அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு
அண்மையில் நீங்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு கருத்துக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்துவதாக இருந்தன .அதைப் பற்றி. நானே ஏதாவது தவறாக நினைத்துக்கொண்டிருப்பதை விட தொடர்ந்து உங்களை வாசித்து வரும் நான் ,அவற்றை உங்களிடமே கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்டு விடுவது நல்லது என்பதால் இதை எழுதுகிறேன்.
1. முதலில் ,மொழியாக்கம் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரை-
’’எப்போதும் மூன்றாந்தர எழுத்தாளர்களே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும்.’’என்று சொல்லியிருந்தீர்கள்.
மேலும் அப்படிப்பட்டவருக்குத்தான் சொந்தமாக நடை என்று ஒன்று இருக்காது என்றும் கூட.சொல்கிறீர்கள்,
[ மூலமொழிக்கு ஏற்றபடி நடையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றாலும் கூட மொழிபெயர்ப்பாளனுக்கு நடை பற்றிய அடிப்படையான ஏதோ ஒரு அறிவு இருந்தாக வேண்டும்தானே]
மொழி பெயர்ப்பு என்பது ஓர் அறிவியக்கம் என்று தொடர்ந்து சொல்லி வரும் ஒருஎழுத்தாளரான நீங்களா இப்படி சொல்வது. நீங்கள் பல மொழியாக்கங்களை உங்கள் பக்கங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.த.நா.குமாரசாமியில் ஆரம்பித்து கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி வரை பல மொழிபெயர்ப்பாளர்கள் வழியாகவே நமக்கு அருமையான பல அயல்மொழி இலக்கியங்கள் கிடைத்திருக்கின்றன என்றும் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள் என்றும் முன்பு பலதடவை சொல்லியிருக்கிறீர்கள் .
புதுமைப்பித்தன் தொடங்கிப் பல எழுத்தாளர்களும் -நீங்கள் உட்பட-மொழியாக்கங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களையெல்லாமும் கூட அந்தத் தர வரிசைக்கு உட்படுத்தி விட முடியுமா.என்பதை யோசிக்கும்போதுதான் நீங்கள் எழுதியதை நான்தான் சரியாகப்புரிந்து கொள்ளவில்லையோ என்று.எனக்கொரு பயங்கர சந்தேகம், ஒருவேளை தமிழ் முதலிய இந்திய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பவர்களுக்கு. மட்டுமே அந்த அளவுகோலை வைக்கிறீர்களா ? .
குழப்பம் தலையை உடைக்கிறது.எப்படியோ என் சந்தேகத்தைத் தீர்த்தால் நல்லது.
2.
அடுத்தது இது..
பாபநாசம் படப்பிடிப்பு முடிந்த அனுபவத்தை எழுதும்போது
//வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்வது சினிமாக்காரர்கள்தான். …சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, நல்ல சினிமா தெரியும். ஆனால் தமிழ் ரசனையின் ஒரு சரியான சராசரியை தொடுவதே அவர்களுடைய சவால். அதற்காகவே முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இடைவெளியில்லாமல் பகடி செய்துகொண்டும் இருப்பார்கள்//
என்று ஒரு பகுதி அதில் வருகிறது.
நல்ல சினிமாவைப்புரிந்து வைத்துக்கொண்டே சராசரி எடுப்பவர்கள் என்று உங்களால் அவர்கள் செயலை நியாயப்படுத்த முடிவதைப்போல் நல்ல எழுத்து எது என்பதைப்பற்றி புரிந்து வைத்திருந்தாலும் வெகுஜனஎழுத்தில் ஓரளவு மாற்றத்தை இலேசான தர உயர்வைக் கொண்டு வருவதற்காக சராசரித்தனத்தோடு நடுவாந்தரமாக எழுதும் எழுத்தாளர்களை மட்டும் ஏன் தீவிர வெறுப்போடு பார்க்கிறீர்கள். அவர்களிடம் உங்கள் பேனா கடுமையாக இருப்பதை நான் தப்புச்சொல்ல வரவில்லை, ஆனால் அதே அளவுகோல் திரைப்படக்காரர்களிடமும் வேண்டும்தானே..அவர்களுக்கு நல்ல சினிமா தெரியும்,வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்யவும் முடியும்..ஆனால் காசுக்காக அதைத்தான் எடுப்பார்கள் அவ்வளவுதானே.இதில் என்ன உயர்வு தெரியவில்லை.
