அன்புள்ள ஜெயமோகன் ,
மறைந்த முதுபெரும் தலைவர் ஜோதிபாசு பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? சமீபத்தில் சண்டே இந்தியனில் ஜோதிபாசு பற்றிய கட்டுரையில் (ஜோதிபசு ஏன் இந்தியாவிற்கு தேவையில்லை http://www.thesundayindian.com/31012010/storyd.asp?sid=8422&pageno=1
) அவரைப் பற்றி முற்றிலும் ஒரு எதிர்மறையான சித்திரமே கிடைத்தது . இருபத்தி ஏழு வருடங்கள் ஆட்சி செய்தவர் இவ்வளவு அலட்சியமாக இருந்திருப்பார் என நம்ப முடியவில்லை.
—
shankaran e r
அன்புள்ள சங்கரன்
ஜோதி பாஸ¤வின் மரணச்செய்தி என்னை வருத்தமுறச்செய்தது. ஏனென்றால் சிறுவயது முதலே அவரைப்பற்றிக் கேட்டு வளர்ந்திருக்கிறேன். எங்களூரில் அவரது நினைவாக ஜோதி என்று ஆணுக்கோ பெண்ணுக்கோ பெயரிடுவது சாதாரணம். என் அக்காவின் [ பெரியம்மா மகள்:] பெயர்கூட ஜோதிதான்.
ஆனால் கடந்த பத்தாண்டுகளாகவே நான் உறுதியான கருத்தியல்களை ஐயப்படுபவனாக இருந்துகொண்டிருக்கிறேன். மார்க்ஸியம் மற்றும் அதன் விளைபொருளாகிய ஸ்டாலினியம் ஆகியவற்றின் உலகளாவிய பங்களிப்புகளைப் பற்றி ஆழமான ஐயம் எனக்கிருக்கிறது. ஜோதி பாசு ஓர் உறுதியான ஸ்டாலினிஸ்ட் என்பதே என் கணிப்பு.
மறைந்த ஜோதி பாஸ¤வின் உண்மையான பற்று எதில் என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக்கொண்டால் குழப்பமே எஞ்சுகிறது. அவரை மனிதாபிமானி என்று சொல்ல முடியாது. வறியவர்களின் தோழர் என்றும் சொல்ல முடியாது. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். உயர்தரக் கல்வி பெற்றபின் லண்டனில் சட்டம் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தொழிற்சங்க அரசியல் வழியாக இடதுசாரி இயக்கத்துக்கு வந்தவர். அவர் கல்கத்தாவுக்கு வெளியே எங்குமே வாழ்ந்ததில்லை. கல்கத்தா அல்ல வங்கம். கல்கத்தா மாபெரும் பண்பாட்டு பாரம்பரியம் கொண்ட நகரம். வங்கம் மிகவும் பிற்பட்ட ஒரு மாநிலம்.
பாஸ¤வின் முதல் விசுவாசம் அவர் நம்பி ஏற்ற கோட்பாட்டுக்கே என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தக்கோட்பாடு தவறிழைக்கும் என்று அவர் நம்பவில்லை. அதை முரட்டுத்தனமாக முன்வைப்பவராக இருந்திருக்கிறார். அதற்காக எதையும் செய்யலாம் என்று எண்ணியிருக்கிறார். ஆனால் பாஸ¤ அவரது மார்க்ஸிய-ஸ்டாலினியக் கோட்பாட்டை தொடர்ச்சியாக சமரசம் செய்பவராகவும் இருந்திருக்கிறார். அந்தச் சமசரம்கூட அக்கோட்பாட்டை புதிய காலமாற்றத்துக்கு ஏற்ப தக்கவைத்துக்கொள்வதற்காகவே.
வங்க அரசியல் குறித்து தெற்கே நமக்கு ஒன்றுமே தெரிவதில்லை. நாமறிந்தது பதவிக்கு வந்த காலம் முதல் ஒருபோதும் தோல்வியுறாமல் இன்றுவரை வங்கத்தில் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியை பாஸ¤ அதிகாரத்தில் வைத்திருக்கிறார் என்பதே. அதன் பின்னால் உள்ள குன்றாத மக்கள் செல்வாக்கே அவரது சாதனையாக இப்போதும் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணமாக வங்கத்துக்கு அவரது பங்களிப்புகள் இருந்தன என்று.
