மலேசியாவிலே…

மலேசியாவிற்கு வந்து ஐந்து நாட்களாகிறது. எதுவுமே எழுதமுடியாதபடி நாட்கள் பறக்கின்றன. அனேகமாக அதிகாலை எழுந்ததுமே பயணத்திட்டங்கள். ஏழரை மணிக்கெல்லாம் வண்டி வந்துவிடும். குளித்து உடைமாற்றி கிளம்பினால் தினம் ஓர் இடம். இங்கே மத்திய நகர்ப்புரவிரிவாக்க இணையமைச்சர் ட்த்தோ சரவணன் அவர்களின் விருந்தினர்களாக வந்திருக்கிறோம். கிராண்ட் சீசன்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் வாசம். பயண ஏற்பாடுகளையும் அமைச்சரே செய்திருப்பதனால் ஏராளமான இடங்கள்.

இந்தப்பயணத்தின் சிறப்பு என்னவென்றால் சாதாரணமாக பயணிகள் செல்ல வாய்ப்பில்லாத இடங்களுக்கெல்லாம் செல்ல முடிந்தது என்பதே. நகரத்தின் பல்வேறு சந்துபொந்துகள், உணவகங்கள் மட்டுமல்லாமல் வெளியே அமைச்சரின் தொகுதிக்குள் உள்ள கிராமங்கள், பழங்குடியினரின் குடியிருப்புகள் போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று பார்க்க முடிந்தது. மலேசிய உள்கிராமப்புறங்கள் கேரளம் போலவே இருக்கின்றன. கொலாலம்பூரின் ஆர்ப்பாட்டமான நகரத்தனத்துக்கு அப்பால் அவை இன்னமும் நடுத்தர மக்களின், வறிய மக்களின் உலகமாக உள்ளன

நாங்கள் இங்கே வந்ததே தைப்பூச நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவதற்காகத்தான். தைப்பூசம் மலேசியாவில் தேசிய விடுமுறை நாள். பத்து மலையில் இரண்டு லட்சம்பேர் வரை கூடுவதைக் கண்டோம்.  ஒருவாரம் முழுக்க தைப்பூசக் கொண்டாட்டங்கள். காவடி , அலகுகுத்துதல், பால்குடம் எடுத்தல்…பெரும்கூட்டம் தோளோடு தோளாக நெருக்கி ஒழுகிச்சென்றதில் ஊடே சென்றது எப்போதும் போலவே உற்சாகத்தை அளித்தது.

நாஞ்சில்நாடன் உடனறையர். இருபது வருடங்களாக பேசிக்கொண்டே இருப்பவர்கள் நாங்கள் . ஆகவே ஏராளமாக மேலும் பேசிக்கொண்டோம்.  அழுக்குச்ச்சட்டைகளைக்கூட நீவி கச்சிதமாக மடித்து திருப்பி பெட்டிக்குள் வைக்கும் அவரது போக்கு எனக்கு வேடிக்கையாக இருதது. முகந்ந்தால்தான் எது புதிது என்று தெரியும். உபயோகித்தது நறுமணமாக இருக்கும் – வாசனைத்திரவம்.

நாஞ்சில் விமானத்தில் ஏறியதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கொண்டிருக்கும் விரதங்கள் சிலவற்றை கடாசிவிட்டார் என்பதை தமிழ்கூறும் நல்லுலகத்திற்குச் சொல்லியாகவேண்டும். விமானத்திலேயே ஒரு விஸ்கி- ஆன் த ராக்ஸ்- வாங்கி பனிக்கட்டிகளுடன் உறிஞ்சினார். கீழிறங்கியதுமே சிக்கன், மட்டன். ”நம்மளை மதிச்சு கூப்பிட்டவங்க மனசு நோகப்பிடாது”என்று சொல்லி ”பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்” என்று குறளையும் சொல்லிவிட்டார். வேறு வழியே இல்லை.

முந்தைய கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 6
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1