கத்தாழக்கண்ணாலே -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ சார்,

தாங்கள் எழுதிய “கத்தாழை கண்ணாலே” கட்டுரையைத் தளத்தில் படித்துக் கொண்டிருந்தேன். (என்னடா இவன் பழைய பழைய கட்டுரைகள் எல்லாம் படித்து இப்போ கடிதம் போடறானேன்னு நினைச்சுக்காதீங்க, உங்க தளத்திலே படிச்ச கட்டுரையையே மீண்டும் படிப்பது, படிக்காத கட்டுரைகளைத் தேடிப் பிடித்து படிப்பது ஆகியவை எனக்கு மிகவும் உவகையான விஷயங்கள்). அந்தக் கட்டுரையில், “எல்லா குத்துப் பாட்டுக்கு இடையேயும் ஒரு மெல்லிசை உள்ளது, வேகமான தாளக்கட்டால் அது சூழப்பட்டிருக்கிறது” என்று சொல்லியுள்ளீர்கள். “கத்தாழை கண்ணாலே” பாட்டில் வரும் பல்லவிக்கே அதற்கு சரியான உதாரணம் உள்ளது. அந்த பாட்டின் பல்லவி மெட்டமைப்பு, ஸ்ரீ நஸ்ரத் ஃபதே அலி கான் அவர்கள் பாடியுள்ள “சாஸோன் கே மாலா பே” என்ற இனிமையான பாடலுக்கு மிக அருகில் உள்ளது. எனக்கு சங்கீதம் அவ்வளவாக தெரியாது. இராகம் என்றால் அதற்கு இடம் வலம் உண்டு தானே என்று கேட்பவன் தான் நானும். ஆனால் எனது பயிற்சியற்ற காதுக்கு அவ்வாறு தான் தெரிகிறது.

நீங்கள் திரு நஸ்ரத் அவர்களின் பாடல்களை கேட்டதுண்டா என்று தெரியவில்லை. என்னுடைய அனுபவத்தில், கர்நாடக சங்கீதம் அளவுக்கே ஒரு மன அமைதியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவை அவரது க்வாலி வகைப் பாடல்கள். பாகிஸ்தான் பாடகரான அவர் மீரா பஜன்களையும், கண்ணன் ராதை பாடல்களையும் பாடியுள்ளார். அதிலும் காதலின் ஏக்கத்தை அவர் பாடும் போது, நம் மனமும் கனத்துப் போகும். இத்தனைக்கும் அவரது குரல் மென்மையானது அல்ல. நீலம் வாசித்த நாட்களில் அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அவரது சில பாடல்களின் இணைப்பு இங்கே:

http://www.youtube.com/watch?v=iGfY2N8I1TA

http://www.youtube.com/watch?v=D9Ui2deAKr8

அன்புடன்
கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைநேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்
அடுத்த கட்டுரைஎரிதல்