பாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்

பாபனாசம் படப்பிடிப்பு நேற்று [26-10-2014] முடிந்தது. தொடுபுழாவிலிருந்து நானும் சுகாவும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் திரும்பினோம். காலையில் வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து உடனே அடுத்த வேலைக்குச் செல்லமுடியவில்லை. ஒரு சினிமாப்படப்பிடிப்பு முடிவது நிறைவும் துயரமும் கலந்த அனுபவம்.

சினிமாப்படப்பிடிப்பில் உள்ள கொண்டாட்டத்தை சினிமாவுக்கு வெளியே உள்ளவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. ஓர் அரசு அலுவலகத்துடனோ வணிகநிறுவனத்துடனோ அதை ஒப்பிட்டால் அந்த வேறுபாடு திகைக்கவைக்கும். சினிமாவில் டீ பரிமாறுபவர் முதல் அனைவருமே சினிமா மேல் பெருங்காதலுடன் இருப்பவர்கள். சினிமாவை கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். அதில் பங்கெடுக்க விழைபவர்கள். ஆகவே ஒவ்வொரு கணமும் துடிப்புடன் அதில் ஈடுபட்டிருப்பார்கள். [சினிமா போல அத்தனை அற்புதமான கூட்டு உழைப்பு இருந்தால் பி.எஸ்.என்.எல் ஊழியர்களில் 70 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்று பலமுறை தோன்றியிருக்கிறது]

unnamed (1)

சினிமாவில் ஈடுபடுபவர்களில் மிகச்சிலர் தவிர பெரும்பாலானவர்கள் கலைஞர்கள். தச்சர்கள் ,சிகைதிருத்துநர்கள் முதல் அனைவருமே வெவ்வேறுவகையில் கலைஞர்கள். கலைமனம் கொண்ட இத்தனைபேர் ஒரே இடத்தில் கூடும் இன்னொரு தருணம் நம் கலாச்சாரத்தில் இன்று இல்லை. கலைஞர்களின் மனமே தனி. அவர்கள் கலையை கொண்டாடுபவர்கள். கூடவே வாழ்க்கையையையும் கொண்டாடுபவர்கள்.

ஆகவே வெட்டி லௌகீகப்பேச்சுகளை சினிமாச்சூழலில் நான் கண்டதே இல்லை. சிரிப்பு கொண்டாட்டம் என்றுதான் சினிமாக்காரர்களின் ஜமா எப்போதுமே இருக்கும். சினிமாவின் மிகப்பெரிய கவர்ச்சியாக நான் காண்பதே இதைத்தான். ஆச்சரியமான ஒருவிஷயம் உண்டு, சினிமாவுக்கு வெளியே நம்மூர் ரசிகர்கள் எந்த சினிமா எவ்வளவு வசூல் செய்தது, எந்த ஹீரோவுக்கு எவ்வளவு சம்பளம் என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்கள். சினிமாவுக்குள் அதைப்போல மொக்கைப்பேச்சே வேறில்லை.

சினிமாவுக்குள் முதன்மையான பேச்சு என்றால் கிண்டல்தான். அதில் தமிழ்ப்பண்பாடு குறைவாகவே பேணப்படும். அடுத்தபடியாக பழைய நினைவுகள். நுணுக்கமான தொழில்நுட்பத்தகவலக்ள் முதல் ஆளுமைகளின் குணச்சித்திரங்கள் வரை பேசப்படும். ஒரு புதிய தொழில்நுட்பம் வந்ததும் அதை எப்படி ஒருவர் புதியதாகப் பயன்படுத்தினார் என்பது எப்போதும் ஒருவகை சிலிர்ப்புடன் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும்.. கங்கா காவேரி படத்தில் பனைமரத்தில் காமிராவை கட்டி ஷாட் வைத்த கர்ணன் முதல் விடிவெள்ளியில் தீயை படம்பிடித்த வின்செண்ட் மாஸ்டர் வரை. அந்தப்பேச்சுகள் தமிழ் சினிமா என்ற இந்த வணிக- கேளிக்கை கலையின் உள்ளடுக்குகள் உருவாகிவந்த வரலாற்றைச் சொல்பவை. சினிமாவின் நாயகர்களின் ஆளுமைமோதல்களும் விசித்திரங்களும் பேசப்படும்.

இவற்றில் ஒரு சதவீதம் கூட அச்சில் வந்ததில்லை. சினிமாவுக்கு வெளியே பேசப்பட்டதில்லை. பேசலாகாது என்பது ஓர் எளிமையான அடிப்படை விதி. ஏனென்றால் நாடகக்காலம் முதல் கலைஞர்கள் தங்களை சமூகத்திற்கு வெளியே தான் வைத்திருக்கிறார்கள். மக்கள் என்று அவர்கள் சொல்வது அவர்கள் இல்லாத ஒரு தமிழகத்தை. அவர்களுக்கும் சினிமாவுக்கும் நேரடி தொடர்பே இல்லை. அந்த மர்மமே கிசுகிசுக்களாக தமிழ்ச் சமூகத்தில் உலவுகிறது.

