‘இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ‘ என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்குத் தமிழே வாயில் வரவில்லை. ‘எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் ஆண்டன்னா கொண்ட தவளைக்கண் மனிதர்கள். விசித்திரமான வெளிச்சங்கள். ஐம்பது வருடம் முன்பு ஹாலிவுட் படங்கள் உருவாக்கிய அத்துமீறிய கற்பனைகளைப் படிப்படியாக செய்தித்தாள்கள் உண்மையாக முன்வைத்து விட்டன. மக்களில் பாதிப்பேர் இப்போது இக்கதைகளை உண்மைச் செய்திகள் என்று நம்புகிறார்கள். அறிவியல் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வேலைக்குப் பதில் இம்மாதிரி அறிவியல் மூடநம்பிக்கைகளைக் களைவதே இன்று விஞ்ஞானிகளுக்குப் பெரிய வேலையாகி விட்டிருக்கிறது… நான் சோர்ந்துவிட்டேன்… ‘
‘இது அப்படியல்ல. நீங்கள் கண்ணால் பார்த்தால் நம்புவீர்கள்…. ‘ என்றார் நாராயணன்.
பத்மநாபன் சிறிய மனிதர். சாக்பீஸ் போல வெள்ளையான உடல், அதி வெண்மையான தலைமயிர். மீசையும் புருவமும் கூட வெண்ணிறம்தான். விண்வெளி ஆய்வில் அவருக்கு நாற்பது வருட அனுபவம் , உலகப்புகழ் , ‘கிட்டத்தட்ட ‘ நோபல் பரிசு ஆகியவை இருந்தன.
‘நான் ஆராய்ச்சிக்காக வரவில்லை. நீ என் பழைய நண்பன். எனக்கு ஏதாவது மலைப்பிரதேசத்தில் நாலைந்துநாள் ஓய்வெடுக்கவேண்டுமென்று பட்டது. அப்போதுதான் உன் கடிதம்… ‘
‘நீங்கள் அதைப் பார்க்கலாம். மலைஉச்சி வரை ஏறுவதை ஒரு பயிற்சியாகவும் கொள்ளலாமே. ‘
‘பார்ப்பதில் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு தோட்டவிவசாயி என்ற நிலையில் நீ இம்மாதிரி அபத்தமான விஷயங்களில் ஈடுபடாமல் உருப்படியாக பூச்சிகளைப்பற்றியோ, புதிய விவசாய முறைகளைப்பற்றியோ ஏதாவது ஆராய்ச்சி செய்திருந்தால் எவ்வளவோ நல்லதாக இருந்திருக்கும் . ஆனால் உனக்குப் பொழுதுபோனால் சரி. இந்த ஆளில்லா மலைப்பகுதியில் இம்மாதிரி சிறு பரபரப்புகள் இல்லாமல் வாழ்வதும் கடினம்தான்… ‘
‘நாளைக் காலையில் நாம் மலை ஏறுகிறோம். தொரப்பனை வரச்சொல்லியிருக்கிறேன்.. ‘
‘தொரப்பனா ? ‘
‘இந்த மலையில் உள்ள இடும்பர் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவன்.அவர்களில் ஒருவனின் துணை இல்லாமல் மலையில் வழிகண்டுபிடித்துப் போவது கஷ்டம். ‘
‘ உன் பங்களா அழகானது . நீ ஒரு குட்டி மலைஅதிபன் மாதிரி இருக்கிறாய். ‘
‘நன்றி ‘ என்றார் நாராயணன் ‘ தேயிலை விலை விழுந்த பிறகு நான் நாடிழந்த மன்னனாக ஆகிக் கொண்டிருக்கிறேன். ‘
‘இந்தப் பறக்கும் தட்டுக்கதையை பிரபலப்படுத்தி மலையுச்சியை ஒரு சுற்றுலாத் தலமாக செய்துவிடு. பணம் கொட்டும். பலர் இப்போது அதைத்தானே செய்கிறார்கள்… ‘
