இளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்

இந்த வருடத்துக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பத்மபூஷன் விருதுபெறுகிறார்கள். பத்மஸ்ரீ விருது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.

 

முப்பதாண்டுகளாக தமிழ்ச்சமூகத்தின் இசையுணர்வு இளையராஜா வையாக உருவாகி வந்திருக்கிறது. ஆனால் அவரது பாடல்கள் இன்னமும்கூட தமிழ்நாட்டில் முழுமையாக ரசிக்கப்படவில்லை என்பதை அவற்றை கேட்கும்தோறும் உணர்கிறோம். இளையராஜா படங்களுக்கு அமைத்த பின்னணி இசைக்கோர்ப்புகள் அப்படங்களில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட்டால் தனியான இசை ஆக்கங்களாக முழுமையான அனுபவத்தை அளிக்கக்கூடியவை. அவ்வாரு பார்த்தால் அவரது இசையுலகம் இன்னமும் கண்டுபிடிக்கவே படாத ஒரு புத்துலகம். அதை கேட்டறியும் இசையறிந்த ரசிகர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். இளையராஜாவுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்.

 

இந்திரா பார்த்தசாரதி தமிழின் மகத்தான எழுத்தாளர்களில் ஒருவர்.  அங்கதத்திலும் உளவியலிலும் ஊடாடும் படைப்புகளை எழுதியவர். நவீன நாடக முன்னோடிகளில் ஒருவர். ஆரம்பகாலக் கதைகளான ‘சுதந்திரபூமி’ ‘தந்திரபூமி’ ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ போன்றவை தமிழின் நகரியஎழுத்தை தொடங்கிவைத்தவை. சமீபத்தில் கோவையில்கூட ஒரு தேர்ந்த வாசக நண்பர் ‘கிருஷ்ண கிருஷ்ணா’ வகுத்துக்கொள்ள முடியாத ஒரு நவீன ஆக்கம் என்றார். இ.பாவுக்கு  வாழ்த்துக்களும் வணக்கமும்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழின் உயர்தொழில்நுட்ப யுகத்தின் இசைக்கலைஞர். இந்திய, மேலைநாட்டு இசைப்பாணிகளின் கலவைகளாக அமைந்த அவரது பல அபூர்வமான மெல்லிசை மெட்டுகள் நம்மை இன்னும் சூழ்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. கேட்கும்தோறும் வளரும் பாடல்கள் அவை. ரஹ்மானுக்கு என் வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைகோவையில்…
அடுத்த கட்டுரைஈரோட்டில்…