எண்பதுகளின் இறுதியில் நான் கல்கத்தாவிலும் வங்க கிராமங்களிலும் பயணம் செய்தபோது கண்ட நேரடி உண்மை முற்றிலும் மாறானது. வங்க கிராமங்கள் அளவுக்கு கல்வி,போக்குவரத்து,உட்கட்டுமானம் எல்லாவற்றிலும் வளர்ச்சி மங்கிய ஊர்களை பிகாரில்கூட பார்க்க முடியாது. கிராமியப் பொருளியலே சிதைந்து கிடக்கிறது அங்கே. தமிழகத்தின் எந்தக் கிராமத்திலும் நாம் புதியவீடுகளையே எண்ணிக்கையில் அதிகமாகக் காணநேரும். ஆனால் வங்காளக் கிராமத்தில் ஒரு புதியவீடு என்பது மிக அபூர்வமான காட்சி. தொழில்கள் இல்லை. வணிகம் அனேகமாக உறைந்துவிட்டிருக்கிறது. அரசின் பொருளியல்நிலையே பரிதாபகரமாக, ஊழியர்களுக்கு ஊதியம்கூட கொடுக்கமுடியாதநிலையில் உள்ளது.
சண்டே இண்டியன் கட்டுரையின்படி கடந்த முப்பதாண்டுகளில் அங்கே 30 000 தொழில்நிறுவனங்கள் நலிந்து மூடப்பட்டுவிட்டிருக்கின்றன. 27 000 நிறுவனங்கள் நலிந்தவை என அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் நலிந்த நிறுவனங்கள் அதிகமான மாநிலமே வங்கம்தான். மூடப்பட்ட சணல் ஆலை ஊழியர்களுக்கு அளிக்கப்படவேண்டிய வைப்புநிதி 1977 முதல் இன்று வரை அளிக்கப்படவில்லை. இன்று அதன் மதிப்பு 200 கோடி. மேற்குவங்கமளவுக்கு பொருளியல் ரீதியாக சீரழிந்த இன்னொரு மாநிலமே இந்தியாவில் இல்லை.
இந்தியாவில் 100 பரம ஏழை மாவட்டங்கள் கண்டடையப்பட்டுள்ளன. அவற்றில் 13 மாவட்டங்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவை. அங்கேயுள்ள முக்கியமான மாவட்டங்கள் 18 தான். அவற்றில் 13 வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளன. இன்று கேரளம் முழுக்க அடிமட்டக்கூலி வேலைக்கு வங்காளிகள் வந்து குவிவது கேரளத்து மார்க்ஸிஸ்டுகளைச் சங்கடப்படுத்துகிறது என்கிறார்கள். சமீபத்தில் மீண்டும் சில நாட்கள் வங்கத்திற்குள் சென்றபோதும் அதே நிலையையே கண்டேன்.
அதையும் மீறி எப்படி மார்க்ஸிஸம் அங்கே கோலோச்சுகிறது? நெருக்கடி நிலைக்காலத்தில் சித்தார்த்த சங்கர் ரேயின் அடக்குமுறை ஆட்சி இடது தீவிரவாதிகளை கொன்றொடுக்கியது. வங்கத்தில் மட்டும் 50000 பேர் கொல்லப்பட்டதாக தகவல். வங்கத்தின் மனதில் பதிந்த அந்த ரணம் அங்கே காங்கிரஸை முழு நிராகரிப்புக்குக் கொண்டுசென்றது. விளைவாக 1977ல் பாஸ¤ அதிகாரத்துக்கு வந்தார் என்பது ஒரு பாடம்.