டாக்டர் பத்மநாபன் இரவெல்லாம் விண்வெளி விந்தைகளின் பேரால் நடக்கும் மோசடிகளைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் . ‘மக்களுக்கு பூமி மீது நம்பிக்கை போய்விட்டது. இங்கேயே நம் வாழ்க்கைச்சிக்கல்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமென அவர்கள் நம்பவில்லை. வானத்திலிருந்து யாரோ வரவேண்டியிருக்கிறது . கடவுளை விஞ்ஞானிகள் ஒழித்துக் கட்டிவிட்டார்கள் . சென்ற நூற்றாண்டு விஷயங்களான சோதிடம் ஆருடம் எல்லாமே காலியாகிவிட்டன. ஆகவே விஞ்ஞானிகளை வைத்தே புது மூடநம்பிக்கைகளைக் கட்டிக் கொள்கிறார்கள்…தலைக்குமேல் ஒரு காலியிடம் இருப்பதாக நம்ப யாருமே தயராக இல்லை.ஆகவே புதிய தேவதைகள், புதிய சாத்தான்கள்.. ‘
‘அப்படியானால் விண்வெளியில் நம்மைத்தவிர வேறு யாருமே இருக்க நியாயமில்லை என்கிறீர்களா ? ‘
‘தர்க்கபூர்வமாக யோசித்தால், இருக்கலாம். ஆனால் இன்றுவரை ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை. ஒரே ஒரு சிறு ஆதாரம் கூட . அதி நுட்பத் தொலைநோக்கிகள் ஐம்பது வருடங்களாக வானை அணு அணுவாக கவனிக்கின்றன. பிரபஞ்சத்தின் எல்லா மூலைக்கும் இடைவிடாது ரேடியோ செய்திகள் அனுப்பபடுகின்றன. விண் ஊர்திகள் நமது சூரியமண்டலத்தையும் பால்வழியையும் பல லட்சம் புகைப்படங்களை எடுத்து அனுப்பி விட்டன. செவ்வாயின் துணைக்கோள்களில் ஆளில்லா ஊர்திகள் இறங்கி விட்டன. இதுவரை கவனத்தைக் கவரும்படியான ஒரு சிறு தடையம்கூடக் கிடைக்கவில்லை . கிடைக்காதவரை இல்லை என்று கொள்வதே அறிவியலின் நியதி . ஆகவே பிரபஞ்சத்தில் நம்மைத்தவிர யாருமில்லை.. ‘
‘அப்படி உறுதியாக சொல்ல முடியாது. நீங்கள் இதைப்பார்த்தால்…. ‘
‘நான் நிறையப் பார்த்தாகிவிட்டது… ‘ என்றார் டாக்டர் பொறுமை இழந்து. ‘ நீ சொல்லவரும் கதை என்ன ? ஏதோ விண்ணுலக ஊர்தி இங்கே இறங்கியது . அதன் சக்கரங்களின் தடம் மலை உச்சியில் இருக்கிறது இல்லையா ? ‘
‘ஆம்.அதாவது… ‘
‘நீ எரிக் வான் டனிகென் எழுதிய ‘கடவுள்களின் ரதம் ‘ கதையைப் பலமுறை படித்திருப்பாய் என்று நினைகிறேன். விண்வெளி மனிதர்கள் ஏன் இங்கே வரவேண்டும் ? வந்தபிறகு எதையாவது விட்டுச்சென்றார்களா ? எடுத்துச்சென்றார்களா ? அதை யாராவது பார்த்தார்களா ? எல்லாம் பிரமை. அறிவியல் அறிவியல்தான்.அதைக் கதைகளுடன் கலக்கக் கூடாது ‘
மறுநாள் தொரப்பன் வந்துசேர்ந்தான். வாய்நிறைய வெற்றிலைச்சாறு வழியும் குள்ளமான கரிய மனிதன். உறுதியான தசைகள் . தலைமயிரைப் பின்னால் நீட்டி வளர்த்து நீவி பின்னிழுத்துக் குடுமியாக முடிந்திருந்தான். மூக்கில் இரும்பு வளையம் .
