«

»


Print this Post

இலங்கை, இறுதிப்போர்.


ஒருபோர் என்பது உண்மையில் நம்பிக்கைகளுக்கும் யதார்த்தத்துக்கும் நடுவே நடக்கும் மோதல்தான் என்று சிலசமயம் சொல்லத்தோன்றுகிறது. இந்த எண்ணம் எனக்கு 1962 ஆம் ஆண்டில் நடந்த சீன இந்தியப் போர் குறித்து பிரிகேடியர் ஜான் தல்வி [Brigadier John Dalvi] எழுதிய ‘ஹிமாலயன் பிளண்டர்’ [ Himalayan Blunder] என்ற நூலை இருபதுவருடங்கள் முன்பு விழிபிதுங்க வாசித்தபோது உருவாகியது.

 

என்ன நடக்கிறது? ஒரு போர் நடக்கும்போது அந்தப்போரில் ஈடுபடும் இரு சமூக ராணுவங்களும் அரசியல்தலைமைகளும் தங்கள் சமூகத்தின் முழு ஆதரவை திரட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த ஆதரவை ஒரு வெறி என்ற அளவுக்கு உச்சப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அது போருக்கு உதவும் சக்தி கொண்டிருக்கும்.

அதற்காக அவை அனைத்து விஷயங்களையும் ஒற்றைப்படையாக ஆக்குகின்றன.  அதன் பொருட்டு தகவல்களை திரிக்கின்றன, மறைக்கின்றன. அவற்றை உச்சகட்ட பிரச்சாரம் மூலம் சொல்லியபடியே இருக்கின்றன. தங்கள் சமூகங்களை உச்சகட்ட உணர்ச்சிநிலையில் வைத்திருக்கின்றன.

ஆகவே போரில் ஈடுபடும் சமூகங்கள் போரின்போது போரைப்பற்றிய உண்மைகளை அறியவே முடிவதில்லை. என்ன நடக்கிறது என்பது ஒரு பக்கமும் என்ன சொல்லப்படுகிறது என்பது மறுபக்கமும் நின்று சமராடுகின்றன. சராசரி சமூகக்குடிமகன் யதார்த்தம் நோக்கிச் சென்றால் அவனது சமூகப்பொறுப்புணர்வு ஐயத்துக்குள்ளாகும். அவனது மனமும் ஒருசார்பான திரிபுகள் கொண்டிருக்கும். ஆகவே பெரும்பான்மையின் உணர்ச்சிவெறியில் அவனும் பங்குகொள்கிறான்.

இமயமலைகளில் சீனாவிடம் அடிபட்டு, இழிவுபட்டு, பலவீனமான இந்திய ராணுவம் பின்னடைந்துகொண்டிருந்தபோது இந்திய அரசும் ஊடகங்களும் நம் படைகள் உக்கிரமாக போராடி சீனாவை துரத்திக்கொண்டிருப்பதாக மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தன. நாம் சில இடங்களில் போர்தந்திரத்தின்பொருட்டு எதிரியை உள்ளே வரவழைத்து அடிப்பதற்காக பின்னகர்ந்தோம் என்றது இந்திய அரசு.

ஆனால் போரின் முடிவு என்பது நம்பிக்கைகளைக் கீறி யதார்த்தம் வெளியே வந்து கிடக்கும் தருணமாக அமைகிறது. எல்லா பிரச்சாரங்களும், திரிபுகளும் வெளிறுகின்றன. உண்மை கண்கூச திறந்து கிடக்கிறது. சென்றகாலங்களில் அது மெல்லமெல்ல துலங்கியதென்றால் இந்த ஊடகயுகத்தில் சில கணங்களில் வெளுத்துவிடுகிறது

நம் சமகாலகட்டத்துப் பெரும்போர் என்றால் அது ஈழப்போராட்டம். அதன் முடிவு நாம் ஒருபோதும் முகத்துக்கு முகமாகச் சந்திக்க விரும்பாத யதார்த்தத்தின் வெளிப்பாடாக அமைந்தது. ஈழப்போர் முடிந்து எட்டுமாதங்களாகியும்கூட இன்றும் அந்த யதார்த்தங்களைக் காணமுடியாதவர்களை நாம் சந்திக்கிறோம். இன்றும் அது சார்ந்த மூடநம்பிக்கைகளும், மிகையுணர்ச்சிகளும் நம்மிடையே உலவுகின்றன.

