‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12

பகுதி மூன்று : இருகூர்வாள் – 2

குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி சாளரத்துக்கு அப்பால் தெரிந்த வானத்தை சிலகணங்கள் நோக்கிவிட்டு மேலே சென்றான். அந்தத் தயக்கத்தைப்பற்றி எண்ணிக்கொண்டதும் அவ்வெண்ணத்தின் விரைவை கால்கள் அடைந்தன.

குந்தியை அவன் பெரும்பாலும் தவிர்த்துவந்தான். அவளை மாதம்தோறும் நிகழும் கொற்றவைப்பூசையன்று மட்டுமே கண்டு வணங்குவான். அரண்மனைக்குச்சென்றது ஆறுமாதம் முன்பு தருமனுடன். அன்று அவள் தருமனுடன் பேசிக்கொண்டே இருந்தாள், அவன் பக்கம் பார்வை திரும்பவேயில்லை. அவன் பார்வை அவளை தொட்டுத்தொட்டு திரும்பியது. அந்த அலைக்கழிப்பை வெல்வதற்கு ஒருவழியை உடனே கண்டுகொண்டு அவன் தருமனை நோக்கத் தொடங்கினான். ஆனால் அவள் தன்னை அகக்கண்ணால் நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்திருந்தான். அவன் உணர்வுகளை அவளும் அறிவாள் என்றும் உணர்ந்திருந்தான்.

அவள் கௌரவர்களைப்பற்றியும் சகுனியைப்பற்றியும்தான் பேசிக்கொண்டிருந்தாள். அவளுக்கு காந்தார அரசியர் ஒரு பொருட்டாக அல்லாமல் ஆகி நெடுநாட்களாகிவிட்டிருந்தன. அவள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தவன் சகுனி. சகுனியின் அரண்மனை முழுக்க அவளுடைய ஒற்றர்கள் இருந்தனர். நூறு தொலைதூரவிழிகளால் அவள் சகுனியை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிருந்தாள். உள்ளூர அத்தனை முக்கியமான ஒருவரை அதன்பின்பு நம்மால் பெயர்சொல்லி குறிப்பிடமுடியாமலாகிறது.

அந்த விந்தையை எண்ணி அர்ஜுனன் புன்னகை செய்துகொண்டான். குந்தி சகுனியை ஓநாய் என்றுதான் சொன்னாள். முதலில் கசப்புடனோ எரிச்சலுடனோ அதைச் சொல்லியிருக்கலாம். ஆனால் மெல்லமெல்ல அச்சொல்லில் அவள் எல்லா அர்த்தங்களையும் ஏற்றிவைத்துவிட்டிருந்தாள். ஓநாயின் தோற்றமும் அசைவுகளும் அதன் கூர்மையும் விரைவும் அனைத்தும் சகுனிக்கு மட்டுமே பொருத்தமானவை என்று ஆயின. பின்னர் அவள் அது என்று அச்சொல்லை மேலும் சுருக்கினாள். “அது சற்று மோப்பம் கண்டுவிட்டது. ஒரு குருதித்துளி. ஓடையில் அது ஒழுகிச்சென்றிருக்கும். அமைதியிழந்துவிட்டது என்று தெரிகிறது… நேற்று அதன் பாதத்தடங்களை அரண்மனைக்குள் பார்த்ததாகச் சொன்னார்கள்” என்றாள்.

ஓடை என்றால் ஒற்றர்கள் என அவன் புரிந்துகொண்டான். அரண்மனை என்றால் திருதராஷ்டிரனின் இடம். புன்னகையுடன் மெல்ல உடலை அசைத்து எவருடன் சதுரங்கமாடுகிறார்கள் இவர்கள், ஒருவருடன் ஒருவர் ஆடுகிறார்களா, இல்லை விதியுடனா என்று எண்ணிக்கொண்டான். அவனுடைய மெல்லிய அசைவுக்கு ஏற்ப உடனே குந்தியின் நகைகளில் ஒலி எழுந்தது. அப்போதுதான் அவள் உடல் தன்னை நோக்கிக்கொண்டிருப்பதை அர்ஜுனன் அறிந்தான். தன் உடல் அவளை நோக்கிக்கொண்டிருப்பதைப்போல. அவன் மேலும் முன்னகர்ந்து கைகளை அசைத்துவைத்தான். அக்கணமே அவள் வளையல்களின் ஒலி எழுவதைக் கேட்டதும் அவன் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அங்கே அமரமுடியவில்லை. மேலிருந்து கூரை விழுந்துவிடும் என உடலின் உணர்வு அறிந்துவிட்டதுபோல பதற்றமாக இருந்தது.