‘ஏம்பா அதிகாலையிலே வார நேரமா இது ? ‘
‘சாமி காட்ல பனி ராஸ்தி சாமி ‘
‘நல்லவர்கள்தான். ஆனால் எந்த ஒழுங்குக்கும் கட்டுப்பட மாட்டார்கள் ‘என்றார் நாராயணன். ‘ காடு சுற்றும் வேலைதவிர ஒன்றுக்குமே உதவமாட்டார்கள்… ‘
‘அதற்குக் காரணம் அவர்களுடைய உதவாத கற்பனைகள்தான். தெய்வங்களும் பேய்களுமாக. யதார்த்த உணர்வு ஆதிவாசிகளிடையே மிக மிகக் குறைவு .போகலாமா ? ‘ ‘
‘நான் தயார் . டேய் அய்யாவோட பையை எடுத்துக்க . ‘ நாராயணன் சொன்னார் . ‘நல்ல செங்குத்தான மலை. மேலே போக சிறிய வழி மட்டும்தான் உண்டு. அது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும்… ‘
பையுடன் தொரப்பன் முன்னே சென்றான். அவர்கள் பின்தொடர்ந்தார்கள். அடர்வற்ற காட்டுக்கு அப்பால் மலை தெரிந்தபோது டாக்டர் சற்று பிரமித்தார் . அதைப்போன்ற ஒரு செங்குத்தான மலையை அவர் கண்டதேயில்லை.
‘இதன் பேர் என்ன ? ‘
‘வெள்ளைக்காரன் போட்ட பேர் டெவில்ஸ் டோம் . இவர்கள் மொழியில் கல்லன்மலை . ‘
‘கல்லன்மலை என்றால் என்ன பொருள் ? ‘
‘இவர்கள் சாமி ஒன்று மலைமேல் இருக்கிறது . கல்லன்சாமி . ‘
‘நீங்க அடிக்கடி போறதுண்டா ? ‘ என்றார் டாக்டர் தொரப்பனிடம்
‘சாமி ? ‘
‘எப்பல்லாம் கல்லன் சாமிய கும்பிடுவீங்க ? ‘
‘சாமி அது சித்திரை ஆறாம் தேதியல்லோ. அன்னு மாட்டும்தானே ஆணாப்பிறந்தவங்க மலையேறி சாமி கும்பிட்டு பலி போடுயது சாமி ‘
‘பெண்ணாப் பிறந்தவங்க ? ‘
‘வரக்கூடாதல்லோ சாமி .கல்லன்சாமி வந்து பிடிச்சு மானத்திலே ஏற்றிக் கொண்டு போகுமல்லோ ‘
‘இதில் எப்படி ஏறுவது ? ‘
‘மரம் இருக்கு சாமி ‘ என்றான் தொரப்பன்.
மலை உண்மையில் ஓரு பெரும்பாறை. அதன் விரிசல்களில் முளைத்த மரங்களின் வேர்களை மிதித்து தொற்றி ஏறவேண்டியிருந்தது. டாக்டர் சற்று சிரமப்பட்டார்.
‘இது ஓர் எரிமலைக்குழம்புப் பாறையாக இருக்கலாம் ‘என்றார் டாக்டர் ‘நல்ல கரும்பாறை. தென்தமிழ்நாட்டில் பல மலைகளில் இம்மாதிரி உறுதியான பாறைகள்தான் இருக்கின்றன ‘
‘மேலே உச்சி வரை இதே கன்னங்கரிய பாறைதான். யானைச்சருமம் மாதிரி ‘
மேலே ஏறிச்சென்றபோது வெயில் நன்றாக விரிந்து விட்டிருந்தது . நான்குபக்கமும் வானம் கவிழ்த்த கிண்ணம் போல இறங்க ஒளி கண்ணைக் கூசியது. ஆனால் உடலை தழுவிய குளிர்ந்த காற்று இதமாக இருந்தது.
‘இங்கே நின்றால் நூறுகிலோமீட்டர் தூரம்வரை பார்க்க முடியும். உண்மையில் மேற்கு மலைத்தொடர்களில் இதுதான் உயரமான சிகரம். கடல்மட்டக் கணக்குப்படித்தான் வேறு மலைகளைச் சொல்கிறார்கள் ‘ என்றார் நாராயணன் ‘உச்சிக்குப் போகலாமே ‘
‘கண்டிப்பாக ‘ என்றார் டாக்டர்.
‘சாமி, நம்ம கல்லன்சாமி … ‘ என்று தொரப்பன் சுட்டிக் காட்டினான். மலைச்சரிவில் ஒரு மரத்தடியில் கரியகல் ஒன்று இன்னொரு சப்பைக் கருங்கல்மீது வைக்கப்பட்டிருந்தது .
