எரிதல்

ஜெ,

நான் இணையத்தில் இதை வாசித்தேன்

sorry to say but jmo just drops names. except george & sharma others are not committed translators – including AKR

-இந்த தகவல்பிழையை எப்படி விளக்குவீர்கள்?

எஸ்

அன்புள்ள எஸ்

இங்கே தொடுபுழாவில் இருக்கிறேன். பார்க்க நேரமில்லை.

நான் எழுதியது


ஆக நல்லமொழியாக்கங்கள் இல்லை. அத்துடன் மொழியாக்கங்களை சரியான பிரச்சார உத்திகள் மூலம் கொண்டுசென்று சேர்க்காவிட்டால் பயனில்லை. அதற்கு தமிழிலக்கியத்தை இந்திய அளவிலும் உலக அளவிலும் கொண்டுசென்று சேர்க்கும் இலக்கிய ரசனைப்பிரமுகர்கள் [connoisseurs] தேவை. மலையாளத்தில் மாதவன்குட்டி, கெ.எம்.ஜார்ஜ் முதல் சச்சிதானந்தன் வரை பலர் உண்டு. கன்னடத்தில் பி.வி.கார்ந்த், ராமச்சந்திர ஷர்மா, ஏ.கே.ராமானுஜம் முதல் டி.ஆர்.நாகராஜ் வரை பலர் .
[மொழியாக்கம் பற்றி]

இதில் அவர்களை இலக்கிய ரசனைப்பிரமுகர்கள் என்று சொல்லியிருக்கிறேன் என எந்த எளிய வாசகனுக்கும் தெரியும்.

எளிய புத்திசாலித்தனம்கூட இல்லாமல் மேலோட்டமாக வாசிப்பது , படு அலட்சியமாக இலக்கியவாதிகளைப்பற்றி கருத்துக்களைச் சொல்வது போன்ற இந்த மேட்டிமைத்தனமே தமிழிலக்கியத்திற்கு நல்ல மொழியாக்கம் உருவாகத் தடையாக உள்ளது என்பதே அக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஜெ

*

இந்தக்கடிதத்தை போட்டமறுநாள் நேற்று ஒரு கடிதமும் பதிலும் போட்டேன்

அந்த வினாக்களை நான் புரிந்துகொள்கிறேன். வணிக எழுத்து என என் இணையதளத்தில் தேடியிருந்தாலே கட்டுரைகள் வந்திருக்கும். என் கட்டுரை மேல் தகவல்பிழை என்னும் ஐயம் வந்தால் இன்னொரு முறை பார்த்தால் தெளிவு வந்திருக்கும். ஆனால் அதை பலர் செய்வதில்லை.

அந்த மனநிலையை புரிந்துகொள்ள முயல்கிறேன். எனக்குத் தோன்றுவது இதுதான்.

இந்தத் தளத்தை வாசிப்பவர்கள் ஓர் எழுத்தாளனாகவும் தனிமனிதனாகவும் நான் நேர்மையும் தீவிரமும் கொண்டவனாக இருப்பதை, தொடர்ந்து செயல்படுவதைப் பார்க்கிறார்கள். அவர்களில் பலரில் உள்ளூர ஓர் ஐயம் அல்லது எதிர்ப்பார்ப்பு உருவாகிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆழம் நான் சறுக்கும், வீழ்ச்சியடையும் ஒரு புள்ளிக்காக காத்திருக்கிறது. ஒருகட்டத்தில் அதற்காக மட்டுமே என் எழுத்துக்களை வாசிக்கிறது.

ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்ததும் ‘அதானே பாத்தேன்’ என்ற நிறைவும் களிப்பும் அவர்களுக்கு உருவாகிறது. ஒரு வார்த்தை போதும். ஒரு தட்டச்சுப்பிழைகூட போதும். உடனடியாக சமூகவலைத்தளங்களில் நக்கலும் கிண்டலுமாக எழுதுகிறார்கள். வசைபாடுகிறார்கள். மிகச்சிலர் எனக்கு கடிதம் போடுகிறார்கள். மிகப்பெரும்பாலான தருணங்களில் அது அபத்தமான பிழைவாசிப்போ தவறான புரிதலோ ஆக இருக்கும். நான் விரிவாக பதிலிடுவேன். பலசமயம் என் கவனத்துக்கே வராது. நான் விளக்கம் அளித்தால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்ததற்காகக் காத்திருப்பார்கள். பலமுறை அது நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தளத்தை வாசித்தாலே தெரியும்.

இந்த மனநிலை நம் சமூகம் இன்றிருக்கும் நிலைக்கான சான்று. பெரும்பாலானவர்களுக்கு ஒருவன் வெற்றியோ புகழோ அடைந்திருந்தால், தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருந்தால் அவன் பெரிய சமரசங்களோ இழிசெயல்களோ செய்தவனாகவே இருப்பான் என்றும் அவனுடைய பொதுத்தோற்றம் ஒருபொய்யாகவே இருக்கமுடியும் என்றும் ஓர் எண்ணம் ஆழமாக உள்ளது. அவனை ‘கையும் களவுமாக’ பிடித்து ‘முகத்திரையை கிழித்துவிட முடியும்’ என்று நம்புகிறார்கள். அதற்கான இடைவெளிகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

அந்த மனநிலைக்குப்பின்னால் உள்ளது உண்மையில் ஒரு பெரிய தோல்வி நோக்கு. அது உள்ளவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். திறமையும் நேர்மையும் உழைப்பும் வெற்றி பெறமுடியுமென்ற நம்பிக்கையை குடும்பப்பின்னணியாலோ கல்வி மற்றும் வேலைச்சூழலாலோ முற்றிலுமாக இழந்தவர்கள். கூழைக்கும்பிடு போடுவது, காக்கா பிடிப்பது, மோசடி செய்வது வழியாக மட்டுமே வெற்றி சாத்தியமென நினைப்பவர்கள்.

அவர்களின் துயரம் என்னவென்றால் அவர்கள் சுயவாழ்க்கையில் தொடர்ந்து அதைத்தான் செய்து பார்ப்பார்கள். அது மிகச்சிறிய தற்காலிக வெற்றிகளை மட்டுமே அளிக்கும் என்று அவர்கள் புரிந்து    கொள்வதே இல்லை. தோல்வி அவர்களை புழுங்க வைக்கிறது. திறமையின் மூலமும் அர்ப்பணிப்பின் மூலமும் அடையப்பெறும் பிறரது வெற்றி எரியச்செய்கிறது. அந்த நரகத்தில் வாழவேண்டியிருக்கிறது. பொறாமை கொண்டவனை போல பரிதாபகரமானவன் வேறில்லை. அவன் எரியும் சிதை அணைவதில்லை. அவன் எரிந்து சாம்பலாவதுமில்லை.

எப்போதும் அந்நண்பர்களிடம் நான் சொல்வது ஒன்றே, எதை நிரூபிக்க இத்தனை ஆவேசம்? கேவலம், இப்படி ஒரு நிரூபணத்துக்காக நாளும் வந்து இந்த இணையதளத்தின் நீளநீள கட்டுரைகளை வாசிப்பீர்கள் என்றால் அது எவ்வளவு வீண் உழைப்பு? நண்பரே, கொஞ்சம் ஆசுவாசமாக இருங்கள். நீங்கள் நம்புவதெல்லாம்தான் நான் என்று உங்களிடம் நான் தனிப்பட்டமுறையில் ஒத்துக்கொள்வதாகவே எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களே  ஏதாவது சொந்தமாகச் செய்யமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைகத்தாழக்கண்ணாலே -ஒரு கடிதம்
அடுத்த கட்டுரை‘வசவு’ம் பாபநாசமும்