அவளுடைய சொற்களுக்கு அடியில் அவள் அவனிடம் பேசுவதுபோல ஏதோ ஒன்றை அவன் உணர்ந்துகொண்டே இருந்தான். அந்த உரையாடலுக்கு அவள் சொற்களை அளிக்கவில்லை. அது அவள் உடல் வழியாக கசிகிறது. அணிகளின் ஒலிகளில் தன் சொற்களை கண்டுகொள்கிறது. அவன் எழப்போவதுபோல அசைந்ததுமே அவள் உடலின் அணிகள் அமைதியிழந்து ஒலித்தன. உடல் தளர அவன் மீண்டும் அமர்ந்துகொண்டான். அவளும் அவனும் பேசுவதை உணராமல் அவள் உதடுகள் பேசுவதை கூர்ந்து கேட்டு அதற்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தான் தருமன்.

“அவர்களுடைய வலிமை என்பது கரும்பாறை போன்றது தருமா. அது இங்கே இருக்கும் அவர்களின் படை. நம் கருவூலத்தில் இருக்கும் காந்தார நிதி. அதை நாம் எத்தனைமுறை கண்களை மூடிக்கொண்டாலும் மறைக்கமுடியாது. அஸ்தினபுரியின் அத்தனை எதிரிகளுக்கும் தெரியும், காந்தாரமே நம் உண்மையான வல்லமை என்று. ஆகவே அதை வெளியே விட்டு நாம் கதவுகளை மூடிக்கொள்ளவே முடியாது” என்றாள் குந்தி. தருமன் “ஆனால் இங்குள்ள மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்லவா? ஏனென்றால் மேலே தெரியும் அரசுகள் எல்லாம் மரக்கலங்கள் போல. சுமந்துசெல்வது பாரதவர்ஷத்தின் மக்களாகிய கங்கை. அதுதான் முற்றாக முடிவெடுக்கப்போகிறது.”

குந்தி கையை வீசி அதை மறித்தாள். அவள் இதழ்கள் சுழித்தன. “நீ கற்ற நீதிகளால் ஆனதல்ல அதிகாரப்போர். மக்கள் என எவரும் இல்லை. குலங்கள் இருக்கின்றன. குடும்பங்கள் இருக்கின்றன. உதிரிமனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவரும் நீதியை நம்பி வாழவில்லை. அரசாங்கத்தை நம்பி வாழ்கிறார்கள். நீதி என்பது அவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஓர் ஆறுதல் மட்டுமே. மக்கள் நீதியை உள்ளூர நம்புவதுமில்லை. ஆகவேதான் அதைப்பற்றி திரும்பத்திரும்ப பேசிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் குந்தி.

“மக்கள் என்றால் யார்? இங்குள்ள மானுடத்திரள். எளிய உலகியல் ஆசைகளாலும் அச்சங்களாலும் மாறி மாறி அலைக்கழிக்கப்பட்டு வாழ்ந்து முடியும் வெறும் உடல்கள். அவர்களுக்கு வாழ்வது மட்டுமே முக்கியம். இங்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை நீதிகளையும் நாம் அடித்து உடைத்து ஆட்சியைக் கைப்பற்றி ஐந்துவருடம் அவர்கள் மகிழும் ஆட்சியை அளித்தால் நம்மை நீதிமான்கள் என்பார்கள். கணவன் திருடிக்கொண்டுவரும் நகைகளை வேண்டாமென்று சொன்ன எத்தனை பெண்களை நீ அறிந்திருக்கிறாய்? அதைப்போலத்தான் மக்களும். மன்னர்களை படைகொண்டுசென்று பக்கத்து நாடுகளை சூறையாடச்செய்யும் பெரும் விசை எது? மக்களின் ஆசைதான். அப்படி கொன்று குவித்து சூறையாடிக் கொண்டுவந்து மக்களுக்குக் கொடுப்பவனையே மக்கள் மாமன்னன் என்று புகழ்கிறார்கள் என்றுதான் நீ கற்ற நூல்களும் சொல்லியிருக்கும்.”

“அப்படியென்றால் எந்த நீதியும் வேண்டாமா? வாள் எதையும் செய்யலாமா?” என்று தருமன் சினத்துடன் கேட்டான். “போதும். ஆனால் வாளுக்குமேல் ஒரு வெண்பட்டுத்துணி மூடியிருக்கவேண்டும். அதைத்தான் நீதி என்கிறோம்” என்றாள் குந்தி. அவள் முகத்தை அனிச்சையாக ஏறிட்டு நோக்கிய அர்ஜுனன் அங்கே திகழ்ந்த அழகிய புன்னகையைக் கண்டு மனம் மலர்ந்தான். எச்சரிக்கைகளை இழந்து அவளுடைய விரிந்த செவ்விதழ்களையும் மிடுக்குடன் நிமிர்ந்த முகத்தையும் நோக்கிக் கொண்டிருந்தான்.