நிதின் கோகலே எழுதி கிழக்கு வெளியீடாக வந்திருக்கும் ‘இலங்கை இறுதி யுத்தம்’ அந்தப் போர் எப்படி வெல்லப்பட்டது என்பதை விரிவான தகவல்கள் மூலம் வெளிப்படுத்தும் இதழியல் பதிவு. என்.டி.டி.டி.வி  தொலைக்காட்சியின் செய்தியாளரான நிதீன் கோகலே போர்ச்செய்திகளை சேகரிப்பதில் நிபுணர். ஈழ விஷயங்களை பலவருடங்களாக நேரில் அவதானித்து வருபவர்.

நிதீன் கோகலே

ஓரளவு செய்திகளை வாசிப்பவர்கள் அறிந்திருக்கும் தகவல்கள்தான் இவை. ஆனால் நிறைய புள்ளிவிவரங்களுடன் வரிசையாக கோர்வையாக அளிக்கப்பட்டிருக்கின்றன. இலங்கை அரசின் இந்தக்கடைசிப் போர் ஈழத்தில் ராஜபட்சே பதவிக்கு வந்தபோதே ஆரம்பித்துவிட்டது. அவருக்கு தெளிவான இலக்குகள் இருந்தன. பதவிக்கு வந்ததுமே இந்த இறுதிப்போருக்கான  துணைவர்களை அவர் சேர்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார். தன் தம்பியரான பசில் ராஜபட்சே மற்றும் கோத்தபய ராஜபட்சேயை சேர்த்துக்கொண்டார். ராணுவநிபுணரான சரத் ·பொன்சேகாவை தளபதிபதவிக்குக் கொண்டுவந்தார்.

ராஜபட்சே பதவிக்கு வருவதற்குப் ஒருவகையில் புலிகள்தான் காரணம். அவர்கள் அவரை கடைசிவரை குறைத்தே மதிப்பிட்டார்கள். ராஜதந்திரியான ரனில் விக்ரமசிங்கே பதவிக்கு வந்தால் அவர் சர்வதேச அளவில் தங்களை தனிமைப்படுத்தக்கூடும் என்றும், அந்த திறன் ராஜபட்சே போன்ற உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்றும் புலிகள் எண்ணினார்கள். ஆகவே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தால் வெல்லும் வாய்ப்பிருந்த ரனிலுக்கு வாக்களிக்காமல் இருக்கும்படி தமிழர்களை புலிகள் விலக்கினார்கள். ரனில் புலிகளை அழித்தொழிப்பதற்குப் பதில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணும் எண்ணம் கொண்டிருந்தார்.

இரண்டாவதாக, செப்டெம்பர் ஆறு 2000த்துக்குப் பின் உலக நாடுகள் சர்வதேச தீவிரவாத வலைப்பின்னலை அறுக்கும் திடமான முடிவுக்கு வந்திருந்தன. அது ராஜபட்சேவுக்கு சாதகமாக அமைந்தது. அந்த மாற்றத்தை உய்த்துணரவோ, அதற்கேற்ப தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளவோ புலிகளால் இயலவில்லை.

ராஜபட்சே  பதவி ஏற்றது முதல் இரு தளங்களில் இந்த இறுதிப்போருக்கான தயாரிப்புகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருந்தது என்று இந்நூல் காட்டுகிறது. ஒன்று சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் புலிகளை அன்னியப்படுத்தி விலக்க வைப்பது. அதன் வழியாக புலிகளின் நிதியாதாரங்களை உறையச்செய்வது. அவர்களுக்கு தார்மீக ஆதரவுகள் இல்லாமல் செய்வது.

இரண்டு, பயிற்சியும் மனஉறுதியும் இல்லாமல் இருந்த இலங்கை ராணுவத்தை கடைசிப்போருக்குத் தயார் செய்வது. சீனா மற்றும் பாகிஸ்தானின் தங்குதடையற்ற ஆயுத உதவியும், பயிற்சி உதவியும் இலங்கை ராணுவத்திற்குக் கிடைத்தது. சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இந்தியாவை மிரட்டி இந்திய உதவியையும் பெற்றுக்கொண்டது இலங்கை.

இந்த காலகட்டத்தில் எல்லாம் இலங்கையரசை மிகவும் குறைத்து மதிப்பிட்ட புலிகள் அமைப்பு உரிய எதிர்நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதுடன் தன் செயல்பாடுகள் மூலம் இலங்கைக்குச் சாதகமான விளைவுகளை உருவாக்கி அளித்தார்கள். கருணா தன் படையுடன் பிரிந்து சென்றது புலிகளின் ராணுவ வலிமையை பெரிதும் பாதித்தது. நெடுங்காலமாக யாழ்ப்பாணப்பகுதிகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்தமையால் அங்கிருந்து புலிப்படைக்கு ஆள்சேர்ப்பது சாத்தியமில்லாமலாகியது. ஆகவே புலிப்படைக்கு புதிதாக வந்தவர்கள் கிழக்குப்பகுதியான மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கிழக்கைச் சேர்ந்த கருணாவால் கொண்டுவரப்பட்டவர்கள்

