சத்யார்த்தி- அமெரிக்கா- கடிதங்கள்

கட்டாயத்தின் பெயரில் (!!!!) சதிகார (!!!!) ஐரோப்பியர்களின் கல்வி நிலையத்தில் அறிவு தேட சென்று இருக்கும் நண்பர் நோபல் பரிசு பற்றி வாரி இறைத்திருக்கும் அன்பை (!!!) படித்தேன். அவர் ஏன் அந்த சதிகாரர்களின் வலையில் விழுந்து சின்னாபின்னாமாக வேண்டும். அவரை கை பிடித்து காப்பாற்ற யார் முன் வருவாரோ என மனம் பதை பதைக்கின்றது.

ஐரோப்பியர்களின் கல்வி நிலையம் காந்தியை, நேருவை, அம்பேத்கரை உருவாக்கி இருக்கின்றது. இன்னமும் பல வழிகளில் மனித இனம் முன்னே செல்ல பாதை வகுத்திருக்கின்றது. அரசியல் சித்தாந்தங்களை உருவாக்கி உலகத்துக்கு அளித்து இருக்கின்றது. ஐரோப்பியர்களின் செருக்கு புரிந்து கொள்ளக் கூடியது, மதிக்கப்பட வேண்டியது. அது ஜெயமோகனுக்கும்,ஜெயகாந்தனுக்கும் உள்ள படைப்பாளியின் கர்வம் போன்றதே என்று நினைக்கின்றேன்.

ஐரோப்பியர்களின் செருக்கை தாண்ட வேண்டுமெனில் அது நண்பர் எழுதிய கடிதத்தில் இருக்கும் வயிற்றெரிச்சலில் இல்லை, ஐரோப்பியர்களுக்கு இணையாக அல்லது மாற்றான கல்வி, சமூக ,அரசியல் நிறுவனங்களை உருவாக்க கூடிய பண்பாட்டை உண்டாக்குவதில் இருக்கின்றது. இன்றைய சூழலில் அதற்கும் ஐரோப்பியர்களின் உதவி தேவை என்பதே உண்மை.

எல்லாமே சதிமயம் என்பது நீங்கள் அடிக்கடி கிண்டல் செய்யும் வலைத்தளம் ஒன்றின் செயல்பாடு. உங்கள் இந்த நண்பரும் அந்த வலைத்தளத்தின் பாவனையைத்தான் கையாள்கின்றார்.

அன்புடன்
நிர்மல்

phd072011s

அன்புள்ள ஜெ,

நான் நீங்கள் அனுப்பியகடிதம், உங்கள் பதில் இரண்டையும் வாசித்தேன். நீங்கள் நிர்மல் இருவருக்கும் நான் சொல்லுவது சுருக்கமாக இதுதான். [நான் இதனால்தான் பெரிதாக ஒன்றுமே தமிழில் சொல்வதில்லை. சொன்னபின் என்ன சொல்லவந்தேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்]

1. நான் ஐரோப்பியக் கல்விமுறை, பண்பாடு பற்றி எந்த விமர்சனத்தையும் சொல்லவில்லை. அவை மீது எனக்கு பெரிய மதிப்பு உண்டு.

2. நான் ஐரோப்பிய அறிவியல் கல்வியையும் அவர்களின் அளவுகளையும் கடிதத்திலேயே பாராட்டித்தான் சொல்லியிருக்கிறேன்

3. ஐரோப்பா கீழைநாடுகளுக்கு எதிராகச் சதி செய்கிறது என்று நான் எங்குமே சொல்லவில்லை.

மாறாக நான் சொன்னது ஐரோப்பாவுக்கு கீழைநாடுகள் மீது ஒரு குறிப்பிட்டவகையான பார்வை உண்டு. அவர்களின் அமைப்புகள் அதை மாற்றிக்கொள்ள திட்டவட்டமாக மறுக்கிறார்கள் என்பதுதான்.அந்தப்பார்வையிலேயே அவர்கள் கீழைநாடுகளைப்பார்ப்பதனால் கீழைநாடுகளின் உண்மை அவர்கள் கண்ணுக்குப்படுவதே இல்லை. அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. காந்தியோ ஜெயப்பிரகாஷ் நாராயணனோ வினோபாவோ ஜே.சி.குமரப்பாவோ அவர்களுக்கு முக்கியமானவர்கள் அல்ல. ஆனால் அன்னை தெரசா முக்கியமானவர் என்று தெரிவது இந்த பொதுவான காமாலைக்கண்ணால்தான். இதை குமரப்பாகூட சொல்லியிருக்கிறார். இவான் இலியிச்சும் சொல்லியிருக்கிறார்.

