«

»


Print this Post

சிக்குன்குனியா


இன்று காலை பத்துமணிக்கு வீட்டுக்கு வந்துசேர்ந்தேன். பயணம் முடிந்து வீடுவருவதன் வழக்கமான பரவசம். அருண்மொழிக்கு சிக்கின்குனியா ஓரளவு சரியாகிவிட்டிருக்கிறது. கால்களில் வீக்கம் இருக்கிறது. வலி குறைவுதான். காய்ச்சல் நான்குநாட்களுக்குத்தான் இருந்தது. அவள் முதல் இருநாட்களுக்குப் பின்னர் எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை.நிறைய தண்ணீர் குடித்து ஓய்வெடுப்பதுடன் சரி.

 

பக்கத்துவீட்டு பாட்டிக்கும் தாத்தாவுக்கும் சிக்குன்குனியா தாத்தாபெயர் ஸ்ரீகுமாரன் நாயர். வேதாந்தி. அவருக்குத்தான் என் இந்தியஞானம் நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன். இந்தப்பகுதியில் ஏறத்தாழ பாதிப்பேருக்கு சிக்கின்குனியா வந்து செயலூக்கமிழந்து வாழ்கிறார்கள். அலுவலகத்தில் அந்நோய் வராதவர்கள் மிகச்சிலரே. சென்னையில் சந்தித்த ஒவ்வொருவரும் இதையே சொன்னார்கள்.தமிழகம் எங்கும் இதே பேச்சுதான்.

ஆனால் நம் நாளிதழ்களில், வார இதழ்களில் இச்செய்தியையே காணமுடியவில்லை. சென்னையில் சந்தித்த இதழாளரிடம் கேட்டேன். செய்திகளை அடக்கி வாசிக்கும்படி இதழ்கள் அரசால் ‘கோரப்பட்டிருக்கின்றன’ என்றார். கோரினால் இதழ்கள் அடங்கிவிடுமா என்றேன். ”கண்டிப்பாக. எந்த எல்லைவரை சென்று கோருகிறார்கள் என்பதே முக்கியமானது. தமிழ் ஊடகங்கள் எந்த தலைவரையும் தாக்கும், ஆனால் அந்த எல்லை என்பது அந்த தலைவரால் ஒரு சமரசம் என்ற முறையில் ‘அளிக்க’ப்படுவது மட்டுமே” என்றார்.

 

எல்லா நாளிதழ்களும் இதழ்களும் அரசையும் அரசு விளம்பரத்தையும் நம்பியே உள்ளன என்றார் நண்பர். இப்போது சிற்றிதழ்களும்கூட அப்படித்தான். சிறந்த உதாரணம் மதுரை தினகரன் நாளிதழ் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் வழக்குபதிவுசெய்த காவலதிகாரி, இறந்தவர்களின் பெற்றோர் உட்பட அத்தனைபேருமே பிறழ்சாட்சியாக ஆகி வழக்கு தள்ளுபடியாக ஆன விவகாரம். ”பீகாரில் அதன் உச்சகட்ட சீரழிவின் நாட்களில் கூட இப்படி நடந்ததில்லை. ஆனால் தமிழகத்தில் கண்டனம் தெரிவித்த இரு இதழ்கள் துக்ளக்கும் காலச்சுவடும் மட்டுமே. மீதி அத்தனை இதழ்களும் இதழாளர்களும் சும்மாதான் இருந்தார்கள்” என்றார் நண்பர்.