ஈழத்தமிழர்களிடையே வடக்கு-கிழக்கு பிரிவினை எப்போதும் உண்டு. அந்தப் பேதம் புலிப்படையிலும் இருந்தது. வீரர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முக்கியமான தலைவர்கள் அனைவருமே வடக்கைச் சேர்ந்தவர்களாக இருந்தது ஒரு கசப்பை வளர்த்தது. மறுபக்கம், புலித்தலைமை கிழக்கைச் சேர்ந்தவர்களை எப்போதுமே உள்ளூர ஐயப்பட்டது. இந்த சந்தேகம் பகைமையாக ஆகியதனால்தான் கருணா வெளியேற நேர்ந்தது. கருணாவின் படையுடன் புலிகள் நடத்திய போர் புலிகளை பலவீனமாக்கியது என்று இந்நூலில் வாசிக்கிறோம்.

அந்தப் பலவீனத்தை மறைக்க புலிகள் அதிரடியான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தினார்கள். இந்த தாக்குதல்களை புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்த இலங்கை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டதை இந்நூல் காட்டுகிறது. புலிகளின் பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கை அரசின் தரப்பில் உலகநாடுகள் அனேகமாக அனைத்துமே நிற்பதற்கு வழியமைத்தன. புலிகள் சொன்ன உரிமைப்போராட்டம் சார்ந்த காரணங்கள் அனைத்துமே பின்னுக்கு நகர்ந்தன. இங்கே இலங்கைப்படை தன் முதல் வெற்றியை பெற்றுவிட்டது.

வழக்கமாக ஏதேனும் ஓர் இடத்தில் புலிகளை தாக்குவதே இலங்கைப்படைகளின் வழக்கம். புலிகள் உக்கிரமாக திருப்பித் தாக்கினால் பின்வாங்கிவிடுவார்கள்.ஆனால் இம்முறை இலங்கைப்படைகள் அனைத்துப்பகுதிகளிலும் சூழ்ந்து பலமுனைத்தாக்குதல்களை நிகழ்த்தினார்கள். கருணாவின் படையைச் சேர்ந்த தமிழ்ப்போராளிகளை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டார்கள். விடாப்பிடியாக முன்னேறினார்கள்.

அப்போதும்கூட சிங்களப்படையை புலிகள் குறைத்தே மதிப்பிட்டனர் என்கிறார் நிதீன் கோகலே. இம்முறை அவர்கள் சிறந்த ஆயுதம் மற்றும் பயிற்சியுடன் வருவதை அவர்கள் உய்த்துணரவில்லை. அதே போல சர்வதேச சமூகம் தங்களை பொது எதிரியாக கருதுவதையும் அவர்கள் உணரவில்லை. தாங்கள் சூழ்ந்துகொள்ளப்பட்டபோது சர்வதேச சமூகம் முன்வந்து காப்பாற்றும் என நம்பினார்கள். இந்த தவறான புரிதல்களுக்கான விலையாகவே பூரணமான தோல்வி கிடைத்தது.

கடைசிப்போர் நிகழ்ந்த சூழலையும் அதன் வியூகங்களையும் இந்நூல் விவரிக்கிறது. புலிகள் உலகப்போக்கு பற்றிய அறிதலே இல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்கள் அளித்த பிழையான நம்பிக்கைகளின் பலத்தில் மக்களை பிணையாக வைத்துக்கொண்டு மாட்டிக்கொள்ள, மெல்ல உறுதியாகச் சூழ்ந்துகொண்டு அவர்களை அழித்தது இலங்கை ராணுவம்.

இதில் இந்திய ரடார்கள் மற்றும் சீன ஆளில்லா விமானங்கள் அளித்த பங்களிப்பை இந்நூல் முக்கியமாக குறிப்பிடுகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் பார்த்ததில் புலிகள் சூழ்ந்து பிணையாக வைத்திருந்த மக்கள்கூட்டத்தில் ஒரு இடத்தில் புலிகளின் வளையம் பலவீனமாக இருப்பதைக் கண்டு அங்கே தாக்கி உடைத்தார்கள். அதன் வழியாக மக்கள் வெளியேற்றம் ஆரம்பமாகியது. அதுவே புலிகள் எளிதில் விழ காரணமாக அமைந்தது.

