ஈராறுகால் கொண்டெழும் புரவி – 2

[2]

நாகம்மையை கல்யாணம் செய்துகொள்ளும்போது சாஸ்தான்குட்டிப்பிள்ளைக்கு இருபத்தெட்டுவயது. நாஞ்சில்நாட்டில் பிள்ளைவாள்களுக்கு மீசையின் பட்டு கனக்கும் முன்னரே மூத்தபெண் பச்சைமாவு தின்பதெல்லாம் சாதாரணம். ஆனால் பிள்ளைக்கு அவர் திருநெல்வேலியில் புலவருக்குப் படிக்கும்போது வசக்கேடாக மண்டையிலடித்துவிட்ட சைவசித்தாந்தமும் சித்தமருத்துவமும் அந்த உறுப்பு ஒரு திரவவடிகால் என்பதற்கப்பால் பொருள் கொள்ளமுடியாமல் செய்தன.

எல்லாம் தற்செயல்தான். திருநெல்வேலி கொக்கிரக்குளத்தில் அவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுக்கூரை சரிந்த குளுளுத்த கல்திண்னையில் கல்திண்டில் சாய்ந்து அமர்ந்திருந்த, சட்டையற்ற உடலில்   சாம்பல் தடியங்காய் போல திருநீற்றுக்கோலம் பூண்ட, வயோதிகர் ‘தம்பி செத்த வாப்பா’ என்றழைத்தார் . பிள்ளை சைக்கிளை நிறுத்தியைத் தட்டி நிற்கவைத்துவிட்டு வேட்டியை தழைத்துக் கொண்டு சென்றார்.

கிழவர் “ஒண்ணுமில்லே… இந்த தட்டை எடுத்து செத்த உள்ள எடுத்துக் குடுத்திட்டுப்போ. வீட்டிலே பொம்புளயாளுக மட்டும்தான் பாத்துக்கோ. மவன் எடுத்து வச்சது, அவன் வேலைக்குப்போயிட்டான். நம்ம சிவபூசை முடிய வெயிலேறிடும். பொம்புளைக தூக்கிக்கிடாது .. வெலயுள்ள பொருளாக்கும்…” என்றார்.

துலக்கப்பட்ட  செம்பாலான மாந்தளிர் நிறத் தாலம் மீது கொட்டைத்தேங்காய் அளவுள்ள சிறிய உலோகச் சிவலிங்கம் இருந்தது. புராதன வெள்ளி அல்லது அலுமினியக்கலவைபோல ஒரு நிறம். அடிக்கடி துலக்கமாட்டார்போல என்று எண்ணிக் கொண்டார்.

“டே, பாத்தா சைவமா இருக்கியே… என்னடே கொலம்?” என்றார் பெரியவர்.

“நாஞ்சிநாட்டுச் சைவம். “

“அப்பம் நெருங்கிட்டோம் ..எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே….. என்னா ? மக்கத்தாயமா? “

“ஆமா”

“அப்ப சரி. கேட்டுக்குங்க மாப்பிளே, மருமக்கத்தாயம்ணாக்க நாயருக்க கோமணவாலுண்ணுல்லா அர்த்தம். .. சரி வாங்க”

தாலத்தை சாதாரணமாகத் தூக்கப்போன சாஸ்தான்குட்டிப்பிள்ளை ஒருசக்தி புறங்கழுத்தில் அடித்து கீழே அழுத்துவதாக உணர்ந்தார். அத்தனை கனமிருந்தது. இரு கையாலும் தூக்கினாலும் மூச்சை சுளுக்கவைக்குமளவுக்கு எடை. கழுத்தெலும்புகள் புடைக்க அவர் அதை தூக்கியதும் பெரியவர் எழுந்து விந்தியபடி நடந்து “வா… அறைக்குள்ள கொண்டுட்டு வைக்கணும். என்னான்னா அறையில கெழக்குபாத்து நடையில்ல பாத்துக்கோ ” என்றார்.

அறைக்குள் இருந்த சிறுமேடையில் தாலத்தை வைத்ததும் வியர்வையும் மூச்சுத்திணறலுமாக சாத்தான்குட்டிப் பிள்ளை இடுப்பில் கைவைத்து நின்றார். “வெள்ளி இம்பிடு கனமா இருக்கு?”

“வெள்ளியா ? நல்ல கத. இது பஞ்சபாஷாணம்லா?”

“அப்டீண்னா?”

“அஞ்சுவகை உலோகங்கள். சரியாச்சொன்னா உலோகங்கள் இல்லை. உலோகங்களை பஸ்பமாக்கி அப்றமா பாஷாணமாக்கணும். எப்படிச் சொல்றது?  நீ ஒண்ணு பண்ணு… காலம்பற தினம் ஒருநடை இந்தப்பக்கமா வா. சித்தமருத்துவம்னாக்கா வெறும் சிகிழ்ச்சை இல்லை. சித்தத்தை வென்றவன் சித்தன். சித்தமருத்துவம் சித்தமெனும் நோய்க்கு சித்தத்தாலான மருந்து. கல்யாணமாய்ட்டுதோ?”