சிக்குன்குனியா இந்த அளவுக்கு எப்படி வலுப்பெற்றது என சில மருத்துவ நண்பர்களிடமும் சமூகசேவர்களிடமும் கேட்டேன். சிக்குன்குனியா நோயின் வைரஸ் இப்போது உருமாற்றம் அடைந்துவிட்டிருப்பதாக தெரிகிறது என்றார்கள். முன்பெல்லாம் அது மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் மட்டுமே பரவும். நன்னீரில் மட்டுமே ஏடீஸ் கொசு முட்டைபோட்டு வளர முடியும். இவ்விரு விஷயங்களையும் அந்த வைரஸ் தாண்டிவிட்டிருக்கிறது. இப்போது அது சாக்கடைநீரிலும் முட்டையிட்டு பெருகிக்கொள்கிறது. வெயிலை நன்றாக தாக்குபிடிக்கிறது. ஆகவே கடும் கோடை உருவாகியபின்னரும் சிக்குன்குனியா அதே வீச்சுடன் தொடர்கிறது.

ஆனால் காய்ச்சலின் வீரியம் குறைந்திருக்கிறது. முன்பு பத்துபதினைந்து நாள் காய்ச்சல் நீடிக்கும். இப்போது நான்குநாட்கள் அல்லது ஐந்து நாட்கள். மூட்டுவலியும் வீக்கமும் பதினைந்துநாட்கள் வரை நீடிக்கின்றன. ஆனால் ஏற்கனவே மூட்டுச்சிக்கல்கள் கொண்டவர்கள், முதியவர்கள், வறியவர்களுக்கு கடுமையான வதை பல மாதங்கள் நீள்கிறது. சிலசமயம் ஒரு வருடம் வரை. உயிராபத்து வரை நிகழலாம். பொதுவாக இந்நோய்க்கு தமிழகத்து உடல் எதிர்ப்புசக்தியை உருவாக்கி வருகிறது. அது மேலும் வளரலாம், அது ஒன்றே மீளும் வழி என்றார்கள்.

தமிழகத்தின் பல ஊர்களில் சமூக சேவை செய்துவரும் அமைப்பு ஒன்றின் தலைவர் சொன்ன செய்தி இன்னொரு முகத்தை அளித்தது. தமிழகத்தில் இந்த  ஐந்து வருடங்களில் சாலைபோடுதல், சாக்கடை வசதி செய்தல் உட்பட எந்த விதமான உட்கட்டுமான வசதிகளும் செய்யப்படவில்லை. சேவைகள் பலமடங்கு பின்னகர்ந்தும் இருக்கின்றன. ஆகவே கழிவுநீர், குப்பை அகற்றம் என்பது அனேகமாக செயலிழந்த நிலையில் இருக்கிறது. நகரங்களும் கிராமங்களும் குப்பைமலைகளாலும் சாக்கடையாலும் நாறிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே கொசுக்கள் பலமடங்கு பெருகி இப்போது பகலிலும் கொசுவர்த்தி இல்லாமல் இருக்க முடியாத நிலை உள்ளது. அலுவலகங்கள் கடைகள் எங்கும் மதியத்தில்கூட கொசுவர்த்தி தேவைப்படுகிறது. சிக்குன்குனியா போல இன்னும் பல கொசுவழி பரவும் மர்ம வைரஸ் காய்ச்சல்கள் பல இடங்களில் பரவி வருகின்றன. செய்திகள் அமுக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லையில் கடந்த ஆறுமாதங்களாக கடுமையான காய்ச்சல்கள் பரவி மக்கள்பாதிக்கப்படுகிறார்கள். சில உயிரிழக்கவும் செய்கிறார்கள்.  உள்ளூர் பதிப்பு நாளிதழ்களில் மட்டுமே இச்செய்தி வெளியாகிறது.

இந்நிலைக்குக் காரணம் இலவசத் தொலைக்காட்சி என்றார் நண்பர். இலவசத் தொலைக்காட்சித் திட்டத்தின் மிகக் கடுமையான நிதிச்சுமையால் மாநில நிதிநிர்வாகம் விழிபிதுங்கிக்கொண்டிருக்கிறது. பிற அனைத்து துறைகளில் இருந்து நிதி அதற்கு கொண்டுசெல்லப்படுகிறது. ஆகவே எல்லா சேவைகளுமே செயலிழந்துபோயிருக்கின்றன என்றார்.

