ஆசிரியருக்கு,
வணக்கம். அருண் எழுதிய கடிதம் பார்த்தேன். அவர் யார் என்று எனக்கு தெரியாது. phd செய்வார் என நினைக்கின்றேன்.
அவரது பதில் பார்த்தேன். அவருக்கு எனது கடைசி பதில். புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் சொல்லவில்லை. ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஒரு மாதம் கடந்தால் ஊடகக்காரர்களுக்கு மறந்து விடும் நோபெல் பரிசு என்று சொல்லி விட்டு , பெரிதாக ஒன்றுமே தமிழில் சொல்வதில்லை என்று முடிவு எடுத்த பின்னர் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் சுட சுட நோபெல் பரிசு மீது அன்பை தெளித்து கடிதம் எழுதுவது ஏனோ? என் அமெரிக்க எஜமானர்கள் கேட்டால் என்ன சொல்வது என திகைக்கின்றேன். :-)
பிழைப்புக்காக வெளிநாடு வருவது எஜமானர்களை தேடி அல்ல. பிழைப்புக்காக இடம் பெயர்தல் மனிதனின் இயற்கை பண்பில் ஒன்று. மனித நாகரிகம் வளர இடப்பெயர்வும் ஒரு முக்கிய காரணமே.Life, liberty, and the pursuit of happiness are my inalienable rights. கங்கை சமவெளிக்கார்கள் இடம் பெயர்வதுதான் வெண் முரசு முழுதும் வருகிறதே. நான் காவேரி கரையில் இருந்து பொட்டாமாக் நதி கரை வந்துள்ளேன்.
வசுதேவ குடும்பகம் இல்லையா?
கடும் விரக்தியையும், தன்னிரக்கத்தையும் முன் வைத்தல் இந்திய மரபோ என்ற சந்தேகம் வருகின்றது. பிராமணர், திராவிடர், ஆரியர், இந்துத்துவர், கிறிஸ்துவர் , முதலாளித்துவர் ,ஐரோப்பியர் என ஏதோ ஒன்றில் எல்லா பழியையும் விட்டால் குறைகளுக்கு வேறு ஒருவரை பொறுப்பாக்கி விடுவது இயல்பிலேயே இருக்கின்றது. அதன் பின்னர் எதற்கும் பொறுப்பெடுத்து கொள்ள மறுப்பதும், தட்டி கழிப்பதும், திசை திருப்புவதும் சுலபம். வினோபாவையும்,ஜேபியையும் இந்தியாவில் கல்வி நிலையங்களில், அறிவு ஜீவி வட்டங்களில் யாருக்கும் அக்கறை இல்லையெனில் அதற்கு இந்தியரே பொறுப்பு. வினோபாவையும்,ஜேபியையும் நோபேல் பரிசு குழுவுக்கு கொண்டு சேர்க்கவில்லையெனிலும் அதற்கு இந்தியரே பொறுப்பு.
வினோபாவும், ஜெ பியும் முக்கியம் இல்லை என்று யார் சொன்னது? அவர்கள் ஏன் முக்கியம் என அவர்களை புரிந்து கொள்ளாதவர்களுக்கு சொல்லவும் சுய உழைப்பு வேண்டும். அது இல்லாமல் வினோபா , ஜெபியின் மீதான சமூக உரையாடலும், சமூக விழிப்புணர்வும் ஐரோப்பியர்தான் நோபெல் பரிசு கொடுத்து கட்டமைக்க வேண்டும் என்பதெல்லாம் பேராசை. நீங்கள் ஜே பியின் பணியை, வினோபாவின் பணியை முன் வைத்து அறிவு தளத்தில் அலையை உண்டாக்குங்கள், ஐரோப்பியர் நிச்சயம் காது கொடுத்து கேட்பார்கள்.
