ஈராறுகால் கொண்டெழும் புரவி – 1

[ 1 ]

எம். சாத்தான்குட்டிப்பிள்ளை எம் ஏ பி எட், சடையன்விளை அரசு மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் வேலையை உதறிவிட்டு பொற்றையடி மலைச்சரிவில் கண்ணப்பக் கோனார் கைவசப்படுத்தி தவசு பதிந்து பனைமரம் நட்டு, நொந்துபோய் கைவிட்டிருந்த ஏழு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை கோனாரின் மனைவிக்கு அன்றிரவே அம்மன்கோவிலில் ஆராசனை வருமளவுப் பெருந்தொகைக்கு வாங்கி சிறியகுடிசை ஒன்று போட்டு குடியேறினார். அதற்காக அவருக்கு ஊரில் இருந்த பரம்பரைச்சொத்து பத்தேக்கர் தென்னந்தோப்பையும் வீட்டையும் ஒன்பது லட்சத்துக்கு விற்றார். மிஞ்சிய நான்குலட்சத்தை ‘தென்திருவிதாங்கூர் நிலவள வங்கி லிட்’ டில் போட்டு கொஞ்சத்தை நாகராஜா கோவிலுக்கு எண்ணைநிவந்தமாக  அளித்தார். கோனார் புதிதாக ஒருபெண்ணுக்கு வாழ்வளித்து சுட்டிக்கரை மேல்துண்டும் போடஆரம்பித்தார். களிப்பாக்குக்குப் பதில் சீவல்.

பிள்ளை ஒரு மாசிமாதம் வியாழக்கிழமை காலையிலேயே எழுந்து நாகராஜா கோவிலுக்குச் சென்று கும்பிட்டு நறுமண் பிரசாதம் அணிந்து வீட்டுக்கு வந்து தன் பொருட்களையெல்லாம் ஒரு பெரிய பட்டாளப்பெட்டியில்  அடுக்க ஆரம்பித்தார். கோவணங்கள், இரு ஜிப்பா வேட்டி தவிர எல்லாமே பலவகையான படிகக்கற்கள் , பழைய இரும்புச்சமான்கள், நாணயங்கள், புராதன வெண்கல மோதிரங்கள் என ஒவ்வொன்றாய் அள்ளி வெளியே போட்டார். சிவஞானபோதம் தெளிவுரை , சிவஞான சித்தியார் விரிவுரை, மற்றும் திருமுறைகள் முதலிய நூல்கள் அண்டைவீட்டு குடிசைவாசிகளுக்கு அவர்கள் குழம்பி வணங்கி வாங்கி எங்கே வைப்பதென்றும் , வைக்கலாமா என்றும் திண்டாடும்படி அளிக்கப்பட்டன.

ஞானமுத்தன் பத்துமணிக்கு வந்து சும்மாடை உதறி சுருட்டி தலைமீது வைத்து பெட்டியைதூக்கிக் கொண்டு முன்னால் நடக்க, பின்னால் பிள்ளை தாடி இரு பிரிகளாக பிரிந்து பறக்க கையில் ஒரு தோல்பையுடன் நடந்தார். வேலியோரங்களில் பெண்கள் வந்துநின்று முகவாயில் ‘என்னம்பா இது ‘ என்ற கையை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். எதிரேவந்த வண்ணாரச் சொரிமுத்து பாய்ந்து ஓடையிலிறங்கி கைகூப்பி நின்றார். கழுதை அக்கறையில்லாமல் காதை சிலிர்த்து கிழிமூக்கால் பர்ர்ர்ர்ரிட்டது. ஞானமுத்தனின் கரிய தோளில் வியர்வை உருண்டு முதுகோடை வழியாக இறங்கியது. பிள்ளை கையை கண்களுக்குமேல் வைத்து வெயில்எரிந்த மொட்டைமுகடுகளையும் , பச்சைமரக்கூட்டங்களும்  செம்மண் பரப்புகளும் விரிந்த சரிவையும் எருமைப்பாறைகளையும் பார்த்தார். ஞானமுத்தன் நின்று திரும்பிய அசைவில் திடுக்கிட்டு தொடர்ந்தார் .

