பகுதி இரண்டு : சொற்கனல் – 1
அஸ்தினபுரிக்கு அருகே கங்கைக்கரையில் துரோணரின் குருகுலத்தில் அர்ஜுனன் அதிகாலையில் கண்விழித்தான். வலப்பக்கமாகப்புரண்டு எழுந்து அங்கே பூசைப்பலகையில் மலர்சூட்டி வைக்கப்பட்டிருந்த துரோணரின் பாதுகைகளை வணங்கி எழுந்தான். குருவணக்கத்தைச் சொன்னபடியே இருளுக்குள் நடந்துசென்று அருகே ஓடிய சிற்றோடையில் கைகால்களை சுத்தம்செய்துவிட்டு வந்து துரோணரின் அடுமனைக்குள் புகுந்து அடுப்பு மூட்டி அவருக்குரிய வஜ்ரதானிய கஞ்சியை சமைக்கத் தொடங்கினான். அவனுடைய காலடியோசையைக் கேட்டுத்தான் காட்டின் முதல் கரிச்சான் துயிலெழுந்து குரலெழுப்பியது. அதைக்கேட்டு எழுந்த அஸ்வத்தாமன் ஓடைக்கரைக்குச் செல்வதை அர்ஜுனன் கண்டான்.
புள்ளொலி எழக்கேட்டதும் துரோணரின் படுக்கையருகே சென்று நின்று ‘ஓம் ஓம் ஓம்’ என்று மூன்றுமுறை அர்ஜுனன் சொன்னான். அவர் கண்விழித்து எழுந்து வலப்பக்கமாகப் புரண்டு அங்கே பூசனைப்பலகையில் இருந்த அக்னிவேசரின் பாதுகைகளை தொட்டு வணங்கிவிட்டு கைகளை நீட்டி வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு எழுந்தார். அர்ஜுனனிடம் ஒன்றும் சொல்லாமல் இருளுக்குள் நடந்து வெளியே சென்றார். அவர் ஓடையில் முகம் கழுவி மீளும் வரை அர்ஜுனன் காத்து நின்றிருந்தான். அவர் திண்ணையில் அமர்ந்துகொண்டு கிழக்கை நோக்கி ஊழ்கத்திலாழ்ந்தபோது அவன் அவர் அருகே தூபத்தை வைத்தான்.
அஸ்வத்தாமன் வந்து தந்தையின் வலப்பக்கம் நிழல்போல நின்றிருந்தான். அர்ஜுனன் குளியலுக்கான பொருட்கள் அடங்கிய கூடையுடன் வந்து இடப்பக்கம் நின்றான். தூபத்தின் கனல்பொடிகள் உடைந்து சுழன்று மேலேறி வளைந்து இருளில் மூழ்கின. தொலைவில் புகைமணம் பெற்ற யானை ஒன்று மெல்லப்பிளிறியது. மரக்கூட்டங்களில் பறவைகள் சிறகடித்து விழித்தெழத்தொடங்கின. முதலில் விழித்தவை சிறுகுஞ்சுகள். அவை புதியநாளை நோக்கி ஆவலுடன் கூவ அன்னையர் துயில் சலிப்புடன் அவற்றை அதட்டினர்.
சென்ற பகலில் இருந்தே குருகுலத்தை கௌரவர்களும் பாண்டவர்களும் சேவகர்களும் சேர்ந்து அலங்கரித்திருந்தனர். குருகுலமுகப்பில் மாந்தளிர்த் தோரணங்களும் மலர்மாலைகளும் தொங்கின. மாலையின் மொட்டுகள் விரியத் தொடங்கிய வாசனை காலையின் கனத்த குளிர்காற்றில் பரவியிருந்தது. குடில்முற்றங்கள் முழுக்க கங்கையின் வெண்மணல் விரிக்கப்பட்டு மலர்க்கொத்துகளும் தளிர்க்குலைகளும் தொங்கவிடப்பட்டு அணிசெய்யப்பட்டிருந்தன. குடில்சுவர்கள் புதிய களிமண்ணும் சுண்ணமும் சேர்த்து பூசப்பட்டு செம்மண்ணாலும் வெண்சுண்ணத்தாலும் சித்திரக்கோலமிடப்பட்டு கூரையில் பொன்னிறப்புல் வேயப்பட்டு புதியதாகப்பிறந்து வந்திருந்தன. சுண்ணமும் கொம்பரக்கும் குங்கிலியமும் கலந்த வாசனையுடன் தளிர்வாசனையும் மலர்வாசனையும் கூடி அங்கே எழுந்தது.