இந்தப்பார்வை இருநூற்றாண்டாக இருந்து வருவது. கிறித்தவ மதப்போதகர்கள், காலனியாதிக்க புத்திஜீவிகள், நவீன சந்தைப்பொருளியல் நிபுணர்கள், கீழையியல் ராஜதந்திரிகள் ஆகியோரால் உருவாக்கப்படுவது. அதை அத்தனை எளிதாக நாம் எதிர்கொள்ளமுடியாது. ஆனால் அது இருப்பதை குறைந்தபட்சம் அறிந்துகொள்ளவேண்டும். அது நம் மீது வைக்கும் முடிவுகளையும் தீர்ப்புகளையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏற்றுக்கொண்டால் நாம் அவர்களின் கருத்தில் நம்மை வடிவமைக்க ஆரம்பித்துவிடுவோம். நாம் நாமல்லாமல் ஆகிவிடுவோம். நமக்கு என ஒன்றும் மிஞ்சாது

காந்தி சொன்னது இதையே. அவர் ஐரோப்பாவை அறிந்தவர். ஐரோப்பியக் கல்வி கற்றவர். ஆனால் ஐரோப்பாவின் தீர்ப்புகளை மீறிச்சென்றதனால்தான் காந்தி ஆனார். அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

பிழைப்புக்காக அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் வேலைசெய்யப்போய் அங்குள்ள சௌகரியங்களுக்கும் அங்குள்ள இதமான பணிச்சூழல்களுக்கும் பொருந்திப்போனவர்களிடம் இதைச் சொல்லிப்புரியவைக்க முடியாது. அவர்கள் ஐரோப்பியரையும் அமெரிக்கரையும் எஜமானர்களாக ஏற்றுக்கொள்ள காலப்போக்கில் பழகிவிட்டிருப்பார்கள். ஆகவே அந்தப்பார்வையை அவர்களும் ஏற்றுக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் கலாநிதி அளவில் கல்வி பெற ஐரோப்பாவுக்கோ அமெரிக்காவுக்கோ வந்தவர்களின் மனநிலை வேறு. அவர்களுக்கு மேலதிகமாக ஒரு தன்முனைப்பு இருக்கும். தன்னுடைய மரபைப்பற்றி கொஞ்சம் ஞானமும் இருக்கும். அதோடு அறிவார்ந்த தாழ்வுணர்ச்சி இருக்காது. இங்குள்ள கலாசாலைகள் சுதந்திர சிந்தனையை வலியுறுத்துவன என்பதனால் தங்கள் தரப்பை சொல்லிச்சொல்லி வலிமையாக்கிக்கொள்ளவும் செய்வார்கள். ஐரோப்பாவின் தீர்ப்புகளையும் முன்முடிவுகளையும் ஏற்காமலிருக்கும் தன்மை அறிவியல்துறைகளிலேயே உண்டு.தத்துவம் சமூகவியல் ஆராய்ச்சித்துறைகளில் இன்னும் அதிகம்.

ஆனால் அதேசமயம் அங்கிருந்து வரும்போதே இங்குள்ள கலாசாலைகளின் அரசியல் கொள்கைகளுக்கு விசுவாசத்தை எழுதிக்கொடுத்துவிட்டு வந்து இங்குள்ள ஆய்வுவழிகாட்டிகளின் குரல்களாகவே ஒலிப்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அவர்கள் அரசியல்சித்தாந்தம் சார்ந்து ஆய்வுசெய்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் இங்கே இந்தியா மீதான அமெரிக்க – ஐரோப்பிய பொது விம்பத்தை பெற்றுக்கொண்டு மனதார ஏற்றுக்கொள்வது அதன்மூலம் பெரிய நிதிக்கொடைகளை பெறமுடியும் என்பதனால்தான்.