ஆனால் எதிலும் நடுவு நிலைமையோடு அறம் பேசும் உங்களிடம். இந்த இரட்டை அளவுகோல் புகுந்தது வாசகன் என்ற முறையில் வருத்தம் தருகிறது என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
அன்புடன்,
சத்யன்,
நாஸிக்
அன்புள்ள சத்யன்,
இந்தமாதிரி விவாதங்களெல்லாம் நம்மூர் டீக்கடை அரட்டை போல என்ன சொன்னாலும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றவகையில் நீண்டு போவதே வழக்கம். என் வரையில் விரிவாக எழுத நேரம் இல்லை, வெண்முரசு எழுதும் காலகட்டம்
இதைப்பற்றி என் கருத்தை பலமுறை எழுதிவிட்டேன். பழைய கட்டுரைகளை சற்று புரட்டி வணிக எழுத்து, வணிக சினிமா பற்றி நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று பார்த்தாலே புரிந்துவிடும். அத்துடன் அதிர்ச்சி அடைவது ஏமாற்றம் அடைவதைப்பார்க்கிலும் அந்தக் கருத்தைப்பற்றி யோசிப்பதே நல்ல வாசகன் செய்யவேண்டியது.
உலக அளவில் மொழியாக்கங்களை யார் செய்திருக்கிறார்கள் என்று பார்த்தாலே புரிந்துவிடும். அவை புனைவுமொழியை அறிந்த அதேசமயம் சுயமான மொழிநடை இல்லாத எழுத்தாளர்களால் செய்யப்பட்டவை. உதாரணம் தி.ஜானகிராமன் கிரேஸியா டெலடாவின் அன்னை நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஜானகிராமனின் நடையில். புதுமைப்பித்தன் பலிபீடம் என்ற பேரில் அலக்ஸாண்டர் குப்ரின் நாவலை மொழியாக்கம் செய்திருக்கிறார். அது புதுமைப்பித்தன் நூல் போலவே இருக்கும்
ஆனால் டி.எஸ்.சொக்கலிங்கம் போரும் அமைதியும் நாவலை செய்திருக்கிறார். தல்ஸ்தோயின் மொழிநடையின் சாயல் கொண்ட புதிய தமிழ்நடை உருவாகி வந்தது. இதை உலகமொழிகள் முழுக்க காணலாம். ஹேமா ஆனந்தத் தீர்த்தன் மாஸ்திவெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரனை’ மொழியாக்கம் செய்திருக்கிறார். மூல மொழிநடையை நெருங்கும் முதன்மையான மொழியாக்கம் அது.
நான் மூன்றாந்தர எழுத்தாளர்கள் என்பது ‘தரமற்ற’ எழுத்தாளர்கள் என்ற பொருளில் அல்ல. மூலமொழிக்கு ஏற்ப மொழியாக்கம் செய்யக்கூடத் தெரியாதவர்கள் என்ற பொருளிலும் அல்ல. அவர்களின் சொந்தப்படைப்புகள் முதன்மையானவை அல்ல என்ற பொருளில்
த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி ராம்நாத் போன்றவர்களின் சொந்தப்படைப்புகள் மிகமிகத் தட்டையானவை. இன்று அவற்றை எவரும் வாசிப்பதும் இல்லை. விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் பொதுவாக இதுவே விதி. இது நான் சொல்லும் கருத்தும் அல்ல, பலர் பலவகையில் சொன்னதே.
ஆகவே அதிர்ச்சி அடையாமல் ஒரு கருத்து சொல்லப்படும் போது அதைப்பற்றி சரியாகப்புரிந்துகொள்ளவும் அதைப்பற்றி சிந்தித்துப்பார்க்கவும் முயலுங்கள்.