ஒருகணம் அவனை வந்து நோக்கிய குந்தியின் முகம் சிவந்தது. விழிகளை விலக்கி உடனே திரும்பி நோக்கினாள். கண்களுக்குள் மலைச்சுனையில் வெயில்போல ஒளி நிறைந்திருந்தது. “என்ன நினைக்கிறாய் பார்த்தா?” என்று கேட்டாள். அக்கேள்வியை எதிர்பாராத அர்ஜுனன் உடல் விதிர்த்து ‘இல்லை’ என தலையசைத்தான். “அவன் என்ன நினைக்கப்போகிறான்? வில்லெடுத்தால் வெற்றி என்றுதானே கற்றிருக்கிறான்?” என்று தருமன் சொன்னான்.

அர்ஜுனன் “இல்லை மூத்தவரே. சாதாரணமாகப் பார்த்தால் அன்னை சொல்வது சரி. மக்கள் நீதியை நம்பிவாழவில்லை. ஆனால் அவர்கள் நீதிமான்களை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். நாம் அறம் மீறி இவ்வரியணையை வென்று மக்களுக்கு தீனிபோட்டு நிறைவடையச் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நீதிமான் எழுந்து நம்மை நோக்கி கைநீட்டினால் மக்களுக்கு இரு தேர்வுகள் வந்துவிடுகின்றன. நாமா அவரா என. அவர்கள் ஒற்றைப்பெருந்திரளாக அந்த நீதிமானை நோக்கிச் சென்றுவிடுவார்கள். நாம் உலர்ந்த மரம் போல ஒடிக்கப்படுவோம்” என்றான்.

“இல்லை…” என சொல்லவந்த குந்தியை நோக்கி கைநீட்டி உரக்க “அன்னையே, உங்கள் விழைவு ஒருபோதும் உலக நெறியாக ஆகாது” என்றான். “என் விழைவா? இந்த எளிய மானுடக்கூட்டமா நம்மை எதிர்க்கப்போகிறது?” என்றாள் குந்தி. “அன்னையே, மக்கள் தங்களை நீதிமான்களென நம்பவே விழைவார்கள். ஆகவே நீதிமானை கைவிட அவர்களால் முடியாது. அத்துடன் அவர்களின் உள்ளம் ஒருகணத்தில் எது வலிமையான தரப்பு என்றும் உணர்ந்துகொள்ளும். அறம்பிழைத்த நாம் கொள்ளும் குற்றவுணர்வையும் அறவோனிடமிருக்கும் நிமிர்வையும் அவர்கள் கண்டுகொள்வார்கள். அக்கணமே அவனை நோக்கிச் செல்வார்கள்… பெருந்திரளாக ஆகும்போது மக்களுக்கு வரும் ஆற்றலுக்கு அளவே இல்லை. பெருந்திரளாக இருக்கிறோமென்ற உணர்வு அளிக்கும் துணிவே அவர்களை மாவீரர்களாக ஆக்கும்…” என்றான் அர்ஜுனன்.

தொடர்ந்து “நாம் மக்களை அஞ்சவேண்டியதில்லை. ஆனால் அவர்களில் இருந்து திடீரென எழுந்துவரும் ஓர் அறவோனை அஞ்சியே ஆகவேண்டும்” என்றான். தருமன் முகம் மலர்ந்து “நன்று சொன்னாய் தம்பி” என்றான். குந்தியின் முகம் ரத்தம் கலங்கிச் சிவந்தது. கண்களில் நீர்படர காதுகள் அனலடித்தவைபோல தெரிந்தன. “இதெல்லாம் இளவயதின் வெட்டிப்பேச்சு” என அவள் தொடங்கியதுமே அர்ஜுனன் “அன்னையே, இதை பெண்கள் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே அந்தப்புரம் அரியணையை ஆட்டிவைக்கலாகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது” என்றான்.

அதைச் சொன்னதுமே அவன் அகம் அச்சொற்களை உணர்ந்து நடுங்கியது. மறுகணம் பெரும் களிப்பொன்று அவன் உடலெங்கும் பொங்கி நிறைந்து விரல்நுனிகளை அதிரச் செய்தது. குந்தி செயலற்று சிலகணங்கள் அமர்ந்துவிட்டு “என்ன சொல்கிறாய்?” என கிசுகிசுத்தாள். தருமன் “பார்த்தா, நீ சொன்னது பிழை. தேவயானி முதல் சத்யவதி வரை பேரரசியர் ஆண்ட அரியணை நம்முடையது” என்றான். “ஆம்” என்று சொல்லி எழுந்துகொண்டான் அர்ஜுனன். “முற்றிலும் பிழையாக ஆண்டனர். சின்னஞ்சிறு காரணங்களால் பெரிய முடிவுகளை எடுத்தனர். உடனடியான தீர்வுகளை மட்டுமே கண்டடைந்தனர். அவை ஒவ்வொன்றும் தொலைதூரத் தவறுகளாக ஆயின” என்றான்.