‘சரி, நீ போய்க் கும்பிட்டுட்டு வா ‘ என்றார் நாராயணன் ‘வாருங்கள் டாக்டர் ‘
மலைநுனியில் கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் பரப்புதான் இருந்தது. ‘இதோ .. இதுதான் நான் சொன்னது ‘என்றார் நாராயணன்.
சீராக வெட்டப்பட்ட ஓர் ஓடை. எட்டடி அகலம் .மூன்றடி ஆழம்.
‘ஓடை ‘
‘இல்லை. அதோ பாருங்கள்… ‘
இருபதடி தள்ளி அதேபோன்ற இன்னொரு ஓடை இணையாக இருந்தது.
‘ இதைத்தான் ஒரு விண்வெளி ஊர்தியின் சக்கரங்கள் பதிந்த தடம் என்கிறீர்களா ? ‘ என்றார் டாக்டர்.
அந்தத் தடம் நீண்டு சென்று, செங்குத்தாக வெட்டி இறங்கிய மலைச்சரிவில் பாய்ந்து ,வானை முட்டியது
‘முதன்முதலாக இதை பூச்சிமருந்து தெளிக்கும் ஹெலிகாப்டரிலிருந்து பார்த்தபோது அசந்து போய்விட்டேன் . ஒரு டயர்த் தடம்போலவே…. ‘
‘பிரமைதான் ‘
‘ஏன் அப்படி இருக்கக் கூடாது ? எப்படி இங்கே, இந்த உச்சியில் , இப்படி ஒரு தடம் வரமுடியும் ? சாத்தியமேயில்லை ‘
‘பல வாய்ப்புகள். ஒன்று இந்த பழங்குடிகள் செதுக்கியிருக்கலாம். ‘
‘இவர்களிடம் அப்படி ஒரு கதையே இல்லை . இவர்கள் எங்குமே அப்படி ஒரு சடங்கைச் செய்வதுமில்லை ‘
‘இயற்கையாகக் கூட வந்திருக்கலாம். பாறை பலவிதமான கனிமங்களின் கலவை .ஏதோ ஒரு கனிமம் காலப்போக்கில் மழையிலோ வெயிலிலோ கரைந்திருக்கலாம் ‘
‘இத்தனை கச்சிதமாகவா ? ‘
‘இதைவிட கச்சிதமான வடிவங்களெல்லாம் இயற்கையில் கண்டடையப்பட்டுள்ளன. பலகோடி பாறைத் தடங்கள் உள்ளன. ஒன்றிரண்டு இப்படியும் இருக்கலாம். ஆனால் அதைவிட ஏதோ புராதன மனித இனம் ஏதோ ஒரு தேவைக்காக செதுக்கிய ஒன்று என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். அதுதான் சிறந்த ஊகம் ‘
‘டாக்டர் இது ஒரு விண்ணூர்தியின் சக்கரத்தடம் என்ற ஊகத்தை நீங்கள் ஏன் பிடிவாதமாக மறுக்கவேண்டும் ? ‘
‘ஏனென்றால் அதில் இருப்பது நம் விருப்பம் அல்லது கற்பனை மட்டுமே. இதுவரை ஒரு தடையம்கூட கிடைக்காத நிலையில் அப்படி ஒரு முடிவுக்கு நாம் எளிதில் வந்துவிடக்கூடாது.மேலும் முக்கியமான ஒரு சிக்கல் இருக்கிறது … ‘
‘என்ன ? ‘
‘இந்தத் தடம் மூன்றடி ஆழம் இருக்கிறது. இது சிறு உரசல் தடமோ கீறலோ அல்ல. இப்படி பாறையில் ஆழப்பதியவேண்டுமென்றால் அந்த ஊர்தி மிகமிக எடை கொண்ட ஒன்று . அப்படிப்பட்ட கனமான ஊர்தி விண்வெளி வேகத்தில் பறக்கவேண்டுமென்றால் அது எந்தவகை உலோகத்தால் ஆனதாக இருக்கவேண்டும் ? அவ்வுலோகத்தின் அடர்த்தி நாம் அறிந்த எந்த உலோகத்தைவிடவும் பலமடங்கு அதிகமாகஇருக்கும் இல்லையா ? அப்படிப்பட்ட அடர்த்தியான தனிமம்தான் பாறையில் இப்படி அழுத்தமாகப் பதியும். சேற்றில் இரும்பு பதிவதுபோல… ‘
