தமிழின் புதுக்கவிதை இயக்கத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுவந்த கவிஞர் ஞானக்கூத்தன். ஒரு பரிசோதனை முயற்சியாக எழுத்து இதழில் அரங்கேறிய புதுக்கவிதை அவரும் நண்பர்களும் அடங்கிய கசடதபற வழியாகவே விரிவான சாத்தியக்கூறுகளைக் கண்டடைந்தது. எள்ளலையும் வெறும் சித்தரிப்புகளையும் குட்டிக்கதைகளையும் எல்லாம் கவிதை கையாளலாம் என்று அது காட்டியது. புதுக்கவிதைமொழி எழுத்துவில் அமர்ந்தது, கசடதபறவில் இலகுவாக சாய்ந்துகொண்டு காலாட்ட ஆரம்பித்தது எனலாம்.
ஞானக்கூத்தன் இன்றுவரை முக்கியமான விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. அவரது கவிதைகளோ தலைமுறைகளைத் தாண்டி இன்றும் நினைவில் புன்னகைகளாக தங்கி நிற்கின்றன. ஞானக்கூத்தனுக்கு திரை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அவர்கள் வழங்கும் ராபர்ட் ஆராக்கியம் அறக்கட்டளை சாரல் விருது அளிக்கப்பட்டுள்ளது. ரூ 50000 மும் வித்தியாஷங்கர் ஸ்தபதி வடிவமைத்த வெண்கலச் சிற்பமும் அடங்கியது இவ்விருது.
விருதால் அந்த அமைப்பும் அமைப்பால் விருதும் கௌரவம்பெறும் நிகழ்வுகளில் ஒன்று இது. என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
‘தலையை எங்கே வைப்பதாம்?’
யாரோ ஒருவர் சொன்னார்
‘களவுபோகாமலிருக்க கையருகே வை’
ஞானக்கூத்தன்