[ 4 ]
ஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கள் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக் கண்டார். இரவுகள் முழுக்க அவற்றைப் பெரிய நோட்டுப்புத்தகங்களில் முறைப்படி பகுத்தும் தொகுத்தும் எழுதிவைத்து அதன் மீது மீன்கொத்தி போல தொட்டுச் சீறி வளைந்தெழுந்து சுழன்று கரையோரமொதுங்கி மீண்டும் தொடப்பாய்ந்து அலைந்தார். கவ்விக் கொணரும் வரிகளெல்லாம் திருமூலரின் சொற்களென உணர்ந்த ஓர் இரவுக்குப் பிறகு திருமந்திரத்துக்கு நிலத்தடிநீர் சார்ந்து ஓர் உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ‘நீர் மூலமந்திரம்’ சொற்களை மொண்டு மொண்டு தன்னுள்தேக்கிக் கொண்டு நான்கு திசைகளுக்கும் தன்னிச்சையாக விரிந்து பரவிக் கொண்டே இருந்தது.
பிள்ளைக்கு தூக்கமின்மை நோய் வந்து முற்றி அவரது இமைகள் தடித்து கனத்து கண்கள் மீது விழுந்து கிடந்தன. நரைகலந்த தாடி எழுந்து மார்பின்மீது நிழலாட்டமிட்டது. உடல் மெலிந்து கூன்விழுந்து நடை கோழிக்கால் போலப் பின்னி கைகவிரல்கள் குளிர்ந்து மெலிந்து சொற்கள் உள்ளூர இழுபட்டு மௌனம் உதடுகளில் கனத்து, அவர் வாழ்ந்த உலகின் கண்களுக்குப் படாமல் அவர் மறைந்தே போனார். பெட்டிக்கடை அரங்குகளில் ஆலயத்திண்ணைக் கூட்டங்களில் அவர் வந்தால் காற்றுவந்து சென்றதுபோல எவர் கண்ணுக்குமே படாதவரானார். எவரும் குறுக்கே வராத பெருநில விரிவில் அவரது நாள்தோறும் விரிந்த நூலின் மூலச்சித்திரமாக நீர்வெளியின் கோடுகள்.
பின்பு நிலத்தடி வெளியின் அடுக்குகளை அவரது வேப்பங்குச்சி தீண்ட ஆரம்பித்தது. வேப்பங்குச்சியின் நீளத்தை நீட்டியும் குறுக்கியும் மண்ணில் புதைந்த உலோகங்களை கண்டடைய ஆரம்பித்தார். வேப்பங்குச்சியை சிறிய கயிற்றில் கட்டி விரல்களில் தொங்கவிட்டு அவற்றின் சுழற்சிமூலம் மண்ணுக்குள் அடுக்கப்பட்டிருந்த காலங்களைக் கண்டடைந்தார். புரவிகள் மிதித்த சுவடுகளை வேங்கைவரிநகத்தடங்களை நிணம் வடிந்த வடுக்களை. அழத்தில் வரியோடிய உலோகங்கள் என்பவை நீருக்கு முன்பு ஆழத்தில் ஓடிய நெருப்புநதி என அறிந்தார். நீர்த்தடம் ஊடாக நெருப்புத்தடம் பாவாக இழையோடும் மண்ணாழம். அதில் மந்திரத்தின் ஆழ்மௌனம்.
திருமந்திரத்தின் பக்கங்கள் ஒவ்வொருநாளும் அதிகரித்தபடியே சென்றன. “மந்திரம் படிச்சு மீண்டவன் எவம்லே?” என்று சச்சிதானந்தம்பிள்ளை சொன்ன சொல் அவர் காதில் ஒலித்தது. அவரது அறையெங்கும் மந்திரத்துக்கான நிலத்தடி விளக்கங்களின் வரைபடங்களும் கணக்குகளும் எழுதப்பட்ட தாள்கள் தகரப்பெட்டிகளில் சுவர்ப்பெட்டியடுக்குகளில் கனத்து ஏறி மட்கின. மண்ணான தாள்களிலிருந்து எழுத்துக்கள் அக்காற்றிலும் தரையிலும் பரவி எங்கும் நிரம்பின. ஊடே ஒருநாள் பிள்ளையின் அப்பா இறந்தார். கிடக்கப்படுத்தவர் கிடந்தொழிந்த பின் சூரையங்காட்டிடை சுட்டகணமே நினைப்பொழிந்து மீண்டும் திருமந்திர நிலத்துக்குள் புதைந்தார்.