“நீ என்னை அவமதிக்க எண்ணினால் அவ்வாறே ஆகுக” என்றாள் குந்தி. அவள் குரலில் இருந்த நடுக்கத்தைக் கேட்டு அவன் உள்ளம் பரவசம் கொண்டது. “இல்லை அன்னையே. நீங்கள் என் அன்னை. என் அரசி. நான் வழிபடும் தெய்வமும் கூட. ஆகவேதான் உங்களிடம் நான் அறிந்த உண்மையைச் சொன்னேன்” என்று அர்ஜுனன் சொன்னான். குந்தி மெல்ல நகைத்தாள். அந்த நகைப்பு வழியாக அவள் அந்தத் தருணத்தை கடந்துசென்றாள். “உன் அறிதல் உன்னுடன் இருந்து வழிகாட்டட்டும்” என்றாள். அச்சொற்களில் இருந்தது எள்ளலா எச்சரிக்கையா என அவன் எண்ணியதுமே அதுவரை கொண்டிருந்த மிடுக்கை இழந்தான்.

மேலும் சற்றுநேரம் பேசிவிட்டு அவர்கள் திரும்புகையில் தருமன் “பார்த்தா, நீ சொன்னது முற்றிலும் உண்மை” என்றான். “ஆண்கள் அதிகாரத்தை நாடுவது விதைகள் நீரை நாடுவதுபோல. பெண்கள் நாடுவது குறைகுடம் நீரை நாடுவதுபோல.” அர்ஜுனன் மெல்லிய நிந்தையுடன், இதோ இன்னொரு சொற்றொடரைப்பிடித்துவிட்டார் என நினைத்துக்கொண்டான்.

“நான் நூல்களைப் பார்த்துவிட்டேன். மாபெரும் அரசியர் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெண் என்பதனாலேயே அவர்களை ஒருவகை பாதுகாப்பின்மை சூழ்ந்திருக்கிறது. தாழ்வுணர்ச்சி வாட்டுகிறது. ஆகவே அதிகாரத்தை மிகையாக நாடுகிறார்கள். அதில் கூச்சமில்லாமல் திளைக்கிறார்கள். சத்யவதிதேவி அவையில் அமைச்சர்கள் அவரை மிகையாகப் புகழ்ந்து வாழ்த்துவதை மலர்ந்த முகத்துடன் நோக்கியிருப்பார் என்றார் விதுரர். பேரரசியிடம் பேசும்போது புகழ்மொழிகளை எந்த அளவுக்குச் சொல்கிறோமோ அந்த அளவுக்கு அவரது ஆதரவு இருக்குமென அனைவரும் அறிந்திருந்ததனால் இரவுபகலாக அவரைச்சுற்றி புகழ்மொழிகள் ஒலிக்குமாம்” தருமன் சொன்னான்.

“எந்த மறுகருத்தையும் அவர் ஏற்றுக்கொண்டதில்லை. பிதாமகர் பீஷ்மரோ நம் பாட்டனார் விசித்திர வீரியரோகூட அவரை எதிர்த்துப்பேசியதில்லை. ஆணைகளிடுவதையே ஆட்சி என நினைத்திருந்தார். இந்த அஸ்தினபுரியின் அத்தனை இக்கட்டுகளையும் மெல்லமெல்ல உருவாக்கினார். அவர் மிகப்பெரிதாக கனவுகள் கண்டார். ஆனால் அவரது காலம் அவரது கண்ணுக்கு முன்னால் மட்டும் உள்ளதாகவே இருந்தது.” தருமன் சொன்னபோது திடீரென்று தான் குந்தியிடம் சொன்னவற்றிலிருந்து விலகிவிடவேண்டுமென அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.

