அழியாக்குரல்-சமஸ் கட்டுரைகள்

Tamil_writer_Samas

செய்தி என்பதற்கும் வரலாறு என்பதற்கும் என்ன உறவு? நேற்றைய செய்திகளால் ஆனது வரலாறு. இன்றைய செய்தியோ நேற்றைய செய்தியின் மீதுதான் வந்து விழுகிறது. அதை மறக்கவைக்கிறது. பொருளற்றதாக்குகிறது. நாலைந்து நாள் பழைய செய்தித்தாள்கூட என்ன இது என்ற துணுக்குறலையே அளிக்கிறது

இந்தப்பெரும் சவாலை ஏற்றுக்கொள்கிறான் செய்திஆய்வாளன். இன்றைய செய்தியை அவன் நேற்றைய செய்திகளால் ஆன ஒரு பெரிய பரப்பில் கொண்டுசென்று பொருத்துகிறான். செய்தியின் உடனடித்தன்மையை, முன்பின்னற்ற நிகழ்காலத்தன்மையை, வரலாற்றின் தொடர்ச்சியாக மாற்றிக்காட்டுகிறான்.

அப்படி மாற்றப்படாத செய்தி என்பது வெறும் தகவல். அதிலிருந்து சிந்தனைகள் கிளைப்பதில்லை. கொள்கைகள் உருவாவதில்லை. வரலாற்றில் வைத்துப்பார்க்கப்படாத செய்தி என்பது பரிசீலிக்கப்படாத செய்தியே

சமகாலச் செய்தி ஆய்வாளர்களில் தெளிவும் திட்டவட்டத்தன்மையும் கொண்ட குரல்களில் ஒன்று சமஸுடயது. ஒரு செய்தியில் இருந்து வரலாற்றுக்குச் சென்று வலுவான கேள்விகளையும் ஐயங்களையும் எச்சரிக்கைகளையும் முன்வைக்கும் கூரிய கட்டுரைகள் அவருடையவை. இத்தொகுதியில் உள்ள அனைத்துக்கட்டுரைகளையும் அவ்வகையில் வரலாற்றுவாதத்தை உருவாக்குபவை என்று சொல்லலாம்

உதாரணமாக கல்வியை தனியார்மயமாக்குவது பற்றிய கட்டுரை. இந்தியா ராஜீவ்காந்தியின் ஆட்சிக்காலத்தில் தனியார் மயம் நோக்கிச் சென்றது. நரசிம்மராவால் அப்போக்கு முழுமைப்படுத்தப்பட்டது. இந்தக் கடந்தகால வரலாற்றில் இந்தியக் கல்வி அமைச்சர் கல்வியை தனியார்கைக்கு கொடுப்பதைப்பற்றிச் சொன்ன அறிவிப்பை வைத்துப்பார்க்கிறது என்பதே அக்கட்டுரையின் அமைப்பு.

சாதாரணமாக ஒரு செய்தியை நாம் வாசிக்கும்போது அதை அப்படி ஒரு பின்புலத்தில் கொண்டுவைப்பதில்லை. அப்படி வைக்கும்போது சென்றகாலத்தில் தனியார்மயம் இங்கே என்னென்ன விளைவுகளை உருவாக்கியது என்று பார்க்கவேண்டியிருக்கிறது. அது நுகர்வுத்தளத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியது. அதேசமயம் மக்கள்நலத்தின் தளத்தில் உதாசீனத்தைக் கொண்டுவந்தது. கல்வியை ஒரு நுகர்பொருளாக ஆக்கவே தனியார்மயம் வழிவகுக்கும் என்ற இடம் நோக்கி நம் சிந்தனை செல்கிறது

அந்தக்கட்டுரையுடன் இயல்பாக இணைந்துகொள்கிறது மக்கள் நுகர்வை பெருக்கி உற்பத்தி வளர வழிவகுக்கவேண்டும் என்பதைப்பற்றிய ஜனாதிபதி பிரதீபா பட்டீலின் கருத்துகுறித்து சமஸ் எழுதும் கட்டுரை. நுகர்வுக்கு எதிரான பெரும் தரிசனமான காந்தியம் உருவான மண்ணில் எழும் ஓர் அறைகூவல் அது என்று பார்க்கையில் அதன் அர்த்தமே மாறுபடுகிறது

இவ்வாறு வலைக்கண்ணிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வரலாறாக விரியும் அனுபவத்தை அளிக்கின்றது என்பதனால்தான் இந்நூலை உதிரிக்கட்டுரைகளின் தொகுதியாகக் காணமுடியவில்லை. சமகாலத்தையே வரலாறாகப்பார்க்கும் அனுபவத்தை அளிக்கின்றன இவை. நம்மைச்சூழ நிகழ்வன பற்றிய ஒட்டுமொத்தப்பார்வையை உருவாக்கித்தருகின்றன

சமஸை ஒரு தாராளவாத இடதுசாரி என்று சொல்லமுடியும். இடதுசாரிகளின் மூர்க்கமான பொருளியல் குறுக்கல்வாதம் நோக்கி அவர் செல்வதில்லை. அனைத்தையும் ஏகாதிபத்தியச் சதி என்று நோக்கும் ‘போபியா’வும் அவரிடமில்லை. அவரை சென்ற நேரு யுகத்தில் இந்திய இலட்சியவாதத்தின் ஒளிமிக்க முகமாக இருந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட சோஷலிசக் கொள்கைகொண்டவராகவே இக்கட்டுரைகள் காட்டுகின்றன

ஆகவே அவை வளர்ச்சியை ஐயத்துடன் நோக்குகின்றன. அவ்வளர்ச்சி மக்கள் நலமாக ஆகதவரை அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. சர்வதேச அரசியலில் எப்போதும் மனிதாபிமானக் கொள்கையை முன்னிறுத்துகின்றன. மதச்சார்பின்மை போன்ற விழுமியங்களை உறுதியாகச் சார்ந்திருக்க முயல்கின்றன.

மறைந்த யூ.ஆர். அனந்தமூர்த்தி ஒருமுறை சொன்னார். ‘நான் நேருவியன். அழியும் உயிர். அழியும் உயிராக இருப்பதில்கூட ஒரு பெருமிதம் இருக்கத்தான் செய்கிறது’ மேலும்மேலும் வணிகமயமாகி, நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயக மனிதாபிமானம் சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற ஐயத்தை இக்கட்டுரைகள் எழுப்புகின்றன. அவை இல்லாமலாகிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தையும்

சமஸ்

சம்ஸ் எழுதிய யாருடைய எலிகள் நாம் என்ற நூலின் மதிப்புரை

துளி வெளியீடு
தொடர்புக்கு [email protected]

முந்தைய கட்டுரைஅஞ்சலி : எஸ்.பொ
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41