சாஸ்தான்குட்டிப்பிள்ளையை அறிந்த ஊர்க்காரர்களுக்கு அவர் தரைமீது நடப்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. கீரைக்காரி சுப்பம்மை ஒரு நாள் இரவில் அவள் குட்டித்தென்னையருகே மூத்திரம் போக உட்கார்ந்திருந்தபோது அருகே வந்து முகர்ந்த கரிய நாய் சாத்தன்குட்டிப்பிள்ளைதான் என்று சொன்னபோது யாரும் ஆச்சரியப்படவில்லை. நாஞ்சில்நாட்டுப் பள்ளிகளிலெல்லாம் அவரது புகழ் நின்றது. இலுப்பவிளை உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வகுப்பில் மூதுரைக்குப் பதிலாக ரசவாதம் சொல்லிக் கொடுக்கமுற்பட்டு தாமிரப்பாத்திரம் உடைந்து கமறும் புகை கிளம்பியது. கந்தகம் தின்ற நாயின் குசுபோல– பக்கத்துவகுப்பில் இந்தியவரலாறு நடத்திய முதல்சாட்சி சாலமன் ஞானதீபம் எம் ஏ,  பி .எட் சொன்னது . புகைத்திரை மறைந்தபோது தாடிபொசுங்கிய பிள்ளையின் கையில் இருந்த சருவமும் சட்டுவமும் காணமலாயின என்று தெரியவந்தது. மூன்றுநாள்கழித்து அவை கூரைப் பட்டியலில் ஒட்டியிருக்கக் கண்டபிறகுதான் அதில் மந்திரமில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அதற்குள் பிள்ளை தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின்  கீழ்க்குளம்பிடாகை பள்ளிக்கு மண்டையோட்டைக் கொண்டுவந்து பிராத்தனைமூலம் நகரவைக்க,  அன்னலட்சுமி என்ற மாணவிக்குள்ளிருந்து பண்ணிமடைஏக்கி சன்னதமாகக் கிளம்பியது. மண்டைஓடு வருத்தமாக சிரித்து அமர்ந்திருக்க , ஏக்கி சாஸ்தான்குட்டிப்பிள்ளையை கையில் பிரம்புடன் சத்துணவுக்கூடம் வரை துரத்திவந்தது.

எட்டுமுறை இடமாற்றமும் ஏழுமுறை வேலைநீக்கமும் செய்யப்பட்ட பின்பு பிள்ளைக்கு பேசுவதென்றால் தனக்குத்தானேதான் சாத்தியமென்ற நிலை உருவாகிவிட்டிருந்தது .அவரது மனைவி நாகம்மை தலைப்பிரசவத்தில் பேறெடுக்கும் சின்னம்மை கண்தெரியாமல் தொப்புள்கொடியை தன் முந்தானை என்று பிடித்து இழுத்தமையால் உயிர்துறந்ததுதான் காரணம் என எல்லாரும் நம்பினர். ”கெடந்து துள்ளாதியோ. இப்ப என் தலை சரிஞ்சா பின்ன சாத்தாம்பிள்ள கணக்கா கக்கூஸ் போயிட்டு வந்து வாயைக்கழுவுத சேலுக்குத்தான் ஆவிய” என்று வெள்ள்ளாடிச்சிகள் அவியலில் ஒருபோதும்  பதமாக வேகாத சேனைக்கிழங்கு பற்றி ஆன்ம விசாரணை செய்யும் வீட்டுக்காரர்களுக்குச் சொல்வதுண்டு. அவர்களும் சங்கடமாக விசிறிக்காம்பால் முதுகை சொறிவார்கள்

கணியாகுளம் திருப்பம்வரைத்தான் சாலை. அதில் சாணியடிக்கும் டிராக்டர் மட்டுமே போகும், சாணி குலுங்கி கூழ்ப்பதமாக. அப்பால் கோனார்களின் மனோதர்மம் கால்நடைகளின் கால்களில் ஏறி எழுதிய செம்மண்தழும்புப் பாதைகள் மலையை சுற்றிவந்தன. அடிவாரத்தில் இரண்டுக்கும் துணிந்த பெருவட்டர்கள் கற்றாழைவேலி போட்டு வளைத்து நட்ட தென்னைகள் மூன்றடிக்கு அடியில் கட்டிக்கரும்பாறை கனத்து இருண்டு நிரம்பியிருக்கும் மண்ணில் வேரோடாமல் ரத்தசோகை பிடித்த ஓலைகளை காற்றில் வீசி கொட்டைப்பாக்குக்கு அண்ணன் போன்ற தேங்காய்களுடன் வெயிலாடின.