‘கடலிலே கெடுத்து குளத்தினில் காண உடலுற்று தேடும் ஊழ்வினை சுமந்து நீர்தேடி நிலம் அகழ்ந்து’ சென்ற அக்காலத்தில் ஒருமுறை பொற்றையடி மலைமீது ஏறினார். வெயில்பழுத்துக்கிடந்த பாறைகளினூடாக நீரின் நெருப்பில் லீலைகளுக்குள் நகர்ந்து கொண்டிருந்தவர் பெரும்பாறை நிழலுக்குள் புழுதியில் அமர்ந்து ஒரு மாங்காயைத் தின்றுகொண்டிருந்த சடைமுடிச் சாமியாரைப் பார்த்தார். கரிய பற்கள் காட்டிச் சிரித்த சடைமுடியார் “உப்பு இருக்கா அய்யா?” என்றார்.
“இல்லியே சாமி” என்றார் சாஸ்தான்குட்டிப்பிள்ளை.
சடைமுடியார் உரக்கச்சிரித்து “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்றார்.
சாஸ்தான்குட்டிப் பிள்ளை “உப்பு கொண்டு நடக்கிறதில்லே சாமி” என்றார் “தண்ணிவேணுமானா சொல்லுங்க. ஊற்று காட்டித்தாறேன். சாமி நல்ல தண்ணி மேலேல்லா உக்காந்திருக்கு.”
சடைமுடியார் குபீரென்று சிரித்தார். ஒரு கண்களிலிருந்து மட்டும் நீர் வழிய ஆரம்பித்தது. தலையை ஆட்டி ஆட்டிச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஒரு கணம் எரிச்சல் கொண்டாலும் ஏன் வம்பு என்று சாஸ்தான்குட்டிப்பிள்ளை விலகி நடந்தார். பொதுவாக தாடிவைத்தவர்கள் வம்புபிடித்தவர்கள் என்று கற்றிருந்தார். கைப்பட்ட மாமணி தானிடைக் கைவிட்டு எதற்கு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்பது? இரு பாறைகளின்மீதேறி மறுபக்கம் இறங்கி வியர்வையை துடைத்தபோது வாயில் உப்புக் கரித்தது. அடுத்த அடிவைப்பதற்குள் பிடரி சிலிர்த்தது.
திரும்ப ஓடி சடைமுடியார் இருந்த இடத்துக்கு வந்தார். பாறை நிழலில் மாங்கொட்டை மட்டும் கிடந்தது. “சாமீ” என்றார் பாறை ஒன்று அக்குரலை எதிரொலித்தது. “சாமீ உப்பு கொண்ண்டாந்திருக்கேன் சாமீ” என்றார். அப்பகுதியில் அவர் இல்லை என்பதை அங்கிருந்த காற்றே சொன்னதென்றாலும் மீண்டும் பரிதாபமாக ”உப்பு இருக்கு சாமீ” என்றார்.
ஏதோ தோன்றி அந்த இடத்தின் மீது வேப்பம் குச்சி வைத்து பார்த்தார், குச்சி அதிர வெகுநேரமாயிற்று. அம்பலத்தில் அரனேற ஆயிரம்காதம் அடிநீளவேண்டியிருந்தது. அடியில் கனமான ஏதோ இருக்கிறது. ஆழம் மிக்க நீர்வெளி. அல்லது கனத்திருண்ட உலோகப்படுகை. கொதித்துருண்ட நெருப்பாலான செம்பு அல்லது இரும்பு…. குச்சி அதிர்ந்தது. அரனடி பட்ட அரங்கு வெடிபட திமிகெட குச்சி அவரையே உலுக்கியெடுத்தது. அதை விட்டுவிட எண்ணினார், உதறியும் அது உதிரவில்லை. அதில் ஒட்டிக் கொண்டு கனத்த பாறையுடன் நீராழத்திலிறங்குவதுபோல சென்றார். ஆனால் செல்லுந்தோறும் அழுத்தம் ஏறிய இருளன்றி ஏதுமில்லை. ஏதுமின்மையின் அழுத்தத்தில் செவிகளுடையத் தெறித்து மார்பு விம்மிப்புடைத்து சென்று சென்று சென்று காதமாயியரம் காலமாயிரம் கண்டு மீண்டார்.
