அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் கடந்த இரண்டு வருடங்களாக தங்களது எழுத்துக்களைப் படித்து வருகிறேன். தங்களது தீவிரமான வாசகர் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமை உண்டு எனக்கு.
இங்கு என் அலுவலகத்தில் கன்னட நண்பர் ஒருவர் நல்ல வாசகர். சமகால சிறந்த கன்னட சிறுகதைகளை ஆடியோ வடிவில் மாற்றம் செய்வதில் நண்பர்களுடன் ஈடுப்பட்டுள்ளார். அவரிடம் அவ்வபோது கன்னட இலக்கியங்களை பற்றி பேசுவது உண்டு. எஸ். எல் பைரப்பா, அனந்தமூர்த்தி பற்றி பேசும் போது அவரிடம் ஒரு வகையான பெருமை குடிகொள்ளும். அவருடைய பரிந்துரையின் பெயரில் அனந்தமூர்த்தியின் “சம்ஸ்கார” முடித்து இப்போது எஸ். எல் பைரப்பாவின் “அவரன” ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்துக்கொண்டிருக்கிறேன்.
பெரும்பாலான சிறந்த கன்னட நாவல்கள் ஆங்கிலத்தில் கிடைக்கபெறுகின்றன. ஆனால் பல தமிழ் நாவல்கள் பெயருக்காக பிற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுவதாகவே தோன்றுகிறது. தங்களுடைய காடு மட்டுமே ஆங்கிலத்தில் வாசிக்கக்கிடைகிறது. ஏழாம் உலகம் நாவல் மொழிபெயர்ப்பில் இருப்பதாக தெரிகிறது.
ஒரு எழுத்தாளனின் வாசகப்பரப்பு பிற மொழிகளிலும் விரிய மொழிபெயர்ப்பு நிச்சயம் அவசியம் தானே? மொழிபெயர்ப்பாளரின் ஆர்வமும் முக்கியமெனினும் எழுத்தாளரின் பங்கு முதன்மையானது தானே? சாரு நிவேதிதா அவ்வபோது தனது பதிவுகளில் ஆங்கில மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை பற்றி அவருக்கே ” உரிய பாணியில்” எழுதுகிறார். மொழிபெயர்ப்பு பற்றி தங்களுடைய கருத்தினை அறிய ஆவல்.
பாலாஜி சிதம்பரம்,
பெங்களுரு.
அன்புள்ள சிதம்பரம்
என்னுடைய காடு மட்டுமே ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. ஏழாம் உலகம் அறிவிப்போடு சரி. காடு குறைவான பிரதிகளே அச்சிடப்பட்டது. இப்போது கிடைப்பதில்லை என்று தெரிகிறது.
நீங்கள் சொல்வது உண்மை. மொழியாக்கம் இல்லையேல் எந்த எழுத்தாளரும் இந்திய அளவில் தெரிய வாய்ப்பில்லை. இந்திய எல்லைக்கு அப்பால் தெரிவதைப்பற்றி பேச்சே தேவையில்லை.
ஆனால் இங்கே படைப்பிலக்கியங்கள் மொழியாக்கம் செய்வதன் அரசியலையும் இக்கட்டுகளையும் பற்றி நான் முன்னரே பலமுறை பேசியிருக்கிறேன்
முதலில் சிறந்த மொழியாக்கங்கள் தேவை. இங்குள்ள மொழியாக்கங்கள் ஆங்கிலமறிந்த தமிழர்களால் செய்யப்படுபவை. அவற்றை வாசிக்கும் தமிழறியாதவர்கள் அவை மிகச் சம்பிரதாயமான, சிக்கலான மொழியில் இருப்பதாகவும் நவீன புனைவுமொழியில் அவை இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆய்வின்பொருட்டு அவற்றை வாசிக்கலாமே ஒழிய வாசிப்பின்பத்துக்காக வாசிக்கமுடியாது