ஏஸி அறைகளுக்கு வெளியே உயிர்வாழ்வதே பெரும் சவாலாக ஆகிவிட்டிருக்கிறது இந்த நாட்டில்!

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6434/

21 comments

1 ping

Skip to comment form

 1. gprabhu9477

  சிக்குன் குனியாவுக்கு கருவாட்டு குழம்பு நல்ல நிவாரணம் கொடுப்பதாக எனது அலுவலக நண்பர் சொன்னது நினைவில் வருகிறது….

 2. Wilting Tree

  //ஏஸி அறைகளுக்கு வெளியே உயிர்வாழ்வதே பெரும் சவாலாக ஆகிவிட்டிருக்கிறது இந்த நாட்டில்!//

  நல்ல உள்குத்து !

  தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் பொதுவாகப் பெருமைப்படியாகத்தான் இருக்கும். ஆனால், இப்போதைய வளர்ச்சி விகிதம் உத்தராஞ்சல் போன்ற புதிய, தொழிற் வளர்ச்சி இல்லாமலிருந்த மாநிலங்களை விடப் பின் தங்கி இருப்பதாகக் கேள்வி.

  வருத்தமாகவும் பயமாகவும் இருக்கிறது.

 3. Ramachandra Sarma

  “நோயின் வைரஸ் இப்போது உருமாற்றம் அடைந்துவிட்டிருப்பதாக தெரிகிறது” – நீங்க எழுதிய அறிவியல் புனைகதை. ஐந்தாவது மருந்து என்று நம்புகிறேன்.

 4. gprabhu9477

  பஞ்சாயத்தார் எங்களது வீட்டின் அருகில் கழிவு நீரோடையை அமைப்பதற்கு முன்னால் கொசு தொல்லை இல்லாமல் இருந்தது. இப்போது பகலிலும் அவைகளின் கைங்கர்யம் ….இரவானால் சொல்லவே வேண்டாம் !

 5. elango

  Dear Jeyamohan sir,
  Please ask Aruna akka to keep her legs in wrm water in a bucket for 15 minutes in the morning and evening. The swelling will come down along with fever. Many of my Madurai friends told me that this works fine.
  Ask her to take leafy vegetables and fibre food too.
  Thanks
  Elango.Kallanai

 6. ratan

  Democracy is a device that insures we shall be governed no better than we deserve

  ஓட்டுக்குத் தொலைக்காட்சி இலவசம்… தொலைக்காட்சிக்கு சிக்கன் குனியா இலவசம்…

 7. perumal

  இரண்டு வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் சிக்குன் குன்யா வந்த பொழுதே எனக்கு வந்து விட்டது. எனக்கு மூட்டு வலி ஒன்றரை வருடம் வரை நீடித்தது. அப்பொழுது சிக்குன் குன்யாவால் பாதிகப்படாதவர்கள் தான் இப்பொழுது அந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் . எனக்கு தெரிந்தவரை ஒருமுறை சிக்குன் குன்யா வந்துவிட்டால் மறுபடியும் வருவதில்லை. இந்த இரண்டுமுறையும் சிக்குன் குன்யா தாக்குதலுக்கு ஆளாகதவர்கள் கவலைப்பட வேண்டாம் கண்டிப்பாக அடுத்தமுறை வந்து விடும்.

  மருத்துவர்களின் கல்லா நிரம்பிவழிகிறது .

  பணிவன்புடன்
  பெருமாள்
  கரூர்

 8. uthamanarayanan

  it has been so in Chennai even months before,when contacted Doctors two months back said this kind of disease is chickun gunuya- like and not exactly the same, but symptoms are arthralgia or arthritis, joint pain,intense body pain remain for months. A very few private nursing homes give specific treatment and advise patients accordingly.But Ministers refused the situations when contacted by the journalists.When ultimately National council of Medical Research came to tamil nadu, they were surprised to hear that it was not brought to the notice of the institute.This is the status of the news- first refused by the Govt that the disease was not prevalent as widely as thought to be, now the reality everyone knows.In Ayurveda medicines prescribed are Vilvadi Gulika, Sudarsanam Gulika and Amritarishta..The people can consult Ayurveda practioners and benefit after the initial treatment.

