துயரத்தை வாசிப்பது…

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகப்பெரிய திட்டமிடலுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதனால் தங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் தூரத்து நிலவாகவே வைத்துவாசித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இந்த கேள்வி சமீபத்தியநாட்களில் மிக அதிகமான முறை நினைவில் எழும்புவதால் இக்கடிதம்.

என்னுடைய வேலையும் என்னுடைய புத்தக வாசிப்பும் வேறு வேறு வழிகள். ஆனால்நான் வாசிக்கத் தொடங்கிய பின்னர் என் வேலையினை மிக எளிதாகமாற்றிக்கொண்டேன். வேலையின் அளவு ஐந்து மடங்கிற்கும் அதிகமாகிஇருக்கிறது. மிக முக்கியமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். எளிமையாக
இருக்கிறேன். மகிழ்சியை அருகில் சென்று பார்த்து பெரிதுபடுத்திமகிழ்கிறேன். துன்பங்களை தூரமாய்ப் பார்த்து சிறியதாய்ஆக்கிக்கொள்கிறேன்.

நீங்கள் கூறுவது போல சின்னச் சின்ன வாசகங்களை மனதில்அசைபோட்டு அசைபோட்டு ஒரு மிகப்பெரிய மன உலகை சமைத்து வைத்து வாழ்கிறேன்.வாசிப்பைத் நாள்தோறும் தீவிரப்படுத்திக் கொண்டேஇருக்கிறேன். எனக்கானவேலையையே தள்ளிப்போடும் நான் இன்று எந்நிலையிலும் தினமும் என்னால் சிலமணி நேரங்களை ஒதுக்க முடியும் என்ற நிலைக்கு மாறியிருக்கிறேன். இதெல்லாம்என்னால் உறுதியாகக் கூற முடியும் வாசிப்பால் தான் என்று. ஆனால் எப்படிஎன் வேலையை மாற்றியது எனக்கேட்டால் கண்டிப்பாக என்னால் சொல்லத் தெரியாது.

என்னுடைய தற்போதைய நிலையை விளக்கவே மேற்கூறிய வரிகள் எல்லாம். என்னுடையகேள்வியெதுவென்றால் தீவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் தமது படைப்புகள்தாண்டிய உரையாடல்களின் போது மிகவும் அவமதிப்பையோ, அல்லது துன்பங்களைதங்கள் வாழ்வில் சந்தித்ததாக கூறுகின்றனர்.

அதிக பட்ச அவமதிப்பையோ, துன்பங்களையோ சந்தித்தால் மட்டுமே ஒரு தீவிரவாசகராகவோ, எழுத்தாளராகவோ ஆக முடியுமா? இல்லை, அதிகபட்ச வாசிப்புதுன்பங்களை மிகைப்படுத்தச் செய்யுமா? மகிழ்ச்சியாக எளிமையாக வாசித்துக்கொண்டே இருக்க முடியாதா? [ நான் முழுக்க முழுக்க மகிழ்ச்சியானபுத்தகங்களையே வாசிக்கிறேன் என்று கூறவில்லை எல்லாவற்றையும்வாசிக்கிறேன். ஆனாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்நிலை மாறிவிடுமோ எனதோன்றுவதாலேயே இக்கேள்வி]

ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் 3000 வருடம் முன்னரே அரிஸ்டாடிலால் சொல்லப்பட்டுவிட்டது

இப்படி யோசியுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே துயரம் தரும் ஒருவிஷயத்தை நீங்கள் நாடுவீர்களா? ஆனால் துயரம் நிறைந்த ஒரு நூலை, திரைப்படத்தை விரும்பி வாசிக்கிறீர்கள், பார்க்கிறீர்கள் அல்லவா?

ஏனென்றால் அந்தத் துயரம் உண்மையானது அல்ல. அது மனதில் தலைகீழாகவே நிகழ்கிறது. துயரத்தை நடிப்பதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடைகிறது. சுந்தர ராமசாமியின் மொழியில் சொல்லப்போனால் திருப்பிப்போடப்பட்ட சட்டை, பை உள்ளே இருக்கும்.

இதை catharsis என்கிறார் அரிஸ்டாடில். துயரத்தை புனைவுகளில் அனுபவிப்பது வழியாக மானுடமனம் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்கிறது. ஓர் உன்னதமாக்கல் நிகழ்கிறது. அது ஓர் இனிய அனுபவம்.

ஆகவேதான் உயர்ந்த படைப்புகள் பெரும்பாலும் துயரச்சுவை மிக்கவையாக இருக்கின்றன. அதுவும் இனிய அனுபவமே. மகிழ்ச்சியான மனநிலை என்பது நேர்நிலை. அதில் மனிதன் அதிகநேரம் நிற்க முடியாது. ஆகவேதான் துயரம் கலந்த மகிழ்ச்சியை melancholy யை அடைகிறான்.

அந்த இனியதுயரமே இயற்கையை, இசையை, கலைகளை அழகாக ஆக்குகிறது. அது இல்லாவிட்டால் உலகில் இன்பமே இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு விழா இணையத்தில்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16