படிப்பு முடிந்தபின் அந்த நிதிக்கொடைகள் தான் அவர்களுடைய வாழ்வாதாரமாக இருக்கும். ஆய்வுநிதிக்கொடைகள். அதன்பிறகு பல்வேறு தன்னார்வக்குழுக்களுக்கான நிதிக்கொடைகள். பதிலுக்கு அங்கே வந்து ஐரோப்பிய கல்வியமைப்புகளின் குரலாக பொது கருத்துத்தளத்தில் ஒலிப்பார்கள். அவர்கள் ஆஃப்ரிக்கா, இந்தியா மற்றும் கீழைநாடுகளில் மிக வலுவான ஒரு கருத்துத்தரப்பு. அதை நாம் வெளிப்படையாகவே பார்க்கமுடியும்.

அப்படி ஐரோப்பியக் கல்விப்புலத்துக்கு என்று ஒரு கருத்துநிலை உண்டா என்று கேட்கலாம். ஐரோப்பிய-அமெரிக்க கல்விப்புலத்தில் இரண்டுவருடங்களுக்குமேல் ஆய்வுசெய்யும் எவருக்கும் அப்படி உண்டு என்று தெரிந்திருக்கும். இங்கே சில விஷயங்கள் தடைசெய்யபபட்டுள்ளன. சிலவிஷயங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதனுடன் ஒத்துப்போகாமல் ஞானத்துறைகளில் [ஹ்யூமானிட்டீஸ்] எவரும் கலாநிதி பட்டம் பெற்று வெளியே செல்லமுடியாது. இதுதான் உண்மை

அதோடு எந்த எந்தப்பல்கலைக்கழகம் என்பதும் முக்கியமானது. பல சிறிய பல்கலைகள் உள்ளன. அவையெல்லாம் இந்திய நிகர்நிலைப் பல்கலை போன்றவை. மதநிறுவனங்கள் மற்றும் வணிகநிறுவனங்களால் மறைமுகமாக இயக்கப்படுபவை.

*

கடைசியாக நான் சொல்வது இதுதான். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அடங்கிய கருத்துப்புலம் நம் மீது ஒரு நம்மைப்பற்றிய ஒரு கருத்தை திணிக்கிறது. அதை அவர்கள் அவர்களுடைய அறிவுத்திறன் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகச் செய்யலாம். நம்மைப்பற்றிய நூற்றாண்டுக்கால முன்முடிவு காரணமாகச் செய்யலாம். அதை நாம் அப்படியே ஏற்று விழுங்க வேண்டியதில்லை. அப்படி விழுங்குவதனால்தான் நம் அறிவுப்புலம் முழுக்க அர்த்தமற்ற ஐரோப்பிய எதிரொலிகள் மண்டிக்கிடக்கின்றன. நமக்கு சுயம் இல்லாமலாகிறது

நோபல்பரிசு என்பது அந்த கருத்துப்புலம் நம் மீது நேரடியாக செலுத்தும் ஒரு செல்வாக்கு. ஆகவே அவர்கள் முன்வைப்பதை நாம் தாவிப்போய் தலைமேல் வைத்துக்கொள்ளவேண்டியதில்லை. சத்யார்த்தி பற்றி அமெரிக்கா [இது அவருக்கு அமெரிக்காவின் கென்னடிகள் அளிக்கும் பரிசு] பெரிய மரியாதை வைத்திருக்கலாம். இருக்கட்டும். அதை உடனே நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதில்லை. நம் வினோபாவும் ஜெபியும் அவர்களுக்கு முக்கியமில்லை என்பதனால் நாம் அவர்களை மறக்கவேண்டும் என்பதும் இல்லை

அவ்வளவுதான்

அருண்

அன்புள்ள அருண்,

நீங்கள் இவ்விஷயங்களை பலவருடங்களுக்கு முன்னரே விரிவாக எழுதியிருக்கிறீர்கள். பல கருத்துக்களை நானும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன்

ஆனால் ஒவ்வொரு கலாச்சார நடவடிக்கையையும் பொருளாதார உள்நோக்கத்துடன் பார்ப்பது ஒரு மார்க்ஸிய அஜெண்டா. எனக்கு அதில் எப்போதும் ஐயம்தான்

ஜெ

முந்தைய கட்டுரைபிரசுர அசுர புராணம்
அடுத்த கட்டுரைநமது கலை நமது இலக்கியம்