இன்னொரு பாடமும் உள்ளது. இதுவே இன்னமும் வரலாற்றுச்சார்பானது. 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் முன்னர் கிழக்கு வங்காளத்தில் அங்குள்ள முஸ்லீம்களால் இந்துக்கள் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். அங்கிருந்து மாபெரும் அகதிப்பிரவாகம் கிளம்பி வங்கத்துக்குள் வந்தது. பின்னர் இஸ்லாமிய அகதிகள் வரத்தொடங்கினர்.
‘வங்கம் எல்லா வங்காளிகளுக்கும் தாய்மண்’ என்பதே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போது முன்வைத்த கோஷம். 1960 முதல் வங்கத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சிதான் இருந்தது. அகதிகள் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு இடம்கொடுத்தது கம்யூனிஸ்டுக் கட்சி. ஒரு கட்டத்தில் வங்கதேச இஸ்லாமியர்கள் வந்து குடியேறி வங்கத்தின் கிராமங்களை நிறைத்தனர். வங்கத்தில் அகதிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகியது. அவர்கள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்கள். ஆகவேதான் 1977ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர முடிந்தது.
1977 ல் முழு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த முதல் பத்துவருடம் உபரி நிலங்கள் மற்றும் அரசு நிலங்கள் கைப்பற்றப்பட்டு அவை அகதிகளாக வந்த மக்களுக்கு வழங்கப்பட்டன. மிகப்பெரும்பாலான நிலம் குடியேறிய இஸ்லாமிய அகதிகளிடம் சென்று சேர்ந்தது. அந்த நிலச்சீர்த்திருத்தமே மேற்குவங்கத்தின் நிலையான மார்க்ஸிய ஆட்சிக்குக் காரணம் என்று கேள்விப்பட்டேன்.
அதன் பின்னர் மிக உறுதியான கட்டுக்கோப்புள்ள ஒரு அதிகார அமைப்பு ஒன்று அங்கே உருவாகியது என்கிறார்கள். 1989ல் நான் சந்தித்த பல மேற்குவங்க இதழியல் – இலக்கிய நண்பர்கள் ஏற்கனவே இருந்த உயர்சாதி நிலவுடைமை ஆதிக்கமும், மார்க்ஸியக் கட்சியும் , தொழிற்சங்கங்களும், அரசாங்க அதிகாரமும் முழுமையாகவே ஒன்றாக இணைந்து விட்டன என்றும் அந்த அதிகார அமைப்பு தேர்தல்களை முழுமையாகவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதனால் மேற்குவங்கத்தேர்தல்முறை என்பதே ஒரு மோசடி என்றும் சொன்னார்கள்.
அப்போதுதான் மரிச்சபி [ Marichjhapi ] படுகொலைகளைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால் அன்று அது ஆதாரங்கள் இல்லாத ஒரு பொதுக்கூற்றாகவே சொல்லப்பட்டது. அந்தப் பெயர்கூட என் நினைவில் நிற்கவில்லை. சமீபமாக நண்பர் ஷாஜி அதைப்பற்றி சொல்லி இணைய ஆதாரங்களை அளித்தார். வங்காளத்தில் ஒருகட்டத்தில் எதிர்கட்சி ஊடகங்கள்கூட மரிச்சபி குறித்து பேசமுடியாத நிலை இருந்தது. தமிழகத்தில் மரிச்சபி பற்றி ஒரு வரிகூட எழுதப்பட்டதில்லை. இப்போது இணையம் ஆதாரங்களை அள்ளிக் கொட்டுகிறது.
1971ல் இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச அகதிகளில் கணிசமானோர் தலித்துக்கள். மேற்குவங்கத்தில் பிற்பட்ட மற்றும் உயர்சாதி அகதிகளே ஆதரிக்கப்பட்டார்கள். தலித்துக்களை இந்திய அரசு மத்தியபிரதேசத்தில் தண்டகாருணியத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் கொண்டு சென்று தங்க வைத்தது.