அதற்கும் மேலே கல்நாட்டி அடையாளமிடப்பட்ட எல்லைகளுக்குள் கரியோலை உறுமிநிற்கும் பனைமரத்தோப்புகள். அதற்குமேல் எலும்புகள் சிதறிய மென்மண் பரவிய முற்றம் கொண்ட நரிக்குகைகளுடன் பெரும்பாறை இடுக்குகள். மௌனம் உமிழும் கரும்பாறை ஏற்றங்கள். அதற்கும் அப்பால், நீலச்சிவப்பு சிறுப்பூக்கள் ஊடுகலந்த சிற்றிலைகள் செறிந்த குற்றிமுள்புதர்கள் இடைவெளியிட்டுப் பரவிய செம்மண் சரிவில் இருந்தது பிள்ளையின் புதிய குடிசை. கல்லடுக்குசெய்த சுவர்கள்மீது சிமிட்டித்தகடு வைத்து, காற்றுக்கனத்துக்கு மேலே கருங்கல்தூக்கிவைத்த சப்பை வடிவம்.

சாத்தான்குட்டிப்பிள்ளை குடிசைமுன் இருந்த பாறையில் அமர்ந்து கால்களைநீவிவிட ஞானமுத்தன் உள்ளேசென்று பெட்டியை இறக்கிவைத்தான். பிள்ளையின் வலப்பக்கம் அவசரமாக இறங்கிச் சென்ற மலையின் காட்சி மேற்கே முகட்டுப்பாறை கலயம்போல எழுந்த சுங்கான்கடை மலைமுதல் பார்வதிபுரம் கள்ளியங்காடு மேலக்குளம் கணியாகுளம் வயற்கடலைத் தாண்டி , மறுபக்கம்  இரும்புக்கோபுரங்கள் விரல்சுட்டும் மேகங்களுக்கு அடியில் கிடந்த நாகர்கோவிலின் மஞ்சள்சிவப்பு கட்டிடக் குப்பைக்குவியல்கள் மீது படிந்தது. அப்பால் ஒளிமண்டிய கிழக்குவானம்.

ஞானமுத்தன் ” பிள்ளசாரெ இஞ்ச வெள்ளம் கோரணுமானா ஏழுமலையில்லா ஏறி எறங்கணும்?” என்றான். முண்டாசை அவிழ்த்து முகத்தை துடைத்தபடி வந்து ”ஏசுவே ராசாவே” என்று திண்ணை மீது அமர்ந்தான். “குடிக்க வெள்ளம் வேணுமே ? வெள்ளம் கோரி வச்சிட்டுண்டா? இல்லாட்டி எளவு கீள நம்ம மருமோன்பெருவட்டர் கெணத்துக்கில்லா போணும்?” என்றான்

சாத்தான்குட்டிப்பிள்ளை எழுந்து குடிசைக்கு பின்பக்கம் சென்றார் . “நல்ல நரிப்பொற்றை கேட்டியளா? வெறகுக்கும் உதவாது. நாலு லெச்சம்ணு சொன்னாவ. உள்ளதா? ” என்றபடி ஞானமுத்தன் தொடர்ந்தான். மலைக்காற்று சீறிச்சென்ற குற்றிச்செடிகள் காலில் உரசின.

“இங்க வாடே மக்கா ” என்றார் பிள்ளை. ஊடிவிலகி நின்ற இருபெரும்பாறைகள் நடுவே வந்த செம்மண் பாத்தி அருகே தண்டுகனத்த பச்சைச்செடி ஒன்று பால்செறிந்து தெறித்த ஆயிரம் முலைக்காம்புகளுடன் நின்றது. ” வெள்ளமிருக்கு, குடிச்சுட்டுப்போ ”  என்றார் பிள்ளை.