குருவந்தன நிகழ்ச்சிக்காக குருகுலம் முந்தையநாள் காலை முதல் ஒருங்கிக்கொண்டிருந்தது. மதியம் முதல் இரவெல்லாம் யானைகளையும் குதிரைகளையும் குளிப்பாட்டி அலங்கரித்துக்கொண்டிருந்தனர் சேவகர். படைக்கலங்கள் தீட்டப்பட்டு ஒளிகொண்டன. ஒவ்வொருவரும் அவர்களுக்கான நல்ல அணிகளையும் ஆடைகளையும் எடுத்து வைத்துக்கொண்டனர். அவற்றை பிறரிடம் காட்டி ஆடிகளில் அழகு பார்த்துக் கொண்டனர். இளங்கௌரவர்களும் பாண்டவர்களும் கொண்டிருந்த பகைமை முழுக்க அந்தக் கொண்டாட்டத்தில் கரைந்து மறைந்தது. நகுலனிடம் குண்டாசி தன் நகைகளை காட்டிக்கொண்டிருப்பதை அவ்வழியாகச் சென்ற அர்ஜுனன் கண்டான். இருவரும் எழுந்து வெட்கிய நகைப்புடன் உடலை வளைத்து வேறெங்கோ நோக்கி நின்றனர். அவன் குண்டாசியை நோக்கி புன்னகைபுரிந்தபடி கடந்து சென்றான்.
மரத்தடியில் அமர்ந்திருந்த தருமன் அதை ஏற்கனவே கண்டிருந்தான். எழுந்து அவனருகே வந்து “விழவுக்கொண்டாட்டங்களை குழந்தைகளே நன்கறிகின்றனர் இல்லையா?” என்றான். மூத்தவர் உடனே ஏதாவது தத்துவ விசாரத்துக்குள் இழுத்துவிடுவாரோ என்று எண்ணிய அர்ஜுனன் உதடுக்குள் புன்னகை செய்துகொண்டான். தருமன் “குழந்தைகளாக நாம் மாறமுடிந்தால் விழவுகளில் மகிழமுடியும். பெண்களுக்கு அது ஓரளவு முடிகிறது” என்றபின் “ஒரு புன்னகையில் கடந்துசெல்லக்கூடிய எளிய பகைமைதான் மானுடர்களிடமுள்ளவை எல்லாம் என்று மூத்தவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்” என்றான். இதோ சரியான சொற்றொடரை அமைத்துவிட்டார் மூத்தவர் என்ற எண்ணம் எழவும் அர்ஜுனன் புன்னகை மேலும் பெரிதாகியது.
“பிதாமகரும் கிருபரும் மாதுலர் சகுனியும் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிவிட்டதாக புறாச்செய்தி வந்தது. அவர்கள் மதியத்துக்குள் வந்துசேர்ந்துவிடுவார்கள்” என்றான் தருமன். “வழியெங்கும் மக்களின் வாழ்த்துக்களைக் கொள்ளாமல் அவர்களால் இங்கு வரமுடியாது.” அவன் விழிகள் சற்று கூர்மைகொண்டன. “துரியோதனன் கர்ணனுடன் வருவதாகச் செய்தி. அவர்கள் நேராக இங்கே வரவில்லை. பிதாமகர் வந்தபின்னர் வரவேண்டுமென்று நினைப்பார்கள்” என்றான். பகைமையையாவது நீங்கள் மறப்பதாவது என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். புன்னகையுடன் “ஆம், அவர்கள் வருவதைச் சொன்னார்கள்” என்றான்.