வணிக இலக்கியம் வணிக சினிமா பற்றி நான் தொடர்ந்து ஒரே கருத்தை பலமுறை சொல்லிவருகிறேன். அவற்றை ‘நச்சு சக்திகள்’ என நான் நினைக்கவில்லை. அவற்றை எதிர்ப்பதும் இல்லை. உங்கள் மனப்பதிவு நான் அப்படிச் செய்வேன் என நீங்களே நினைப்பது
வணிகக் கேளிக்கைக் கலையும் எழுத்தும் ஒரு சமூகத்திற்குத் தேவையானவை. அவை அச்சமூகத்தின் பெருவாரியான மக்களால் விரும்பப்படுபவை. ஆகவே அவை பிரபலமான சமூக ஊடகங்கள். அவற்றின் வழியாகவே அந்த சமூகம் பேசிக்கொள்கிறது. எந்தச் சமூகமும் முற்றிலும் உயர்கலை வழியாக செயல்பட முடியாது. உயர்கலை ரசனையும் அறிவுத்திறனும் தேர்ந்த சிறுபான்மையினருக்குரியது.
வணிகக் கலையும் இலக்கியமும் அழிந்தால் அங்கே உயர்கலை உருவாகாது. பிறசமூகங்களின் வணிகக்கலைகள்தான் அங்கே இடம்பெறும். அச்சமூகம் தன் சொந்தக்குரலை இழந்து இரவல்குரல் வழியாக பேசத்தொடங்கும். காலப்போக்கில் அங்கே உயர்கலைக்கே இடமில்லாமலாகும்
வணிகத் தமிழ் சினிமா இருந்தால்தான் தமிழ்சினிமா என்ற வடிவம் இருக்கும். அதில் நல்ல சினிமா வரமுடியும். அது அழிந்தால் இங்கே இந்தி ஹாலிவுட் சினிமாக்களே இருக்கும். சிறந்த உதாரணம் வங்க சினிமா. மிகப்பெரிய கலைமரபுள்ள வங்க சினிமா அழிந்தது. இந்தி சினிமா வந்தது. அங்குள்ள கலைப்படமரபும் கூடவே அழிந்தது
இலக்கியத்திலும் அதுவே நிகழும். ஆகவேதான் தரமான வணிக எழுத்து தமிழில் வரவேண்டுமென இருபதாண்டுக்காலமாக தொடர்ந்து எழுதிவருகிறேன். அதை நான் ‘திட்டுகிறேன்’ என எனக்கு நீங்கள் கடிதமெழுதுகிறீர்கள்!
நான் எங்கே விமர்சிப்பேன் என்றால் வணிகசினிமாவை கலைப்படம் என கொண்டாடும்போது. வணிக எழுத்தை இலக்கியம் என்று முன்வைக்கும்போது. அப்போதுகூட வணிகசினிமா அல்லது வணிக எழுத்தை விமர்சிப்பதில்லை. நல்ல சினிமாவை, நல்ல எழுத்தைச் சுட்டிக்காட்டி வேறுபாட்டை சொல்வேன் [ஆனால் பொதுவாக நான் சினிமா பற்றி எழுதுவதில்லை.எல்லாரும் அதையே எழுதுகிறார்கள் என்பதனால்]
ஆகவே நீங்கள் அதிகம் வாசிக்காமல் உருவாக்கி வைத்திருக்கும் மனப்பதிவுகளை அதிர்ச்சியை ஒத்திவைத்துவிட்டு கொஞ்சம் மறுபரிசீலனைசெய்யவும். இதே கேள்விக்கு நான் எழுதும் பதினேழாவது பதில் என நினைக்கிறேன். வாசித்துப்பார்க்கவும்
ஜெ
பழையகட்டுரைகள்
எல்லாமே இலக்கியம்தானே சார்?
வணிக எழுத்து தேவையா?
இலக்கியமும் அல்லாததும்
கேளிக்கை எழுத்தாளர்- சீரிய எழுத்தாளர்
அன்றைய எழுத்தாளர்களும் இன்றைய எழுத்தாளர்களும்
சாதாரண வாசிப்பில் இருந்து இலக்கியவாசிப்புக்கு
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
சிறிய இலக்கியம் பெரிய இலக்கியம்
பகற்கனவின் பாதையில்
ஆழமும் அலைகளும்