அப்படித்தான் சச்சிதானந்தம்பிள்ளையின் சீடராக ஆகி ஊத்தைக்குழி, உப்பிருந்தபாண்டம் முதலிய சொற்களைக் கற்றுக் கொண்டார். அதிகாலையில் எழுந்து குளிரக்குளித்து விபூதி அணிந்து, சைக்கிளில் ஏறி, வாசல்தெளிக்கும் தெருப்பெண்டிரின் சாணிவீச்சுக்கும் தெருநாய்களின் உறுமல்களுக்கும் தப்பி, இருள்பிரியாத நேரத்தில் சச்சிதானந்தம்பிள்ளையின் வீட்டுக்கு வந்து சேர்வார். அரைமணி நேரம் சித்தாந்தப் பயிற்சியும், தொடர்ந்து வடிகட்டிக் காப்பியும். பிறகு சித்தமருத்துவமும், பரசமய கண்டனமும், சிற்றுண்டியும். முடிந்து மண்டைகனக்க பள்ளிக்குச்சென்று முதல்வகுப்புப் பிள்ளைகளுக்கு  கொன்றைவேந்தனை பாடச்சொல்லி உத்தரவிட்டு பிரம்பை மும்முறை மேஜைமீது ஓங்கியடித்து விட்டு கண்ணயர்வார். ஆறுவது சினம் தாண்டும்போதே குரட்டை ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

சச்சிதானந்தம்பிள்ளை பழைய வக்கீல் குமாஸ்தா. ஓய்வுநேரத்தில் பாலத்தடியில் சாஸ்திரம்பேசும் சகபிள்ளைகளுடன் சரசமாகப்பேசிக் கொண்டிருக்கையில் ஒருநாள் சண்முகத்தேவர், அவர் தேவரானாலும் தற்காலிகமாக பிள்ளைப்பருவத்திலிருந்தார், பாடிய திருமந்திரத்தால் நெக்குருகி சைவசித்தாந்தத்தில் விழுந்தார்.  ‘நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார் பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன்கெடும். கோல் ஒன்று பற்றினால் கூடாப்பறவைகள். மால் ஒன்றுபற்றி மயங்குகிறார்களே’. அன்றிரவே பால்பற்றும் செயலை விட்டொழித்து கோல்பற்ற ஆரம்பித்தார். பறவைகள் கூடுவது குறைந்தது. தாடிநரைத்தபிறகு அதுவும் மாதம் மும்மாரி என்ற கணக்கில் சுருங்கி வந்து மும்மாதம் ஒருமாரி போதுமென்றாயிற்று.. சித்தாந்தத்தின் தலை சித்து என்றுணர்ந்து அதிலிறங்கி, வைத்தியம் பழகி, ரசக்கட்டும் பாஷாணக்கட்டும் கற்று, ஊருலகில் வைத்தியர்சாமி ஆகி, எட்டுகோட்டை நிலமும் காரைவீடும் ஈட்டி, மூன்று பெண்களை கட்டிக்கொடுத்து, அன்பே சிவமாவதறிந்து அன்பேசிவமென திண்ணையிலமர்ந்தார்.

ரசக்கட்டுவரை கற்று தேர்ந்தபிறகுதான் சச்சிதானந்தம்பிள்ளையிடம் ஆசிவாங்கி சாத்தான்குடிப்பிள்ளை நாஞ்சில்நாட்டுக்குத் திரும்பினார். அதற்குள் பெண்பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்தார்கள். கடுமையான எதிர்ப்புகள் இருந்தாலும், மேலூர் மூத்தபிள்ளையும் தொழிவயலில் உதிர்ந்த நெல்பொறுக்கும் கஞ்சனுமான தந்தைசொல் தட்டமுடியாத சாத்தான்குட்டிப்பிள்ளை எட்டு கோலம்மைகளையும் மூன்று வடிவம்மைகளையும் இரு நாகம்மைகளையும் பெண்பார்க்க வைக்கப்பட்டார். கடைசியில் இரண்டாம் நாகம்மைக்கு சித்திரை எட்டாம்தேதி இருவகை பிரதமனும் புளிசேரியும் எரிசேரியும் மணக்கும் தட்டுப்பந்தலில் வெயில்கொளுத்தும் முன்மதியத்தில் மாலையிட்டார். சச்சிதானந்தம் பிள்ளைக்கு தகவல் சொல்லவில்லை.

முதலிரவிலேயே சொல்லவேண்டிய வஞ்சினச்சொற்களை பிள்ளை சேர்த்துக் கோர்த்து எதற்கும் இருக்கட்டுமென இருமுறை தெளிவாகச் சொல்லியும் பார்த்துக் கொண்டார். இலக்கணம்கூட சுத்தமாகவே இருந்தது. சாரதாதேவி, மிருணாளினீதேவி சரித்திரங்களுடன் சைவமணத்துக்காகக் கிள்ளிபோட்ட திருநீலகண்டர்.  அவரது பேச்சை நாகம்மை குனித்த தலை நிமிராமல் கேட்டுக் கொண்டிருந்தாள். சீக்கிரமே அவளுக்கு எல்லாம் ஒருமாதிரி புரிந்துவிட்டது. “வெளக்கை அணையுங்கோ”  என்று மட்டும் ரத்தினச்சுருக்கமாகச் சொல்லி அதை முடித்துவைத்தாள். வெயிலெழுந்த காலையில் “ஆருலே வெளக்கை போட்டது?” என்றுதான் பிள்ளை வள்ளென்று விழுந்தார். அத்தைமுறையான சுப்பம்மைப்பாட்டி “பய  இன்னி பத்துவரிசத்துக்கு ராத்திரிதாண்ணுல்லா நெனைச்சுப்போட்டான்…சீ எந்திரிலே மூதி” என்றாள்.

