சென்னையின் அரசியல்

ஜெ,

திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு நீங்கள் எழுதிய பதில் வாசித்தேன். அதில் உங்கள் பட்டறிவைச் சொல்லியிருந்தீர்கள். அது மிகமிக உண்மை. சென்னையைப்பற்றி நீங்களும் அவரும் சொல்லியிருப்பதை பெரும்பாலும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்

சென்னையின் குடிசைப்பகுதிகளில் தலித் தலித் அல்லாதவர் என்ற பிரிவினை இருந்ததில்லை. அல்லது ஒட்டுமொத்தமாக குடிசைவாசிகள் அனைவரையுமே பிறர் தலித்துக்கள் என்று எண்ணினார்கள். இந்தச் சுதந்திரம் இருந்தது.

எண்பதுகள் வரை இங்கே குடிசைப்பகுதி என்றாலே டிம்.எம்.கே கோட்டைதான். சென்னையின் பழைய ஆட்கள் கலைஞர் ஆதரவாளர்கள். புதியதாக வருபவர்கள் அ.தி.முக. இதுதான் அரசியலாக இருந்து வந்தது

90களில் பா.ம.கதான் இங்கே சாதிய அரசியலை உருவாக்கியது. இங்குள்ள வன்னியர்கள்தான் முதன்முதலாக அவர்களை வன்னியர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு தனியாகப் பிரிந்துசெயல்பட ஆரம்பித்தனர். அதற்கு எதிர்வினையாகவே இங்கே தலித் சாதியரசியல் உருவாகியது

அந்த சாதியரசியல் இங்குள்ள திராவிட அரசியலை இன்றுவரைக்கும் காலிபண்ணவில்லை. ஆனால் அசைத்துப்பார்த்திருக்கிறது. சாதியரசியல் ரவுடித்தனத்துக்கு குறுக்குவழிகளை அமைக்கிறது. சாதியரசியல் வழியாக நீங்கள் சொல்லும் நில ஆக்ரமிப்பு, மிரட்டல் எல்லாம் செய்யமுடிகிறது

பா.ம.கதான் இப்பகுதியில் முதலில் மிரட்டல் அரசியலைத் தொடங்கியது. அதன்பிறகு தலித் குழுக்களும் ஆரம்பித்தனர். தலித் குழுக்கள் செல்வப்பெருந்தகை பூவை மூர்த்தி என பல பெயர்களில் சிறு குழுக்களாக செயல்பட ஆரம்பித்தனர். அவர்களுடையது ஒரு வகை மிரட்டல் அரசியல்

அத்துடன் சமீபகாலமாக இந்துத்துவ மிரட்டல் அரசியலும் இப்பகுதியில் ஆரம்பித்துள்ளது. போஸ்டர்களையே பார்க்கலாம். பி.ஜெ.பி மத்தியில் ஆட்சியில் வந்தபிறகு பல தீவிர இந்துத்துவக் குழுக்கள் முளைத்துள்ளன. துறைமுகம் மீது செல்வாக்கு செலுத்துவது இவர்களின் நோக்கம்

பிஜெபியும் இப்படிச் சில குழுக்கள் இருப்பது தேர்தல் அரசியல் காலத்தில் உதவும் என்று நினைத்து இவர்களை ஊக்குவிக்கிறது

என்னதான் சொன்னாலும் சென்னைக் குடிசைப்பகுதி மக்களிடையே சாதியற்ற அரசியலை கொஞ்சநாள் நிலைநிறுத்தியதும் அவர்களை நாளிதழாவது வாசிக்க வைத்ததும் தி.மு.கவின் சாதனை. மு.க.வின் சாதனை

சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

நான் சென்னையை அணுகி அறிந்தது 1982 முதல் 87 வரையிலான காலம். அப்போது வடசென்னையில் சில இடங்களில் குறுகியகாலம் குடிசைப்பகுதிகளில் தங்கியிருக்கிறேன். அப்போது பா.ம.க இல்லை

அதன்பின் உள்ள மாற்றங்களை தூரத்தில் நின்றே அவதானித்திருக்கிறேன். ஆகவே ஒரு விஷயத்தையும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. ஒருகாலத்தில் வடசென்னையில் செந்தூரம் ஜெகதீஷ், சூரியராஜன், என ஒரு நல்ல நண்பர் கோஷ்டியே இருந்தது. சென்னை வந்தால் அவர்களுடன் தான் சுற்றுவது. சென்னையில் நாங்கள் பல இலக்கியக்கூட்டங்களையும் நிகழ்த்தினோம்

இப்போது அன்றைய நண்பர்களில் அன்பு, அமிர்தம் சூரியா போன்ற சிலர் மட்டுமே எஞ்சியிருக்கிறார்கள். இன்று சென்னையுடன் தொடர்பே இல்லை. சென்னையில்தான் அதிகம் இருக்கிறேன். ஆனால் ஓட்டல்களை விட்டு வெளிவருவதே இல்லை

ஜெ

முந்தைய கட்டுரைவாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்
அடுத்த கட்டுரைசிம்மதரிசனம்