அன்புள்ள ஜெயமோகன்,
Paul Theroux எனக்கு மிகவும் பிடித்த பயண எழுத்தாளர்களில் ஒருவர். நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். தெரூ, வி. எஸ். நைபாலின் இளமைக்கால நண்பர். இருவரும் இடி அமீனுக்கு முந்தைய உகாண்டாவில் அறிமுகமாகி நண்பர்களானவர்கள். பால் தெரூ, நைபாலைக் குறித்து கடினமான விமரிசனங்களுடன் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். அதெல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
1975-ஆம் வருட காலத்தில், தெரூ இந்திய மற்றும் ஆசியப் பகுதிகளில் ரயில் பயணம் செய்து The Great Railway Bazaar ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்த காலகட்ட இந்திய, இலங்கை நிலவரங்களை மிகத் துல்லியமாக நமக்கு அறிமுகப்படுத்தும் அந்தப் புத்தகத்தில் தெரூ ஒரு இந்திய இளைஞனை ரயிலில் சந்திக்கிறார். வெள்ளையரான அவரை சினேகத்துடன் நட்பு கொள்ளும் அந்த இளைஞன் தான் ஒரு அமெரிக்கன் என அறிமுகப்படுத்திக் கொள்கிறான். துல்லியமான உச்சரிப்புடன் அமெரிக்க ஆங்கிலம் பேசும் அவனுடன் தெரூ உரையாடுகிறார். நல்ல கல்வி கற்றவனான அவன் எதற்காக இந்திய ரயில்களில் ஏறக்குறைய ஒரு பிச்சைக்காரனைப் போலப் பயணம் செய்கிறான் என்று அவருக்கு ஆச்சரியம். அதற்கான காரணத்தைக் கேட்கிறார்.
மருத்துவர்களாகவோ அல்லது வேறொரு உயர்ந்த பதவியிலோ அமெரிக்காவில் பணிபுரிந்த அவனது பெற்றோர் சிறிதளவும் இந்தியத்தன்மை படாமல் அந்த இளைஞனை ஒரு முழு அமெரிக்கனாக வளர்த்தனர். ஒரே ஒருமுறை கூட அவனை அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரவுமில்லை; அவனது இந்திய உறவினர்களை அவனுக்கு அறிமுகம் செய்யவுமில்லை. இந்தியாவைக் குறித்து ஏளனத்துடனேயே அவனுக்கு அறிமுகம் செய்த அவர்கள், அவனை உயர்ந்த கல்வி கற்க வைக்கிறார்கள். அப்படியே அவனது பெற்றோர்கள் இறந்தும் போகிறார்கள். அந்த இளைஞனின் வாழ்வை வெறுமை கவ்வுகிறது. அவனால் ஒரு வெள்ளை அமெரிக்கனைப் போல வாழவும் முடியவில்லை. இந்தியனாகவும் இருக்க இயலவில்லை. அடையாளமிழந்து தத்தளிக்கும் அவன் எப்படியாவது தனது பெற்றோர்களின் உறவினர்களைக் கண்டடைய வேண்டுமென்று இந்தியாவெங்கும் சுற்றித் திரிவதாகக் கண்ணீருடன் சொல்கிறான்.
படித்துக் கொண்டிருக்கையில் என் கண்களை சடாரென்று திறந்துவிட்ட ஒரு நிகழ்வு இது. அடையாளமிழந்த ஒரு மனிதனின் வாழ்வு அவல வாழ்வுதான். நீங்கள் சொல்வது போல எத்தனைதான் ஒட்டினாலும், உரசினாலும் வெள்ளை அமெரிக்கன் மற்றவர்களை தூரத் தள்ளித்தான் வைத்திருப்பான். அமெரிக்காவில் அடையாளமிழந்த சீன, ஆப்பிரிக்க, இந்திய இன்ன பிற நாட்டவர்களை நான் நிதமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக இந்தியர்களில் ஒரு சாரார், அதிலும் முக்கியமாக தமிழர்கள், தங்களின் குழந்தைகளை முழு அமெரிக்கர்களாக்கப் படாதபாடு படுகிறார்கள். இந்தியா குறித்த ஏளனமும், கேலியும் கிண்டலும் அவர்களின் பேச்சில் பட்டுத் தெரிக்கும். அதனையே அவர்களின் குழந்தைகளுக்கும் சொல்லித்தருகிறார்கள். சொல்லிப் புரிய வைக்கவே முடியாத மனோபாவமுடைய அவர்களை நினைத்துப் பரிதாபப் படுவதனைத் தவிர்த்து வேறொன்றும் சொல்வதற்கில்லை.
காரணமே இல்லாமல் இவர்களில் பலர் இந்திய விரோதிகள். இந்தியா பல துண்டுகளாக சிதறிப் போகவேண்டும் என்று நம்மிடம் வாதிடுபவர்களும் இவர்களில் உண்டு. இவர்களின் விசித்திர மனோபாவத்தை புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருப்பேன். இந்திய தேசம் அளிக்கும் ஆன்ம பலத்தை இழந்த மறு நிமிடமே இவர்கள் செல்லாக் காசாகிவிடுவார்கள் என்பதனை இவர்கள் உணர்வதே இல்லை. அடையாளமிழந்து காணாமல் போன அமெரிக்க செவ்விந்தியர்களை இவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. அறிந்திருந்தால் இவ்வாறு பேச மாட்டார்கள்.
இன்னொருபுறம் அமெரிக்க வாழ்க்கையின் அழுத்தம் என்னைப் போன்ற பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு அவர்களின் இந்தியத்தன்மையைப் பேணுவதனைக் குறித்து சொல்லித்தர இயலாதவர்களாக்கி வைத்திருக்கிறது. முடிந்த வரையில் கோவில்களுக்கும், இந்தியக் கலை நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் சென்றாலும் அமெரிக்காவில் வளரும் பிள்ளைகள் அதனை உணர்வதில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. அமெரிக்கவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இந்தியர்கள் எண்ணிக்கையில் அதிகமிருக்கும் பகுதிகளில் சிறிதளவு பரவாயில்லை. அமெரிக்காவின் மத்தியபகுதியை நோக்கிச் செல்லச் செல்ல அதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. என்னால் இயன்றவரையில் எனது குழந்தைகளை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்தியாவிற்கு அழைத்து வருகிறேன். உறவினர்களை அறிமுகப்படுத்தி அந்த உறவினைப் பேண முயற்சி செய்கிறேன். இதுவெல்லாம் போதாது என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் வேறு வழியில்லை.
இந்தியாவிற்குத் திரும்பிவிடலாமா என்று யோசனை செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதாவதொன்று நடந்து அதனை ஒத்திப் போடச் செய்து விடுகிறது. அனேகமாக என்னால் இனிமேல் இந்தியாவிற்கு வரமுடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆன்மாவை என் பிறந்த தேசத்தில் வைத்துவிட்டு அடுத்த தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறேன். என்னைப் போலவே இன்னும் பலரும்.
“ஒருவன் வீட்டை விட்டு வெளியேறுவது எளிது. ஆனால் திரும்பி வருவதுதான் கடினம்” என்று எஸ். ராமகிருஷ்ணன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் சொன்னதைக் கேட்டிருக்கிறேன். எத்தனை சத்தியமான வார்த்தைகள் என்று அவ்வப்போது நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருப்பேன். எனது இருபத்தி இரண்டாவது வயதில் வீட்டை விட்டுக் கிளம்பினேன். எத்தனை முயற்சித்தும் இன்றுவரை என்னால் திரும்பப் போக முடியவேயில்லை!
அன்புடன்,
நரேந்திரன்