பல்தேய்க்கும்போது பிள்ளை மிகுந்த பரவசத்துடன் ஊத்தைக்குழியை உப்பிருந்த பாண்டத்தையும் பற்றிய வரிகளை உள்ளூரப் பாடிக் கொண்டார். “ஏம்லே ஒரு சிரிப்பு மொகத்திலே?” என்று கேட்ட  கோலப்பண்ணாச்சிக்கு “இல்லண்ணே இந்த சித்தனுக எல்லாம் அறிஞ்சனுபவிச்சுத்தான் எழுதியிருக்காக. என்னாங்குதீக?” என்றார்.

அதன் பிறகு இரண்டுவருடம் முட்டையிடப் பம்மும் கோழிபோல சமையற்கட்டைச் சுற்றுவதே பிள்ளையின் வேலையாயிற்று. ‘தீராத வயிற்றுவலியால்’ இடைவெளியின்றி விடுப்பு எடுத்து ‘கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில் ஆழ நடும்’ கலையறிந்து ஒழுகினார். இரண்டுவருடமாகியும் காய்விடாததைக் கண்டு மூத்தபிள்ளை மனைவியிடம் கேட்க அவள், ”சவம் கெடக்கான். அவன எங்கிணயாம் கெழக்க அடிச்சுவிட்டு மாசத்துக்கொருக்க வாற மாதிரி வச்சாத்தான் எனம் வெளங்கும். நாய் மோண்டதுமாதிரி மூச்சுக்கு முன்னூறுமட்டம் சொட்டுசொட்டா ஊத்திவச்சா என்னாண்ணு  முளைக்கும்?” என்றாள். கண்ணீரும் கம்பலையுமாக பிள்ளை சாத்தூருக்கு தற்காலிக மாற்றம் பெறப்பட்டு  அனுப்பப்பட்டார். ஆனால் இரண்டாவதுமாதம் நாகம்மைக்கு நாள் தவறியது. அதன்பின் அவர் திண்ணைக்கு அப்பால் அனுமதிக்கப்படவில்லை. கடிதோம்பிக் கோலோச்சும் கலையை அவரும் நம்பவேண்டியதாயிற்று.

பேறு எடுக்க ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகும் வழக்கம்  மேலூரிலேயே இல்லை. கண்டசாதியும் கண்டபிறகு கருவறைவாசலுக்குள் குலதெய்வம் இருக்குமா என்றார் அம்மன்கொண்டாடி வயிரவன்பிள்ளை. வயற்றாட்டி சின்னம்மைக்குக் கண்ணாடி இருக்கும்போது பார்வை பிரச்சினையில்லை, கண்ணாடி தொலைந்துவிட்டால் அதைத் தேடுவதுதான் சிக்கல். அன்றைக்கு மூக்குக் கண்ணாடியை வாலாய்மைத் துணிச்சுருள்களுடன் சேர்த்துச் சுருட்டிவிட்டு பிள்ளையைத் தூக்கி பக்கத்தில் விட்டுவிட்டு தரையில் இழுபட்ட முந்தானையை இழுத்துச் செருகியபோதுதான் அது தாய்க்கொடி என்றறிந்தாள். கண்ணாடி கிடைத்தபோது குழந்தை இறந்து நாகம்மை கைகால்கள் வெட்டிக் கொண்டிருந்தாள். ”கர்மத்துக்கும் கசண்டிக்கும் மருந்தில்லை மொதலாளீ” என்றாள் சின்னம்மை.

அதன் பிறகு சாத்தான்குட்டிப்பிள்ளை மீண்டும் தாடிவளர்க்க ஆரம்பித்தார். ‘மதுவூர் குழலியும் மாடும் மனையும் இதுவூர் ஒழிய  இதணம் தேறி பொதுவூர் புறஞ்சுடுகாடு அதுநோக்கி’ பிரக்ஞை செல்ல ஆரம்பித்தது. சிவமூலி கொஞ்சம் இழுத்துப் பார்த்தார். மூக்குவழியாக ஒரு செடி முளைத்து மேலெழுந்து மரமாகி அதில் கணக்கிலா பறவைகள் அடைந்து முப்பது மொழிச்சொற்களை கலந்து பேசுவதைக் கேட்டபடி கீழே அமர்ந்திருக்கும் அனுபவமே மீண்டும் மீண்டும் வந்தது. சாராயமும் கள்ளும் வேறு திசையில் ஓடி உள்ளிறங்க சித்தாந்தமும் தமிழ்ப்பாடங்களும் கலந்த சித்தம் தனியாக நின்று அரற்றியது. ஒரு நினைப்புமே இல்லமலிருக்கும்போது  முழங்கும் தவுலுக்குப் பக்கவாட்டில் நிற்கும்போது வருவதுபோன்ற அதிர்வு வயிற்றில் இருந்தபடியே இருப்பதை உணர்கையில் அது எல்லா சொற்களுக்கும் எல்லா நினைப்புகளுக்கும் ஊடாக ஓடுவதையும் அறியமுடிந்தது. ஆனால் படுக்கையில் விழுந்து கூரையில் நெளிவைப் பார்த்துப் படுத்திருக்கும்போது தூக்கம் விழுங்கும் கணத்துக்கு முன்வரை நாகம்மை நினைவு வருவதில்லை. வந்ததுமே எல்லாம் நின்றுவிடும். அக்கரைக்குளத்துக்கு அடியில் சேற்றுப்பரப்பில் குளிர்ந்து கிடக்கும் துர்க்கையம்மனின் கருஞ்சிலைபோல அவள்முகம். அவள் மூடாத கண்கள் மீது அலையடிக்கும் ஒளி.