விழித்தெழுந்து அப்புழுதியிலேயே அமர்ந்திருந்தார். மீண்டும் அதன்மீது வேப்பங்குச்சி வைத்துப் பார்த்தார். வேப்பின் கசப்பில் ஊறும் உச்ச அதிர்வில் அங்கே அறுபடாத பெருமௌனமே இருந்தது. பித்தெடுத்தவராக அங்கேயே விழுந்து கிடந்தார். பின் எழுந்தோடி திசைவெளிவரை விரிந்த மலையடிவாரத்து வயல்கள்மீது வெயிலின் அலைகளைக் கண்டு திரும்பி வந்து விழுந்தார்.
மூன்றாம் நாள் அவரிடம் சித்தமென எஞ்சியிருந்தது நான் என்ற சொல் ஒன்று மட்டுமே. அப்போது மீண்டும் சடைமுடிச்சாமி அங்கே வந்தது. அதே சிரிப்பும் அழுக்குமூட்டையும் ஊன்று கம்புமாக. காலடியோசை கேட்டு கண்விழித்து சாமியைக் கண்டபோதும் அவர் மனதில் ஏதும் பதியவில்லை. கண் கண்ணாகவே கண்டிருக்க படுத்திருந்தார்.
“ஊற்றிருக்கா அய்யா?” என்றார் சாமி.
பிள்ளையின் மனம் மெல்ல மிக மெல்ல நான் என்ற சொல்லில் இருந்து முளைவிட்டு இலைவிரித்து எழுந்தது. இருக்கிறேன் என்றும், இங்கே என்றும், இப்போது என்றும், அது என்றும், பின் அவை என்று படர்ந்து, இவை என்றும் என்றும் இவற்றுக்கப்பால் என்றும் பகுந்தது. மனம் மனதைப் பார்த்த கணத்தில் பதற்றமேறி எழுந்தமர்ந்து “சாமீ” என்றார்.
“ஊற்றிருக்கா அய்யா?” என்றார் சாமி. “தாகமிருக்கே…”
“இங்க தண்ணியில்ல சாமீ” என்றார் பிள்ளை.
“கலந்தது நீர் அது உடம்பினில் கறுக்கும். கலந்தது நீர் அது உடம்பினில் சிவக்கும். கலந்தது நீர் அது உடம்பினில் வெளுக்கும். கலந்தது நீர் அனல் காற்று அது ஆமே” என்றார் சாமி உரக்கச்சிரித்தபடி “..என்ன அய்யா சரியா? மந்திரம் படிச்சவிக. தந்திரம் தெரிஞ்சவிக. “
“சாமி வித்தை தெரிஞ்சவுங்க…” என்றார் பிள்ளை எழுந்து வணங்கி.
“சதுரகிரிமலையோரம் சாஞ்சிருக்கும் திருகு கள்ளி. திருகு கள்ளி பாலெடுக்க திரிஞ்செனடி சிலகாலம்” என்றார் சாமி உரக்கச்சிரித்தபடி. அருகே வந்து சிறுபாறைமீது கால்மேல் காலிட்டு அமர்ந்தார். துரிசுல் வலக்காலை தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளில் அங்கைகள் நீட்டி உருகியிடும் உடல் செவ்வே இருத்தி அமர்ந்த கோலம். வெயில் அவருக்குப் பின்னால் பொழிந்தனால் பிள்ளைக்கு கண் கூசியது. சாமி தன் மூட்டையிலிருந்து ஒரு மாங்காயை எடுத்து அவருக்கு நீட்டினார்.
பிள்ளை மாங்காயை வாங்கிய அக்கணமே தன் வயிற்றின் அமிலங்கள் கொந்தளித்தெழுவதை உணர்ந்தார். அக்கணமே அவர் வேறு மாம்பழம் வேறல்லாத சித்தியிலாழ்ந்தார். அக்கினி அணைந்ததும் நிமிர்ந்து பெருமூச்சுடன் சாமியைப் பார்த்தார்.
“ருசிச்சதோ?’ என்றது சடைமுடிச் சாமி
“ஆமா”
“ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன? அதன் தந்திரமென்ன?” சாமி சிரித்தது.
பிள்ளை மெல்ல மனதின் அலைகள் அடங்கி தரையில் அமர்ந்தார்.
“வீட்டுக்கு போமய்யா” என்றார் சாமி. “மலையிலே சமாதியாக நீரென்ன செந்நாயா மந்தியா மரநாயா?”
“நான் போகமாட்டேன்..”
“ஏன் ? பொதையல் கண்டீரோ?”
