நீலம் -கிருஷ்ணா கிருஷ்ணா ஒரு பார்வை- வே.சுரேஷ்

ஒரு மேற்கோளுடன் தொடங்கலாம்.”உலகம் எங்கும் தியாகம், காதல் என இலக்கியம் மீண்டும் மீண்டும் பேசுகிறது. காரணம் அது அடிப்படை உணர்ச்சிகளை உன்னதமாக்கும் போக்கு என்பதனாலேயே. அதிலிருந்தே பண்பாடு உருவாகிறது என்பதனாலேயே உலகில் எந்த இலக்கியமும் அடிப்படை உணர்ச்சிகளை நோக்கித் திரும்பி போகும்படி பேச முடியாது. நவீனத்துவம் (Modernism) அதற்கு முன் இருந்த புத்தெழுச்சிவாதத்தை (Romanticism) எதிர்த்துப் பேசியது. புத்தெழுச்சிவாதம் உன்னதமாக்கலை மட்டுமே முன்வைத்தது. ஆகவே நவீனத்துவம் அடிப்படை உணர்ச்சிகளை நோக்கி கவனத்தை ஈர்த்தது. அடுத்த கட்டத்தில் பின்நவீனத்துவம் மீண்டும் உன்னதமாக்கலையே பேசும்.”

மேலே உள்ளவை ஜெயமோகன் தன ஆசான்களில் ஒருவராக என்றும் குறிப்பிடும் நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள். இலக்கியம் குறித்த ஒரு உரையாடலில் கூறப்பட்டவை. புத்தெழுச்சிவாத மற்றும் நவீனத்துவ காலத்தைக் கடந்தபின் வந்த படைப்புகளை வரையறைக்கும் ஒரு பார்வை என இதைக் கொள்ளலாம். ஏறத்தாழ 1950களில் துவங்கி 80களின் இறுதி வரையிலும் நவீனத்துவமே தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஆதிக்கம் செலுத்தியது. நவீனத்துவத்தின் இலக்கிய வகைகளான, யதார்த்தவாத, இயல்புவாத, இருத்தலியல்வாத படைப்புகளே அதிக அளவில் எழுதப்பட்டன.

மனிதனுக்கு நேரடி அனுபவமாகும் சாத்தியமற்ற, நிருபணவாதத்தன்மையுடன் கூடிய நிகழ்வுகளைத் தாண்டிய எதையும் சந்தேகித்து ஒப்புக்கொள்ள மறுக்கும் ஒரு போக்கே நவீனத்துவம் என்று சொல்லலாம். இதில் மனிதனின் எந்த உணர்ச்சி நிலையும் உன்னதமாக்கப்படுவதில்லை. கறாரான புறவய மதிப்பீடுகள், அது மிகப் பெரும்பாலும் கொண்டு சேர்க்கும் இருண்மைப் பார்வை ஆகியவையே இலக்கியத்தின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்பட்டன. வாழ்வின் சலிப்பூட்டும் அம்சங்கள், உடைத்தெறிய முடியாத அன்றாடத்தின் தளைகள், ஆகியவையே இலக்கியத்தின் முக்கிய பேசுபொருள் ஆக இருந்தன.

இந்த நிலை திடீரென்று 90களில் உடைந்தது. இதற்கு பல காரணிகள் உண்டு. எனக்கு சட்டென்று இப்போது தோன்றுவது, இந்த மூன்று காரணங்கள். கி. ராஜநாராயணின் படைப்புகள் உண்டாக்கிய தாக்கம் (91ல் அவருக்கு சாகித்திய அகாடெமி பரிசு அளிக்கப்பட்டது), லத்தீன் அமெரிக்க எழுத்துகள் தமிழ் மொழிபெயர்ப்பில் பரவலாகக் கிடைத்தமை, மூன்றாவதும் முக்கியமானதுமாக ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவல் ஏற்படுத்திய தாக்கம்.

இவை மூன்றுக்கும் பின்னர் எழுதப்பட்ட சிறந்த படைப்புகள் பலவும் நவீனத்துவத்தை மீறிச் சென்றன. ஒரு பெரும் கொண்டாட்டமாக, எளிய பொதுப்புத்தி சார்ந்த பகுத்தறிவால் புரிந்துகொள்ளப்பட முடியாத, ஏராளமான விசைகளின் இழுப்புகள் மற்றும் உந்துதல்களின் விளைவு என்று வாழ்வைப் பார்க்கும் படைப்புகள் எழுதப்படத் துவங்கின.