அந்நாட்களில் ஒருநாள் பிள்ளையின் பள்ளிவளாகத்தில் பஞ்சாயத்துக் கிணறுவெட்ட ஏற்பாடாகி சாமித்தோப்பு அய்யாவுநாடார் நீர்நோட்டத்துக்கு வந்திருந்தார். பிள்ளை அருகே சென்று அவர் செய்வதைப் பார்த்தார். நாடாரின் கையில் இரு வேப்பங்குச்சிகள் இருந்தன. அவற்றை இருகைகளிலும் நுனிகள் மிகநெருங்கியிருக்க வைத்தபடி மெல்ல நடந்தார். மணற்தரையின்மிது கால்புதைய நடப்பதுபோல ஒருவகை தள்ளாட்டம். அரைக்கண்மூடி கழுத்து நரம்பு ஒன்று புடைத்திருந்தது. சுற்றிச் சுற்றிவந்தபோது ஒரு இடத்தில் குச்சிகள் மெல்ல முட்டிக்கொண்டு அதிர ஆரம்பித்தன. அவை நடுநடுங்குவதை பிள்ளை பார்த்துநின்றார்.

நாடார் கண்திறந்து “செரி இஞ்ச தோண்டுங்க. பத்தடியிலே ஒரு கன ஊற்றுண்டு. பின்ன அடிக்கொரு செறு ஊற்று. இருபத்தெட்டில நல்ல கன ஊற்று. பின்ன அஞ்சடியிலே ராஜ ஊற்று. ஒருக்காலும் தண்ணிக்கு கொறவில்ல. தாணுமாலையன் அருள்…” என்றார். தலைமையாசிரியரும் பஞ்சாயத்துத் தலைவரும் கைகூப்பினார்கள்.

பிள்ளை சற்றே சுடலைமாட உபாசனையில் இருந்தார். கம்பீரமாக “ஓய் நில்லும்” என்றார் “என்னவே கணக்கு இது? இதுக்க சாஸ்திரமென்ன?”

“நீர்நோட்டம்லா ?” என்றார் நாடார்

“செரி. ஆனா அதுக்கொரு கணக்குவேணுமே. சும்மா சொன்னா முடியாதுல்லா….”

“கணக்குண்ணா இது தண்ணிக்க கணக்குல்லா…. தண்ணி மண்ணிலயும் விண்ணிலயும் சூக்குமமாட்டு இருக்குவு. அதுக்கொண்டு…”

“சாமிகூட அப்பிடித்தான் இருக்குவோய். அத அறிஞ்சு சொல்ல சாஸ்திரங்களுண்டு கேட்டேரா? கணக்கு கணக்காட்டு இருக்கணும். இங்க கேக்கிறதுக்கு ஆளுண்டுவே… என்ன கணக்கு ? அம்பதடி முப்பத்திரண்டரையடீண்ணு  அச்சொட்டா சொன்னேரு…”

“இங்க பாருங்க பிள்ளசார்… கல்லும் மண்ணும் காயுமானா எண்ணி சொல்லலாம் . தண்ணிய எண்ணிச்சொல்ல முடியுமா? அது ஓடுவழிஓடி ஒருகணம் நில்லா கெங்கையில்லா ? “

“செரி ஒரு வரி எடுத்துப்போட்டுட்டீரு. நல்லாத்தான் இருக்கு. தண்ணிய கும்பா வச்சு அளக்கிலாம்வே. எப்பிடி நீரு அளந்தீரு சொல்லும்…”

நாடார் மேல்துண்டால் முகத்தைதுடைத்து “ஆழஓடி ஊறிஓடி கடல்சேருத தண்ணி மாதிரியாக்கும் சித்தம்ணு எனக்க குரு சொல்லுவாரு….” என்றார்.

“பாட்டை விடும். நான் நெறைய் பாட்டு படிச்சாச்சு கேட்டேரா? அப்பம், நீரு உம்ம மனசை வச்சாக்கும் அளக்கேரு?”

“ஆமா”

“அப்பம் இந்த வேப்பம்கம்பை ஆட்டுயது தண்ணியா உம்ம மனசா?”

“விடும்வேய்… என்னமோ ஒருகணக்கு. இத நாஞ்சிநாட்டிலே பாதிக்கெணறு இவரு பாத்த எடம்தான்…” என்ரார் ஹெட்மாஸ்டர்.

“நாஞ்சிநாட்டிலே பத்தடிக்குக் கீழ தண்ணி இருக்குண்ணு சொல்ல எந்த கூமுட்டையனும் வேண்டாம் பணிக்கரே. நீரு போவும் நான் இந்தாளுக்க கணக்க ஒரு குடை குடைஞ்சுட்டு வாறன்… வோய் அப்பம் இந்த கம்ப நீரு ஆட்டுதீரு..”

“நான் ஆட்டல்ல”

“பின்ன உம்ம அப்பன் மூத்தநாடாரு வந்து ஆவியா நிண்ணு ஆட்டுதாரோ?”