குந்தியின் அவை முன் நின்றிருந்த சேடி வணங்கி “தங்களுக்காகக் காத்திருக்கிறார்” என்றாள். மேலாடையை சரிசெய்து தலையை சற்று தூக்கி அர்ஜுனன் உள்ளே சென்றான். அவள் உள்ளே சென்று அவன் வரவை முறைப்படி சொல்கோர்த்து அறிவித்துவிட்டு வந்து “உள்ளே” என்றாள். உள்ளே நுழைந்த அர்ஜுனன் “அஸ்தினபுரியின் அரசிக்கு வணக்கம்” என்றான். “வாழ்க” என்று சொன்ன குந்தி அமரும்படி கைகாட்டினாள். அவன் அமர்ந்துகொண்டான். குந்திக்குப்பின் சாளரத்திரைச்சீலை நெளிந்தாடிக்கொண்டே இருந்தது. நறுமணத்துக்காக உள்ளே வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணதுளசிச்செடிகளின் இலைகளில் நீர் துளித்து நிற்பதை அர்ஜுனன் நோக்கினான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“மார்த்திகாவதியில் இருந்து செய்தி வந்துள்ளது” என்றாள் குந்தி. அர்ஜுனன் நிமிர்ந்தான். “அரசர் குந்திபோஜர் இறுதிப்படுக்கையில் இருக்கிறார். என்னைப் பார்க்கவேண்டுமென விழைகிறார்.” அர்ஜுனன் “உடனே பயண முறைமைகளைச் செய்கிறேன்” என்றான். “இல்லை, முழுநிலவுநாள் கடக்காமல் நான் செல்லமுடியாது” என்றாள் குந்தி. அர்ஜுனன் நிமிர்ந்து நோக்கினான். “இந்த முழுநிலவுநாளில் அறிவித்தாகவேண்டும், அஸ்தினபுரியின் இளவரசன் யாரென்று. அதை முடிவுசெய்யாமல் நான் இங்கிருந்து கிளம்பமுடியாது” என்றாள்.

“ஆனால் அவர் உங்கள் தந்தை” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் நான் சதசிருங்கத்தில் இருந்திருந்தால் வந்துசேர்வதற்கே அத்தனை நாட்களாகியிருக்கும் அல்லவா?” என்று சொன்னாள். ஒருகணம் அவள் கண்களைச் சந்தித்து விழிதிருப்பிய அர்ஜுனன், இது என்ன தர்க்கம் என நினைத்துக்கொண்டான். “இந்தத் தருணத்தில் நான் இங்கு இல்லாமலிருப்பது என் மைந்தனைக் கைவிடுவது. அதை நான் செய்யப்போவதில்லை… முழுநிலவு அறிவிப்பு நிகழ்ந்ததும் மறுநாள் கிளம்பிவிடுவேன்.”

“ஆனால் இன்னும் ஒன்பதுநாட்கள் உள்ளன” என்றான் அர்ஜுனன். “ஆம், ஒன்பதுநாட்கள்…” என்ற குந்தி குரலைத் தாழ்த்தி “மூன்றுநாட்களுக்குமேல் உயிர்வாழ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள் என்று செய்திவந்தது. உடனே வரவேண்டுமென்று மீண்டும் அமைச்சர் செய்தி அனுப்பினார். அதன்பின் அரசி தேவவதியே செய்தியனுப்பினார். என்ன ஒரு இக்கட்டு” என்றாள். தலையை அசைத்துக்கொண்டு “ஒரு பெரிய இலக்கை நாம் குறிவைக்கையில் எல்லா பக்கங்களில் இருந்தும் இடர்கள் எழுகின்றன. எதிரிகள் மட்டுமல்ல, வேண்டியவர்களும் எதிர்க்கிறார்கள். அத்துடன் இயற்கையும் இணைந்துகொள்கிறது.”

அர்ஜுனன் அவள் விழிகளை நோக்கி மீண்டும் முகம் தூக்கினான். நம்பித்தான் சொல்கிறாளா என்று எண்ணியவன் அவை குழந்தைகளின் விழிகள் போல தெளிந்திருப்பதைக் கண்டான். “நம்மால் அது முடிகிறதா என்று இயற்கையை ஆட்டிவைக்கும் பேராற்றல் எண்ணுகிறது. நம் தகுதியை நாம் நிறுவவேண்டுமென எதிர்பார்க்கிறது” என்றாள். “இத்தருணம் அதுவே. பார்ப்போம். நான் முழுநிலவுக்கு மறுநாள் இங்கிருந்து அரசஅன்னையாக சத்ரமும் சாமரமும் கொண்டு மார்த்திகாவதிக்கு கிளம்புவேன். அது யாதவர்குலத்துக்கும் பெருமைதானே?”

“ஆம்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, நாம் யாதவர்கள். தந்தைவழியில்தான் இங்கே குலமுறை பார்க்கப்படுகிறது. தந்தைவழியே நதி. அன்னையர் அதில்வந்துசேரும் ஓடைகள் என்று குலநீதி. ஆனால் எப்போதேனும் குலத்தூய்மை பற்றிய கணிதம் வந்தால் உடனே தாய் யார் என்ற வினாவே எழுகிறது. இந்த அஸ்தினபுரியின் குலம்தான் என்ன? அசுர இளவரசி சர்மிஷ்டையின் குருதி அல்லவா இது? அசுர குருவின் மகள் தேவயானி அமர்ந்த அரியணை அல்லவா? மச்சர்குலத்து சத்யவதியின் மைந்தர்களின் உதிர வரி.”