இந்நூல் இனிமேல்தான் ராஜபட்சேயின் உண்மையான சவால் உள்ளது என்று சொல்லி முடிகிறது. தான் பயங்கரவாதத்துக்கு எதிராக மக்கள்நலன்  சார்ந்து போராடுவதாக ராஜபட்சே உலகிடம் சொன்னார். பாதிக்கப்பட்ட மக்களை உரியமுறையில் மீள்குடியேற்றுவதில்தான் அவரது நம்பத்தன்மை நீடிக்க முடியும் என்கிறார் நிதீன் கோகலே.

இந்நூல் சரளமான மொழியாக்கத்துடன் ஒரே மூச்சில் வாசித்துப்போகத்தக்க இதழியல் ஆக்கமாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் பெயர் சுட்டப்படவில்லை.

இந்நூலின் தொனி நம் கவனத்துக்குரியது. ஒரு பயங்கரவாத இயக்கத்தின் இன்றியமையாத அழிவு என்று மட்டுமே ஆசிரியர் புலிகளின் வீழ்ச்சியைப் பார்க்கிறார். அதில் நிகழ்ந்த மானுட அழிவேகூட புலிகளின் போர்வெறியால்தான் என்ற எண்ணம் அவரிடமிருப்பது தெரிகிறது. அதை உரிமைப்போராகவே அவர் எண்ணவில்லை.

கடந்த பதினைந்தாண்டுகளில் எழுதவந்த இந்திய இதழியலாளர்கள் பெரும்பாலும் அனைவரிடமும் இந்த மனநிலையே உள்ளது என்பதைக் காணலாம். இது ஆராயத்தக்கது. இவர்களை தமிழ்விரோதிகள் என்றோ இந்தியவெறியர்கள் என்றோ சொல்வதில் அர்த்தமில்லை. இவர்கள் பொதுவாக அதிகாரத்துக்கு வணங்காதவர்களாக, அடிப்படை நீதியுணர்வு கொண்டவர்களாக, பெரும்பாலான தருணங்களில் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் குரலாக ஒலிப்பவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பதே யதார்த்தம்.

இவர்கள் புலிகளைப் பற்றிக் கொண்டிருக்கும் மனப்பதிவு சென்றகாலங்களில் புலிகள் போர்முறையாகக் கொண்டிருந்த பயங்கரவாத நடவடிக்கைகளைச் சார்ந்து உருவான ஒன்று. ஓர் உரிமைப்போராட்டம் எங்கே, எவ்விதம் வெறும் பயங்கரவாதமாக எண்ணத்தக்க தோற்றம் கொண்டது,உலகை நோக்கி ப்பேசுவதில் எங்கே பிழை நிகழ்ந்தது என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்.

இந்நூலை வாசிக்கும்போது ஈழப்போர் நடந்துகொண்டிருக்கும்போது ஆனந்தவிகடன் முதலிய இதழ்கள் அளித்த போர்விவரணைகளை மீண்டும் எடுத்து படிக்கவேண்டும் என்ற எண்ணம் உந்தியது. எத்தனை அப்பட்டமான பொய்கள். எவ்வளவு விருப்பக் கற்பனைகள். சென்னையை விட்டு நீங்காமலே எழுதப்பட்ட உக்கிரமான களவருணனைகள். ஒருமுறை புலிகள் எந்த இடத்தில் இலங்கை ராணுவத்தை ‘உள்ளேவரவிட்டு’ அடிக்கப்போகிறார்கள் என்று விரிவான வரைபடங்களுடன் செய்தி வெளியிட்டது ஆனந்தவிகடன்! அதாவது அந்தப்போரே சிங்கள ராணுவத்தை அழிக்கும்பொருட்டு புலிகள் திட்டமிட்டு நடத்துவது என்ற சித்திரமே நமக்களிக்கப்பட்டது.

இந்நூலில் உள்ள கசப்பான ஓர் உண்மைச்சித்திரத்தை நாம் அந்த பொய்யுரைகளுடன் ஒப்பிடவேண்டும். அது நம்மைப்பற்றி இந்த ஊடகங்கள் என்னதான் நினைக்கின்றன என்பதைக் காட்டும். மேலும் அவர்கள் எழுதுவனவற்றை அப்படியே அள்ளி விழுங்கிச் செரித்துக்கொள்ளும் உணர்ச்சிமந்தைகளாக இப்போதும் நாம் இருந்துகொண்டிருப்பதையும் நமக்குக் காட்டும். 

[இலங்கை இறுதி யுத்தம். இலங்கை ராணுவம் வென்றது எப்படி? நிதீன் கோகலே. கிழக்கு பிரசுரம். ]

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6448

13 comments

Skip to comment form

 1. sathish

  Dear JayMo, I have been reading you for sometime now, i feel you are speaking / thiking very close to truth.i always use to doubt any information thats been throwed up to me, and the truth is today 99% of the information general ppl like us get is what the others want to share – which is obivously not the truth.