“இல்ல”

“விட்டுபோடும் சாத்தான்குட்டியே. அவருக்க பொழைப்புல்லா”

“கோட்டாறு கம்போளத்துல முடிச்சவுக்குதவனும் பொழைக்கத்தான்வே செய்யுதான். இங்க கேட்டறிய நாலெழுத்து படிச்சவன் இருக்காண்ணு நாலாளு தெரியட்டுமே. பள்ளிக்கூடம்ணாக என்னா சரஸ்வதி ஷேத்ரம்லா? ‘கல்வி உடையார் கழிந்து ஓடிப்போகின்றார். பல்லியுடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்’ – ணு சொல்லுதாரு திருமூலர். பாம்பு தின்ன நாம இங்க என்ன சீனாக்காரனாவே இருக்கம்? இல்ல கேக்கேன்…”

நாடார் “நான் கண்ட சாஸ்திரம் இது. இஷ்டமானா தோண்டுங்கோ. உள்ள பணத்த தாருங்கோ… இல்லேண்ணா விட்டுடுங்கோ..” என்றார்.

“அப்பிடி வாரும்வே காட்டுவழிபோனாலும் தன்ணிகுடிக்க துறைக்குத்தானெ வரணும்… ஹெ ஹெ ஹெ” என்றார் பிள்ளை.

“சரி. ஆனா கெணறு தோண்டணுமே…”

“இவன் சொன்ன கணக்கு தப்பு. இது ஈசான மூலை.  சாஸ்திரப்படி இங்க ஒரு கட்டுமானமும் நிக்கப்பிடாது .கிணறுண்ணா எப்பிடியும் மதிலுகெட்டுவம். அது கட்டுமானமாக்கும். “

“கெணறு ஆழம். உசரத்தைத்தான் கெட்டுமானம்பாவ” என்றார் நாடார்

“நீரு மூடும்வே. உம்ம தண்ணிகணக்கில்ல இது. இது அணுஎண்ணி அண்டம் துளைக்குத ஆகாசக் கணக்காக்கும்” என்றார் பிள்ளை. “கன்னிமூலைலே தோண்டுவம். நெறஞ்ச எடம்..”

“கன்னிமூலையிலே எட்டடிக்கு கீழ செம்பாறையாக்கும். முப்பதடியில அரை ஊற்று உண்டு. பிறவு காஞ்சகரும்பாறை…” என்றார் நாடார்.

“பாப்பமே” என்றார் பிள்ளை. “நான் எடுத்துக்காட்டுதேன் தண்ணி…”

அய்யாவு நாடார் காசுவாங்காமல் பக்கத்தில் தெரிந்த ஒரு பனையேறியிடம் கடன்வாங்கிவிட்டு அவரிடம் “படிப்பு நல்லதாக்கும். ஆனா படிப்பு பாம்புமாதிரி இருக்கணும். தலையிளுக்க உடல் செல்லும் திக்கில நேரா போணும். நண்டு மாதிரி நாலுதிக்கும் போவப்பிடாது….” என்றார்.

“பின்ன. உள்ள காரியம்லா?” என்றார் பனையேறும் பரமசிவம்நாடார். “… ஈசானமூலையிலே வெள்ளமுண்டு சாமித்தோப்பாரே. கன்னிமூலையிலே பனைவேரு பழுதாவுத கள்ளப்பறையாக்கும். மூத்தகரும்பனையாக்கும் கன்னிமூலையிலே நிக்குதது.  அங்க அக்கானி அரக்காட்டு இறுகிக் கெடக்கும் கேட்டேரா. இந்தால ஈசானமூலையிலே கலம்பொங்கி வழிஞ்சு தரையில நாயிநக்கி நிக்கும். அதாக்கும் கணக்கு.”

“உம்ம கணக்கு வேருக்க கணக்குல்லா” என்று அய்யாவுநாடார் வியந்தார்.

“பனை பாதாளமறிஞ்ச காளியாக்குமே. பொடி போடுதேரா?”

பொடிபோட்டுவிட்டு அய்யாவுநாடார் கிளம்பிப்போனார். அன்றைக்கே கிணறுவெட்ட பணகுடி ஒட்டர்கும்பல் வந்து சேர்ந்தது. மூத்த ஒட்டன் கன்னிமூலையை காலால் எத்திப் பார்த்துவிட்டு ”ஜாமிகோ… நீ£ருபாத்தவன் வச்ச கம்பு பொட்டையல்லோ…?” என்றான்.

“ஏம்டே?” என்றார் பணிக்கர்.

“கல்லு குளுந்து காணுகில்ல ஜாமிகோ” என்றான் அவன் தரையிலிருந்து ஒரு கல்லை எடுத்து காட்டி”தண்ணி உண்டுமானா கல்லு அடிகுளுந்து இருக்கும் ஜாமிகோ. மாட்டுச்சதை முறிச்சமாதிரி செவப்படுக்காட்டு கீழ்க்கல்லு இருக்கும் ஜாமிகோ. மாட்டுக்கண் மாதிரி ஈரம் மின்னுத கருப்புக்கல்லு இருக்கும் ஜாமிகோ. இங்க செம்மண் கல்லில்லா இருக்கு… ஜாமிகோ எடம் மாத்தி பாக்கணம்…”

“என்னவெ இப்படிச் சொல்லுதான்?” என்றார் பணிக்கர். “சர்க்காரு பைசா பாத்துக்கிடும்.”

