கீதை தத்துவநூலா?:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்
           ராம் அவர்கள் குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம்  கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் பற்றி கேட்டபோது நானும் எப்படி அதன் சிறப்பை கூறுவது எனத்தெரியாமல் தவித்தேன். அதன் இலக்கிய அழகை அவருக்கு ஒருவாறு கூறினேன் என்றாலும் அதன் தத்துவ விளக்கத்தை என்னால் கூறமுடியவில்லை. அதற்கான உங்கள் விளக்கத்தை படிக்க நானும் காத்திருக்கிறேன். கீதைக்கான தங்கள் பதிலுரை எனக்கு மிகவும் ஏற்புடையதாக இருந்தது.
    கீதை தத்துவநூலா என அவர் வினவியுள்ளார். கலை கலைக்காகவே என்பதைப்போல் தத்துவம் தத்துவதிற்காக மட்டுமே எனக்கூறினால் அது தத்துவ நூலன்றுதான். நடைமுறைப்படுத்தாத தத்துவம் எதற்காக? தத்துவம் அன்றாட வாழ்வில் செய் அல்லது செய்யாதே என வழிகாட்டுதலை கூறக்கூடாது என்றால் தத்துவத்தின் பயன் தான் என்ன? மனிதன் தத்துவத்தின் பக்கம் செல்வதே எதைச் செய்யவேண்டும் எனத்தெரியாமல் போய்விடும் போதுதான். ஒரு நல்ல தத்துவ நூல் நேரடியாக சொல்லாமல் ஒவ்வொரு தருணத்திற்குமான முடிவை அவனே குழப்பமின்றி  எடுக்கும் அளவிற்கு அவனுக்கு மனத்தெளிவை அளிக்கவேண்டும். கீதையில் தன் மனக்குழப்பத்தை விவரமாக விளக்கி அர்ச்சுனன் தான் என்ன செய்யவேண்டும் எனக்கேட்கும்போது கண்ணன் முதலில்  நேரடியாக  போர் செய் என்றுதான் கூறுகிறான். ஆனால் அர்ச்சுனன் அதை ஏற்காமல் போகவே கீதை விளக்கம் தேவைப்படுகிறது.  கீதை ‘பத்து கட்டளைகள்'(Ten commandments) போன்றது அல்ல. ஆனாலும் ஒருவன் தனக்கான ‘கட்டளை களை’ தானே நேரத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளும் தெளிவையும் தகுதியையும் பெற  கீதை உதவுகிறது.
        கர்மவினை மற்றும் மறுபிறவி போன்ற நம்பிக்கைகள்  கீதையில் உள்ளன. ஆனாலும் அவை கருதுகோள்கள்(postulates) தான். அவற்றை ஒருவர் ஏற்றுக்கொள்ளாமலேயே கீதையை படிக்கலாம். கீதை இந்து தத்துவ தளத்தில் கால் பதிந்து எழுந்து நிற்கிறது. இந்து மத நம்பிக்ககைகளை மறுத்து எழுந்த நூல் அல்ல. அதற்கு தத்துவார்த்தமான விளக்கமாக அமைந்ததே இந்நூல்.
         கீதைக்கு பல்வேறு உரைகள் பல்வேறு நோக்கில் எழுதப்பட்டிருப்பதே அது ‘புனித நூல்’ அல்ல எனக்காட்டுகிறது. மற்ற மத புனித நூல்களுக்கு இவ்வாறு  உரைகள் எழுதப்படவில்லை என்பதை காணலாம். கடவுளின் வாயிலாக வந்தது என கீதையை யாரும் வியாபாரம் செய்ததாக எனக்கு தெரியவில்லை. தீவிர வைணவர்களிடம் கூட வேத மந்திரங்கள், ஆழ்வார் பாடல்கள் அளவிற்கு கீதை ஒன்றும் பிரபல்யமாக இருப்பதாக தெரியவில்லை. கீதையை வணங்குவதை கூட ஒருசிலர் தான் செய்கிறார்கள். ஞானமார்க்கத்தில் ஈடுபடும் ஒருசிலர் தான் கீதையை சிறப்புணர்ந்து படிக்கிறார்கள். ஜோதிடம், நவக்கிரக கோவில்கள், பரிகாரத்தலங்கள் எனச்செல்லும் வெற்றிகரமான வியாபாரத்தில் கீதை நுழையவே முடியாது.

‘எந்த ஒரு விஷயத்தையுமே தத்துவப்பார்வையில் முனைந்து முயன்றால் அதையே தத்துவமாக்கிவிடலாம் ‘ என்பது உண்மை தான். அதைப்போலவே எந்தவிதமான ஆழ்ந்த தத்துவத்தையோ பேருண்மையையோ மேலோட்டமாக கருத்தூன்றாமல் பார்த்தால் அது வெறும் வார்த்தைக் குவியலாகத் தோன்றிவிட நேரிடும். அதனால் எற்படும் நஷ்டம் அந்த தத்துவத்திற்கல்ல நமக்குதான் என்பதும் உண்மையே.

