நேரடியாக வந்துசேர நாநூறு கிலோமீட்டர் ஆகும். இங்குள்ள காட்டுக்குள் கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரத்துக்குக்குள் நரசிம்ம மூர்த்திக்கு கட்டப்பட்டுள்ள ஒன்பது ஆலயங்கள்தான் இதன் சிறப்பாகும்.அகோபிலம் என்றால் ‘மாபெரும் குகைக்கோயில்’ என்று பெயர். குன்றின் அடிவாரத்தில் பிரகலாதவத வரதரின் கோயில் உள்ளது.
தலவரலாற்றின்படி இந்த இடம் கருடகிரி [ கருடாச்சலம், கருடசைலம்] என்று அழைக்கப்படுகிறது. கருடருக்கு காட்சி கொடுக்கவே ஒன்பது இடங்களில் பெருமாள் நரசிம்மராக தோற்றம் அளித்தாராம். இங்கே ஹிரணியனைக் கொன்றபின் பிரகலாதனுக்கு வரம்கொடுக்கும் தோற்றத்தில் பெருமாள் கோயில்கொண்டிருக்கிறார். இன்னொரு கதையின்படி இப்பகுதியில் வாழ்ந்தபழங்குடியினர் செஞ்சுக்கள். அவர்களின் குலத்தில் மகாலட்சுமி செஞ்சுலட்சுமியாக வந்து பிறந்தார். அவரை பெருமாள் அவரே வந்து கைப்பிடித்தார். செஞ்சுபழங்குடியினர் வழிபட்ட நரசிம்மர்கோயில்கள் இவை.
அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான ஆளுமையான இவரைப்பற்றி இங்கே அதிகம்பேசப்படுவதில்லை. அவர் கன்னடர். இயற்பெயர் கிடாம்பி ஸ்ரீனிவாசாச்சார். கர்நாடக மாநிலத்தில் மேல்கோட்டே என்று அழைக்கப்படும் திருநாராயணபுரத்தில் 1398 ல் பிறந்தவர். அவரை அவரது தந்தை கிடாம்பி கேசவாச்சார் கல்விக்காக காஞ்சீபுரம் கடிகைக்கு அனுப்பினார். அவரது 20 வயதில் கனவில் ஒரு காவியணிந்த துறவி வந்து அகோபிலத்துக்குச் செல்லும்படி ஆணையிட்டிருக்கிறார். அகோபிலம் அப்போது யாருமெ அறிந்திராத ஊர். அடர்ந்தகாடுகளுக்குள் பழங்குடிகள் வாழ்ந்துவந்த இடம். இப்போதுகூட அது காடுதான். ஸ்ரீனிவாசாச்சார் தன் குருவான கடிகாசதம் அம்மாள் என்று அழைக்கப்பட்ட வரதவிஷ்ணுவாச்சாரிடம் ஆலோசனைகேட்க அவர் அந்த கனவை பின்பற்றும்படி ஆலோசனை சொன்னார். ஸ்ரீனிவாசாச்சார் கால்நடையாகவே பலகாலம் பயணம்செய்து பலரிடம் தொடர்ந்து விசாரித்து அகோபிலக் காட்டுக்குவந்துசேர்ந்தார்.
ஸ்ரீனிவாசாச்சாரியார் அக்காட்டுக்குள் இருந்த குகைகளிலேயே தங்கி அங்குள்ள பழங்குடியினரை வைணவர்களாக்கி நரசிம்மருக்கான குகைக்கோயில்களை நிறுவினார்.அப்பகுதியின் அதிபனாக இருந்த முகுந்தராயன் என்பவனுக்கும் கனவில் பெருமாளின் ஆணைவந்ததாம். அவன் வந்து ஸ்ரீனிவாசாச்சாரியாரை பணிந்தான்.ஸ்ரீனிவாசாச்சாருக்கும் பெருமாளே கனவில்வந்து துறவு அளித்ததாக ஐதீகம். அகோபிலமடம் அவ்வாறாக உருவானது. ஆதிவண் சடகோப மகாதேசிகரே அதன் முதல் ஜீயர். இந்த சம்பவம் கீழே உள்ள நரசிம்மர் ஆலயத்தின் தூண்களில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. அகோபிலமடத்தின் கடவுள் நரசிம்மமூர்த்தியே.ஜீயருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. இங்குள்ள மூலவர் ‘மாலோலன்’ [தீராத விளையாட்டுப்பிள்ளை] என்று அழைக்கப்படுகிறார். முதல் ஜீயரின் கனவில்வந்த பெருமாள் மாலோல நரசிம்மரின் உத்சவ மூர்த்தியுடன் சென்று வீடுதோறும் சென்று அங்குள்ள மக்களுக்கு ஞான உபதேசமளிக்கும்படி ஆணையிட்டதாக ஐதீகம் சொல்கிறது. ஆகவே மாலோலரின் உற்சவமூர்த்தி அழகிய சிங்கரால் பயணங்களில் கொண்டுசெல்லப்படுகிறது.