“வேய் உம்மக்க தலைக்குள்ள என்னவே? அந்த எடத்துக்கும் இதுக்கும் எடையிலே ஒம்பதடி தூரம். இங்க இருக்க பாறை அங்க இருக்காதோ? நாஞ்சிநாட்டிலே பத்தடியிலே தண்ணிவராத மண்ணு உண்டுமா? அந்தால இருக்கு, தீமழைபெய்யுத கோடையிலயும் வத்தாத வீரசோழங்கொளம். அந்த தண்ணிதான் எங்கயும் ஊறிவரும். இவனுக ஆளுக்கொரு காரியம் சொல்லுகானுக. என்னடா கணக்குண்ணு கேட்டா கண்ண தள்ளுகானுக. இவன்கிட்ட கேட்டா சக்கம்மை கணக்கும்பான்… ஓய் உம்ம கணக்கு என்னவே?”

ஒட்டர்கிழவர் புகையிலையைவய் பாதாளத்து துளையொன்றுக்குள் ஆழச்செருகி “ஜாமி, இது கல்தேரை கணக்காக்கும்” என்றார். “தேரையறியா தண்ணியில்ல ஜாமிகோ.”

“நெறைஞ்சதுபோ. இவனுக்கு சாமிகணக்கும் இல்ல, தேரைக்கணக்கு… பணிக்கரே. நீரு தோண்டும். தண்ணிவராட்டி செலவு என் கணக்கிலே வையும்… போருமா?”

தண்ணி வருமென எதிர்பார்த்த ஒரே ஆள் பிள்ளைதான். எட்டடி வரை செம்மண். அதற்குப் பிறகு மண் ஈரமாகி வெள்ளை எழுந்தது. அதன் பிறகு பன்னிரண்டடி வரை கசியும் சுண்ணாம்புக் கல்லடுக்குகள். பிறகு முப்பதடிவரை ஒரே சொறிப்பறை. பிளந்து பிளந்து மாட்டுத்தொடைக்கறிபோல  தூக்கி மேலே வைத்தபடியே இருந்தார்கள் ஒட்டர்கள்.

“நிப்பாட்டிப்போடுவம் பிள்ளே” என்றார் பணிக்கர்.

“தோண்டும்வே. எனக்க செலவு “என்றார் பிள்ளை கண்கள் சிவக்க. ஜிப்பா பையில் திரவம் சப்பைப்புட்டியில் மிச்சமிருந்ததை வாயில் விட்டுக்கொண்டார்.

முப்பத்தெட்டடியில் கடப்பாரை கணீரிடும் கரிய பாறை. “ஜாமிகோ, இனிமே வெடிதான் வைக்கணும் ஜாமிகோ” என்றார் ஓட்டர்கிழவர்.

இரண்டாயிரம் ரூபாய் பெற்று ஒட்டர் போனபிறகு பிள்ளையே போய் மைலாடியிலிருந்து வெடிவைப்பவர்களைக் கூட்டிவந்தார். “ஓய் கிறுக்கு காட்டாதேரு. இந்த நாட்டிலே கெணத்துக்கு வெடிவச்சதில்லே. அதெல்லாம் பாண்டிநாட்டு பன்னக்கருக்கு மண்ணிலே செய்யுத காரியமாக்கும்…” என்றார் பணிக்கர்.

“இங்க தண்ணி உண்டும்” என்றார் சாத்தாம் பிள்ளை, போதை இல்லாமலேயே தள்ளாடியபடி.

வெடிக்கார மிக்கேல்ராஜ் கிணற்றுக்குள் இறங்கியதுமே ”சார் இங்க ஊற்று இல்லேல்லா …” என்றான்.

“ஏம்டே?”

“கந்தகம்லா நாறுது? குளுமையில்லியே”

“செரி கேறிவா” என்றார் பணிக்கர்.

“நீரு வெடிவையும் வே …” என்றார் பிள்ளை உச்சக்குரலில் ”உமக்கு பணம் தாறது நான்…”

“அதுக்கு நீரு கெடந்து பொட்டாதேரு. வைடே வெடி” என்றார் பணிக்கர். ”அப்ப காரியங்க சொன்னதுமாதிரி. பணம் உம்மதாக்கும்..”

மேலும் இருபதடிக்கு பாளம் பாளமாக கரும்பாறை. உலோகமினுமினுப்புடன் சிப்பியும் கோடாலியுமாக.

பக்கத்துவீட்டு ஏசுவடியா கிழவி சிரித்தபடி “பணிக்கரே போறபோக்கப் பாத்தா பாதாளம் தொடுமுண்ணில்லா தோணுகு… வல்ல வேதாளமும் கேறி வந்திரப்போவுது….” என்றாள்.

“கொல்லுவேன், நான் இப்பம் கொல்லுவேன்” என்று பிள்ளை குடையுடன் அவளை அடிக்கப் பாய்ந்தார். பணிக்கர் பிடித்துக் கொண்டார்.

“இனி எறங்கினா எங்களால கல்லு தூக்க ஒக்காது பணிக்கரே” என்றபடி மிக்கேல்ராஜ் குழுவுடன் விடைபெற்றான்.

பக்கத்திலேயே துண்டுபோட்டு சாத்தான்குட்டிப்பிள்ளை தளர்ந்து படுத்துவிட்டார்.