காந்தியால் அகிம்சையை போராட்ட வடிவாக பிரச்சாரம் செய்ய முடிந்தது. ஐரோப்பியர்களுக்கு கற்றுத்தர முடிந்தது. ஐரோப்பியர்களும் விருப்போடு ஏற்று கொண்டதாகவே அந்த அறிவு வடிவம் இருந்தது.
கல்வியை குடிமக்களின் அடிப்படை உரிமையாக இந்தியா இப்போது அங்கிகரித்துள்ளது. அங்காடி தெருக்களில் முடங்கும் சிறுவர்கள் ஏராளம். இவர்களை மீட்டு எடுக்கும் எந்த சமிஞ்யையும் உயர்ந்த பரிசுக்கு உகந்ததே.
மலாலாவும், சத்யார்த்தியும் ஒரு பிரச்னையின் இரு பக்கங்களை பார்கின்றார்கள். கலாநிதிகள் சினிமாவில் கிசு கிசு எழுதும் பாணியில் டெம்ப்லேட் குற்றசாட்டுகளை வைத்து கொண்டே போகின்றார்கள்.
நோபேல் பரிசு ஒரு ஐரோப்பிய பரிசு. அதை கொடுப்பவர்கள் ஐரோப்பிய மனநிலையுடன்தான் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு விஷ்ணுபுரம் விருது பரிசீலிப்பில் அருந்ததி ராய் ,வைரமுத்து இருக்க மாட்டார்கள். அது ஜெயமோகனின் மனநிலைக்கு ஒத்துதான் இருக்கும். இதெல்லாம் ரகசியம் கிடையாது.
நோபெல் பரிசினை நெடுங்காலமாக நடைமுறைப்படுத்தி உலக மரியாதையை வென்று இருகின்றார்கள். எத்தனையோ பரிசுகள் இருந்தும் நோபெல் பரிசு தனியாக கவனிக்கப்பட காரணம் உண்டு.
. .
ஐரோப்பியர் ராமானுஜனை அடையாளம் கண்டு கொண்டார்கள், c.v. ராமனை அடையாளம் கண்டு கொண்டார்கள், காந்தியை அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்தியாவில் home rule என்னும் பேச்சை ஆரம்பித்து வைத்தார்கள். தொற்று நோய் காலத்தில் இங்கே உழைத்து செத்து போய் இருக்கின்றார்கள். இந்திய மரபை அச்சில் கொண்டு வந்தார்கள்.ஐரோப்பியருள் லிபரல் சிவில் உணர்வு கொண்ட ஒரு அலை எப்போதும் உண்டு, நீங்கள் ஐரோப்பியரின் கன்சர்வேட்டிவ் பக்கத்தை மட்டும் படித்துக் கொண்டு சொன்னதையே தமிழில் சொல்லிக் கொண்டு இருப்பீர்கள். அதனால்தான் ஹார்வர்ட், mit, கேம்ப்ரிட்ஜ், பெர்க்லி, யேல், ஸ்டான்போர்ட் என்று போய் கொண்டு இருக்கின்றார்கள். இந்தியர்கள் பல்கலை கழக துணை வேந்தர்கள் பதவியை ஏலம் விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.
அன்புடன்
நிர்மல்
அன்புள்ள நிர்மல்
சற்று முன்கூட இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன் – இதையே கூப்பிட்டுச் சொன்னவர் சாரு நிவேதிதா. இங்கிருக்கும்போது இடதுசாரிகள் வினோபா , ராமகிருஷ்ண மடம் பற்றியெல்லாம் பேசமாட்டார்களே என்றார்
இங்கே இருக்கும்போது இருக்கும்பார்வையே வேறு. அங்கே சென்றபின் பல்கலைச்சூழலில் நுட்பமான ஒர் அவமதிப்பை உணர்கிறார்கள். இந்தியசிந்தனை என்பதற்கு அங்கே இடமே இல்லை, இந்தியாவுக்கும். அதை உணர்ந்தபின் இந்தியா நோக்கித் திரும்புகிறார்கள். ஆகவேதான் இந்த மனநிலை வருகிறது
ஜெ