ஞானமுத்தன் கவனமாக சாத்தான்குட்டிப்பிளைக்கும் தனக்குமான இடைவெளியை திடப்படுத்திக் கொண்டு  “…பின்ன, உள்ள காரியமாக்குமே. அப்பம் நான் வாறன் கேட்டுதா? உள்ள பைசாவக் கொடுத்துப்போடும்..” என்றான் .

”இரிடே .தண்ணி கேட்டேல்லா?” என்றார் பிள்ளை .சுற்றுமுற்றும் பார்த்து ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு “ஒண்ணு தோண்டுடே” என்றார்.

“இருக்கட்டும் . வெள்ளம்தானே .எப்பம் வேணுமானாலும் குடிச்சுத காரியம்தானே. நான் வாறன் பிள்ளசாரே . பைசாவக் குடுத்தா போவன்லா? சோலிகெடக்கு. வாளைக்கு தடம் வச்சணும்…” என்றான் ஞானமுத்தன்

“இரிடே. அத்துவிழுத மாதிரில்லா சாடுதான். ஒரு ரெண்டு மினிட்டுடே” என்றார் பிள்ளை. அந்தக்குச்சியால் மண்ணைத்தோண்ட ஆரம்பித்தார்.

மண் சிவந்த சதைபோல ஆவதைக்கண்டு ஞானமுத்தன் ஆச்சரியத்துடன் நெருங்கினான். ஈரம் தெரிந்து பின் கனிந்து சேறாகி ஊறி வழிய ஆரம்பித்தது. மண்ணை விலக்கியதும் பாறை இடுக்கிலிருந்து குமிழியிட்டு தூய நீர் வெளியே வந்தது . “சும்மா நிக்காம அந்த வெடலிக்க ஓலைய பிச்சு பட்ட பிடிடே மக்கா..” என்றார் பிள்ளை.

சரசரவென ஓலையைபிய்த்து பட்டைகோட்டிய உடனேயே ஞானமுத்தனுக்கு சந்தேகம் வந்தது. அது தண்ணீர்தானா ? .”..செரி இருக்கட்டும் . வெள்ளம்தானே? பிள்ளசாருக்க வெள்ளம் நம்ம வெள்ளமுல்லா ?. நமக்கு எப்பமும் குடிச்சலாமே. நான் வாறன். பைசாவ பிறவு வேங்கிக்கிடுதேன்” என்று கிளம்பினான்.

” இந்தாடே வெள்ளம்…” பிள்ளை தொன்னையைவாங்கி தண்ணீரை மொண்டு குடித்தார். தாடியில் மணிகள் மின்ன அது தண்ணீரேதான். ஞானமுத்தனுக்கு தொன்னையை நிரப்பி நீட்டினார் . அதை குடித்ததும் மீண்டும் அவனுக்கு அந்த சந்தேகம் வந்தது

“தண்ணியாண்ணே சந்தேகம் வருதுல்லாடே ? கற்கண்டு எளநி பதநி  .. இல்லா? ” என்றார் பிள்ளை , மீண்டும் தண்ணீர் பிடித்து தந்தபடி.

“இது பாதாள ஊற்றோ? ‘ என்றான் ஞானமுத்தன்

“பாதாளமா ? நல்ல கத. இது சங்குருட்டி ஓட செந்நாமட ஓடைய முட்டுத எடம்டே. இதோ இதாக்கும் வழி. இப்பிடியே போனா அந்தால எறங்கி ஒரு சுத்து சுத்தியாச்சுண்ணு சொன்னா வாதமுக்கு வலியகொளமாச்சு. அங்கேருந்து சர்க்கார் சானல் நேர பழையாத்துக்கு. ” பிள்ளை கைவீசிக் காட்டினார் .

நான்குபக்கமும் ஈரமேயற்ற மண்ணை பார்த்துவிட்டு ஞானமுத்தன் “ஓடைண்ணு சொன்னாக்கா?” என்றான்

“..பிலேய் மக்கா… ஓடைண்ணா என்னடே? ஓடுவது ஓடை. ஓடுவது மண்ணிலண்ணா என்ன , மண்ணுக்கு அடியிலண்ணா என்னா? முளிக்காதே. இந்தால வா. இப்பிடி நில்லு. என்னடே கண்டே?”

