இன்று செப்டம்பர் நான்காம்தேதி காலையில் ஈரோட்டிலிருந்து கிளம்பி ஏழு மணி அளவில் தாரமங்கலம் வந்துசேர்ந்தோம். விடிவதற்குள் வந்துவிடவேண்டுமென்று திட்டம் இருந்தும் கூட வந்தபோது வெயிலேறிவிட்டிருந்தது. தாரமங்கத்திலுள்ள கைலாசநாதர் கோயில் குறிப்பிடத்தக்க சிற்பங்கள் கொண்டது. பழங்காலத்தில் ‘சில்பி’ இங்குள்ள சிற்பங்களை விகடனில் வரைந்ததை எங்கள் வீட்டு நூலகத்தில் பார்த்தது நினைவுக்குவருகிறது. நான் சேலம் வழியாக பலவருடங்கள் நான் பயணம்சென்றிருந்த போதிலும்கூட இந்தக் கோயிலைப் பார்த்ததில்லை.
வழியில் பயணத்தின் நுட்பங்களைப்பற்றியே பேசிக்கொண்டோம். மலையாளத்தில் காணப்போகும் விழாவை சொல்லித்தெரிவிக்க வேண்டாமே’ [காணான் போண பூரம் பறஞ்š அறியிக்கணோ?] என்று பழமொழி உண்டு. ஆனால் ஒரு பயணம்
தொடங்கும்போது வேறுவிஷயங்களில் மனம் படிவதில்லை. அந்த மனநிலையை தக்கவைத்துக் கொள்வதற்காகவே பேச்சு. எதைப்பற்றிப் பேசினாலும் பயணத்துக்குத்தான் வந்துசேரும்.ஆகவே பயணத்தைப்பற்றியே பேசினோம். எந்தப்பயணத்திலும் ஆரம்பத்தில் நிறையவே பேசுவோம். காரணம் மனம் சொற்களால் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். மெல்லமெல்ல மனம் காட்சிப்பிம்பங்களால் நிறைந்து கனக்கும்போது மௌனம் உருவாக ஆரம்பிக்கும். ஊர் திரும்பும்போது அனேகமாக ஆழமான அமைதி நிலவும். அந்த அமைதிதான் நாம் பயணங்களில் ஈட்டுவது.
ஹொய்சள ஆட்சியின் கீழ் இருந்தபோது இந்த ஆலயம் முதலில் கட்டப்பட்டிருக்கிறது. ஹொய்சளக் கட்டிடக்கலைக்குரிய தனித்தன்மைகள் கொண்டகோயில் இது. இந்த ஆலயத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்பது கிட்டத்தட்ட பன்னிரண்டு படிகள் இறங்கிச் சென்றுதான் கோயிலை அடையமுடியும் என்பதுதான்.இந்த அமைப்பை நான் அதிகம் கண்டதில்லை. இக்கோயில் மிகப்புராதனமானதாக இருந்திருக்கலாம். புதைந்து போன அதை அகழ்ந்து மீட்டு சுற்றிலும் பிராகாரமும் கோபுரமும் அமைக்கப்பட்டிருக்கலாம். கோபுரவாசலை தாண்டி இறங்குமிடம் இரு பெரும் கருங்கல் யானைகள் துதிக்கை தூக்கி நிற்பதுபோலச் செதுக்கப்பட்டுள்ளது.”யானைக்கு தசையை விட கருங்கல்தான் ஏற்றது” என்றார் கல்பற்றா நாராயணன்
இந்த கோயில் கெட்டி முதலியார் என்ற சிற்றரசரால் மீட்டுருவாக்கப்பட்டது என்று வரலாறு. இவர் அருகே இருந்த அமரகுந்தி என்ற ஊரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தவர். ஹொய்சள வம்சாவளியைச்சேர்ந்தவர் இவர். கெட்டிகள் என்பவர்கள் ஹொய்சளகாலகட்டத்தில் தமிழகத்திற்கு வந்து மெல்லமெல்ல இங்கு வேளாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்று தெரிகிறது.