பணிக்கர் கூட்டிவர ஈசானமூலையில் ஒட்டர்குடி வந்து தோண்டியது. நான்கடி தாண்டியதுமே ஊற்று கனிய ஆரம்பித்தது. பத்தடியிலேயே இறைத்து ஊற்றி தோண்டினர். பதினைந்தடியில் எட்டுபேர் இறைக்க மூன்றுபேர் தோண்டினர். இருபதடியில் மடைமதகு திறந்ததுபோல ஊற்று கண்ணாடிச்சருவம் கவிழ்த்து வைத்ததுபோல பெருங்குமிழியிட்டது. பிறகு மாடுவைத்து இறைத்து தோண்டினார்கள். பிறகு இரண்டு கப்பிகட்டி இரண்டுமாடு இடைவிடாது இறைக்க நடுவே நின்று துளித்துளியாக சேறுடன் சேர்ந்த்து வெட்டி முப்பத்திமூன்றடியில் தோண்டி நிறுத்தியபோது கரையேறும் ஒட்டனுடன் நீரும் சேர்ந்தேறியது. ஏழடி ஆழத்தில் நீர் நின்று சுழித்தது.

பள்ளித்திண்ணையிலேயே படுத்திருந்த பிள்ளை ஒருமுறைகூட வந்து பார்க்கவில்லை.  வந்துகுவிந்தவர்கள் எல்லாம் அவரை நோக்கி ஏதேனும் நக்கலும் கிண்டலும் செய்தார்கள். பலசொற்கள் கூர்மை மிக்கனவாக இருந்தாலும் எட்டாம் வகுப்பு ரெஜினாள் போகிறபோக்கில் சொல்லிச்சென்ற “அணுவைத் துளைச்சு ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தறிச்சு குமட்டிலே குத்தின ஆளுல்லா?” என்றவரிதான் அவரை துடிக்கவைத்தது. இரவில் அத்தனை பேரும் போனபிறகு அவர் மெல்ல எழுந்து வந்து கிணறை எட்டிப் பார்த்தார். தன்ணீர் புன்னகையுடன் வான்வெளிச்சத்தை சுழித்துக் காட்டியது. மிக ஆழத்திலிருந்து ஒருவர் தன்னை உற்றுப் பார்ப்பதை அவர் உணர்ந்தார்.

அன்றிரவே ஓடி விடிகாலையில் சாமித்தோப்பில் அய்யாவுநாடாரின் வீட்டைத்தேடிக் கண்டடைந்து, பால்கறந்து நுரைமுடி சூடிய செம்புடன் வந்த நாடாரின் காலடியில் குப்புற விழுந்து கண்ணீர் விட்டார். நாடார் பதறிப்போய் அவரை அள்ளி எடுத்து “பாவம் செய்துபோட்டேரே…. நீரு பிள்ளமாருல்லாவே?. நாடான்காலிலேயா விளுகது? சைவத்தீட்சையும் உண்டுல்லா?” என்றார்.

“கைதூக்கிவிடணும்… இருட்டிலே இருக்கேன்.. ” என்றார் பிள்ளை கை கூப்பி கண்ணீர் மல்கி.

திண்ணையில் அமரச்செய்து எருமைப்பால் கருப்பட்டிக்காப்பி முக்கால்செம்பு கொடுத்து நாடார் பிள்ளைக்கு ஆறுதல் சொன்னார். “ஞானம் ஊர்க் கெணறாக்கும். வாற தோண்டிக்கெல்லாம் வழங்கணும்ணு விதி இருக்கு” என்றார்.

“நான் என்ன தப்பு செய்தேன்? ஆதாரப்பிழை என்ன?”

“சொல்லிலே சொகம் கண்டுப்பிட்டீரு. அதாக்கும்.”

பிள்ளை வாய்திறந்து அமர்ந்திருந்தார்.

“சொல்லுத சொல்லு சுகம். சொல்லாத சொல்லோ மகாசுகம். கட்டிப்போட்டிரும் பாத்துகிடும்”

“ஆமா”

“சொல்லில நிக்காதபடித்தானேவே எல்லாம் கெடக்கு. மானம். காத்து , பூமி, தண்ணி, தீ….  பின்ன அஞ்சும் சேந்து அஞ்சிலே வெளைஞ்ச சித்தமும், சித்தத்திலே வெளைஞ்ச சித்தும், சித்தநாதனும் எல்லாமே. சொல்லித் தொடங்கணும், சொல்லி நிக்கணும், சொல்லாம அறியணும், சொல்லை விடணும். என்னங்குதீரு?”

சாமித்தோப்பு அய்யாவுவின் சீடராக ஆகி வேம்புச்சுள்ளி பிடிக்க கற்றுக் கொண்டார் பிள்ளை. முன்றுவருடம் நாடாருக்குப் பின்னால் விசுவாசமான நாய் போல அலைந்தார். கண்மூடி கையில் வேப்பங்குச்சியுடன் அமர்ந்திருந்தார். வேம்புக்குள் ஓடும் நீரும் தன் ரத்தமும் இணைந்து ஒரே ஓட்டமாக ஆகும் உணர்வை அடைய ஆறுமாதமாகியது. அதன் பின் வேம்புக் குச்சியை கையிலெடுத்தாலே விடுபட்டிருந்த ஒன்றை மீட்டுக் கொண்டதுபோல ஒரு முழுமையுணர்வு ஏற்பட்டது.

