வணக்கம் ஜெ,
நலமாக இருக்கிறீர்களா?
நீலம் மற்ற வெண்முரசு நாவல்களைவிட ஒப்பீட்டளவில் சிறிய நாவலாக இருந்தாலும், ஒவ்வொரு வாக்கியமாக வாசித்து இன்புற வைத்தது. இந்த சொல்வண்ணக் காவியத்தை மெல்ல உள்வாங்கி உள்வாங்கி சுவைத்து வாசிக்க வைத்தது. இடை இடையே நின்று கவித்துவத்திலும், அழகியலிலும்,படிமமாக விரிதலிலும் நெடு நேர வாசிப்பை யாசித்துக் கொண்டே இருந்தது நீலம். ஒருவனைத் தேர்ந்த வாசகானாக்கும் பயிற்சிக்களம் நீலம்.
ஆனால் பிரயாகை மீண்டும் மழைப்பாடல் நடைக்கே வந்துவிட்டது. வாசகனுக்கு. இப்போது வாசிப்பு மீண்டும் எளிதாகிவிட்டது. இதுவும் மழைபாடல் போல பெரிய நாவலாகும் துவக்கத்தைக் கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது. வாசிப்புப் பசிக்கு இந்நாவலும் சரியான உணவுதான். மேலும் மேலும் வாசிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கிறது.
நன்றி.
அன்புடன்,
கோ.புண்ணியவான்.
அன்புள்ள புண்ணியவான்,
நன்றி
நீலம் வேறுமனநிலை, வேறு பித்து.
பிரயாகை திட்டமிடும்போதே அதன் உள்ளடக்கம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இடங்கள் மனிதர்கள் எல்லாரும் தெரிந்தனர். ஆனால் எழுதமுடியவில்லை. பத்துப்பதினைந்து அத்தியாயம் முன்னதாக சென்றுகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இடைவெளி விட்டேன். ஆனால் நாட்கள் வீணாயின. நூற்றைம்பது பக்கம் வரை எழுதி அழித்தேன்.
இது ஒரு பெரிய புதிர்தான். சென்ற ஐம்பதாண்டுகளில் படைப்பு உருவாவதன் மர்மத்தைப்பற்றித்தான் இங்கே இலக்கிய விமர்சகர்களும் கோட்பாட்டாளர்களும் அதிகம் பேசியிருக்கிறார்கள். ஆனால் அந்த மர்மம் அங்கே அப்படியே தொடப்படாமல் இருந்துகொண்டிருக்கிறது. கோட்பாடுகளும் விமர்சனங்களும் நன்றாகத்தான் இருக்கின்றன.
பல அலைக்கழிப்புகளுக்கு பின் முதல் வரியை அடைந்தேன். விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை அணிகள் இல்லாத நேரடியான வரி. டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் முதல்வரி போன்றது. அந்த வரி அனைத்தையும் காட்டிவிட்டது. இதன் மொழி, அமைப்பு, உணர்வுநிலை அனைத்தையும். அங்கிருந்து ஆரம்பித்தபோது அனைத்தும் திறந்துகொண்டன
இது யதார்த்தவாதத்துக்கு உரிய கறாரான புறவய மொழியில் மகாபாரதச் செவ்வியலை நிகழ்த்தமுயலும் நாவல் என்று சொல்லலாம்
ஜெ