மாலோல மூர்த்தியுடன் முதல் ஜீயரான சடகோபர் ஆழ்வார்திருநகரிக்கு வந்ததாகவும் பாண்டியர் ஆட்சியில் சைவத்தால் கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்த வைணவத்தை தென் தமிழ்நாட்டில் புத்துயிர் பெறச்செய்ததாகவும் வரலாறு. இன்று தமிழ்நாட்டின் வைணவர்கள் நடுவே அதிக செல்வாக்குள்ள மடம் அகோபிலம்தான். குறிப்பாக தென்கலை சம்பிரதாயத்திற்கு அகோபிலமே தலைமை மடம் என்று சொல்றார்கள். தமிழ்நாட்டு வைணவ ஆலயங்களில் பெரும்பாலானவற்றில் அகோபில மடத்துக்கு நிர்வாகப்பங்கு ஐதீகப்படி அளிக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஜீயர் குருபரம்பரையில் நாற்பத்தைந்தாவதாக வருபவர். திருமங்கையாழ்வார் அகோபில நரசிம்மரைப்பற்றி ஒரு பதிகம் இயற்றியிருக்கிறார்.
அகோபிலமடத்தின் கோட்பாட்டின்படி பிரஸ்தான திரயம் எனப்படும் [உபநிடதங்கள், பிரம்மசூத்ரம், கீதை] மூலநூல்களுக்கு நிகராகவே நாலாயிர திவ்விய பிரபந்தமும் மூலநூல் ஆகும். அதற்கு சதுர்வேதங்களுக்கு நிகரான இடம் அளிக்கப்பட்டுள்ளது. நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் கல்வியுடைய வைணவர்கள் இதனாலேயே ‘உபய வேதாந்த’ [நிகரான வேதமுள்ள] என்ற பட்டம் அளித்து குறிப்பிடப்படுகிறார்கள். அகோபிலமடம் ஆந்திராவிலிருந்தாலும் முழுக்கமுழுக்க தூயதமிழ் மடம். தமிழுக்கும் வைணவ இலக்கியத்துக்கும் அதன் பங்களிப்பும் மிக அதிகம்.
அகோபிலத்தை ஒருநாளில் பார்த்து முடிப்பது கஷ்டம். குறைந்தது நான்குநாள் அங்கேயே தங்கி ஆட்டோ அல்லது ஜீப் வைத்துக்கொண்டு குறுகிய மலைப்பாதைகளில் பயணம்செய்துதான் அங்குள்ள எல்லா நரசிம்மர் ஆலயங்களையும் பார்க்க முடியும். நல்லமலா காட்டுக்குள் அக்கோயில்கள் சிதறிக்கிடக்கின்றன. சிலகோயில்கள் புராதனமான குகை ஆலயங்கள். அடர்ந்த காட்டுக்குள் ஒற்றையடிப்பாதைவழியாக நடந்துசென்று தரிசிக்கவேண்டிய கோயில்களும் சில உண்டு. எங்கள் பயணத்திட்டத்தில் நாங்கள் அகோபிலத்துக்கு ஒதுக்கியிருந்தது அரைநாள்தான். மேலும் எங்கள் வண்டி கனமானது. மலைப்பாதையில் அதைக் கொண்டுசெல்ல முடியாது. ஆகவே கீழே உள்ள கோயில்களைக் கண்டுவிட்டு திரும்பலாமென முடிவெடுத்தோம்.
அகோபிலம் வரும் வழியை விசாரித்து விசாரித்து வந்தோம். பலருக்கும் அஹோபிலம் என்றால் தெரியவில்லை. இருநூறு கிமீ தூரத்துக்கு அப்பால் எவரும் ஊர்களை அறிந்திருக்கவில்லை. ஆகவே முதலில் கோயில்கொண்டா என்று விசாரித்தோம். அங்கிருந்து ஆலகட்டா. அங்கிருந்து அகோபிலம். ஆலகட்டாவை தாண்டியதும் கரிய கடலில் ஒளி உமிழும் விளக்குகளுடன் பிரம்மாண்டமான ஒரு கப்பல் நிற்பதுபோல எல் ஆண்ட் டி நிறுவனத்தின் சிமிண்ட் தொழிற்சாலை நின்றது. அதன் பின்னணியில் பிரம்மாண்டமான ஒரு ஏரிக்கரை போல பல கிலோமீட்டர் நீளத்துக்கு மண்விளிம்பு மலை போல தெரிந்தது. அந்த மலைச்சாலையில் ஏறி மேலே இருந்து நோக்கியபோது கீழே சிமிண்ட் ஆலை ஒரு பெரிய வைர நெக்லஸ் கிடப்பது போலிருந்தது.