  Reading you makes me to think straight, and my inner sense says this is “THE TRUTH” i tried to doubt even this (as i have been doing all along) but in vain..
  whatever i have read of you, has made me thirsty to read you more .. (bought lots of book of yours in “chennai Book fair)..

  PS : Sorry for not able to write in detail of what i want to speak – will write to you soon asking for my worries / doubts on humanity and other global affairs.

  luv you
  sathish.

 2. Ramachandra Sarma

  உண்மைகள் எப்போதும் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை. ஆனந்தவிகடன்,குமுதம் போன்ற பத்திரிக்கைகள் மட்டுமல்ல தினசரிகளும் கூட, உண்மைகளைவிட்டும், தார்மீக நெறிகளை விட்டும் வியாபரத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் தன்னை மட்டுமல்லாமல் ஊரையும் ஏமாற்றத்தொடங்கி பலவருடங்கள் ஆகிவிட்டன.

  உணர்ச்சிமந்தைகளை ஊக்குவிப்பவர்களும் உருவாக்குபவர்களும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்கிய செய்திகளைத்தான் நாம் படிப்பதெல்லாமே என்ற புரிதல் பத்திரிக்கைகளை விட்டு நம்மை தூற நிறுத்தும். இவை மட்டுமல்ல.தொலைக்காட்சி ஆங்கில தமிழ் செய்திப் பிரிவுகளும் இதை விட எந்தவிதத்திலும் சிறப்பானதல்ல. உதாரணமாக சி.என்.என்.-ஐ.பி.என். அதன் தலைவரைப் போன்ற ஒரு அப்பட்டமான புளுகுனியை-சார்புநிலைகொண்டவரை பார்க்கமுடியாது.

  ஒரு 30-40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போதைய நிலமை மோசம் என்றுதான் சொல்லவேண்டும். தமிழகத்தை பொருத்தவரை இந்த நிலைமைக்கு திராவிட இயக்கங்களே காரணம் என்பதை மறுக்க முடியாது. காரணம் பொதுஜன ஊடகங்களை திட்டமிட்டு கைப்பற்றி உணர்ச்சித் தூண்டல்களின் மீது வெற்றிபெற்றவர்கள் அவர்கள். மேடை பேச்சாளர்கள், ரேடியோ, தினசரி, வெகுஜன பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, திரைப்படம் என்று பொதுஜன ஊடகம் அனைத்திலும் அவர்கள் முன்னின்றிருக்கிறார்கள். பெரும்பாலும் இவர்களோ அல்லது இவர்களது தீவிர ஆதரவாளர்களோ அல்லது இவர்களது போலி சித்தாந்தங்களின் நம்பிக்கையாளர்களோதான் மக்களின் கருத்தை உருவாக்குபவர்களாக இருந்திருக்கிறார்கள்.

  இணையத்தையும் கைப்பற்றும் முயற்சி என்று கருத்து சொல்லும் தளம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, இணையத்தின் சுதந்திரம் கண்டு இழுத்து மூடப்பட்டது. இங்கே இவர்களது அதிகாரத்திற்கு வாய்ப்பில்லை என்பதை விரைவிலேயே புரிந்துகொண்டார்கள். தமிழகத்தில், ஏன் இந்தியாவில் கட்சி சார்பில்லாமல் நடத்தப்படும் ஊடகமே இல்லை என்று சொல்லலாம். அரசு ஊடகங்கள் கூட அப்போதைய ஆளுங்கட்சியின் கைக்குழந்தைதான், சிபிஐ போலவே.

  இத புலிகளின் யுத்தத்தை பொருத்தவரை, அங்கு என்ன நடந்தது என்பதை விட, எப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ரூம் போட்டு யோசித்தே பத்திரிக்கைகள் எழுதின என்பது இப்போது தெளிவாக காணக்கிடைக்கும் நிஜம். பிரபாகரன் இறந்த செய்திகுறித்து இதுவரை நம் தமிழக அரசின் – முதல்வரின் கருத்து என்ன என்று எனக்கு இன்று வரை தெளிவாகப்புரியவில்லை. இப்போது இது நம்பிக்கை சார்ந்த விஷயமாகிவிட்டது என்பதால் விவாதிப்பதில் பயனே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

  முதலில் ஆக்ரோஷமாகவும், எகத்தாளமாகவும் ஆரம்பித்த இதழ் கட்டுரைகள், பின்னர் பதட்டத்துடனும், பீதியுடனும், இறுதியில் புலம்பல்களோடும், பழிசொற்களோடும் முடிந்திருக்கிறது. முடிந்த அளவு உண்மைகளை மக்கள் முன் வைத்திருந்தால் ஒருவேளை சர்வதேச அளவில் கவனம் பெற்று இழப்புகள் இல்லமல் இருந்திருக்கும். தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும் என்று சொன்னவர்கள்ளும் இங்கேதான் இருக்கிறார்கள். இந்த நிலைக்குக்காரணம் நமது இதழியலாளர்களின் நேர்மையே.