‘ஆம் ‘
‘அப்படிப்பட்ட எந்தத் தனிமமும் இன்றுவரை விண்வெளியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது இல்லை. பல்லாயிரம் விண்கற்களை சோதித்துவிட்டோம். கோள்களில் இருந்தும் துணைக்கோள்களிலிருந்தும் மாதிரித்தனிமங்கள் சேகரித்திருக்கிறோம். வால்நட்சத்திரங்களில் இருந்துகூட தனிமங்களை சேகரித்து ஆராய்ந்திருக்கிறோம். அப்படி ஒரு அதீத அடர்த்தி கொண்ட தனிமம் இருக்கக் கூடும் என்பதற்கான வாய்ப்பே தென்படவில்லை… ‘
‘எங்காவது இருக்கலாமே… விண்வெளியில் எங்காவது…. ‘
‘இல்லை. மூலக்கூறுகளின் கட்டுமானம் குறித்து இதுவரை நாம் அறிந்த எல்லா அறிவுமே அப்படி ஒரு தனிமம் இருப்பதற்கான வாய்ப்பை நிராகரிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலஇடப் பரிமாணத்தில் மூலக்கூறுகள் செறிவுகொள்வதற்கு ஓர்உச்ச எல்லை கண்டிப்பாக இருக்கிறது. அது முடிவிலியாக இருக்க முடியாது , ஏனெனில் அது பொருண்மை. ஆகவே செறிவுக்கு ஓர் உச்ச எண் இருக்கவேண்டும். இன்று நம்மால் ஓரளவு வகுத்துக் கொள்ளக் கூடியதுதான் அது. ஒருவேளை அது பிரபஞ்சத்தின் ஆதார விதிகளில் ஒன்றாக இருக்கலாம் ….ஆகவே இது சாத்தியமே இல்லை. வேண்டுமானால் நீ இதைவைத்து ஓர் அறிவியல்புனைகதை எழுதிப்பார்க்கலாம் . அதற்குமேல் இதற்கு மதிப்பில்லை. மன்னித்துக்கொள்… ‘
நாராயணன் ‘பரவாயில்லை. எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதைத் தீர்த்துக்கொண்டதும் நல்லதுதான். ‘என்றார்.
‘தண்ணீர் எங்கே ? ‘
ஓய்வெடுத்த பிறகு இருவரும் கிளம்பினார்கள் ‘டேய் தொரப்பா ‘
‘சாமி! ‘
‘என்னடா பண்ணினாய் இவ்வளவுநேரம் ? ‘
‘சாமி கும்பிட்டேன் சாமி ‘
‘வா,போலாம் ‘
‘போலாம்சாமி . ‘ தொரப்பன் தயங்கினான் ‘சாமி , கல்லன்சாமியைக் கும்பிட்டுட்டுப் போங்க சாமீ ‘
‘நேரமாச்சுடா. இப்ப வெயில் உச்சிக்கு வந்துடும். ‘ என்றார் நாராயணன்
‘என்ன சொல்கிறான் ? ‘
‘கல்லன் சாமியைக் கும்பிட அழைக்கிறான். இவர்களுக்குக் காடெல்லாம் சாமிதான். கல் மண் மரம் எல்லாமே சாமி… ‘
அவர்கள் தொரப்பனை அழைத்துகொண்டு இறங்கிச் சென்றார்கள். வெயில் உச்சியை நோக்கி செல்கையில் கதிர் பட்டபோது கல்லன்சாமியாக நிறுத்தப்பட்டிருந்த கரிய கல் மெல்லிய உள்ளொளி கொள்ள ஆரம்பித்தது. மரகதப்பச்சையும் நீலமும் கலந்த ஆழம் சுடர்கொள்ள அதன் விளிம்புகள் மிகமிகக்கூர்மையாக மின்னின.
***
1.Erich von Daniken : ‘The Chariot of Gods ‘
**