அவள் செல்வதெங்கே என அர்ஜுனன் அறிந்திருந்தான். “ஆனால், இப்போது ஒப்பீட்டில் நம்மைவிட கௌரவர் மேலானவர்களாகிவிட்டார்கள். அவர்கள் ஷத்ரியரான திருதராஷ்டிரருக்கும் ஷத்ரியப் பெண்ணாகிய காந்தாரிக்கும் பிறந்தவர்களாம். நீங்கள் யாதவப்பெண்ணாகிய என் வயிற்றில் பிறந்தவர்களாம். குலக்கலப்பு நிகழ்ந்து மூன்று தலைமுறைக்காலம் ஆனால் அது மறைந்துவிடும் என்று அதற்கு யமஸ்மிருதி விலக்கு கொடுக்கிறதாம். அதைச் சொல்லும் வைதிகர்கள் ஆயிரக்கணக்கில் நம் நாட்டின் கிராமங்கள் தோறும் சென்றிருக்கிறார்கள். கங்காவர்த்தமெங்கும் அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார்கள்.”

குந்தியின் குரல் சீற்றத்துடன் ஓங்கியது. “பாரதவர்ஷம் அதை மெல்லமெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டது. முன்னர் தருமன் சொன்னானே, பாரதவர்ஷத்தின் மக்கள்திரள் கங்கை என்று. ஆம், கங்கைதான். நூற்றுக்கணக்கான மலைகளில் இருந்து வழிந்தோடி ஒன்றாகிச்சேர்ந்த நதி அது. எக்கணமும் கரையுடைத்து மீண்டும் கிளைகளாகப்பிரியத் துடிப்பது. பல்லாயிரமாண்டு காலமாக பல்லாயிரம் தொல்குடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான பெருந்திரள் இது. இப்பெருந்திரளுக்குள் ஒவ்வொரு குலமும் தன் அடையாளத்துடன் தனித்திருக்கவும் செய்கிறது. பிறரை ஐயத்துடன் நோக்கிக்கொண்டிருக்கிறது.”

“இந்த மக்கள் நீதியை அல்ல, குலத்தைப்பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதையும் நூறாயிரம் முறை விளக்கிச் சொல்லவேண்டும். குலப்பிரிவினையை மட்டும் கோடிகாட்டினாலே போதும். இதோ வெறும் இரண்டு மாதங்களில் நம் நாடெங்கும் என்னை இளைய அரசி என்பதற்குப் பதில் யாதவ அரசி என்று சொல்லத் தொடங்கிவிட்டனர். உங்களை பாண்டவர் என்பதற்குப்பதில் யாதவ இளவரசர் என்று சொல்கிறார்கள். அச்சொல் இனி அவர்களிடம் இருக்கும். அதை நம்மால் கரைத்தழிக்கவே முடியாது” குந்தி சொன்னாள். “நீ அன்று சொன்னாயே, ஆண்களின் அரசநோக்கு என்று. அதைக்கொண்டு அவர்களை வேறுவகையில் சொல்ல வை பார்ப்போம்!”

அவள் அச்சொல்லை மறக்கவில்லை என்பது அர்ஜுனனை புன்னகை நோக்கி கொண்டுசென்றது. அப்புன்னகையை உணர்ந்ததுமே குந்தி எச்சரிக்கை அடைந்தாள். அதை சொல்லியிருக்கலாகாது என அவள் உணர்வதை உணர்ந்ததும் அவன் தலைதூக்கி அவள் கண்களை நோக்கி “அன்னையே, அவ்வாறு அவர்கள் எண்ணுவதை ஓர் அறைகூவலாகவே எண்ணுகிறேன். நாங்கள் உண்மையான ஷத்ரியர் என அவர்களை எண்ணவைக்க என்னால் முடியும்” என்றான்.

அதுவே அப்போதைக்கு சரியான பதில் என உணர்ந்ததும் அவள் முகம் சிவந்தது. கண்களில் சீற்றம் மின்ன “எப்படி? வெற்றியின் வழியாகவா? துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி நீ கொண்டுவந்தபின்னர்தான் இந்தப் பேச்சு மேலும் வலுப்படுத்தப்பட்டது, தெரியுமா?” என்றாள். அவள் சீற்றம் அவனை உடலெங்கும் பரவிய உவகையை நோக்கி கொண்டுசென்றது. “ஆம், அதைப் பரப்புபவர்கள் அளிப்பதும் பெரிய அறைகூவலே. அறைகூவல்கள் வழியாகவே ஷத்ரியன் உருவாகிறான்” என்றான்.