தென்தாமரைக்குளத்தில் ஒரு கிணற்றுக்கு அய்யாவுநாடர் இடம் பார்த்துச் சொன்ன பிறகு அதேயிடத்தில் பிள்ளை வேம்புக்குச்சியுடன் நடந்தார். குச்சி கையிலிருந்து எதையோ எதிர்பார்த்து தவித்தது. ஆனால் இணையவில்லை, அதிரவில்லை. குச்சியின் நுனிக்கு மிக அருகே மறுகுச்சி நின்றது. ஆனால் தொடவில்லை.

தளர்ந்து தொங்கிய முகத்துடன் நாடாருடன் திரும்புகையில் “என்னவே மொகத்திலே ஒருவாட்டம்?” என்றார் நாடார்.

பிள்ளை நடந்ததைச் சொன்னார்.

“அப்பம் உம்ம கையிலே கம்பு இருந்தது உள்ளதா?”

“ஆமா”

“கம்பிருந்தா எப்பிடிவே தண்ணி அதைத் தொடும்? அது சாதாரணமான கம்புல்லா. ஜடமுல்லா?”

அவர் என்ன சொல்கிறார் என்று பிள்ளைக்குப் புரிந்தது. கம்பு அவராகவேண்டும், அவர் மனம் கம்பாக வேண்டும். ஆனால் அது நிகழவில்லை. கம்பு அவர் கையிலேயே இருந்தது. ஒன்றைரை வருடம் அவர் அந்தக் கம்பை செரித்துக் கொள்ள முயன்றார். இரவுகளில் கையில் கம்புடன் அமர்ந்து காத்து காத்து தூங்கி விழித்தார். தனிமையில் மார்பை அறைந்து அழுதார். குச்சியைத் தூக்கி தூரவீசிவிட்டு ஒருமாதம் நாடாரைத் தவிர்த்து ஆங்காரத்துடன் அலைந்தார். மீண்டும் கண்ணீருடன் தேடிவந்தார். “பிடிச்சு இழுக்காதிய பிள்ளே. இழுத்தா வராது. வானத்தைப் பாக்கணும், பூமிவசப்படும். கேட்டுதா” என்றார் நாடார்.

ஒரு நள்ளிரவில் சிறுநீர்கழிக்க முற்றத்து தென்னையின் அடியில் உட்கார்ந்தபோது ஒருகணம் மண்டைக்குமேல் காற்றில் ஓர் எண்ணம் உதித்தது. எழுந்து விலகியகணம் தேங்காய் அவரது மண்டை விலகிய வெற்றிடத்தை அறைந்து மண்ணில் விழுந்து தெறித்தது. ஒருசில கணங்கள் வெலவெலத்து நின்ற பின் ஏதோ தோன்றி ஓடி உள்ளேபோய் வேப்பம்குச்சியை எடுத்துவந்து தேங்காய் விழுந்த அதே இடத்தில் நின்றார். தலைமீது அதே எச்சரிக்கையுணர்வு ஒரு கணம் ஏற்பட்டது. அக்கணமே குச்சி நடுங்க ஆரம்பித்தது. காலுக்குகீழே கீழ் கீழாக அடுக்கப்பட்ட நதிகள்போல நீர் ஓடுவதை அறிந்தார்.

அன்றிரவெல்லாம் தோட்டத்தில் பக்கத்து தோட்டங்களில் வேப்பம்குச்சியுடன் அலைந்தார். நதிகள்மீதும் நீர்நிலைகள்மீதும் நடக்கும் அனுபவத்தின் உக்கிரம் அவரது உடலில் துடிதுடித்து அவரை எங்கும் அமரமுடியாமல்செய்தது. பகல்முழுக்க அலைந்து திரிந்து செக்கடிமாடன்கோவில் திண்ணையில் கண்ணயர்ந்தபோது அவரது முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அரைத்தூக்கத்தில் ஏதோ ஒலிகேட்டுக் கண்விழித்தார். அவர் அருகே பாண்டன் என்ற முதிர்ந்த ஊர்நாய் நின்று கொண்டிருந்தது. அதன் பழுப்புநிறமான கண்கள் அவரை உற்றுப் பார்த்தன. அது பாண்டன் படுக்கும் இடம் போலும். அவர் எழுவதற்குள் பாண்டன் ‘பரவாயில்லை’ என்று சொல்லி சற்றுத்தள்ளி சென்று படுத்துக் கொண்டது.

ஒருகணம் கழித்துத்தான் சாத்தான்குட்டிப்பிள்ளை பாய்ந்து எழுந்து அமர்ந்தார். அது தன்னை அடையாளம் கண்டுகொண்டதும் அதற்கும் தனக்குமிடையே அன்றுவரை இருந்த திரை இல்லாமலிருப்பதும் அவருக்குத் தெரிந்தது. அக்கணத்தில் அவருக்கு அது தாங்கமுடியாத அச்சத்தையே அளித்தது. பாண்டன் முதிர்ந்த விவேகம் கனிந்த பார்வையால் அவரைப்பார்த்து மீண்டும் ‘பரவாயில்லை’ என்றது.

[மேலும்]

முந்தைய கட்டுரைகாடு,கடிதம்
அடுத்த கட்டுரைஜோதி பாஸு