கோவை,வா.மணிகண்டன் மேலும்…

டியர் சார்,

ஒரு நீண்ட பதிலுக்கு நன்றி.

ஜெயமோகனை விஷ்ணுபுரம் வழியாகவோ அல்லது கொற்றவை வழியாகவோதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். தமிழின் சிறந்த படைப்பாளி ஒருவரை வேறு முறைகளில் எதிர்கொள்ளுதல் வெற்று அரசியலாகிவிடலாம். 

ஆனால் வெறும் இலக்கிய படைப்பு சார்ந்த செயல்பாடுகளில் மட்டும் நீங்கள் இயங்குவதில்லை. மத ரீதியான விவாதங்களை நீங்கள் முன்னெடுக்கிறீர்கள், இலக்கிய அரசியல் பற்றி தொடர்ந்து பேசி வருகிறீர்கள். சித்த மருத்துவம் தொடங்கி இந்திய தத்துவ மரபியல் வரை  பல்வேறு தளம் சார்ந்த இயக்கத்தில் இருக்கும் ஒருவரை அவரின் படைப்புகளை முன்வைத்து மட்டுமே எதிர்கொள்வது என்பது சாதாரண வாசகன் ஒருவனுக்கு சாத்தியமா?

வெறும் அச்சு ஊடகம் மட்டுமே இருந்த சமயத்தில் தீவிர இலக்கியத்தில் இயங்கும் படைப்பாளியை நோக்கி தொடர்ந்த வாசிப்பு பயிற்சியின் மூலமாகவே வாசகன் ஒருவன் வர முடியும். அப்படி வாசிப்பனுபவம் நிறைந்த ஒருவன் படைப்பாளியை நோக்கி வெற்று விமர்சனங்களை வைக்கும் போது அவை உருப்படியில்லாதவை என்று நிராகரிக்கலாம். 

ஆனால் வாசிப்பு என்பதே சிறிதும் இல்லாத மிக மிகச் சாதாரணமான வாசகர்கள் உலவும் தளமாகவே இணையத்தை பார்க்கிறேன். விகடன், குமுதத்தில் படித்தவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு, தொலைதூர பஸ்ஸில்  சே பற்றியும், கம்யூனிஸம் பற்றியும் உரத்த குரலில் பேசும் நபர்களை சந்திக்கும் அதே அனுபவம் தானே இணையத்தில் ஒரு தீவிரமான விஷயத்தை எழுதும் ஒவ்வொரு முறையும் நேர்ந்து கொண்டிருக்கிறது. இவர்கள் போகிற போக்கில் எந்தவிதமான விமர்சனத்தையும் ஒரு மின்னஞ்சலில் தட்டி விடுகிறார்கள். இந்த மாதிரியான வெற்று வார்த்தைகளுக்கு பதில் அளிக்கும் போது அவர்களை நீங்கள் நிராகரிப்பது இல்லை என்று ஆகிவிடுகிறது அல்லவா.

மூன்றாவதாக நான் சொன்ன வாதம் ஒரு பைசாவுக்கு பிரையோஜனமில்லாத விமர்சனக்கட்டுரையிலிருந்துதான் உருவினேன். ஆனால் அதையும் நான் குறிப்பிடக் காரணம், புத்தகக் கண்காட்சி சமயத்தில், ட்விட்டர் போன்ற தளங்களில் எழுதியவர்கள் நீங்கள் கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களை பற்றி திடீரென பேசுகிறீர்கள் என்று எழுதியதை கவனிக்க முடிந்தது. தமிழினியில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களை முன்னிலைப்படுத்துகிறீர்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டுதானே.

 

என் கேள்விகளின் சாரம்- விமர்சனங்கள் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் உங்கள் மீது சுமத்தப்படுகின்றன.அந்த விமர்சனங்களை நிராகரிப்பது பற்றியோ அல்லது உங்களிடம் அதற்கு பதில் இருப்பின் அவற்றை பெற்றுவிடுவதான முயற்சி.