“ஆமா. பொதையல்தான். பொதைஞ்சிருக்கது என்னாண்ணு தெரியல்ல…”
“எங்க?”
“இங்கதான்..” என்றார் பிள்ளை “என் வேம்புக்கு இங்கெ உள்ளதென்னாண்ணு காணமுடியல்ல.”
“கூறு அது ஆகக் குறி£த்து நல் சக்கரம். கூறு அது செய்து கொடுத்தனன்…. ஏய்யா சக்கரத்தை அறிய சுழிமுனையைத் தொடலாமா? சக்கரமிருப்பது சுழற்சியிலே அல்லவா? சக்கரத்திலே சுழலாமலிருக்கும் சுழிமுனை சக்கரமேயில்லை அய்யா. “
பிள்ளை வெறுமே பார்த்திருந்தார்.
”இந்த இடத்தை என்னாண்ணு நெனைச்சீக அய்யா? இது புவிநரம்போடும் மூலாதார முழுச்சக்கரமல்லவவா? இந்த ஒரு வட்டத்துக்குள்ளே என்னென்ன ஓடுதுண்ணு அறிஞ்சிடுவீரோ? என்னென்ன சக்திகள், என்னென்ன தெய்வங்கள். சென்றதும் நடப்பதும் வருவதும். முக்காலமுமான இக்காலம். உலகைத்தேடி அலைஞ்சு எங்கே போகப்போறீர்? இந்த எடத்தை அறியும். இங்கே இருக்கு உம்ம ஞானம். மூலாதரம் கனிஞ்சு முளைக்கும் முழுநிலவு இங்கே உதிக்கும்….” சாமி உரக்கச்சிரித்து “பலமரம் கண்ட தச்சன் …” என்றபின் வெடித்து சிரித்து பின்னால் சாய்ந்துவிட்டார்.
பிள்ளைக்கு கால்விரல் சிலிர்த்து வேகம் உச்சந்தலைவரை ஏற அவர் கைகள் கூப்பின. கண்களிலிருந்துவழிந்த நீருடன் “உத்தரவு.. உத்தரவு.. இங்கே இருக்கேன். இதை மட்டுமே அறியுதேன்… சாமி அருள்போரும்….” என்றார்.
சாமி எழுந்தது “சரி, நான் வாறேன். மலையேறி மறுபக்கம் போனால்தான் கட்டைக்கு இண்ணைக்கு சமாதி…” என்று பாறைக்கு அப்பால் சென்றார்.
பிள்ளை சொல்லிழந்து நின்றார். மனம் பல திசைகளுக்கும் பாய்ந்தோடியது. கேட்க எண்ணிய ஒரு கேள்வி சொற்களைக் கண்டடையவில்லை. பின்பு சொற்களை மனம் தொட்டதுமே பரபரத்து பாய்ந்தோடி சாமியைத் தேடினார். பெரியபாறைக்கு அப்பால் மலைச்சரிவெங்கும் மனிதச்சலனமே இல்லாமல் வெறித்துக் கிடந்தன வெயிலும் காற்றும்.
பிள்ளை ஓர் ஐயத்துக்கு ஆளாகி அந்த மாங்கொட்டையை எடுத்து திரும்பித்திரும்பி பார்த்தார். அது பொருண்மையுடன்தான் இருந்தது. சுற்றும் பார்த்து நிலத்துநீரின் சுழி ஒன்றை தோண்டி மீட்டு அந்த ஈரத்தில் அதை நட்டார். புதைந்த விதையின் உள்ளே மெல்ல ஒரு சுருள் தன்னை விரித்துக் கொண்டு எழுந்து ‘நான்’ என்றதைக் கேட்டார்.
மறுநாளே திரும்பிவந்து தனக்கிருந்ததை எல்லாம் கைவிட்டு மலை மீது ஏறினார். அந்த மலைச்சரிவில் தன் கையாலேயே சிறுவீடு ஒன்றைக் கட்டினார். அங்கே அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்க தந்நெறி சென்று தவமிருந்தார். குச்சியும் கோலும் இழந்து தத்துவம் நீக்கி மருள்நீக்கி தான் ஆகி பொய்த்தவம் நீக்கி காவலிருந்தார். ஈராறுகால் கொண்ட புரவி தன்னை தாண்டிச்செல்லும் குளம்படிகளை கேட்டுக்கொண்டு மெல்ல மெல்ல முதிர்ந்தொடுங்கினார்.
[மேலும்]