 9. kailash

  திரு ஜெமோ அவர்களுக்கு . விரைவில் உங்கள் குழந்தை குணமடைய வேண்டுகிறேன்.
  .
  சிக்கன் குன்யாவிற்கு நல்ல மருந்து திரிபலா சூரணம்.dabar மற்றும் zandu ஆகிய நல்ல கம்பனிகள் தயாரிப்பே டப்பா ஐம்பது ருபாய்க்கு கிடைக்கிறது.பக்க விளைவுகள் இல்லை. எல்லோரும் சாப்பிடலாம்
  இது என் உறவினர்க்கு வந்தபோது நெட்டில் படித்தது.

  // Recently it was discovered that Triphala, an ayurvedic composition of 3 fruits namely Harada(haritaki), Amla(amalaki) and Behada(bibhitaki) is a good medicine for Chikungunya. Also powdered Sunflower seed taken along with honey is a good supplement precribed by the Ayurvedic docters at my place in Cochin, India. This mixture must be taken about 3 times a day along with your regular medicines to gain relief from joint pains which is a major after effect of this illness.

  Drinking loads of water will also help in reducing the pain and suffering from this disease.//

 10. ஜெயமோகன்

  அன்புள்ள கைலாஷ்

  அருண்மொழி உடலளவில் குழந்தை அல்ல. என் மனைவி. தங்கள் மருந்தை கேட்டுப்பார்க்கிறேன் நன்றி.
  ஜெ

 11. kuppan_yahoo

  I pray your family members to recover soon.

  It is not fair to blame DMK Govt alone for Chickenkuniya, The Govt takes whatever steps it can take. This disease is spread across globe, even well governed countries too affected by this disease,

 12. ThamilArasan_03

  விரைவில் அருண்மொழி அக்கா குணமடைய வேண்டுகிறேன். அதிக தண்ணீர் உடன் துளசி மற்றும் வெற்றில்லை சாறும் குடித்தால் சற்று பயன் தருகிறது.
  //இந்நிலைக்குக் காரணம் இலவசத் தொலைக்காட்சி என்றார் நண்பர். ,…ஏஸி அறைகளுக்கு வெளியே உயிர்வாழ்வதே பெரும் சவாலாக ஆகிவிட்டிருக்கிறது இந்த நாட்டில்! //

  திராவிட இய்யகத்தை நீரகரிக்க மேலும் ஒரு காரணம் கிடைச்சாச்சு!!! :)

 13. jagadees1808

  வணக்கம் ஜெ,

  பத்திரிக்கையாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே இப்படி பட்ட ஒரு புரிதல் இருப்பது இப்போது தான் தெரிகிறது. ஊரெங்கும் பரவிநிற்கும் சிக்கன் குன்யா காய்ச்சல் பற்றி எழுதாத பத்திரிக்கைகளுக்கு தர்மம் எதுவென சொல்லிக் கொடுப்போம்.

  அருண்மொழி நலமடைய பிராத்தனைகள்.