 

பீடம் என்பது பற்றிய உங்களின் கருத்து பற்றி- ஒரு கலைஞனுக்கு எதற்காக பீடம் தேவைப்படுகிறது. பீடத்தில் இருக்க வேண்டியது படைப்பு மட்டுந்தானே. வாசகன் கைக்கு இலக்கிய பிரதி செல்லும் கணத்தில் இருந்து படைப்பாளி உதிர்ந்துவிடுகிறான் இல்லையா? படைப்பு தரும் குவியம் மட்டுந்தானே வாசகனுக்கு முக்கியம். பிறகு ஏன் கலைஞன் பீடத்தில் அமர்த்தப்பட்டு அவன் முன்னால் மற்றவர்கள் தலை வணங்க வேண்டும்? அதை நோக்கி நடப்பது எழுத்தாளனின் விருப்பமாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா?

 

நன்றி.

 

அன்புடன்,

மணி

அன்புள்ள மணிகண்டன்,

ஞானி அவரே தமிழியம் குறித்தும் மார்க்ஸியம் குறித்தும் கேட்டார் அல்லவா? அவர் சொன்னது இலக்கியம், பண்பாட்டு சார்ந்த விவாதங்கள் தேவை என்று மட்டுமே. அவை வெறும் அக்கப்போர் அலசலாக ஆகிவிடக்கூடாது என்றுதான். அது பலசமயம் உண்மையான விவாதங்களை இல்லாமலாக்கிவிடுகிறதல்லவா?

இணையத்திலும் பிறவற்றிலும் வெறும் வம்புகள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன என்பது உண்மை. அவற்றுக்கு  உரிய சுருக்கமான பதில்களை நான் சொல்வதுமுண்டு. காரணம் அவை இளம் வாசகனை வழிதிருப்பிவிட்டுவிடக்கூடாது என்பதனாலேயே. ஆனால் ஒருபோதும் அவற்றுடன் விரிவாக விவாதிப்பதில்லை. அந்த விவாதங்களுக்கு முடிவே இல்லை. பொறாமை, அரைகுறைவாசிப்பு, அரசியல் காழ்ப்புகள், மத-இன மாச்சரியங்களால் வரும் வம்புகளை ஒருபோதும் விவாதித்து வெல்ல இயலாது. அவற்றை உதாசீனம் செய்தே ஆகவேண்டும். நீங்களும் கூட அதைத்தான் செய்யப்போகிறீர்கள்.

யார் வேண்டுமானாலும் எதையும் விமரிசனம் செய்யலாம். நிராகரிக்கலாம். ஆனால் கொஞ்சம் நுண்ணுணர்வுள்ள வாசகன் உடனே கேட்க வேண்டிய கேள்வி ‘சரி நீ யார்?’ என்பதே. நீ என்ன வாசித்திருக்கிறாய், என்ன எழுதியிருக்கிறாய், அவற்றின் தரம் என்ன என்பதே. அந்த ஒரு கேள்வியே முக்கால்வாசி வம்புகளை சுருங்கச்செய்துவிடும்.

‘பீடம்’ என்பது என் சொல்லாட்சி அல்ல. அது பிறர் சொல்வது. அதற்கான பதில்தான் நான் சொன்னது. ஆனால் ஒரு கவிஞனாக நின்று யோசித்துப் பாருங்கள். மானுட வரலாற்றில் இன்று வரை எங்காவது படைப்பாளி இல்லாமல் பிரதி மட்டுமே ‘பீட’த்தில் அமர்ந்திருக்கிறதா? உலகமெங்கும் இன்றும் மீளமீளப் பேசப்படுவது படைப்பாளிகளைப்பற்றியே. சொல்லப்போனால் சிந்தனையாலார்களைவிட, அரசியலாளார்களை விட, தலைவர்களைவிட  இலக்கியவாதிகளைப்பற்றியே மானுடம் பேசிக்கொண்டிருக்கிறது.  ஏனென்றால் அதன்வழியாகவே அது தன்னை உருவாக்கி நீட்டித்துக்கொள்ள முடியும்.

படைப்பாளி யாரென தெரியாதபோது கூட அவனை உருவகித்துக்கொள்கிறது மானுட மனம். ஏனென்றால் மானுடத்திற்கு படைப்புகள் தேவை. படைப்புகள் என்பவை படைப்பாளியின் குரல்கள், அவன் ஆத்மா. படைப்பாளியிடமிருந்து படைப்பை பிரித்தே பார்க்க முடியாது. அது சாத்தியமே அல்ல. ஒரு கட்டத்தில் படைப்பாளி அவன் எழுதியவற்றின் குறியீடாக ஆவான். அவனே அவன் ஆக்கத்தின் பிரதிநிதியாக வரலாற்றில் நிற்பான்.