இனி மேற்கோளில் சுட்டப்பட்ட உன்னதமாக்கலுக்குச் செல்வோம். நவீனத்துவம் அடிப்படை உணர்ச்சிகளைப் பேசுவது என்றும், பின்நவீனத்துவம் உன்னதமாக்கலை நிகழ்த்தும் போக்குக்கு இட்டுச் செல்லும் என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமான ஒரு சான்று இருக்குமாவென்றால் ஒரே பொருளையும் குறிப்பிட்ட ஒரே வாழ்வையும் பேசும் ஒரு நவீனத்துவப் படைப்பையும், அதற்கு நேரெதிராக, மரபில் வேர் ஊன்றி பின்நவீனத்துவத்தில் கிளை பரப்பிய வேறொரு படைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தாக வேண்டும். இப்படிப்பட்ட படைப்புகள் ஏதும் உண்டா என்ற கேள்வியும், நித்ய சைதன்ய யதியின் கூற்றுக்கேற்ற பின்நவீனத்துவப் படைப்புகள் தமிழில் வரத் தொடங்கிவிட்டனவா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.

எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை என்றால் சமீபத்தில் ஜெயமோகனின் நீலம் நாவல் படித்தபின் எழுந்த எண்ணங்கள்தான். அதை படிக்கும்தோறும் மனதின் இன்னொரு பக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் ஓடிக்கொண்டே இருந்தது.

இபாவின் கிருஷ்ணா கிருஷ்ணா வெளிவந்து ஏறத்தாழ எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் நீலம் நாவலை படிக்கும்தோறும் என்னை அறியாமல் என் மனம் அதனுடன் கிருஷ்ணா கிருஷ்ணாவை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தது. இவை இரண்டுக்குமான முக்கியமான ஒற்றுமை, இவை இரண்டுமே கிருஷ்ணனின் கதைகள். இரண்டிலுமே பாகவதத்திலோ பாரதத்திலோ எங்குமே சொல்லப்படாத ராதையின் பாத்திரத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம்.

இபாவின் கிருஷ்ணா கிருஷ்ணா வடிவத்தில் நவீனத்துவத்தைத் தாண்டிய படைப்பு. ஜரா என்ற வேடன் தன்னிடம் கிருஷ்ணன் சொன்னதை நாரதனுக்குச் சொல்லி நாரதன் நமக்குச் சொல்வது போன்ற அமைப்பு கொண்ட நாவல். சம்பவங்களைப் பொருத்தவரையில் நேர்க்கோட்டு வரிசையில் அமையாதது. உரையாடல்களில் ஏராளமான ஆங்கில வார்த்தைப் பிரயோகங்கள் நிறைந்த சமகாலத்தன்மை கொண்டது. கிருஷ்ணனை வழமையான பார்வையில் இருந்து விலகி கட்டுடைத்துப் பார்ப்பது. அவனை ஒரு நடைமுறைவாத, அறச்சூழ்ச்சி மதியூகியாகவே முன்வைக்கிறது. இதற்கு அவன் துரியோதனனிடம் சொல்லும் கூற்று ஒரு சான்று.

“யுத்தம் என்கிறபோது தர்மம் அதர்மம் என்று எதுவுமில்லை; அநியாயத்தை நியாயத்தால் வெல்ல முடியவில்லையென்றால் அநியாயத்தை அநியாயத்தால் வெல்வதில் தவறேதுமில்லை… நீ ஆடும் ஆட்டத்தைப் பார்த்து அதற்கேற்ப ஆட்ட விதிகளைப் புதுப்பித்துக் கொண்டு ஆடுகின்றேன் நான்… இதுதான் என்னுடைய இப்பொழுதைய தர்மம். உன் தர்மவிதிகளுக்கு ஏற்பத்தான் நான் என் தர்மவிதிகளை அமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது; இதில் தவறேதுமில்லை… வாழ்க்கை என்பது ஒரு சதுரங்க ஆட்டம். நீ காய்களை நகர்த்துவதற்கு ஏற்பத்தான் நானும் காய்களை நகர்த்தியாக வேண்டும்… இதில் உணர்ச்சிகளுக்கு இடமே இல்லை… இதைத்தான் நான் போர்த் துவக்கத்தில் அருச்சுனனிடம் சொன்னேன்…”, என்று குறிப்பிடுகிறான் கண்ணன்.