அகோபிலம் வரும் வழி குறுங்காடுகளினால் ஆனது. ஆனால் முள்காடுகள் அல்ல. உயரம் குறைந்த மரங்களினால் ஆன செறிந்த பசுங்காடு. சாலைக்குக் குறுக்கே எலிகள் காரின் ஒளியில் சுடர் போல கடந்தோடின. நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. இரவு பன்னிரண்டுமணிக்குத்தான் அஹோபிலம் வந்தோம். மைய விடுதியில் இடமில்லை. வராந்தாவிலேயே தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னதன்பேரில் பின்பக்கம் இருந்த சத்திரத்துக்குப் போனோம். அங்கே எழுபது ரூபாய்க்கு பெரிய அறை கிடைத்தது. கட்டில் ஏதும் இல்லை. ஒரு மின்விசிறி மட்டும்தான்.
கையோடு கொண்டுவந்திருந்த பிளாஸ்டிக் விரிப்புகளை பரப்பி கொசுவத்தி கொளுத்திவைத்து வரிசையாக ஏழுபேரும் படுத்துக் கொண்டோம். வசந்தகுமார் என் அருகே படுத்து வெடியோசை போலக் குரட்டை விட்டார். சற்று நேரம் பொறுத்தபின் அவரை தொட்டேன். குரட்டை நின்றது. மீண்டும் சற்று நேரம் கழித்து பழைய குரட்டை. மூன்றுமுறை தொட்டேன். அதற்குள் நானும் தூங்கிவிட்டேன்.
காலையில் விழித்தபோது நல்ல மழை கொட்டிக் கொண்டிருந்தது. இரவில் அரைவிழிப்பு வந்தபோதெல்லாம் மழை கொட்டிக் கோண்டிருந்ததை நினைவு கூர்ந்தேன். நிற்காத மழை. மழையிலேயே இறங்கி பொதுவான கழிப்பிடம் போய் பல்தேய்த்துக் குளித்தோம். காபிச் சாப்பிட வசதியில்லை என்பதனால் தண்ணீரையே குடித்து சமாளித்தேன்.
முதல் கோயில் லட்சுமிநரசிம்மருக்கு. அதன் முகப்பில் கிருஷ்ண தேவராயர் நாட்டிய ஜெயஸ்தம்பம் உள்ளது. ஒற்றைக்கல்லால் ஆன பத்தாதாள் உயரமுள்ள வெற்றித்தூணில் பூச்சிற்ப வேலைகள் இருந்தன.பதினாறாம் நூற்றாண்டில் இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பட்ட இந்தக் கோயில் பின்னர் விஜயநகர மன்னர்களால் மீண்டும் எழுப்பப்பட்டது.
கோபுரத்தில் ஆயர் சிலைகள் மிக அழகான சுதை வடிவங்கள். உள்ளே பெரிய கோயில். முகமண்டபம் மணல்கல்லால் ஆனது. அதன் அதிட்டானத்தில் சுற்றும் உள்ள நூற்றுக்கணக்கான யானைச்சிலைகள் அற்புதமானவை. யானையின் உடல் அசைவின் எல்லா தோற்றங்களும் அங்கே இருந்தன. திரும்பும் யானை எம்பி துதிக்கை நீட்டும் யானை. ஐயப்பட்டு தரையை பரிசோதனை செய்யும் யானை. முன்னால் நின்ற யானையை முட்டும் யானை….
”யானையும் குதிரையும்தான் அழகு” என்றார் கல்பற்றா நாராயணன். ”குதிரை கம்பீரமானது. ஆனால் அது எப்போதும் மிருகம்தான். யானை சமயங்களில் ஒரு குழந்தை”என்றேன். கோயில் மண்டபத்தில் உள்ள பல்வேறு நரசிம்மர் சிலைகள் மிகுந்த கலைநுட்பம் கொண்டவை. குறிப்பாக லட்சுமி தேவியை தாடையைத் தொட்டு கொஞ்சும் நரசிம்ம மூர்த்தியின் சிலையில் உள்ள இனிய புன்னகை மிகச்சிறந்த ஒரு கலையனுபவம். தூண்கள் ஒவ்வொன்றும் நாற்புறமும் பல்வேறு சிற்பங்கள் செறிந்தவை. கூப்பிய கைகளுடன் கிருஷ்ணதேவராயர் சிலையாக நின்றிருக்கிறார்.