அதை இலக்கியவாதி இலக்காக கொள்ளலாமா, அது தேவையா, அது நல்லதா என்பதெல்லாம் விவாதமே அல்ல. அது மட்டுமே நடக்கும் அதுவே விதி என்பதே  உண்மை.

சென்ற காலத்தில் படைப்பை படைப்பாளியின் ஆளுமையில் இருந்து பிரித்து ஒரு மொழிக்கட்டுமானமாக அணுகும் முறை மேல்நாட்டில் எழுந்தது. அது படைப்பு மட்டுமே முக்கியம் என்றது. காரணம் அதற்கு முன்னால் படைப்பாளியை அக்குவேறு ஆணிவேறாகக் கழட்டிப்போடும் விமரிசனமுறைகள் கோலோச்சின என்பதே. மேல்நாட்டில் ஓர் இயக்கத்துக்கு எதிர்வினையாக அடுத்த இயக்கம் உருவாவது வழக்கம்.

இங்கே சில விமரிசகர்கள், படைப்பியக்கத்தை புரிந்துகொள்ளவோ ஒரு நல்ல படைப்பை வாசிக்கவோ திராணியில்லாத சிலர், அந்தக்கொள்கைகளை அரைகுறையாகக் கொண்டுவந்து இறக்கி படைப்பாளியையும் படைப்பியக்கத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதைப் பயன்படுத்தினார்கள். தமிழகத்தில் எப்போதுமே படைப்பியக்கத்துக்கு எதிரான அரைவேக்காட்டுப் பண்டிதக்குரல் உண்டு. அந்தக்குரலின் எதிரொலிகள் இப்போதும்  உள்ளன. அதுவே உங்கள் குரலிலும் உள்ளது

எங்கும் எந்த இடத்திலும் இக்கணம் வரை இலக்கியப்படைப்பாளியின் முக்கித்த்துவம் குறையவில்லை என்பதை நினைவில் வையுங்கள். அந்த விமரிசனமுறைகள்தான் காலாவதியாகியுள்ளன. ஏனென்றால் இது மானுடனின் அடிப்படை மனநிலை. எது முப்பது குடும்பங்கள் கொண்ட ஒரு சாதாரணப் பழங்குடிச் சமூகத்தில்கூட குலப்பாடகனை உருவாக்குகிறதோ அந்த அம்சமே இன்றும் இலக்கியவாதியை உருவாக்குகிறது.

ஒரு குலம், ஒரு சமூகம் அதன் கலைஞர்களின் மொழியால்தான் தொகுக்கப்படுகிறது. நினைவில் நீட்டிக்கப்படுகிறது. மனிதர்கள் பிறந்திறப்பா¡ர்கள், சமூகம் தொடர்ந்து செல்லும். அது நிகழ்வது மொழி வழியாக, மொழியில் இயங்கும் கலைஞர்கள் வழியாக. ஆகவேதான் அச்சமூகம் அவனுக்குரிய மதிப்பை அளிக்கிறது, அளித்தாகவேண்டும்.

அந்த போதம் உங்களுள் இருக்கும் வரைத்தான் நீங்கள் நான் கவிஞன் என்று நிமிர்ந்து நின்று சொல்லமுடியும். அப்படித்தான் பாரதி ‘தமிழ்ச்சாதிக்கு நாம் கவிஞன்’ என்றான். ‘கேளடா மானுடா’ என்று பாடினான். அந்த உணர்வை விமரிசகர்களின் முதிர்ச்சி இல்லாதக் சொற்களை நம்பி இழக்க வேண்டாம் என்றுமட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

‘நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் நான் ஒரு குலப்பாடகன் [பார்ட்]’  என்றார் ராபர்ட் ·ப்ரோஸ்ட். அதன்பின் உள்ளது அந்த சுயப்பிரக்ஞைதான்

ஜெ

முந்தைய கட்டுரைமலேசியா பயணம்
அடுத்த கட்டுரைவடக்குமுகம் ( நாடகம் ) – 1