நான் அறிந்தவரை திரு கல்யாணராமன் மொழியாக்கம் செய்த அசோகமித்திரன் நூல்கள் மட்டுமே உலகத்தரத்திலான வாசிப்புத்தன்மையுடன் உள்ளன. வ.கீதா மொழியாக்கம் எந்திரத்தன்மை கொண்டது, ஆனால் வாசிப்புக்கு தடையற்றது. அவர் மொழியாக்கம் செய்யும் ஆக்கங்களும் சமூக ஆவணத்தன்மை மட்டும் கொண்டவை என்பதனால் அவை சிக்கலில்லாமல் இருக்கின்றன. லட்சுமி ஹம்ஸ்டம் மொழியாக்கம் ஆங்கில நவீனப்புனைவுமொழியில் உள்ளதென்றாலும் புனைவின் உயிரை அழித்து பல்ப் ஃபிக்ஷனின் தரத்துக்குப் படைப்பைக் கொண்டுசெல்கின்றது. பிறமொழியாக்கங்கள் பற்றி நல்லசொற்களைக் கேட்டதே இல்லை
மொழியாக்கத்துக்குத் தேவை ஆங்கிலப்புலமை அல்ல. மொழியாக்கங்களை ஆங்கில நவீனப் புனைவுமொழியில் நல்ல தேர்ச்சி உடையவர்கள் செய்யவேண்டும். மேலும் அவர்கள் காதில் ஆங்கிலம் விழுந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில் வாழ்தல் வேண்டும். ஓர் ஆங்கில எழுத்தாளரும் இணைந்து பிரதியை மறு ஆக்கம் செய்யமுடிந்தால் மட்டுமே சர்வதேச வாசகர்களிடம் கொண்டுசெல்ல முடியும். அதற்கு இங்குள்ள பரிதாபகரமான பிரசுரச்சூழலில் வழியே இல்லை.
நம்மிடம் தகுதிகொண்டவர்கள் உண்டு.அத்தகையவர்கள் சொந்தமாக ஆங்கிலத்தில் தட்டிமுட்டி எழுதி புகழ்பெறும் வாய்ப்பிருக்கும்போது மொழியாக்கம் செய்வதில்லை. நம் விசேஷமான சூழல் காரணமாக அத்தகைய ஆங்கில அறிமுகமும் ஆங்கிலச்சூழலில் வாழும் வாய்ப்பும் உடையவர்களுக்கு தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பாடு குறித்து எவ்வித மதிப்பும் இருப்பதில்லை. தமிழிலக்கியத்தை மாற்று மொழிகளுக்குக் கொண்டுசெல்ல அவர்கள் விரும்புவதில்லை. தாழ்வுணர்ச்சியின் விளைவான மேட்டிமைத்தனம் காரணமாக அவர்கள் தமிழின் இலக்கியமேதைகளைவிட ஒருபடிமேலாக தங்களை வைத்துக்கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து இளக்காரமான ஒரு பார்வை மட்டுமே எப்போதும் தமிழிலக்கியத்துக்குக் கிடைக்கிறது.
அவர்களில் பலர் தங்கள் அளவில் மூன்றந்தர எழுத்தாளர்கள் என்பதனால் நல்ல இலக்கியத்தை அறியும் ரசனையும் இருப்பதில்லை. அதை அடைய இந்த மேட்டிமைத்தனம் அனுமதிப்பதுமில்லை. எப்போதும் மூன்றாந்தர எழுத்தாளர்களே நல்ல மொழியாக்கம் செய்யமுடியும்.சிறந்த எழுத்தாளருக்குச் சொந்தமாக நடை இருக்கும். மொழியாக்கத்திலும் அதுவே முந்தி நிற்கும். மூன்றாந்தர எழுத்தாளர் மொழியாக்கம் செய்யத் தூண்டுதலாக இருப்பது ஒன்று பணம். இரண்டு மூல எழுத்தாளரின் புகழ், அல்லது அவர்மேல்கொண்ட மதிப்பு. இரண்டு தூண்டுதல்களுமே இங்கில்லை.
ஆக நல்லமொழியாக்கங்கள் இல்லை. அத்துடன் மொழியாக்கங்களை சரியான பிரச்சார உத்திகள் மூலம் கொண்டுசென்று சேர்க்காவிட்டால் பயனில்லை. அதற்கு தமிழிலக்கியத்தை இந்திய அளவிலும் உலக அளவிலும் கொண்டுசென்று சேர்க்கும் இலக்கிய ரசனைப்பிரமுகர்கள் [connoisseurs] தேவை. மலையாளத்தில் மாதவன்குட்டி, கெ.எம்.ஜார்ஜ் முதல் சச்சிதானந்தன் வரை பலர் உண்டு. கன்னடத்தில் பி.வி.கார்ந்த்,ராமச்சந்திர ஷர்மா , ஏ.கே.ராமானுஜம் முதல் டி.ஆர்.நாகராஜ் வரை பலர் .