அவள் தலையை சற்று திருப்ப அவள் முடியை மறைத்திருந்த வெண்பட்டாடை சரிந்தது. அவளுடைய வெண்ணிற ஒளிகொண்ட முகத்தையும் கருங்குழலையும் நோக்கி அவன் ஒருகணம் எத்தனை பேரழகி என்றுதான் எண்ணிக்கொண்டான். அந்தச் சொற்களில்லாமல் அவளை நோக்கவே முடிந்ததில்லை. பின்னர் தோன்றியது, அவ்வழகை அவள் அறிந்திருக்கிறாள் என்பதனால்தான் அரியணையை விரும்புகிறாள் என்று. மறுகணம் அவன் கர்ணனை நினைத்துக்கொண்டான். எத்தனை பேரழகன் என எண்ணாமல் அவனையும் நினைத்துக்கொண்டதில்லை. அவனும்தான் அரசை விரும்பலாம். அதற்கான தகுதி உடையவன் அவன்.

அந்த எண்ணத்தின் தொடர்ச்சி போல குந்தி சொன்னாள். “தேரோட்டி மைந்தனை அவன் வீரத்துக்காக ஷத்ரியன் என எண்ணுகிறார்களா என்ன?” அர்ஜுனன் ஒருகணம் நடுங்கி தன் குளிர்ந்து அதிர்ந்த கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். நெஞ்சின் ஓசை அடங்க நெடுநேரமாகியது. அவன் அகத்துக்கு அத்தனை அண்மையில் அவள் நிற்கிறாள். மறுகணம் அவள் அகத்திற்கும் அவனால் செல்லமுடிகிறது என்று கண்டான். அவனை வெல்ல கர்ணனைப்பற்றி பேசவேண்டுமென அறிந்திருக்கிறாள்.

“தேரோட்டிமைந்தனை விட நீ வீரன் என்று இன்னும் நிறுவப்படவில்லை பார்த்தா. அதுவரை கௌரவர்கள் அடங்கமாட்டார்கள்” என்று குந்தி சொன்னாள். அவள் சிவந்த இதழ்கள் மெல்ல வளைந்து விஷம் ததும்பும் புன்னகையாக மாறின. “அவன் உன்னைவிட வீரன் என்று சொல்பவர்களே அவன் குலத்தை எண்ணி அரசனாக ஏற்கவும் மறுக்கிறார்கள். அங்கநாட்டுக்கு அரசனாகிவிட்டான். ஆனால் இன்னும் அஸ்தினபுரியிலேயே அமர்ந்திருக்கிறான். அங்கே ஒரு ஷத்ரியத்தளபதிதான் நாடாள்கிறான்” என்றாள்.

அர்ஜுனன் அவள் விழிகளை சந்திக்காமல் திரும்பிக்கொண்டு “நான் ஒன்றை மட்டும் சொல்லவே வந்தேன் அன்னையே. நம் மூத்தவர் முடிசூடவேண்டும். அதற்காக தங்களுடன் வில்லேந்தி நிற்க நான் சித்தம். ஆனால்…” குந்தி கையசைத்து “நான் அதை அறிவேன். அதை தருமன் தூதனிடம் சொல்லி அனுப்பியிருந்தான். அது முடியாது. அவன் மன்னனாகப் பிறந்தவன். அதற்காகவே நான் அவனைக் கருவுற்றேன். மன்னனாக முடியாதென்றால் அவன் இறப்பதே மேல் என நினைப்பேன்.”

“அவர்…” என்று அவன் சொல்லத்தொடங்குவதற்குள் அவள் மேலும் முந்திக்கொண்டு “ஆம், அவன் வாளை கழுத்தில் பாய்ச்சுவதாகச் சொன்னான். செய்யட்டும். நான் அதன்பின் எதையும் எண்ணமாட்டேன். நான் சஞ்சலங்களற்ற பீமனை மட்டுமே நம்பியிருக்கிறேன். அக்கணமே அவனை அனுப்பி துரியோதனனையும் அவன் கூட்டத்தையும் கொன்றுவிட்டு இவ்வரசை கைப்பற்றுவேன். தார்மீகம் தோற்றுவிட்டால் பைசாசிக வழிமுறைகளை ஷத்ரியர் கடைப்பிடிக்கலாம் என்கிறது லகிமாதேவியின் விவாதசந்திரம்” என்றாள். மெல்லிய குரலில் நகைத்து “அது பெண் அமைத்த ஸ்மிருதி. அவளுக்குத்தெரியும் எது அரசின் அடிப்படை என்று” என்றாள்.