காந்தி தன் காலம் முழுதும் முடிவுகளைவிட வழிகளையே முக்கியமாகக் கருதினார். அதற்கு அவர் கீதையின் துணையையும் நாடினார். ஆனால் இபாவின் கிருஷ்ணன் முடிவுகள் வழிகளை நியாயப்படுத்தும் என்றே வழிகாட்டுகிறான். பெண்ணியம் பேசும், பிறவிகளில் ஏற்றத்தாழ்வு காண்பதைக் கண்டிக்கும் ஒரு நவீன யுகக் கிருஷ்ணனையே படைத்திருக்கிறார் இ.பா.

இபாவின் கிருஷ்ணனும் காலத்தின் ஓட்டத்தையும் மாற்றத்தையும் கடந்து நிற்கும் வல்லமை கொண்டவனாகக் காட்டப்படுவதில்லை. நரைதிரை மூப்புக்கு ஆளாகி தன வாணாளின் கடைசியில் ராதையைப் பார்க்க எண்ணி பிருந்தாவனம் வரும் கிருஷ்ணன் ராதாப் பாட்டியைக் காண விரும்பாமல் திரும்பி வந்து ஜராவின் அம்புக்குக் காத்திருந்து கண் மூடுவதே நாவலின் முடிவு. பிறப்பிலிருந்து இறப்பு வரை கிருஷ்ணனின் முழு வாழ்வையும் விவரிக்க நகைச்சுவையும் அங்கதமும் கலந்த ஒரு துள்ளலான, விறுவிறுப்பான, படிக்கப் படிக்க சலிக்காத நடையையே கிருஷ்ணா கிருஷ்ணாவில் கையாண்டுள்ளார் இ.பா.

“உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத் திறந்து வானை நோக்கியது. இன்நறும் வாசம் எழுப்பி பெருமூச்சுவிட்டுக்கொண்டது.

“கானுறைவோய்! கடலுறைவோய்! வானுறைவோய்! வளியுறைவோய்! எங்குளாய் இலாதவனாய்?’ என்றது அன்னை நீர்க்காகம் தன் குஞ்சுகளை நெஞ்சுமயிர்ப்பிசிறில் பொத்தியணைத்து, கருங்கூர்வாய் திறந்து. ‘இறையோய்! இங்குளாய்!’ என்றன மரங்களில் விழித்தெழுந்த பிற காகங்கள்,”

என்ற வரிகளுடன் துவங்கும் நீலம் இந்த முதல் அத்தியாயத்திலிருந்தே மரபில் வேரூன்றி நவீனத்துவத்தைத் தாண்டி புத்தெழுச்சிவாத சாயல்கள் அதிகம் கொண்ட படைப்பு என்பதை காட்டிவிடுகிறது. நீலம் கிருஷ்ணனின் முழு வாழ்வைச் சொல்வதல்ல. அவனது கோகுல வாழ்வையும் பிருந்தாவன லீலைகளையும் கம்ச வதத்தையும் விவரித்துப் பின் ஒரு தாவலில் அவனது அந்திமப் பருவத்தில் முடிகிறது.

நீலத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் மொழிநடை. நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ள பத்தி ஒரு சிறு துவக்கமே. வெண் முரசு தொடரே ஒரு செவ்வியல் மொழிநடையைக் கொண்டது என்றபோதும், நீலம் அதிலும் ஒரு உயர்தளத்தை அடைந்து மயக்கும் மொழி அழகைக் கொண்டது. இது குறித்து ஜெயமோகன் தளத்தில் வந்த கடிதங்களைக் காணும்போது சற்றே மரபிலக்கிய, அல்லது செந்தமிழ் நடையில் வாசித்துப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இந்த மொழிநடை ஒருதடையாக இருந்தது எனத் தெரிகிறது (என் நண்பர் ஒருவரும், “எதற்காக இப்படி அண்ணா, கருணாநிதி போன்றோர் எழுதிய பாணியில் இப்போது எழுதவேண்டும்?” என்று ஆதங்கப்பட்டார். இது அண்ணா, கருணாநிதி மொழியல்ல, பெரியாழ்வார் ஆண்டாள், அருணகிரி, குமரகுருபரர் மொழி என்று சொன்னேன். மரபிலக்கிய , பக்தி இலக்கிய அறிமுகம் சிறிதேனும் இல்லாதவர்கள் இம்மாதிரி ஒரு மொழிநடை என்றாலே அண்ணா, கருணாநிதி மொழி என்று கூறிவிடும் அவலத்துக்கு என்ன செய்வது!)