ஆச்சரியம்தான், தமிழ்ச்சமூகம் சினிமாவைப்பற்றி மட்டுமே முதன்மை ஆர்வ்ம் கொண்டிருக்கிறது. ஆனால் டீக்கடைக் கிசுகிசுப்பேச்சாளர் முதல் வணிகசினிமாவை கரைத்துக்குடித்து அலசும் அறிவுஜீவி வரை எவருக்கும் தமிழ்சினிமாவைப்பற்றி அனேகமாக ஒன்றுமே தெரியாது!

unnamed

தமிழ் சினிமாவுலகம் உண்மையில் சிரித்துக்கொண்டே இருக்கிறது என எப்போதும் நினைப்பேன். தமிழ் அரசியலை, பண்பாட்டை, அறிவுஜீவிகளை தமிழ் சினிமா உலகம் பகடிசெய்துகொண்டே இருக்கிறது. வணிக சினிமாவை மிகமிக அதிகமாக கிண்டல்செய்வது சினிமாக்காரர்கள்தான். அப்படி பேசப்பட்ட சில பகடிகள் சினிமாவுக்குள்ளும் வந்துள்ளன. எப்படியும் ஒருலட்சம் நகைச்சுவைகளாவது இருக்கும். நாட்கணக்கில் ஒவ்வொரு நிமிடமும் சிரித்தால் தீராது.

சினிமாக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு உயர்ந்த இலக்கிய ரசனை உண்டு, நல்ல சினிமா தெரியும். ஆனால் தமிழ் ரசனையின் ஒரு சரியான சராசரியை தொடுவதே அவர்களுடைய சவால். அதற்காகவே முயல்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியை இடைவெளியில்லாமல் பகடி செய்துகொண்டும் இருப்பார்கள்

நேற்று முன் தினம் அரங்கசாமியும் கிருஷ்ணனும் தொடுபுழா வந்தனர். கமல் இருந்தார். உச்சகட்டக் காட்சிப் படப்பிடிப்பு. இரண்டுநாள் முழுநேரச் சிரிப்பு மட்டுமே. கமல் விதவிதமாக நடித்துக்கொண்டே இருந்தார். நாம் கண்டுமறந்த மனிதர்கள் மட்டுமல்ல எழுபது எண்பதுகளின் ஒரு வாழ்க்கைத்தருணமே ஒரு மனித உடல் வழியாக உருவாகி வருவது கலையின் ஒரு அற்புதம்தான்.

எழுத்தாளர் சுகாவின் நகைச்சுவை ஒருவகை என்றால் கமல் இன்னொருவகை. சுகா நெல்லைக்கே உரிய சொல்லாட்சிகள் மூலம் விதவிதமான மனிதர்களை உருவாக்குகிறார். கமல் உடல் வழியாக. எழுபதுகளின் ஒரு கேரளக்கள்ளுக்கடையில் இருந்த அத்தனைபேரும் ஒரு உடலில் ஒரே சமயம் தெரிந்துசெல்வதை கண்டபோது கலைதொட்ட ஒன்று அழிவற்றதாகிறது என்றும் நினைத்துக்கொண்டேன்

சுகா
சுகா

சிரித்து கண்சிவந்து மூச்சுத்திணறிய அரங்கா மனமுடைந்து ‘இதேமாதிரி வேடிக்கையும் வெளையாட்டுமா வேற ஒரு தொழிலே இல்லியே சார்’ என்றார். எப்படி இருக்கமுடியும் என எண்ணிக்கொண்டேன்.காரவானுக்குள் கமலுடன் பேசிக்கொண்டிருந்து விடைபெறும் தன் படத்தைப்பார்த்துக்கொண்டு ’இப்டி சிரிச்சாப்ல ஒரு படமே எங்கிட்ட இல்ல சார்’ என்றார்

கடைசிநாள் கேலியில் ஒரு வருத்தம் கலந்தது. கூட்டுப்புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். விதவிதமான கூட்டு ‘செல்ஃபி’க்கள் [இதற்கு இன்னும் இணையதமிழ் உருவாகவில்லையா?] அத்தனை பேரும் மாறிமாறி கமலுடன புகைப்படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தனர்.‘இவங்கள்ளாம் இவரைப்பாத்துகிட்டேதானே இருக்காங்க?’ என்றார் கிருஷ்ணன். ‘அவர்கள் பார்ப்பது நட்சத்திரமான கமலை அல்ல. உற்சாகமே உருவான ஒரு சக சினிமாக்காரரை. அவர்களுக்கு அவர் மேல் இருக்கும் மோகம் அந்த உயிர்த்துடிப்பு காரணமாகவே’ என்றேன்.

இயக்குநர் ஒளிப்பதிவாளர் என மாறி மாறி படம் எடுத்துக்கொண்டோம். மெல்லமெல்ல ஒரு சோர்வு. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பு. அதில் 38 நாட்கள்தான் உண்மையில் படப்பிடிப்பு நடந்தது. இந்தப்படப்பிடிப்பு மழையுடனான போராட்டம் என்று சொல்லலாம். நடுவே கமல் சற்று உடல்நலக்குறைவுக்கு ஆளானார். ஆனால் தேர்ந்த தொழில்நுட்பக்குழு கொண்ட ஜித்து ஜோசப் மிக விரைவாக, அனேகமாக கொஞ்சம்கூட வீண இல்லாமல், படத்தை முடித்தார்.

இத்தனைநாட்கள் சிரித்து கேலிசெய்து வேடிக்கைச் சண்டை போட்டு கூடி இருந்த ஒரு உற்சாகமான வாழ்க்கை முடிகிறது. கிட்டத்தட்ட பழையகால ஜிப்ஸி கலைஞர்கள்போல கூடாரத்தை கழற்றினால் இந்த ஊர் அன்னியம். வேறு ஊர், வேறு நிலம், வேறு மக்கள், புத்தம்புதிய இன்னொரு வாழ்க்கை. தொடுபுழாவில் போடப்பட்ட அந்த தத்ரூபமான முச்சந்தி செட் இப்போது போனால் இருக்காது. கனவுபோலக் கலைந்து மறைந்திருக்கும்.

வேணுவனம் இணையதளம்-சுகா

முந்தைய கட்டுரைநீலம் -கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு பார்வை- வே.சுரேஷ்
அடுத்த கட்டுரைவெண்முரசு நூல்கள் அறிமுக விழா