இந்தியப் பயணம் 5 – தாட்பத்ரி

எங்கள் பயணத்திட்டத்தில் இந்த ஊரே இல்லை. பொதுவாக யாருக்குமே தெரிந்திராத ஊர் இது. வசந்தகுமார் அனந்தபூர் வந்தபோது இந்த ஊரைப்பற்றி அவர் அறிந்த அரைத்தெலுங்கில் விசாரித்து அறிந்துகொண்டார். பெனுகொண்டாவில் இருந்து அகோபிலம் போகும் வழி. சிங்கமாலா செரு என்ற பெரிய ஏரியைக் கண்டு வண்டியை நிறுத்தி வேடிக்கை பார்த்தோம்.  தாட்பத்ரியில் ஏதோ சிறு கோயில் இருக்கும் என்று எண்ணி சென்றோம். ஊருக்குள் சென்று கேட்டால்கூட  கோயிலை பலருக்கும் தெரியவில்லை. சாக்கடை வழிந்த தெருக்கள் வழியாக கோயிலைச் சென்று அடைந்தோம்.

பெண்ணை ஆற்றின் கரையில் இருக்கிறது தாட்பத்ரி சிவன்கோயில். கன்னங்கரிய கடப்பைக் கல்லால் கட்டப்பட்டது. சிலைகள் தூண்கள் எல்லாமே இரும்பில் வடிக்கப்பட்டவை போல ஒளிவிட்டன. பதிநாறாம் நாகர வம்சத்து அரசர்களால் உருவாக்கபப்ட்டக் கோயிலானது பதினாறாம் நூற்றாண்டில்  அழிக்கப்பட்டது. பின்பு இக்கோயில் மீண்டும் எழவேயில்லை. கோயிலைச்சுற்றி உடைந்த சிற்பங்களின் பெரிய குவியல். அங்கே எங்கு பார்த்தாலும் எல்லா கல்லுமே சிற்பங்கள்தான். பெண்ணையின் கரையே உடைந்த சிற்பத்தூண்களால் ஆனது.

உடைந்த முகப்புக் கோபுரத்தின் பெரு வாசல் வழியாக உள்ளே சென்றால் பிரமிப்பூட்டும் கலை நுட்பம் கொண்ட மூன்று சன்னிதிகள். மையசன்னிதியில் சிவலிங்கம். அக்கோயிலின் முன்பு இருக்கும் மண்டபம் தென்னிந்தியாவின் மிக அழகிய கலைச்சாதனைகளில் ஒன்று. சிற்பங்களின் கரிய தோற்றம் கிரீடம் சல்லடம் ஆரம் முதலியவற்றின் அமைப்பு ஆகியவை ஹளபீடு சிற்பங்களை நினைவுறுத்துகின்றன. ஆனால் ஹளபீடு சிற்பங்கள் மாக்கல்லில் செய்யபப்ட்டவை. மிக மிக நுட்பமான செதுக்கல்கள் கொண்டவை. இச்சிலைகள் கடப்பைக் கல் ஆகையால் ஓர் எல்லைக்கு மேல் செதுக்கல்கள் சாத்தியமில்லை

அந்தக்குறையை  சிறுசிறு சிகரங்களை ஒன்றுமேல் ஒன்றாக அடுக்கி எழுப்பிய உயரமில்லாத கோபுரம் மூலமும் பல அடுக்குகள் கொண்ட தூண்கள் மூலமும் ஈடுகட்டியிருந்தார்கள். தூண்கள் பலவகையானவை. உருண்டை வடிவம் கொண்டவை. எண்பட்டை அறுபட்டை வடிவம் கொண்டவை. தூண்களின் மேல் அழகாகக் கவிந்த கபோதம். மலர்கள். கருவறை எண்கோண வடிவில் பல மடிப்புகள் கொண்டதாக ஒவ்வொரு கணுவிலும் நுண்ணிய சிற்பங்கள் செறிந்து இருந்தது. பிரம்மாண்டமான ஒரு கரிய நகை போல கண்ணிலேயே நிற்கிறது அந்தக் கோயில்.

கோயிலுக்கு முன்னால் பெண்ணையாற்றில் செந்நிறக் கலங்கல் நீர் சுழித்துச் சென்றது. குளிக்கவேண்டும் என்றார் தண்ணீர் பைத்தியமான சிவா. நானும் செந்திலும் சட்டைகளைக் கழற்றிவிட்டோம். நீர் சுத்தமாக இல்லை என்று கிருஷ்ணன் குளிக்க மறுத்துவிட்டார். நாங்கள் இறங்கினோம். ஆனால் நம்ப முடியாத இழுப்பு. மணல்தான் ஆனால் நீருக்குள்ளும் ஏராளமான கற்சிலைகள் கிடந்தன. ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு குளித்தோம்.

சிவன்கோயிலுக்கு எதிரே சென்றால் பெருமாள் கோயில்.  அதுவும் இதேபாணியைச் சேர்ந்த கோயில்தான். கரிய கடப்பைக்கல்லால் ஆனது. முக மண்டபத்துச் சிலைகளில் மோஹினி சிலை பளபளக்கும் கன்னங்களுடன் மீழே முற்றத்து வெயிலை கனவுப்பார்வை பார்த்து நின்றது. ஒரு பயணியர் குழு அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இருட்ட ஆரம்பித்திருந்தது. அஹோபிலம் போகவேண்டுமானால் காட்டுவழியாகச் செல்ல வேண்டும். அருகே சிறிய தெருவில் எல்லா வீட்டு முற்றங்களிலும் பெண்கள் அமர்ந்து பலஹாரம் போட்டு அங்கேயே விற்றுக் கோண்டிருதார்கள். ”ஆந்திராவிலெ அட்டு •பிகர்னு ஒண்ணு கூட இல்லை சார்!”என்றார் செந்தில். வசந்தகுமார் முகங்களை புகைப்படம் எடுப்பதில் அதீதமான ஆர்வம் கொண்டவர். பெண்கள் படம் எடுப்பதைக் கண்ட பின் காணாதது போல பாவனை காட்டினர். பெண்குழந்தைகள் வெட்கி நின்றன. கொஞ்சம் வளர்ந்த பெண்கள் ஓடிப்போனார்கள்

அதிரசம் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு டீ குடித்தோம். மூன்று அவுன்ஸ் டீ. திரும்பும் வழியில் ஒரு பாப்பா எங்கள் கார் கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருந்தது. வசந்தகுமார் காமிராவை எடுப்பதற்குள் தப்பி ஓடி ஒரு வீட்டுக்குள் சென்றுவிட்டது.

தாட்பத்ரியில் பிள்ளையார் பூஜைக்கான கலைநிகழ்ச்சிகளுக்கு அரங்கம் தயாராகிக் கொண்டிருந்தது. அங்கே நின்ற ஒரு தாத்தா வழி சொன்னார். வழியெல்லாம் சிறு சிறு கிராமங்களில் பிள்ளையார் சிலைகள் விஸர்ஜனத்துக்காக ஊர்வலமாகக் கொண்டுசெல்லபப்ட்டன. ஹோலி போல உடம்பெல்லாம் சாயம் வீசப்பட்ட பையன்கள் தாளத்துக்கு துடித்து துடித்து நடனமிட்டார்கள். கோயில்கொண்டா வழியில் கிருஷ்ணன் கை நீட்டி சூடான சர்க்கரை பொங்கலை வாங்கிவிட்டார். நன்றாக இருந்தது.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்தியப் பயணம் 6 – அகோபிலம்