அர்ஜுனன் உடல் முழுக்கத் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான். “நீ என்ன சொல்கிறாய்? உன் வில் உடன் வருமா?” என்றாள் குந்தி. “அன்னையே, நான் என்றும் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டவன்” என்றான். “உன் தமையனிடம் சொல். அவன் அஸ்தினபுரியை ஆளாமல் இம்மண்ணில் வாழமுடியாதென்று. பாண்டவர்கள் பைசாசிக வழியில் செல்லாமல் தடுக்கவேண்டுமென்றால் அவன் உயிர்வாழ்ந்தே ஆகவேண்டும் என்று” என்றபின் குந்தி அவனை நோக்கி “தேரோட்டிமைந்தனை நீ அஞ்சவேண்டியதில்லை. அவன் இந்தப்போருக்குள் நுழைய மாட்டான்” என்றாள்.

“ஏன்?” என்று அர்ஜுனன் விழிதூக்கினான். “அவன் வரமுடியாது” என்ற குந்தி சரிந்த ஆடையை மீண்டும் தலையில் இழுத்துவிட்டாள். “அவனை எப்படி தடுப்பதென நான் அறிவேன். பீமன் மூத்த கௌரவனைக் கொல்வான். நீ பிதாமகரை வென்றால் போதும். அதன்பின்…” என்ற குந்தி உச்சகட்ட வெறுப்புடன் உதட்டைச் சுழித்து “ஓநாயை நீ கொல்லவேண்டும்” என்றாள்.

அர்ஜுனன் அவளுடைய வியர்வை அரும்பிய முகத்தை நோக்கினான். அந்தக்குரோதத்தில் அவள் மீண்டும் எளிய பெண்ணாக, சிறுமியாக ஆகிவிட்டதை உணர்ந்தான். புன்னகை அரும்பிய மனத்துடன் முகத்தை திடமாக வைத்துக்கொண்டு “அப்படியென்றால் நாம் திருதராஷ்டிரரை கொல்லவேண்டியிருக்கும்” என்றான். “ஆம். பைசாசிகப்போர் என்றால் அங்கே பிசாசின் நெறி மட்டுமே உள்ளது” என்றாள். “அதை விதுரர் ஏற்பாரா?” என்றான் அர்ஜுனன்.

குந்தி அவளை நோக்கி அவன் எதையோ விட்டெறிய அதை பிடிக்கத்தவறியவள் போல தடுமாறி “விதுரரா?” என்றாள். உடனே அவள் முகம் நெய்விழுந்த அனலாகச் சிவந்தெழுந்தது. “அவர் என்ன நினைத்தால் என்ன?” என மெல்லிய குரலில் சொன்னாள். “இல்லை, அவர் நம் தந்தையருக்கு நிகரானவர்” என்றான் அர்ஜுனன். “சூதர், வெறும் அமைச்சர். அவருக்கு இதில் என்ன?” என்று உரத்த உடைந்த குரலில் சொன்னாள் குந்தி. “இல்லை அன்னையே, எண்ணிக்கொண்டேன்” என்றான் அர்ஜுனன். “அவர் நம் நட்புத்தரப்பா என உறுதிசெய்யவேண்டுமே என்பதற்காகச் சொன்னேன்.”

“உம்” என்று சொல்லி பெருமூச்சுடன் தளர்ந்தாள் குந்தி. அவள் கண்களைப்பாராமல் “நான் தமையனாரிடம் சொல்கிறேன் அன்னையே. தாங்கள் ஆணையிடுகையில் என் வில் துணையிருக்கும்” என்று எழுந்துகொண்டான். அவள் “ம்” என மீண்டும் சொன்னாள். “விடைகொடுங்கள்” என்றான் அர்ஜுனன். “அவ்வாறே ஆகுக” என்று அவள் கைகாட்டினாள். அர்ஜுனன் அவள் கால்களைத் தொட்டு வணங்க தலைதொட்டு ஆசியளித்தாள்.

திரும்பி நடக்கும்போது அர்ஜுனன் அவள் அணிகளின் ஒலிக்காக முதுகில் செவிகளை வைத்திருந்தான். அவன் கூடத்தை விட்டு விலகி வெளியே செல்லும்வரை அவை ஒலிக்கவேயில்லை. அவன் வெளிவந்து நீண்ட இடைநாழியில் நின்றபோது அதுவரை இறுகியிருந்தவை போல தோள்கள் தொய்ந்தன. மொத்த எடையும் குதிகால்களை அழுத்தியது. கண்கள் கூசுவதுபோலவும் தாகம் எடுப்பதுபோலவும் உணர்ந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும் கடிதங்களும்

முந்தைய கட்டுரைஅப்பாவுக்கு மூன்று கவிதைகள்
அடுத்த கட்டுரைஏழாம் உலகம்- கடிதம்