இன்று காலை மலேசியாவிலிருந்து சென்னை திரும்புகிறேன். விமானநிலையத்தில் நண்பர்கள் வந்து கூட்டிச்செல்வார்கள் என்று தகவல். நாஞ்சில்நாடனும் மரபின்மைந்தன் முத்தையாவும் ஏழாம் தேதிதான் திரும்புகிறார்கள். இங்கே நடக்கும் ஒரு ‘நெசவுத்தொழில்நுட்ப’ கண்காட்சியைக் காண நாஞ்சில் செல்கிறார். முத்தையா துணைக்குச் செல்கிறார்.
நான் சிங்கப்பூர் செல்வதாக இருந்தேன். ஆனால் அங்கே சில ஏற்பாடுகள் முழுமையடையாததனால் நிகழ்ச்சி ரத்து என்றார் முத்தையா. மேலும் நான் ஊர்திரும்பும் மனநிலையிலும் இருக்கிறேன். அருண்மொழிக்குக் காய்ச்சல் என்று நான் கிளம்பும்போது அஜிதன் ·போன் செய்து சொன்னான். சிக்குன்குனியாவாக இருக்கலாம், மூட்டு வலி உள்ளது என்று டாக்டர் சொன்னாராம். ‘பார்த்துக்கொள்’ என்று அவனிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
பொதுவாக இதைப்பற்றியெல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆகவே கிளம்பும்போதே அச்சிந்தனையை மனதில் இருந்து உதறி இந்த ஆறுநாட்களில் ஒருமுறைகூட நினைக்கவும் இல்லை. இந்த இடத்தில் இருக்கும்போது இங்கேயே இருப்பதே முறை. மேலும் அஜிதன் எல்லாவற்றையும் திடமாக, புத்திசாலித்தனமாக சமாளிக்கும் திறமை கொண்டவன். நாகர்கோயில் நகரத்தையேகூட அவனிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பலாம். சைதன்யாவுக்கு ஓரளவு சமைக்கவும் தெரியும்.
இருந்தாலும் பயணம் முடியும்போது வீட்டு நினைப்பு. இனிமேல் அங்கிருக்கவே முடியும். மனம் அங்கே சென்றுவிட்டது