அன்புடன்
த.துரைவேல்

***

அன்புள்ள ஜெயமோகன்

கீதையின் முகப்பு பற்றிய கட்டுரையிலேயே எனக்கு எதிர்பார்ப்பு இருந்தது. கீதையைப்பற்றி நீங்கள் வ்விரிவாக எழுதுவீர்கள் என்று. அருமையான தொடக்கம். மிக நுண்மையான உரை. நவீன நடையில்ந் அவீன மனம் ஒன்று எழுதிய உரை என்ற எண்ணம் ஏற்பட்டது. அர்ஜுனனை அறியாமையில் இருந்தவன் கிருஷ்ணன் ஞான ஒளி கொடுத்தான் என்று மீண்டும் மீண்டும் புராணப் பிரசங்கிகள் சொல்வதைத்தான் நான் பகேட்டிருக்கிறேன். அர்ஜுனன் லௌகீக ஞானத்தின் உச்சியில் இருக்கிறான், கிருஷ்ணன் அதற்குமேல் சென்று பரமார்த்திக ஞானத்தை சொல்கிறான் என்ற விளக்கம் முக்கியமானது, பல தெளிவுகளைதாளிப்பது. உங்கள் கவனமும் நேர்மையும் கொண்ட ஆய்வு மிக முக்கியமானது. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கிருஷ்ணன்
8888

அன்புள்ள ஜெயமோகன்

கீதையைப்பற்றிய விவாதங்கள் உங்கள் இதழில் மிகச்சிறப்பான ஒரு இடம் வகிக்கின்றன. எனக்குத்தெரிந்து இத்தனை விரிவாக கீதையை விவாதிப்பது சமீபத்தில் நடந்தது இல்லை. எனக்கு ஒரு நண்பர் இந்த இணையத்தை காட்டிநார். மிக்க நன்றி. இதேபோல குறளையும் நீங்கள் விவாதிக்கவிருக்கிறீர்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அவையெல்லாம் நம்முடைய கானன்கள் அவற்றை பலகோணங்களில் நாம் விவாதிக்க வேண்டியிருக்கிறது.

கீதை தூயதத்துவமாகவே நம்முடைய மரபில் நெடுநாட்களாகக் கருதப்பட்டிருக்கிறது. உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை என்றுதான் பிரஸ்தானத்ரயம் வகுக்கப்பட்டிருக்கிறது. தத்துவத்தில் கீதைக்குரிய இடத்தை யாரால் மறுக்க முடியும்? நீங்கள் சொல்வதுபோல நம்முடைய புராணப்பிரசங்கிகள் கீதையை ஒரு பக்திநூலாக ஆக்கிவிட்டார்கள்.

கீதையில் உள்ள தத்துவத்தைப்பற்றி அறியவேண்டுமானால் அதில் உள்ள சரணாகதித் தத்துவத்தைபப்ற்றி மட்டும் பார்த்தால்போதும். கீதை நம்முடைய பிரசங்கிகளால் மூன்று தனிச்செய்யுட்களாக குறுக்கப்பட்டிருக்கிறது. தர்ம சம்ஸ்தாபனாத்யாய சம்பவாமி யுகே யுகே, கர்மண்யே வாதிகாரஸ்தே ந ·பலேஷ¤ கதாசன, சர்வதர்மான் பரித்யக்ஞ மாமேகம் சரணம் விரஜ [ தர்மத்தை நிறுவ நான் அவதாரம்செய்கிறேன், கடமையைச்செய் பலனை எதிர்பாராதே, எல்லா செயல்களையும் விட்டுவிட்டு என்னை சரணடை] ஆனால் இந்தச் சுருக்குதல் கீதையை மிகமிக எளிமையாகப் புரிந்துகொள்ளும் இடத்துக்கே கொண்டுசெல்லும். கீதை கடவுள்கோட்பாட்டை மையமாக்கியதல்ல, அது கர்மத்தை வலியுறுத்தவுமில்லை, அது சரணாகதியைச் சொல்லவுமில்லை. கீதையின் தத்துவ விவாதத்தில் வரும் வரிகள்தான் இவை. கீதை அந்த விவாதம் மூலம் முழுமையாக எதைச் சொல்கிறது என்பதே முக்கியம். அதை உணர நாம் தத்துவ நோக்கில் கீதையைப் பயின்றே ஆகவேண்டும்

நீண்டநாட்களாக தமிழ்நாட்டில் கீதை மற்றும் உபநிடதங்கள்போன்ற நூல்களை ஒன்று வடமொழி– ஆரியக்குப்பை என்று நிந்தனை செய்தல் அல்லது பக்திகாட்டுதல் என்ற இரு வழிகளிலேயே நம் மக்கள் பார்த்து வருகிறார்கள். ஆழமாகப் புரிந்துகொள்ளும் முறையை நீங்கள் இந்த இணையத்தில் செய்ய முயல்கிறீர்கள், நல்வாழ்த்துக்கள்.

சடகோபன்
திருச்சி

8888

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் சமீபத்திய கீதை கட்டுரை, சிறப்பாக அமைந்துள்ளது.

அர்ஜுனன் போரே புரியாமல் தியாகம் செய்து இருந்தால் கூட,

மகாபாரதம் ஒரு சிறந்த tragedy ஆக மிளிர்ந்து இருக்கும் என நான் நினைத்தது உண்டு.

பலவேறு தரிசனங்களையும் பலவேறு கதா பாத்திரங்களின் இடத்தையும்

நன்றாக யோசித்து எழுதிய எழுத்து, பல முறை வாசிக்க தூண்டுகிறது.

காட்சி சார்ந்த புதிய (நவீன) உபகரணங்கள் (டிவி, சினிமா போன்றவை), காட்சியின் அமைப்பையும்,

அதன் நுணுக்கங்களையும், மற்றும் மாற்று நோக்குகளையும் (alternative viewpoints)  பரிசீலிக்க உதவுகிறது.

இதன் தாக்கம் உங்கள் கட்டுரைகளில் தெரிகிறது.

உங்களது ஆழ்ந்த வாசிப்பு, அதன் வெளிப்பாடு, எங்களிடம் ஆழ்ந்த வாசிப்பை தூண்டுகிறது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

அன்புடன்
முரளி

முந்தைய கட்டுரைஅர்ஜுன விஷாத யோகம் : மகத்தான மனத் தடுமாற்றம்
அடுத்த கட்டுரைகிறிஸ்தவர் மீது தாக்குதல்:கடிதங்கள்