தமிழில் ஓரளவாவது செயல்பட்டவர் வெங்கட் சாமிநாதன் மட்டுமே. ஆகவே தமிழிலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் எழுதி பேசி முன்வைக்க ஆளில்லை. உலகள அளவில் சொல்லவே வேண்டாம். காயத்ரி ஸ்பிவாக் நடுவாந்தர எழுத்தாளரான மகாஸ்வேதா தேவியை உலகம் முழுக்கக் கொண்டுசென்றார். நோபல் பரிசின் வாயில் வரை கொண்டுசென்று நிறுத்தினார். நமக்கு அப்படியொருவர் இல்லை, சூழலைப்பார்த்தால் அடுத்த இருபதாண்டுகளில் உருவாகவும் வாய்ப்பில்லை.
கன்னடம் மலையாளம் வங்கம் மொழிகளில் சென்ற பத்தாண்டுகளாக அங்குள்ள படித்த இளையதலைமுறைக்கு அவர்களின் எழுத்தாளர்கள்மேல் புதிய ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பலர் மொழியாக்கம் செய்துவருகிறார்கள். அது அந்த இலக்கியங்களை உடனடியாக ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது. என்நண்பர் டி.பி.ராஜீவன் இரு நாவல்களையே எழுதினார். இரண்டுமே ஆங்கிலத்தில் அடுத்த வருடமே வந்துவிட்டன. தமிழில் அப்படி நடக்கும் சூழல் இல்லை. நம் இளைஞர்களின் அறிவுத்தளம் வேறு.
இதுவே மொழியாக்கங்களின் நிலை. இதற்கு அப்பால் இங்குள்ள மொழியாக்க அரசியல். இருவகையான மொழியாக்கங்களே இங்கு சாத்தியமாகின்றன. இங்குள்ள பல அறிவுஜீவிகள் பல நிதிக்கொடைகளைப் பெற்றுக்கொண்டு தன்னார்வக்குழுக்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் அரசியலுக்குகந்த நூல்களை அவர்கள் மொழியாக்கம் செய்கிறார்கள். அவர்கள் காட்டவிரும்பும் இந்தியாவை அந்நூல்கள் வழியாக உருவாக்குகிறார்கள். பாமா, இமையம் போன்றவர்களின் நூல்கள் அப்படித்தான் மொழியாக்கம் செய்யப்படுகின்றன
இன்னொருபக்கம் பிரபலமான பிரசுரநிறுவனங்களில் உள்ள மேலாளர்களின் தொடர்புகள் வழியாக மொழியாக்கங்கள் நிகழகின்றன.அதற்கான கணக்குகள் வேறு.
என்னைப்பொறுத்தவரை எனக்கு மொழியாக்கங்களைக் கொண்டுவருவதில் ஆர்வமில்லை. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுக்கவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். நான் எப்போதுமே படைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். அதை நிறுத்திவிட்டு சொந்தப்படைப்புகளை மொழியாக்கம் செய்ய ஓடியலைவது அபத்தம் என்று படுகிறது
தமிழ் இன்னும் ஐம்பதாண்டுக்காலம் ஓரளவு இலக்கியமொழியாக நீடிக்கும். நூறாண்டுகளுக்குப்பின் இதில் சாதாரணமாக எவரும் வாசிக்கமாட்டார்கள். பழைய பண்பாட்டை ஆராயும் மாணவர்களுக்குரிய தரவு நூல்களாகவே தமிழ்நூல்கள் இருக்கும். கொச்சையான ஒரு கலவைத்தமிழ் இங்கு பேச்சுமொழியாக நீடிக்கலாம். அதையறிந்தவர்கள் இலக்கியங்களை தமிழில் வாசிக்கமுடியாது. அன்று தமிழில் எழுதப்படுவதும் இருக்காது. அப்போது இந்த எழுத்துக்களில் எவை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவோ அவை மட்டுமே கவனிக்கப்படும்
அந்நூல்களில் என் படைப்புகள் இருக்குமா என தெரியவில்லை. இல்லாது போனாலும் ஒன்றும் இல்லை. நாம் இந்த நூற்றாண்டுக்காகவே எழுதுகிறோம் என நம்புகிறவன் நான்.இவை ஏதேனும் வகையில் அன்றுள்ளவர்களுக்கு முக்கியமெனத் தோன்றினால் அவர்கள் மொழியாக்கம் செய்து வாசிக்கட்டுமே
ஜெ