  ஜனநாயகத்தின் தூண் என்று சொல்லப்படுபவர்களின் பெரும்பாலானவர்களின் நேர்மை சந்தேகிக்ககூடியதாகவே இருக்கிறது. அல்லது இப்படியும் சொல்லலாம். ஒவ்வொரு பத்திரிக்கையும் அதற்கான சார்புநிலையை கொண்டுள்ளது. அதன் அதிகாரப்பதவிகளில் இருப்பவர்கள் அதை அப்படி உருவாக்கி வைத்துள்ளனர். அவ்வூடகத்தில் இருப்பவர் அவரைச்சார்ந்தே இருக்கவேண்டிய நிலையில் சார்பு நிலை எடுப்பதில் வியப்பொன்றும் இல்லை. மிகச்சிலரே விவேகமான நடுநிலையுடன் எழுதக்கூடியவர்கள். ஆனால் அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்களது குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஒரு அடாசுகளை எழுதுவதற்கும், தொப்புள் படம் போடுவதற்கும் பயன்படும் ஒரு போலி பாவனை. பத்திரிக்கை சுதந்திரம் என்பது என்னவேண்டுமானாலும் எழுதுவதல்ல, உண்மையை மட்டுமே எழுதுவது. சுதந்திரம் என்பது கட்டுப்பாடின்மை அல்ல. சுதந்திரத்துடன் சேர்ந்து பொறுப்பும் வருகிறது.

  மனசாட்சியைத் தொட்டுச் சொன்னால், இங்கே தமிழகத்தில் அனைத்துப் பத்திரிக்கைகளுமே தன்னைத்தானே அரசியல்/கட்சி சார்பில் தணிக்கை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அனைத்து உண்மைகளையும் எழுதவேண்டும் என்பதல்ல, எழுதுவது மட்டுமாவது உண்மையாக இருக்கலாம்தானே? தமிழ்நாட்டில் இதழியல்-ஊடகம் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது தெளிவு. இதை வெளிப்படையாக பேச இதழியலாளர்கள் கூட நினைப்பதில்லை. எதிர்ப்பதில்லை. ஏனெனில், இங்கு இதழியல் போலிகளும், கூலிக்கு மாரடிப்பவர்களும், சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் பற்றிய தெளிவான சுய சிந்தனையும் புரிதலும் இல்லாதவர்களுமாக நிறையபேர் இருக்கிறார்கள். இவர்கள் இதன் மூலம் கிடைக்கும் தொடர்புகளை அதிகாரத்திற்கும், சுயலாபத்திற்கும் பயன்படுத்தும் சுயநலவாதிகளாகவும் இருக்கிறார்கள்.

  ஏனெனில், இவர்களது சிந்தனைமுறையும், நம்பிக்கைகளும் இப்படியிருப்பதற்காகவே திட்டமிட்டு சில தலைமுறைகளாக செய்யப்பட்ட ஒரு அரசியல் முயற்சி என்று சொல்வேன். இதில் நேர்மைக்கும், நம்பிக்கைகள் சாராத ஆராய்ச்சிக்கும், உண்மைக்கும் இடமில்லை.

 3. bala

  LTTE has been responsible for the bloodshed in the past 25 years. LTTE did not have options other than violence to achieve its objectives. Their approach has resulted in more destruction to tamils than the srilankan policies. When thuggery rules, normal people keep quiet – it happens everywhere.

  But the fallacies, wrong and biased opinions on issues are universal – from USA to China to Pakistan to Bangladesh.

  Similarly getting pained about Tamil press overtly preoccupied with actresses are again not unique. Times of India runs a 50 page daily exclusively for this purpose.

  Lets not go on a self flagellation mode on this – we are just normal like the rest of the world

  Truth is always a needle in a haystock – needs lot of efforts from the seeker to find. In the era of internet, the efforts needed are much more.