நீலம் கிருஷ்ண லீலையின் மற்ற பகுதிகளைவிடவும் ராதையுடனான் கிருஷ்ணனின் காதலையே முதன்மைப்படுத்துகிறது. சாதாரண மானுடக் காதல் என்பதைத் தாண்டி பிரபஞ்ச காதலின் குறியீடாக அதை மாற்றுகிறது.

தமிழின் திணை மரபையும், வடக்கிசை மரபின் ராக ராகினி வகைபாட்டையும் , பரத நாட்டிய மரபின் பாவனைகளான அஷ்ட நாயகி கருதுகோள்களையும் உள்ளடக்கி ஒற்றை பெரும் படைப்பாக அதை உருவகித்துக் காட்ட முனைந்திருப்பதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார். கிருஷ்ணா கிருஷ்ணா எந்த அளவுக்கு கிருஷ்ணனை ஒரு நடைமுறைவாத அரசியல் சூழ் மதியாளன் ஆக்குகிறதோ, அந்த அளவுக்கு நீலம் அவனை பிரபஞ்சக் காதலின் மையப் பொருள ஆக்குகிறது. அடிப்படை உணர்ச்சியான காமம் இங்கு உன்னதமான தெய்வீகக் காதலாகிறது. மேலும், கிருஷ்ணன் கம்சனைக் கொன்றபிறகு தன் தாய் தந்தையரை விடுவிப்பதோடு நீலம் கிருஷ்ண லீலையை நிறுத்திக்கொண்டு ராதையிடம் திரும்புகிறது. இதர கிருஷ்ண பராக்கிரமங்களை விவரிப்பதைத் தவிர்த்துவிட்டு ராதாகிருஷ்ண நாயகநாயகி பாவத்தையே அற்புதமான மொழி அழகுடன் தென்னிந்திய, வடஇந்திய இலக்கிய மரபுகளின் வழியாக சித்தரிக்கிறது.

ஆச்சரியமளிக்கும் வகையில் இரு நாவல்களுமே பௌதிக ரீதியாகவும் சம்பவரீதியாகவும் ஒரே இடத்தில், சொல்லப்போனால் கிருஷ்ணன் தன் அந்திமக் காலத்தில் மீண்டும் பிருந்தாவனம் திரும்புவதில் முடிகின்றன. இந்த இடத்தில்தான் நான் முதலில் சொன்ன மேற்கோளின் சான்றாதாரமாக இந்த இரு படைப்புகளும் என் மனதில் பதிந்தன. இ.பாவின் படைப்பில் காலம் என்ற மாபெரும் இருப்புக்கு முன் இளமையும் காதலும் மாமனிதர்களும்கூட ஒரு வரையறைக்கு உட்பட்டு விடுவதைக் காண்கிறோம். முடிவிலியை, அழிவற்றதை நோக்கி நீள்வதில்லை.

இபா நாவலில், பிருந்தாவனத்துக்குத் திரும்பி வரும் கிருஷ்ணன், நெடிய அரசூழ்மதி வாழ்வில் தன உள்ளே இருந்த (ராதையால் உருவான) இசையைத் தொலைத்துவிடுகிறான்.அது மீண்டும் அவன் வசமாவதில்லை. வயதான ராதாப் பாட்டியை சந்திக்கும் துணிவின்றி காலத்தின் முடிவை ஏற்றுக் கொண்டு திரும்பி விடுகிறான். இதுதான் இந்நாவலை நிச்சயமாக ஒரு நவீனத்துவ மனதின் படைப்பு என்பதை கட்டியம் கூறும் இடம்.