  – ஜெகதீஸ்வரன்

 14. kailash

  திரு ஜெமோ அவர்களுக்கு .தவறுக்கு மன்னிக்கவும்.
  நான் சென்னை வந்தபோது உறவினர் வீட்டில் பகலிலேயே அவ்வளவு கொசுக்கடி.
  குழந்தைகள் உள்பட அனைவருக்கும் சிக்கன்குன்யாவந்துவிட்டது.( ஆனாலும் கொசுக்களை அவர்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.) அப்போது நெட்டில் தேடியபோது கிடைத்த விபரமே இது.இதற்கு நேரடி ஆங்கில மருந்து இல்லை. பலவகைப்பட்ட நாட்டு (வீட்டு )மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள் .
  நாம் ஜலதோஷம் வருகிற மாதிரி இருந்தால் சுக்குமல்லி காபி சாப்பிடுவதுபோல் வடநாட்டில் திரிபலாவை ரெகுலராக சாப்பிடுகிறார்கள்.இது நோய்க்கு மருந்து என்றில்லாமல் இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. மேலும் உடலுக்கு பல பல நன்மைகள் பக்கவிளைவாக ஏற்படுகின்றன என்று படித்ததும் இவ்வளவு நாள் இதை எப்படி தெரியாமல் விட்டோம் என்று ஆச்சயபட்டு உடனே வாங்கி இப்போது வீட்டில் எல்லாரும் ரெகுலராக சாப்பிடுகிறோம். சென்னை உறவினர் அங்கே மாத்திரைதான் கிடப்பதாக சொல்லவே அவருக்கும் வாங்கி அனுப்பினேன்.இந்த தகவல் உங்களுக்கு பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியடைவேன் .
  நான் படித்த லின்கஸ்:
  (இதில் காமெடி தமிழக அரசு தன்னுடைய வெப் சைட்டில் சிக்கன்குன்யா முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கிறது,)

  http://www.chikungunia.com/
  http://www.tnhealth.org/dphfacts/chikungunya.htm
  http://www.who.int/mediacentre/factsheets/fs327/en/

  http://findarticles.com/p/articles/mi_m0NAH/is_8_32/ai_92283901/
  http://ayurveda.iloveindia.com/ahar-vihar/triphala-rasayana.html
  http://www.ayushveda.com/health/chikungunya.htm
  http://ayurveda.iloveindia.com/ahar-vihar/triphala-rasayana.html

 15. bala

  அருண்மொழி அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

  எங்கள் வீட்டிலும் இதே போல் நிலைதான்.

  உத்தராஞ்சல் மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்குக் காரணம் – அங்கே தொழிற்சாலை அமைத்தால், 10 வருடங்களுக்கு எக்ஸைஸ் வரியும், வருமான வரியும் கிடையாது. இந்தியாவில் இச்சலுகை உள்ள ஒரே மாநிலம் இப்போது இதுதான். கச்சாப் பொருட்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்று, பொருட்கள் தயாரிக்கப் பட்டு மீண்டும் கன்னியாகுமரி வரும் தமாஷ் நடந்து கொண்டிருக்கிறது. -பாலா

 16. tamilsabari

  திரு ஜெயமோகன்,

  சென்னையில் தங்கி இருக்கும் நண்பர் ஒருவரும் இப்போது சிக்கன் குனியாவால் பாதிக்க பட்டிருப்பதாக கூறினார். நோய் தீவிரம் அதிகம் என்றே படுகிறது.

  மக்களிடம் செய்தியை மறைப்பது சரியாக படவில்லை. நோய் பற்றிய விழிப்புணர்வு தான் தேவை என்று தோன்றுகிறது

  கல்விக்கும், மருத்துவத்திற்கும் இல்லாத அரசாங்க பணம் கலர் டிவிக்கு பயன்படுத்த படுவது ஏழை மக்களின் அறியாமை பற்றி கவலை கொள்ள வைக்கிறது.

  “நாம் ஆத்மாவையும் உடலையும் விற்று பொழுது போக்கை வாங்கி கொண்டு இருக்கிறோம் ?!!”

