ஒப்பீட்டு இலக்கியம்

அன்புள்ள ஜெ ,

எனது நீலம் -கிருஷ்ண கிருஷ்ணா கட்டுரை தங்கள் தளத்தில் வெலியிட்டது குறித்து மகிழ்ச்சி.ஒரு கேள்வி ஒரு விமர்சகராக அப்படி ஒரு பார்வைக்கு இடமிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? புனைவின் வகை என்பது போலவே எழுத்தாளனின் மனநிலையும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதா? ஒரு விவாதத்தின் பொருட்டே அப்படி ஒரு கோணத்தை நான் முன்வைத்தேன்.இந்த வகையிலே தமிழில் வேறு படைப்புகளை ஒப்புநோக்க வாய்ப்பு உண்டா?

அன்புடன் சுரேஷ் கோவை.

அன்புள்ள சுரேஷ்

இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்வதென்பது தொன்று தொட்டு நடந்துவரும் விமர்சன முறை. ரசனை விமர்சனத்தில் மிக முக்கியமான வழி அது. சொல்லப்போனால் தன்னிச்சையாகவே நம்முள் நடக்கும் விமர்சனம் அதுதான். அதை முறையாகச் செய்வதே விமர்சனமுறையாகிறது

அந்த ஒப்பீடு ‘தன்னிச்சையாக’ மனதில் தோன்றுவதாக இருக்கக் கூடாது. ’இதைப்படிச்சேன், அது ஞாபகம் வந்திச்சு’ என்று சொல்வதுபோல. அந்த தன்னிச்சையாக ஞாபகம் பல்வேறு காரணங்களுக்காக வரலாம். அவை தனிப்பட்ட காரணங்களகா இருக்கும்

அந்தப்படைப்புகளில் திட்டவட்டமான பொதுத்தன்மை இருந்தாகவேண்டும். அது மிக மிக முக்கியமானது. நான் தல்ஸ்தோயையும் தஸ்தயேவ்ஸ்கியையும் பலவகையில் ஒப்பிட்டு எழுதியிருக்கிறேன். குறிப்பாக புத்துயிர்ப்பு மற்றும் குற்றமும் தண்டனையும் நாவல்கள் ஏராளமான பொது அம்சங்கள் கொண்டவை

அப்படி நூற்றுக்கணக்கான ஒப்பீடுகளை என்னுடைய இலக்கியமுன்னோடிகள் வரிசை நூலில் சொல்லியிருக்கிறேன். உதாரணமாக ஜானகிராமனின் மலர்மஞ்சத்தில் வரும் கோணவாய் நாயக்கர் தான் க.நா.சுவின் பொய்த்தேவுவில் வரும் சோமு முதலி என்று ஒப்பிட்டுக்காட்டியிருக்கிறேன்

அதேபோல பைரப்பாவின் வம்ச விருட்சாவையும் அனந்தமூர்த்தியின் சம்ஸ்காராவையும் ஒப்பிட்டு எழுதிய பகுதிகள் நினைவுக்கு வருகின்றன

அவ்வகை ஒப்பீட்டாய்வு இரு நூல்களையும் அறிய உதவவேண்டும். இருநூல்களையும் தெளிவுபடுத்தும் வாசிப்பாக அது அமைந்தாகவேண்டும்

என்ன சிக்கல் வரும் என்றால் இலக்கிய அழகியல்களைப்பற்றிய அறிதல் இல்லாத ஒருவர் செய்தால் மிகப்பிழையாக முடிவுகளைச் சென்று சேர்வார். ஓரு செவ்வியல் நாவலை இன்னொரு யதார்த்தவாத நாவலுடன் ஒப்பிட்டு பின்னதன் எளிமையை சிலாகிப்பதோ முன்னதன் அடர்த்தியை சிலாகிப்பதோ மிகமிகைப்பிழையான வாசிப்பு. இருவகை அழகியல்கள் கொண்டவை, இருவகையில் உச்சம் நாடுபவை என்ற புரிதல் இருந்தாகவேண்டும்.அந்த புரிதலுடன் நீங்கள் எழுதியிருந்தீர்கள்.

தமிழில் பல படைப்புகளை அப்படி ஒப்பிட்டுப்பார்க்கலாம். சுஜாதாவின் கனவுத்தொழிற்சாலை அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் ஓர் உதாரணம். வெளிநாட்டு ஆக்கங்களையும் அப்படி ஒப்பிட்டு பார்க்கலாம் ஒரு புளியமரத்தின் கதையையும் இவோ ஆண்டிரிச்சின் டிரினா நதிப்பாலத்தையும் ஒப்பிடலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஏழாம் உலகம்- கடிதம்
அடுத்த கட்டுரைஇரு அதிர்ச்சிகள்