உள்ளே சென்று நரசிம்மரையும் தேவியையும் தரிசனம் செய்துவிட்டு வெளிவந்து ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். அஹோபிலத்தின் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால் அதைச்சுற்றி தன்னிச்சையாக உருவாகியிருக்கும் குடிசைப்ப்பகுதிதான். அம்மக்கள் அங்கே வரும் பயணிகளை அ நம்பி வாழ அங்கே வந்து குடிசைகட்டியவர்கள். அவர்களின் பிழைப்பே அந்த இடத்தை வைத்துத்தான். ஆனால் எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் அந்தச் சூழலை சீரழிக்கிறார்கள். பன்றிகள் சாக்கடைகள் மலம். ஓட்டல்களும் இவர்கள் நடத்துவதுதான். சுத்தமென்பதையே அறியாதவர்கள். ஓட்டலுக்குள்தான் இலைபோட்டு அதிலேயே கைகழுவும் தொட்டி.
மலைக்குமேல் மேலும் ஒன்பது குகைக்கோயில்கள் உள்ளன. வராக நரசிம்மர், மாலோல நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், பாவன நரசிம்மர். காராஞ்ச நரசிம்மர் சதரவத நரசிம்மர் பார்கவ நரசிம்மர் ஜ்வாலா நரசிம்மர் அகோபில நரசிம்மர். அங்கெல்லாம் சென்று பார்க்கவேண்டுமென்றால் எப்படியும் ஒரு வாரம் தேவைபப்டும். பல கோயில்களுக்கு அடர்காட்டில் நடை பயணம் மட்டுமே செல்ல முடியும். காரில் மேலே உள்ள அகோபிலக் கோயிலுக்குச் சென்றோம். செறிந்த காடுவழியாகச் செல்லும் கரிய சாலையில் செல்வது உற்சாகமூட்டுவதாக இருந்தது. மழையின் ஈரக்காற்று வீசியது.
இங்கே மலை கடப்பைக்கற்களை அடுக்கி வானம் வரை வைத்தது போல பாளம் பாளமாகப் பிரிந்து செங்குத்தாக ஓங்கி நிற்கிறது. தலைமீது அப்படியே சரிந்துவிடும் என்ற அச்சம் தோன்றும். அந்த மலைக்கு மேலிருந்து கிட்டத்தட்ட மேகத்திலிருந்தே விழும் உயரத்துடன் இரு அருவிகள் கொட்டுகின்றன. அவ்வருவியால் வெட்டப்பட்டதுபோல பாறை பிளந்திருக்கிறது. பிளந்த பாறைக்குமேல் நரசிம்மர் கோயில் உள்ளது. கார் நிற்கும் இடத்திலிருந்து படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.
இந்த நரசிம்மர் கோயில் உண்மையில் ஒரு குகைக்கு முன்னால் எழுப்பப்பட்டது. குகைதான் கருவறை. உள்ளே பொன்னாலான மூலவர் சிலையும் தேவி சிலையும் உற்சவர் சிலையும் உள்ளன. வெளிவரும் வழியில் செஞ்சுலட்சுமியின் சன்னிதி. செஞ்சுலட்சுமிக்கு இங்கே செஞ்சுக்களும் பிறரும் உயிர்ப்பலி இடுகிறார்கள். ஆனால் பலிபீடம் வெளியேதான் உள்ளது. ஆடுகளை உரித்துக் கொண்டிருந்தார்கள். செஞ்சுலட்சுமியை மணந்த நரசிம்மரே அவளுக்கு வேட்டையாடி ஊன் உணவை கொண்டுவந்து தந்தாராம்!
அஹோபிலத்தில் இருந்து காலை பதினொரு மணிக்கு ஸ்ரீசைலம் நோக்கி கிளம்பினோம். வழியெல்லாம் ஆதிவண் சடகோபனை எண்ணிக் கொண்டிருத்தேன். இந்த இடத்தின் தனிமையும் இதைச்சூழந்துள்ள அடர்ந்த காடும் குகைக்கோயில் அமைப்பும் விசித்திரமான பிரமிப்புநிலை ஓன்றை உருவாக்குகின்றன. தன்னந்தனியாக அங்கே வந்து ஒரு இயக்கத்தை உருவாக்கிட ஆதிவண் சடகோப மகாதேசிகரின் நினைவு மனஎழுச்சி ஊட்டுகிறது. தமிழின் தெய்வீக ஆற்றலுக்கு ஆதாரமாகவே அவரது வாழ்வை எண்ணிக்கொண்டேன்.
அகோபில்ம் பேரல்யம்
சிக்க்லான சிற்ப்வேலைப்பாடு கொண்ட தூண்கள் அகோபிலம்
மேல் அகோபிலம், அருவி பிளந்த பாறை
கைவிடப்பட்ட மண்டபங்கள்… அகோபிலக் காடு
செஞ்சுலட்சுமியை காதலிக்கும் சிருங்கார நரசிம்மர்
இடிந்த மண்டபங்களில் நாடோடி சாமியர்களுக்கான சமையல்…அகோபில முன்வாசல்..