“மலை”

“உனக்க அம்மைக்க அர்ணாக்கொடி . தாயளி , கண்ணத்தெறந்துப் பாருலே”

“கண்னத்தெறந்து பாக்காம பின்ன குண்டியத்தெறந்தாவேய் பாக்கம் ?”

“பாதிப்பேரு அப்பிடித்தாண்டே பார்க்கான். காரியங்க உள்ள போறதுக்கான் வழியாக்கும் கண்ணு. அல்லாம உள்ள இருக்க நாத்தம் அம்பிடும் வெளியே வாற ஓட்டையில்லே..”

“செரி. நீரு நம்ம பைசாவக் குடித்துப்போடும். சோலி கெடக்குல்லா?”

“கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் . டேய் மக்கா , தண்ணிக்கு நெறமில்ல. ஆனா அதுக்க ஆத்மாவுக்க நெறம் பச்சையாக்கும்டே. பச்சையைப்பாரு..”

“பச்சயா?” என்றான் ஞானமுத்தன்.

“சவத்துக்க கண்ணப்பாரு… ” என்று அவர் அவர் அவனை பிடித்து லேசாகத் தள்ளமுயல ஆழம்குறித்து ஒருகணமும் மறவாத அவனுள் உள்ள ஆழம் திடுக்கிட்டு அதிர்ந்த ஒரு கணத்தில் ஞானமுத்தன் எல்லாவற்றையும் கண்டுகொண்டான்.

“அய்யோ ஏசுவே ” என்று அவன் வீரிட்டான். மலைச்சரிவில் பச்சைமரக்கூட்டங்களின் அடர்த்தி நதி போலவே இறங்கி சரிந்து சென்று கீழேயுள்ள சாலையைத்தண்டி ஏரி நோக்கி வளைந்தது. பின்னால் திரும்பிப்பார்த்தபோது இரு பச்சைமர நதிகள் வந்து ஊடல்பாறையின் அடியில் கலந்தன.

“பிள்ளசாரே… ஏசுவே…” என்றான் ஞானமுத்தன். அவனுக்கு சிறுநீர் வந்து முட்டியது. ஆனால் ஒரு கணம் கவனித்தபோது அங்கே வந்து கொட்டையை முட்டி நிற்பது அருவமான வேறு ஒன்று என்பதை அறிந்தான்.

“மக்களே ஞானமுத்தா..டேய் மக்கா.. இந்த பூமிண்ணா என்னாண்ணுடே நெனைக்கே? இந்த மண்ணுக்க ரகசியங்கள் பலகோடி பாத்துக்கோ. மனுஷனுக்கானா அவனுக்க உள்ளங்கைரேகை ரகசியமே தெரியாது . உள்ளங்கையத் தெரிஞ்சவனுக்கு உலகம் தெரியும் அதுவேற கத. அகங்கையில் அடங்குமே அண்டங்களனைத்தும். அண்டமோ அகங்கையாகும்…”

ஞானமுத்தன் கால்தரிக்காமல் துள்ளியும் துழாவியும் மலைச்சரிவிலிறங்கினான். ஏசுவே ஏசுவே என்றுமட்டும் சொல்லிக் கொண்டிருந்தான். எருமைப்பாறை திருப்பத்தில் நேரே நடந்து விளிம்பில் விழப்போய் நின்ற தருணத்தில் அவன் கண்களில் இருந்து ஒரு திரை சரிந்ததுபோல ஒரேபார்வையில் நிலமென்பது நீரே என்று கண்டான். மலைச்சரிவில், பள்ளத்தாக்கின் நிலப்படிவரிசைகளில் , தொடுவான் தொடும் வயற்கடலலைகளில், பசுமையினால் நீரின் நெடும்பயணத்தின் வரைபடம் இருந்தது .