  நன்றி

 17. ganesan

  அன்புள்ள ஜெயமோகன்,
  மதுரையில் சிக்குன் குனியா இதுவரை வராத வீடு இல்லை ! எங்கள் குடும்பத்தில் எனது அம்மா, அக்கா, அண்ணி, மாமியார், கொளுந்தியாளின் உறவினர் (பட்டியல் கொஞ்சம் காமடியாத்தான் போகுது இல்ல!), ஆகியோருக்கு சிக்குன் குனியா. இதில் பக்கத்து வீடு எதிர் வீடு அவர்தம் உறவினர் கணக்கு இல்லை!
  காய்ச்சலில் அவதிப்பட்ட அப்பாவை ஆஸ்பத்திரியில் பதின்மூன்று சி கு நோயாளிகளை கடந்து டாக்டரிடம் காண்பித்த போதுநேரடியாக விசயத்துக்கு வந்துவிட்டார். “சார், புதுசா உள்ள வைரஸ் பீவர் போல இருக்கு. இதுக்கு மருந்து இல்லை! பாதிப்பேர் இதுக்கும், மீதிப்பேர் சி கு விக்கும் வருகிறார்கள். நாங்கள் என்ன செய்வது? பெரியவர் சும்மா அனுப்பினால் சமாதானமாக மாட்டார். பாரசிட்டமலை தருகிறேன், ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கள்.” ஆனால் பத்திரிகைகளில் தேனும் பாலும் ஓடும் ‘செய்தி’யும் தொலைக்கட்சியில் மானும் மயிலும் ஆடும் ‘நிகழ்ச்சி’ யும் மட்டுமே! வாழ்க தமிழகம்.

 18. gomathi sankar

  விடுமுறைகளுக்கு நெல்லை சென்று நானும் என் மனைவியும் மர்ம காய்ச்சலில் மாட்டிக் கொண்டோம் இன்னும் உடல் அசதி வலி விடவில்லை முதலில் சிக்கன் என்றார்கள் பின்னர் ராஸ் ரிவர் பீவர் என்றார்கள் மறுபடி சிக்கனும் டென்குவும் சேர்ந்து வந்திருக்கும் என்கிறார்கள் பூனாவிலிருந்து அறிக்கை வரவில்லை எதுவாய் இருந்தாலும் மிஸ்டர் கொசுதான் காரணம் நெல்லையில் அவரை வீடு வீடாய் செல்லப் பிராணி போல் வளர்க்கிறார்கள் விழிப்புணர்வு ‘சுத்தமாக’ இல்லை கடையநல்லூர் மேலப்பாளையம் இரண்டும்தான் அதிகம் பாதிக்கப்பட்டன இரண்டுமே இஸ்லாமிர்கள் நிறைந்த ஊர்கள் ஹஜ் போய் இழுத்துட்டு வந்துருப்பய்ங்கடேஎன்று சிலர் கலவரத்தை கிளப்பி பார்த்து விட்டுவிட்டார்கள் கடையநல்லூர் பற்றி தெரியவில்லை மேலப்பாளையம் சாக்கடைகள் நடுவே ஒரு நகரம் அல்லது நரகம் அங்கிருந்து நிறைய தீவிரவாதிகள் வருகிறார்கள் என்று உளவுத்துறைக்கு ஐயம் உண்டு இந்தமுறை அங்கு தோன்றிய தீவிரவாதிகள் வித்தியாசமானவர்கள் ஹிந்து முஸ்லிம் ஆர் எஸ் எஸ் வஹாபி என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் போட்டுத்தாக்கிவிட்டார்கள் மேலப்பாளையம் பல்வேறு காரணங்களால் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கிறது ஆனால் அரசை மட்டும் குறை சொல்லி பயன் இல்லை குறைந்த பட்சம் உங்கள் வீட்டு தண்ணீர் டாங் கழிவுநீரோடைஇவற்றை சுத்தமாய் வைத்திருந்தால் போதும் நாம் அளவிலாத ஜீவகருணை உடையவர் ஆதலால் செய்வதில்லை ஒருமுறை வந்தால் திருப்பி வராது என்று உறுதி எல்லாம் கிடையாது இன்றைய காதல் போல எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம் அவ்வாறு சிலரை பார்த்தேன்