தாரமங்கலம் சிற்பங்கள் முக்கியமானவை. பொதுவாக சிற்பங்களைப்பற்றிய நேரடி வர்ணனைகள் சொற்களாக மட்டுமே ஆகிவிடும்தன்மை கொண்டவை. ஆனாலும் சிறந்த சிற்பங்கள் நம்மை அரற்றச் செய்கின்றன. இங்குள்ள அழகிய ரதிமன்மதச் சிலைகள் முன்னால் சற்றுநேரம் நின்றோம். தென்பாண்டிநாட்டுக் கோயில்களில் ரதிமன்மதன் சிற்பங்கள் பெரும்பாலும் இருக்கும். திருவட்டாறு கோயிலின் ரதி என் சிறுவயதிலேயே ஒரு இனிய கனவுபோல நெஞ்சில் நிறைந்தவள். வழக்கமாக நம் சிற்பங்களில் ஆண்தெய்வங்கள் சற்றே பெண்மை கலந்தவையாக சித்தரிக்கப்பட்டிருக்கும், காரணம் சாத்வீகபாவனை வரவேண்டும் என்பதற்காக. ஆனால் மன்மதன் சிற்பம் எப்போதுமே மீசையுடன் திரண்ட தோள்களுடன் ராஜச பாவம் கொண்ட ஆண்மைத்தோற்றத்துடன் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதேசமயம் ரதி பெண்மையின் நளினத்துடன் சற்றே மிடுக்கும் கலந்த தோற்றத்தில் இருப்பாள். ஆனால் தாரமங்கலம் மன்மதன் மீசையுடன் இல்லை. மீசை இல்லாமலேயே அந்த மிடுக்கை கொண்டுவந்திருக்கிறான் சிற்பி.
சிவநடனத்தில் ஊர்த்துவநடனம் என்பது ஊழிக்காலப்பேரழிவைக்குறிக்கும் தத்துவார்த்தமான குறியீடாகும். அப்போது பெரும்பாலும் அபயஹஸ்தம்- அருள்புரிக்கரம்- இருப்பதில்லை. செந்தழல் தலைக்குமேல் தூக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான இடங்களில் ஊர்த்துவ நடராஜர் தனியாகவே இருக்கிறார். நடராஜர் சிலை சுழற்சியின் ஒரு கணம் என்று காணவேண்டும். பறக்கும் சடைகள் அதையே குறிக்கின்றன. ஆகவே ஊர்த்துவதாண்டவம் என்பது உச்சகட்ட சுழல்வேகம். சுழற்சியின் வேகம் உச்சமடைந்து தன்னைத்தானே இன்மையாக்கிக் கொள்ளும் பிரபஞ்சமே இங்கு நடராஜதாண்டவமாகக் குறிப்பிடப்படுகிறது. தாரமங்கலத்தின் ஊர்த்துவ நடராஜர் சிலை மிகவும் தீவிரமானது. தழல் தலைக்குமேல் தூக்கப்பட்டுள்ளது. சூழ்ந்து கைகள். முகத்தில் உக்கிரம்.
ஊர்த்துவ நடராஜருக்கு அருகே ஊடி நிற்கும் சிவகாமியை பெருமான் தாடையை பிடித்துக் கொஞ்சி சமாதானம் செய்துறார். அதனருகே ஊடல் தணிந்த தேவி புன்னகையுடன் தலை குனிந்து நிற்கிறாள். அதனருகே உள்ள அஹோர வீரபத்ரன் அக்னி வீரபத்ரர் சிலைகளும் உக்கிரமும் நுட்பமும் கொண்டவை. வாலி சுக்ரீவ போரில் ராமன் மறைந்து நின்று வாலியை வதம் சிலையும் அழகானது. தனி சன்னிதியாக பின்பக்கம் நாய் நிற்கும் காலபைரவன் சிலை உள்ளது.