‘தங்கள்’ ஆட்சி வந்தபோது தண்டகாருணியத்தில் இருந்த தலித்துக்கள் திரும்ப தங்கள் சொந்த மண்ணான மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தார்கள். அவர்கள் பல இடங்களில் உபரி நிலங்களையும் சதுப்புகளையும் கைப்பற்றி விவசாயம் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் ஏற்கனவே மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக ஆகிவிட்டிருந்த உயர்சாதி- இஸ்லாமிய அகதிகளுக்கும் இடையே பூசல்கள் வெடித்தன. இத்தகைய பூசல்களில் ஒன்றே மரிச்சபி. அங்கே தண்டகாருண்யத்தில் இருந்து குடியேறிய 30 000 தலித் அகதிகள் குடியேறி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள்.
1978- 1979ல் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போலீஸ¤ம் இணைந்து மரிச்சபியை தாக்கினார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் மரிச்சபி முழுமையாக துண்டிக்கப்பட்டது. எந்த தொண்டுநிறுவன அமைப்புகளும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. செய்திகள் முழுமையாகவே மறைக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடுகள் நடந்ததாகவும் கிட்டத்தட்ட 200 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மரிச்சபி முழுமையாகவே காலிசெய்யப்பட்டது. Jagadis Chandra Mandal எழுதிய Marichjhapi: Naishabder Antaraley (Marichjhapi: Beyond silence), Sujan Publications, Calcutta; 2002 என்ற நூல் இந்த தகவல்களை விரிவாகவே பேசுகிறது.
நான் இப்போது இணையத்தில் இத்தகவல்களை வாசிக்கும்போது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நான் வங்காளத்திந் மூத்த இதழாளர்களிடமிருந்து கேள்விப்பட்ட கிராமப்புற யதார்த்தம் உண்மைதானா என்று எண்ணிக்கொள்கிறேன். இன்றுவரை இந்த விஷயங்களுக்குள் முழுமையாகச் சென்று ஆராய என்னால் இயலவில்லை. எழுதப்பட்ட வரலாறுகள் கொஞ்சம்தான். காரணம் நமது ஊடகம் எப்போதுமே இடதுசாரி சாய்வுள்ளது. மேலும் வங்காளிகள் இதைப்பற்றிப் பேச வெட்குவார்கள்.
ஜோதிபாஸ¤வின் மரணச்செய்தியுடன் இந்த எண்ணங்கள் என்னை சூழ்கின்றன. அசாதாரண அறிவுத்திறனும் நேர்மையும் கொண்டிருந்த மனிதர். ஆனால் அவரது சாதனைகள் என்ன? துரதிருஷ்டவசமாக ஒரு காலாவதியான கோட்பாட்டை அவர் உறுதியாக நம்பினார். கோட்பாட்டின் சுமையால் வங்கம் அழிந்தது என்பதே உண்மை.
அவதார் படத்தில் ஒரு மாபெரும் ரோபோவுக்குள் அதை இயக்கியபடி செல்லும் மனிதர் இருப்பதைப்போல எனக்கு பாஸு தோற்றமளிக்கிறார்.அனைத்து வகையிலும் பாஸ¤ ஒரு ஸ்டாலின். ஸ்டாலினைப்போலவே கோட்பாட்டைக் கொண்டு ஓர் உறுதியான அமைப்பை அவர் உருவாக்கினார். அந்த அமைப்பு ஒரு மகத்தான யந்திரம். அது தவிர்க்க முடியாமல் உருவாக்கிச் சென்ற அழிவுகளை அவர் வழிநடத்த வேண்டியிருந்தது, நியாயப்படுத்தவேண்டியிருந்தது. மறைக்க வேண்டியிருந்தது.
ஜோதிபாஸ¤ கொஞ்சம் ஜனநாயக நம்பிக்கை கொண்டவராக இருந்திருக்கலாம். கொஞ்சம் கோட்பாட்டுக்கு வெளியே வந்து சிந்தித்திருக்கலாம். அவ்வளவுதான் சொல்லத்தோன்றுகிறது. மிகுந்த வருத்தத்துடன்.
http://empireslastcasualty.blogspot.com/2009/08/marichjhapi-west-bengal-india-communist.html