  We should appreciate the efforts of the nitin gokhale on his efforts

  bala

 4. ஜெயமோகன்

  பாலா, முற்றிலும் நார்மலாக ஒருவன் இருந்தால் உடனே அவனைக் குணப்படுத்தியாக வேண்டும்– ஓஷோ

 5. bala

  :) நாம நம்ப தொழிலப் பாக்கறது நல்லதுன்னு ரமணர் சொல்றாருங்க..ரயில் எல்லாச் சொமையையும் தூக்கீட்டுப் போகையில, நாம நம்ம தலையில ஏனுங்க சொமக்கோணும்?

 6. ஜெயமோகன்

  பாலா

  ஆனால் அப்படி இருக்க நம்மால் முடிவதில்லை

  நம்பூதிரி ஜோக்

  பேருந்தில் நம்பூதிரி நின்றுகொண்டே பயணம் செய்தார்

  நலம்விரும்பி சொன்னார்: உக்காருங்க திருமேனி, எடமிருக்கே

  நம்பூதிரி மறுத்தார்: இல்லல்ல… வீட்டுக்குப்போக நேரமாச்சு…

 7. bala

  உண்மை. தோ இப்ப கூட, என் கம்பெனியை நான் தான் தூக்கி நிறுத்தற மாதிரி ஒரு ப்ரஷெண்டேஷன் தயார் செய்து கொண்டிருக்கிறேன். 10 கோடி சேமிக்கப் போகிறேன் என்று மார்தட்டும் ப்ரஷெண்டேஷன். ஒரு கணம் எல்லாம் நின்று போகலாம். அந்த நாள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். சீக்கிரம் வரணும்னு வேண்டுவதைத் தவிர வேறு வழி – :)

 8. tdvel

  தொழிலைப்பார்த்தல் என்பது அவரவர் அவர் கடமையைச்செய்தல் என்பதை குறிக்கும். ஒருவனின் கடமை என்பது அவன் அலுவலகத்தில் செய்வது மட்டுமல்ல. அவன் தந்தையாக மகனாக கணவனாக இருத்தல் போன்ற குடும்ப கடமைகளும், சமுதாய விதிகளுக்கு உட்படுதலும் சமுதாயம் தன்னை மேம்படுத்திக்கொள்ள தன்னால் இயன்றதைச் செய்தலும் அவனுடைய கடமைகள்தான். எழுத்தாளனுக்கு சமுதாய கடமை பிரதானமானது. அவன் முன்னின்று சமுதாயத்தை கைபிடித்து அழைத்துச் செல்ல வேண்டியவனாவான்.
  த. துரைவேல்.

 9. maniivannan

  ஜெயமோகன்,
  நிதின் கோகலே கட்டுரையுடன் ஆனந்த விகடன் கட்டுரையை ஒப்பிட்டு எழுதியது சாலச்சிறந்தது. கடைசி ஈழப்போர் நடந்த போது தாங்கள் எவ்வகையில், எவ்வளவு கடுமையாக, எதனை முறை தங்கள் எண்ணங்களை பதிவு செய்தீர்கள் என்பதை கொஞ்சம் விபரமாக தங்களின் வலைப்பக்க சுவடுகளை கொடுத்தீர்களானால், எங்களை போன்ற வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்.

  மணி ஆறுமுகம்

 10. ஜெயமோகன்

  தெரியாத விஷயங்களைப் பற்றி எழுத நான் ஆனந்தவிகடன் இல்லையே
  ஜெ

 11. stride

  இதை பொருளாதார பின்னனியில் பார்ப்பது எனக்கு எளிதாக உள்ளது. உலகமெங்கும் சிறுபான்மை குழுக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது பெரிதும் குறைந்து வருகிறது. இது ஒடுக்கப்பட்ட மக்கள் தாங்களாக எடுத்த முடிவு அல்ல. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, சீனா, பிரேஸில் போன்ற சக்தி வாய்ந்த நாடுகள்/நாட்டு குழுக்கள் மூலப்பொருட்களுக்காகவும், தயாரிக்கும் பொருட்களை விற்பதற்கும் மற்ற நாடுகளை சந்தைகளாக மட்டுமே எண்ண ஆரம்பித்து விட்டன. இந்த பொருளாதார உலகமையமாக்கலுக்கு ஒரே எதிரி சமநிலையின்மை தான். சமநிலையை குலைக்கும் எந்த ஒரு குழுவும் முன்பு போல் போராட முடியாது. முன்பு அமெரிக்கவும் சோவியத் யூனியனும் நேட்டோ மற்றும் வார்சா உடன்பாடு மூலம் கொள்கைக்காக ஆதிக்கம் செலுத்தியது மாறி இப்போது வளர்ச்சி பிராதனமாக ஆகி விட்டது.