இங்கு பல மோஹினிசிலைகள் உள்ளன. பொதுவாக தாந்த்ரீக மரபு உள்ள கோயில்களில் மோஹினி சிலைகள் அதிகமாக இருக்கும். பூமரக்கிளைகளை பிடித்து வளைத்து ஒசிந்து நிற்கும் தோற்றம். திமிர்த்து நிற்கும் உடலழகும் கவரும் பார்வையும். ஆனால் பல மோஹினி சிலைகளை இங்கே ரிஷி பத்னி என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு மோஹினிசிலை மட்டும் வேறு வழியில்லாமல் மோஹினி என்றே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. காரணம் சிலையின் காலடியில் இரு அசிங்கமான மனித உருவங்கள் உள்ளன. அச்சிலையை ரிஷி பத்னி என்றால் அவர்களை ரிஷிகள் என்று சொல்ல வேண்டியிருக்கும். செவ்வியல் கலையின் இயல்புகளில் ஒன்று அது. அழகு அசிங்கத்தால் தீவிரம் சாந்த்தால் சமன் செய்யபபட்டிருக்கும். பெரும்பாலான மோஹினிசிலைகளுக்கு கீழே அசிங்கமான குரங்குகள் மனிதர்கள் இருப்பதைக் காணலாம்.
தாரமங்கலம் கோயில்தான் நாங்கள் தமிழ்நாட்டில் பார்க்கும் முதல்கோயில். பயணத்தின் உண்மையான தொடக்கம் இது. இனி ஆந்திர எல்லையில் லெபாக்ஷி கோயில்தான். ஆகவே தமிழகத்தின் பிரதிநிதி இது. தமிழ்நாட்டை தென்னகப் பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் வந்து கலந்து உருவான பண்பாட்டுக் களஞ்சியம் என்று சொல்ல முடியும். விஜநகர கட்டிடக்கலை, ஹொய்ச்சளக் கட்டிடக்கலை போன்றவை தமிழகத்திற்கு வந்து இங்கு மேலும் வளர்ந்தன. தமிழகத்தின் பண்பாட்டு உரையாடலுக்குச் சான்றாக நிற்கிறது இந்த ஆலயம்.
அருகே ஒரு காளி கோயிலின் கிட்டத்தில் எண்கோண வடிவிலான படிகள் அமைந்த ஒரு குளம் உள்ளது. அது தாந்த்ரீக சடங்குகளுக்கான குளம் என்பதை அங்கிருந்த விளக்கு வைக்கும் பிறைகள், சிறிய புடைப்புச்சிற்பங்கள் மூலம் அறிந்துகொண்டேன். காலை வெயில் மெல்ல வெண்ஒளிகொள்ள ஆரம்பித்தபோது அங்கேயே காலையுணவு உண்டுவிட்டுக் கிளம்பினோம்.
சேலத்தில் இருந்து பெங்களுர் சாலையில் தர்மபுரி வழியாக கிருஷ்ணகிரி சென்று கர்நாடக ஆந்திர எல்லையில் இருக்கும் லெபாக்ஷிக்கு போகவேண்டும். தேசிய நெடுஞ்சாலையாதலால் வேகம் பிடித்துச் செல்ல முடிந்தது. சேலம்-தர்மபுரி சாலை எனக்கு மிகவும் பழக்கமானது. சேலம் தாண்டியதும் ஓமல்லூர் வரை இருபக்கமும் வெறிச்சிட்ட ஒருபோகநிலம். அதன் பின் கருவேலக் குறுங்காடு பரவிய குன்றுகள். ஓமல்லூர் கணவாயை ஏறியதுமே மெல்ல தட்பவெப்பநிலை மாறுபடுகிறது. காற்றில் குளிர் கலக்கிறது.