 19. gomathi sankar

  பா ரா சொன்னதுபோல் நிலவேம்புதான் ஓரளவு தேவலை ஆனால் ஆலகால கசப்பு கசாயம் பிடிக்காதவர் மகா சுதர்சன சூரணம் என்று மாத்திரையாக கிடைக்கிறது குளோரோ குவினின் கேக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது மலேரியாவுக்கு உரிய மருந்து பொதுவாக வைரஸ் தொற்றை ஆண்டிபயாடிக் மருந்துகள் ஒன்றும் செய்வதில்லை மீறி செய்யப்படும் சிகிச்சைகள் நிறைய பின்விளைவுகள் தருகின்றன சிறந்த வழி உங்கள் மனைவி செய்வதே நோயின் தீவிரம் குறையும் வரை நிறைய தண்ணீரும் பழச்சாறுகளும் எடுத்துக்கொண்டு படுக்கையில் படுத்தவாறு பிணி மூப்பு சாக்காடு எல்லாம் ஏன் வருகிறது என விசாரம் செய்வதே உண்மையான பிரச்சனை என்னவெனில் திடீரென பெருகிவரும் பூச்சியினங்களின் தொகையே மற்ற ஜீவராசிகளை எல்லாம் தின்றும் வேட்டையாடியும் அரிய உயிர்களாக மாற்றிவிட்ட மனிதனால் கொசுக்களிடம் மட்டும் அவ்வாறு செய்ய இயல வில்லை பைபிளில் சொல்லப்படும் இறுதி யுத்தம் கொசுக்களுக்கும் மனிதருக்கும்தான் நடக்கும்போல் தோன்றுகிறது

 20. ஜெயமோகன்

  அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,

  வணக்கம். தங்களின் சிக்கன்குனியா கட்டுரையைப் படித்தேன். பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற கதைதான். இந்த ராஜபாளையத்தில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக டாக்டர் காட்டில் பணமழையோ மழை. வீட்டுக்கு வீடு தவறாமல் ரூ.2000 லிருந்து ரூ.3000 வரை கொடுத்தாகி விட்டது. ஆச்சிரியம் என்னவென்றால் மருத்துவம் பார்க்கும் டாக்டரும் இதில் விதிவிலக்கல்ல. பாதிக்கப்பட்ட டாக்டர் காலை இழுத்துக்கொண்டு வந்து எனக்கு டிரிப் ஏற்றியது மறக்க முடியவில்லை. உடல் வலியும் மனவலியும் போன பாடில்லை. இடம் பற்றாமல் ஆஸ்பத்திரி வராண்டாவில் எல்ல மக்களை படுக்க வைத்து டிரிப் ஏற்றி காசு பார்த்தது ஒரு கூட்டம். மற்ற நாடுகளைப் பார்த்து இந்த விசயத்தில் நாம் முன்னேற வேண்டியது எவ்வளவோ உள்ளது. இந்த விசயத்தில் பதவியில் இருப்பவர்கள் யாரும் வாய் திறக்காமல் இருப்பது ஆச்சிரியமாக உள்ளது. தங்கள் குரல் கொடுத்திருப்பது ஆறுதலாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி.

  இப்படிக்கு
  ராதாகிருஷ்ணன்

 21. maniivannan

  Jeyamohan,
  The symptoms look like Ross River Virus but I do not see any doctor doing their part to do tests for Ross River Fever. Its a possibility and if you can do the test somewhere for RRV please do it so that medication can take in the right direction.

  Mani Arumugam

 1. தில்லிக்குப் போன விண்வெளி வீரன் | பா. ராகவன்

  […] கொஞ்சம் வலை சுற்றியதில் ஜெயமோகனின் மனைவி இதே சிக்குன் குன்யா… என்று படித்தேன். என் வீட்டிலேயே என் […]

Comments have been disabled.