செப்டம்பர் நான்கு. இன்று காலை இந்தியச்சுற்றுலாவைத் தொடங்கினோம். ஆறுமாதம் முன்னரே திட்டமிடப்பட்டது. மெல்லமெல்ல சூடுபிடித்து நாட்களை எண்ணி நிமிடங்களை எண்ணி இதோ அந்தநாள். சிறிய பயணமாக இருந்தாலும்கூட பயணம் தொடங்குவதென்பது என்வாழ்க்கையின் மிக உற்சாகமான விஷயங்களில் ஒன்றாகவே இருந்துவந்திருக்கிறது. சின்னவயதில் ஒரு சினிமாவுக்குப்போவதென்றால்கூட என் மனம் பரபரக்கும். பலசமயம் பயணத்தைவிட பயணத்தின் தொடக்கமே முக்கியம் என்றுகூடத் தோன்றும்
நான் செப்டம்பர் இரண்டாம்தேதி மாலையே ஊரிலிருந்து கிளம்பிவிட்டேன். மதுரையில் பொ.வேல்சாமியின் மகளுக்கு திருமணம். மூன்றாம்தேதி காலையில் மதுரை சென்று நண்பர் அ.முத்துகிருஷ்ணனின் வீட்டில் தங்கி குளித்து உடைமாற்றி திருமணத்துக்கு சென்றேன். மதியம் பதினொரு மணிக்கு கிளம்பி ஈரோட்டுக்கு மாலை ஐந்து மணிக்கு வந்தேன். வசந்தகுமார் மூன்றாம்தேதி மாலையிலேயே சென்னையில் இருந்து ரயிலில் கிளம்ப முடியும், நள்ளிரவில் தான் வந்துசேர்ந்தார். கல்பற்றா நாராயணன் கோழிக்கோட்டிலிருந்து பேருந்தில் வந்து சேர்ந்திருந்தார் விடுதியில் இரண்டு அறைகள் போடப்பட்டிருறன. விஜயராகவன் வந்து என்னை அழைத்துக்கொண்டு விடுதியில் சேர்த்தார்.
விடுதியில் நண்பர்கள் சிவா, கிருஷ்ணன், தங்கமணி, பாபு ஆகியோர் இருந்தார்கள். மாலையில் டாக்டர் ஜீவா வந்தார். அவருடன் காந்தியைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இரவு ஒன்பது மணிமுதல் ஒருமணிநேரம் கடும் அம்ழைகொட்டியது. காலையில் மழை இருக்குமோ என்றார் கிருஷ்ணன். பத்து மணிக்கு சாமான்களை எல்லாம் கொண்டுவந்து சேர்த்துவிட்டு நண்பர்கள் சென்றார்கள் நானும் கல்பற்றா நாராயணனும் இரவெல்லாம் பயணத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். மனக்கிளர்ச்சியை பேசிப்பேசி ஆற்றிக்கொண்டோமா அல்லது அணையாமல் பார்த்துக் கொண்டோமா என்பது சந்தேகம்.
உண்மையில் இன்றுகாலை இங்கே வந்துசேர்ந்தால்போதும் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் வசந்தகுமார்தான் அதிகாலையில் பயணம்செய்வதுதான் நல்லது, அந்த மனநிலை வெளிச்சம் வந்தால் வராது என்றார். இருள்பிரியா நேரத்தில் ஒருநகரைவிட்டு விலகுவதில் கவித்துவமாக ஏதோ ஒன்று உள்ளது. தூக்கம்பிடிக்கவில்லை என்றாலும் காலையில் எழவேண்டுமென்பதற்காக முன்னதாகவே படுத்துக் கொண்டோம்.
காலை ஐந்துமணிக்கு செவர்லே டவேரா வண்டி வந்தது. அதன் உரிமையாளரும் ஓட்டுநருமான ர·பீக் பாபு. கொண்டுவந்தார்., முன்னரே டீசல் நிரப்பியிருந்தோம். அதிக லக்கேஜ் தேவையில்லை என்று முடிவு செய்திருந்தோம். வடக்கே மழை இருக்குமென்பதனால் எளிதில் காயக்கூடிய மெல்லிய டி ஷர்ட்டுகள், பெர்முடாக்கள் வாங்கியிருந்தோம். அவற்றை துவைக்காமல் பலநாட்கள் அணியவேண்டும் என்று திட்டம். எங்காவது ஆறு தென்பட்டால் துவைத்துக் கொள்ளலாம். ஸ்வெட்டர், போர்வை, மழைக்கோட்டு உண்டு. போகுமிடங்களில் தேவையென்றால் விரித்து படுத்துக்கொள்ள பிளாஸ்டிக் விரிப்புகள் ஆறு. காற்றுத்தலையணைகள் சில. பேஸ்ட், சோப் போன்றவை பொதுவாக. அவ்வளவுதான். அவற்றை ஏர்பேக்குகளில் திணித்து காரின் மேலேயே கட்டிவைத்து மேலே கித்தானால் மூடினோம். இருபதுலிட்டர் தண்ணீர் கொள்ளும் கேன் ஒன்று உள்ளேயே. என்னுடைய லேப்டாப் கணிப்பொறி. அது பழையது,பழுதாகலாம் என்பதனால் செந்திலின் லேப்டாப் கணிப்பொறி. காமிராக்கள். எல்லாவற்றையும் கட்டிமுடித்தபோது ஐந்து மணி. ஐந்தரைக்குள் கிளம்பவேண்டுமென்று திட்டம்.
வழியனுப்ப பாபு வந்திருந்தார். அனைவரும் ஏறிக்கொண்டோம். செந்தில் எப்போதுமே டிரைவர் அருகே அமர விரும்புவார். நான் நடு இருக்கை. கார் கிளம்பி குளிர்ந்த காற்று முகத்தில் பட்டதும் ஆம், கிளம்பிவிட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. விடியற்காலையில் எல்லா நகரங்களும் அழகாக இருக்கின்றன. குப்பைகள்கூட ஒருவகை வசீகரத்துடன் பரவிக்கிடப்பதாகத் தோன்றுகின்றன. ஈரோட்டைவிட்டுவிலகி ஏலம் பாதையில் செல்ல ஆரம்பித்தோம். சேலம் அருகே தாரமங்கலம் எங்கள் முதல் இலக்கு.
காலையில் மழைபெய்து ஈரமான நகரத்தைவிட்டு குளிர்காற்று முகத்தில் அறைய சென்றோம். உற்சாகமான பயணம். தொடங்கும் வரை இருந்த மெல்லிய பதற்றம் சட்டென்று அணைந்து ஆழமான அமைதி மனதில் குடிகொண்டது. நனைந்த சோளக்கொல்லைகள் ஈரமான கரிய கூரைகள் பாய்லர்களில் இருந்து எழும் நீராவிக்கு சுற்றும் காலை டீ குடிக்க கூடியவர்கள். காலையில் அழகாக இல்லாத இடமே இல்லை