கவிதை, கடிதம்…

அன்புள்ள ஜெ,

உங்கள் பதிலுக்கு நன்றி!. உண்மையில் உங்கள் பதில் என்னைச் சற்று பதற்றமடையச் செய்திருக்கிறது. ஆனால் நிச்சயம் சோர்வடையவில்லை. நான் சோர்வடையவும் மாட்டேன் ஏனெனில் நான் உங்கள் மாணவன். உங்களை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு விமர்சகனாக ஒரு கவிதையியல் மாணவனாக நீங்கள் குறிப்பிடுகிற விஷயங்களை நான் ஓர் எல்லை வரை உடன்படுகிறேன். தமிழில் தற்போது எழுதப்படும் கவிதைகளில் (என் கவிதைகள் உட்பட) இருத்தலிய சிக்கல்களே எழுதுவதற்கான மன உந்தத்தை அதிகமும் வழங்கி வருகிறது. ஆனால் மீண்டும் சொல்கிறேன். அதிலிருந்து விடுபடுவதற்கான திமிறல்கள் நிறைந்த இளங்கவிஞர்கள் இருக்கவே செய்கிறார்கள். (என் கவிதை உலகமோ, இசை, நரன், செல்மா பிரியதர்ஸன் போன்றோர் கவிதை உலகமோ வெறும் இருத்தலிய சிக்கல்களால் நிறைந்தது அல்ல அதனாலேயே அவைகள் புதிய சொல்லாடகள் புதிய வடிவம் போன்றவற்றை கொண்டிருக்கிறது என்பதும் உண்மை) நீங்கள் சொல்கிற விஷங்களை பற்றிய புரிதல் நிரம்பிய இளைஞர்கள் தமிழில் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள்.
வணக்கத்துடன்

elango krishnan

அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்

வற்றாத ஊக்கமே கவிஞனை உருவாக்குகிறது. நீங்கள் சோர்வடையவில்லை என்பதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் சொன்ன கருத்துக்கள் விவாதத்துக்காகவே. இன்றைய உலகக் கவிதையின் போக்குகள் குறித்து, இன்று வடிவரீதியாக கவிதை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து என் கட்டுரைகளில் நிறையவே எழுதியிருக்கிறேன். புதிய கவிஞர்களிடமிருந்து எனக்கு எதிர்வினைகளே வந்ததில்லை. சிறு உதாரணம், எம்.டி.வி போன்ற ஓர் காட்சி ஊடகம் படிமங்கள் என்ற வடிவையே ஓர் அன்றாடப்பொருளாக ஆக்கி , மிதமிஞ்சிப் பெருக்கி, அர்த்தமிழக்கச் செய்துவிட்டது. அதற்கு எதிராகவே உலகமெங்கும் வெற்றுக்கவிதை [பிளெயின் பொயட்ரி]என்ற வடிவம் உருவாகி வந்தது. சட்டென்று அதுவும் சலித்து நுண் சித்தரிப்புகளினாலான கவிதை நோக்கி கவிதை நகர்ந்தது… இதைப்பற்றிய கவனமெல்லாம் நம் கவிஞர்களிடம் இருக்கிறதா என்ற ஆழமான ஐயம் என்னிடம் இருக்கிறது..

நான் தொடர்ச்சியாக கவிதை குறித்த உரையாடல் அரங்குகள் நிகழ்த்தியிருக்கிறேந்- அவை விரிவாக பதிவாகியும் உள்ளன. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் இவற்றைப்பற்றிப் பேசலாம்.

என்ன பிரச்சினை என்றால், நம் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் குடித்துவிட்டு பேசுவதையே கவிதைவிவாதம் என நினைக்கிறார்கள். கவிதை குறித்த விவாதம் என்பது மிகுந்த பிரக்ஞைவிழிப்பு நிலையில், பயன்படுத்தப்படும் சொற்களைப்பற்றிய அபாரமான கவனத்துடன் நிகழ்த்தப்பட வேண்டிய ஒன்று. சொல்லப்போனால் ஒருமுழுநாள் பேசிய பிறகே ஒருவர் சொல்ல வருவதென்ன என்று இன்னொருவருக்குப் புரியும். தப்பான ஒரு நபர் இடையே புகுந்துவிட்டால் மொத்த விவாதமும் சீரழியும். அந்நிலையில் ஆரம்பிக்கும்போதே முழுப்போதையில் இருந்தால் என்ன பேச்சு நிகழும்? நான் பல அராங்குகளில்  அந்த கேலிக்கூத்தைக் கண்டிருக்கிறேன். பின்னர் தோன்றியது தங்கள் இயலாமையைத்தான் நம் சில்லறைக் கவிஞர்கள் குடியில் மறைக்கிறார்கள் என…

ஏதேனும் ஒரு தருணத்தில் தெளிவுடன் அமர்ந்து நாம் விவாதிக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஒரு பதிவு
அடுத்த கட்டுரைவடக்குமுகம் [நாடகம்] – 6