‘ஏசுவே, எனக்க ராசாவே” என்று ஞானமுத்தன் மார்பில் ஓங்கி அறைந்தான். கண்ணீர் சிதற இறங்கி ஓடினான். காலுக்குக் கிழே ஓடைகள் சிலுசிலுப்பதை, நீர்வீழ்ச்சிகள் ஓலமிடுவதை, அமைதிஅலையடித்த ஏரிகளை, அழுத்தம் குவிந்த நீராழிக்கிணறுகளை அறிந்தான். கணியாகுளம் சாலைமுக்கில் விரிந்து பரவிய அரசமரத்தடியில் விழுந்தபோது தலைமீது பந்தலித்த பசுமையிலிருந்து சிறகடித்தெழுந்த நாகணவாயின் அதிர்வில் மீண்டும் ஒரு திரை அறுபட்டு விழுந்தது. வானை நிரப்பியிருந்த பறவைகளின் வலைப்பின்னலில் அதே நீர்நெடுங்கோலமே இருந்ததை உணர்ந்தான். காகமும் கொக்கும் அடைக்கலாங்குருவியும் நாகணவாயும் எங்கு அமரும், எங்கு செல்லும் என அவனால் அத்தனை உறுதியாக சொல்லமுடிந்தது. வெறும் புழுதியில் உடலை அழுத்தி தன் உடலென்பதையே புழுதியாக்கி கிடந்தான். அவன் அறிந்ததை அவனது மனம் அறியவில்லை. மனமறிந்ததை அவனது சொல்லறியவில்லை. ஆனால் அறிந்ததே அவனாக,  அறிதலை அறிய அவனில்லாத ஒருமையில் அங்கே கிடந்தான்.

அன்றிரவு பாலத்தடியில் கிழக்கன் சண்முகத்தின் வாற்றுசாராய விற்பனைநிலையத்தில்  காலின் கட்டைவிரல் முதல் இமைமயிர் நுனிவரை குடித்து நிரப்பி ஏப்பம் விட்டு காற்றை சாராயத்தால் நிரப்பி அதையே மூச்சாக உள்ளே இழுத்து கனம் தாளாமல் பக்கவாட்டு அசைவுகளுடன் நடந்து பற்பல லாந்தர்கம்பங்களில் முட்டி கொல்லைப்பக்க ஓலைச்சுவரை ஊடுருவி வந்து ”மரியே எனக்க மரியே ” என்று அழைத்தான். மண்ணெண்னைச் சிமினியுடன் வந்த மரியாள் “சொயம்பு கதயில்லா. ஏம்வே மனியா, வேலியப் பிச்சுக்கிட்டுத்தான் வருவேரோ ?” என்றாள்.

“மரியே குட்டீ, ஒண்ணாக்குமெடீ.. கேட்டியா ஒண்ணாக்கும்…” என்று ஞானமுத்தன் ஒருவிரலைக் காட்டினான்.

“வந்தா இருந்துபோட்டு உள்ளவாரும் வோய். உள்ளவந்து பாயை நனைச்சு வச்சேருண்ணு சென்னா கெட்டினவண்ணு பாக்கமாட்டேன்” என்றாள் மரியாள்.

ஞானமுத்தன் கொல்லைப்பக்கம் சுட்டுவிரலால் ஒருமை முத்திரை காட்டி மந்தஹாசத்துடன் நின்றபின் அங்கேயே படுத்து சுட்டுவிரல் தொய்ந்து துயில் மூடும்வரை புன்னகைசெய்தான்.

மறுநாள் ஞானமுத்தன் அதிகாலையில் கருப்புகட்டி வாழைக்குலை சுமந்து மலையேறிச் சென்றான். சாத்தாம்குட்டிப்பிள்ளை அன்று பேச்சையே விட்டுவிட்டிருந்தார் . ஒரு செம்புமோதிரத்தை கயிற்றில் கட்டி அதை மண்ணுக்குமேல் கொண்டு சென்று ஆராய்ந்தபடி பாறையிடுக்கில் சென்றதை ஞானமுத்தன் பார்த்தான்.

ஞானமுத்தன் பிறகு கூலிவேலைசெய்யவில்லை. நாஞ்சில்நாட்டில் சொல்தப்பாத நீர்நோட்டக்காரனாகவும் பயிர்நோட்டக்காரனாகவும் ஆனான்.

[மேலும்]

முந்தைய கட்டுரைதிராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2
அடுத்த கட்டுரைசிக்குன்குனியா