இதே இடத்தில்தான் நீலமும் முடிகிறது. ஆனால் அங்கு ராதை பாட்டியல்ல. அவள் ஒரு பிச்சி என வாழ்ந்து மறைந்து யாதவகுலத்தின் குலதெய்வம் ஆகிவிட்டிருக்கிறாள். அவளுக்கு ஒரு சிறு ஆலயம் இருக்கிறது. யமுனைக் கரையில் நின்ற இளநீலக் கடம்பு. அதனடியில் சிறுபீடம் ஒன்றின்மேல் சிற்றாடை கட்டி செந்தாமரை மொட்டேந்தி நின்றிருக்கிறாள் ராதை. முகிழ்த்த சிறுமுலையும் முறுவலிக்கும் இதழ்களும் விரிந்த மலர்முகமும் விழிநிறைந்த ஒளியுமாய் காத்திருக்கிறாள் கன்னி அன்னை, காதலரின் தெய்வம்.

ஆனால் அங்கே இன்றைய பிருந்தாவனத்திலும் யாதவ குலத்தில், உலகில் ராதைகள் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்பதைக் காட்ட சிறுமியான ஒரு ராதையும் இருக்கிறாள். இங்கும் கிருஷ்ணர் ஒரு குழல் வாங்கி இசைக்க விரும்புகிறார். ஆனால் இந்தக் குழல் இந்தச் சின்ன ராதையின் நீலக்கடம்ப மரத்தில் மறைத்து வைத்த குழல். இங்கும் முதலில் கிருஷ்ணன் இதழ் சேர்த்த குழலில் இசை வருவதில்லை. அதைப் பார்த்துச் சிரிக்கிறாள் இந்தப் புது ராதை. இப்போது குழல் மொழி கொள்கிறது. குயில்நாதம் ஒன்று எழுகிறது.

“‘ராதே’ என அது அழைத்தது. காற்றில் கைநீட்டிப் பரிதவித்து ‘ராதே! ராதே! ராதே!’ என மீளமீளக் கூவியது. கண்டடைந்து குதூகலித்து. ‘ராதை! ராதை! ராதை!’ என கொஞ்சியது. கல்நின்ற கன்னியின் முகத்தை ராதை பார்த்தாள். கல்விழிகள் காட்சிகொண்டன. குமிழிதழ்கள் முறுவலித்தன. சுற்றி எழுந்து சுழன்று நடமிட்டது செவ்விழி. பீலிவிழி விரிந்த தலையும் புன்னகை பெருகும் இதழுமாக யமுனைப்பெருங்கரையில் யாதவர்தம் அரசியின் முன் குழலூதி நின்றிருந்தான் கண்ணன்.”

இப்படியான ஒரு உன்னதக் காட்சியுடன் முடிகிறது நீலம். இங்கு கிருஷ்ணா கிருஷ்ணா நாவலின் முடிவைப்போல காலம் வென்று மனிதர்கள் சிறுத்து விடுவதில்லை. காதல் எனும் உன்னத உணர்ச்சி யுகங்களைக் கடந்து பிறவிகளைக் கடந்து வெல்வதைக் காண முடிகிறது.

இதைச் சொல்லும்போது கிருஷ்ணா கிருஷ்ணா நாவலின் முடிவு ஏற்கத்தக்கதல்ல என்றாகிவிடுவதில்லை. அதன் உள்ளடக்கத்தில் செயல்படும் நவீனத்துவ சிந்தனையின் இயல்பான உச்சத்தையே அந்த நாவல் அடைகிறது. அதுவே அதற்கு பாந்தமாகவும் பொருத்தமாகவும் உள்ளது, அதை ஒரு மிகச் சிறந்த படைப்பாகவும் ஆக்குகிறது.

மீண்டும் நாம் யதியின் மேற்கோளுக்கு வருவோம். ஆம், நவீனத்துவம் புத்தெழுச்சிவாதத்தை மறுத்துப் பேசுகிறது. புத்தெழுச்சிவாதம் உன்னதமாக்கலையே முன் வைத்தது. நவீனத்துவுத்துக்கு அடுத்து வரும் பின்நவீனத்துவ காலகட்டம் மீண்டும் உன்னதமாக்கலையே பேசும், என்ற அந்த வாசகத்துக்குச் சான்றாகவே நவீனத் தமிழ் இலக்கியத்தின் இரு மாபெரும் கலைஞர்களின் இந்த இரு படைப்புகளும் விளங்குகின்றன என்றே எனக்குத் தோன்றுகிறது. ​

வெண்முரசு அனைத்து விவாதங்களும் கடிதங்களும்

முந்தைய கட்டுரைவியூகங்கள்
அடுத்த கட்டுரைபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்