  பார்த்தால் ராஜீவ் படுகொலைக்கு நடந்த உடனே இந்திய ராணுவம் ரஜபக்சே செய்த மாதிரி புலிகளை அழித்திருக்கவேண்டும். நடக்காததுக்கு பல காரணங்களை நீங்களே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது நிலைமை வேறு. இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கைக்கு ஆயுதம் விற்க முன்வராத போது சீனா அந்த வாய்ப்பை பற்றிக்கொண்டு ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதம் அளித்தது. அம்பாந்தோட்டை துறைமுக விரிவாக்கம் முதற்கொண்டு பல பணி திட்டங்களை சீனா வசம் இலங்கை அளித்தது. இலங்கையுடன் சீனா நெருக்கமாக இருப்பது இந்தியாவுக்கு உகந்தது அல்ல. அதனாலேயே அதிக அளவுக்கு ஆயுதமும் தகவல்களும் இந்தியாவும் அளித்து புலிகளின் அழிவை துரிதப்படுத்தியது. இப்போது இலங்கையின் மறுகட்டுமான பணிகளுக்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போடும் என்பது உறுதி.

  இதே விளையாட்டு தான் நேபாளத்திலும் நடந்தது. இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட நேபாள மன்னர் ஞாநேந்திரா சீனாவிடம் நெருக்கமாவதை கண்ட இந்திய சட்டென்று நேபாள அரசை நிர்பந்தம் செய்து பிரச்சந்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு தூண்டி ஒரே ஆண்டில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது. இங்கே நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் பாயும் நதி நீரும், நீர் மின்சக்தியும் இந்திய பொருளாதாரத்துக்கு முக்கியமான ஒன்று.

  சூடானில் பத்தாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் இப்போது சீனா எண்ணை வள தேடுதலுக்காக அதிக பொருள் செலவிட ஆரம்பித்தவுடன் தன் செல்வாக்கு மூலம் போரை கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறது. போராடும் மக்களுக்கு இனி வாய்ப்பே இல்லை. அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் மெளனம் சாதிக்கின்றன.

  பர்மாவில் கரேண் மக்களை ஒடுக்குவதை இந்தியா பாராமுகம் காட்டுவது , சீனாவில் ஷிஞ்சியாங்/திபேத்திய மக்களை ஒடுக்குவது பற்றி ஒபாமா மெளனம் சாதித்தது எல்லாமே பொருளாதார நோக்கில் விளக்கி விடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. போராடும் மக்களுக்கு முன்பு போல் கொள்கை ரீதியாக இன்னொரு நாட்டின் ஆதரவு கிடைப்பது கடினம் தான். அனைத்து நாடுகளிலும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அதற்கு வாய்ப்பே இல்லாமல் செய்து விடும். ஆனால் போராடும் மக்கள் வாழும் பகுதியில் கனிம வளம் இருந்து விட்டால் அவர்களுக்கு தனி நாடு கூட கிடைக்கலாம் – உதாரணம் குர்து இன் மக்களின் சுய ஆட்சி உரிமைக்கு உள்ள ஆதரவு. அதற்கு பன்னாட்டு நிறுவனங்களே உதவி செய்யும்.

  சிவா

 12. vks

  இதற்கான ஆரம்பத்தை அறியவிரும்பினால் ராஜீவ் – ஜெயவர்த்தனே உடன்படிக்கையின் முதல் நான்கு விதிகளை வாசியுங்கள். இந்தியின் ஆயில் கார்ப்பிரேசன் இலங்கையில் கால் வைக்க திருகோணமலை துறைமுகத்தை தந்தால் புலிகளை அளிக்க உடன்பட்டார்.
  இன்று இலங்கை முழுவதும் oic யைக் காணலாம்.
  2 முதலில் போர் ஆரம்பிக்கப்பட்ட இடமான சம்பூர் தான் இந்தியாவின் மையம். அதில் இருந்த மக்கள் திரும்பிவர முடியாமல் துரத்தியடிக்கப்பட்டுவிட்டார்கள். தயவுசெய்து உணமையைத் தேடிப்பாருங்கள். இந்தியா சம்பூர் மக்களை திரும்ப அனுமதிக்குமா?
  ராஜகக்சே சொன்னான்: இது இந்தியா வழி நடத்திய போர்.

  சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டி இதியாவை இலங்கை விரட்ட இந்தியா என்ன? கைப்பிள்ளையா? இந்தியாவின் வல்லரசுக் கனவு வேறு இருப்பதை நிதின் மறந்தவிட்டாரா?

 13. kthillairaj

  யார் பேசியும் ஒரு பயனும் இல்லை, மடிந்துவிட்டது சமுதாயம்

Comments have been disabled.