“நாளையுடன் இந்த குருகுல வாழ்க்கை முடிந்தது. குருவந்தனம் முடிந்ததும் திரும்பி ஒரு பெருமூச்சுவிட்டு கிளம்பவேண்டியதுதான்” என்றான் தருமன். “நான் உன்னிடம் சொல்வதற்கென்ன, இந்த வாழ்க்கை எனக்குச் சலித்துவிட்டது. ஒவ்வொருநாளும் ஒரே செயல்கள். ஒரே பாடங்கள். திரும்பத்திரும்ப ஒன்றைச் செய்து அதை நம் உடலுக்குப்பழக்கும் எளிய வித்தைதான் படைக்கலப்பயிற்சி என்பது. வில்வித்தைக்கும் மத்து கடையும் ஆய்ச்சியின் கைத்திறனுக்கும் என்ன வேறுபாடு? வில்லாளியின் விரலைவிட குரங்கின் வாலில் உள்ளது நுட்பம்” என்றான்.
“ஆம் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆனால் இன்றைய அரசியல்சூழலில் நமக்குப் படைக்கலப்பயிற்சி தேவையாக இருக்கிறதல்லவா?” தருமன் பெருமூச்சுடன் “ஆம், என்று படைக்கலத் திறனுக்கு சொல்திறன் மாற்றாகிறதோ அன்றுதான் மானுடம் பண்படுகிறது என்பேன்” என்றான். அர்ஜுனன் புன்னகையுடன் ‘படைக்கலங்களுக்கு ஒற்றை இலக்கும் ஒரேபொருளும் அல்லவா?’ என்று எண்ணிக்கொண்டான். “நீ என்ன எண்ணுகிறாய்?” என்றான் தருமன். “நான் எண்ணுவதே இல்லை. என் கைகள் அனைத்தையும் எண்ணட்டும் என்று வில்யோகம் பயில்கிறேன்” என்றான் அர்ஜுனன்.
“நாளைமறுநாள் நாம் அஸ்தினபுரியில் இருப்போம். கொற்றவை ஆலயத்தில் பூசனைக்குப்பின் நமக்கு இளவரசுப்பட்டங்கள் சூட்டப்படும். வேறு செயல்சூழலுக்குச் செல்கிறோம். நாம் அதன்பின் தனிமனிதர்கள் அல்ல. அஸ்தினபுரியின் குடிமக்களின் நாவாகவும் கைகளாகவும் சித்தமாகவும் செயல்படவேண்டியவர்கள்” என்று தருமன் சொன்னான். “அதற்கான பயிற்சியை நீ இன்னும் அடையவில்லை. அதை நீ விதுரரிடமிருந்தே அறியமுடியும். அவருடன் ஒவ்வொருநாளும் அமைச்சு அலுவலகத்துக்கு வா. அவருடன் இரு. அவர் சொற்களையும் செயல்களையும் கவனி. சொல்லுக்கும் செயலுக்கும் இடையே என்ன நிகழ்கிறது என்று உனக்கு எப்போது புரிகிறதோ அப்போதுதான் நீ அரசனாகத் தொடங்குகிறாய்.”
“மூத்தவரே, இந்த குருகுலத்தை விட்டு நீங்குவதுபோல எனக்கு துயர்மிக்க ஒன்று பிறிதில்லை” என்றான் அர்ஜுனன். “இனி என் வாழ்க்கையில் இதற்கிணையான இனிய காலகட்டம் ஒன்று வருமென்று நான் எண்ணவில்லை. என் குருவின் காலடிகளில் அமர்ந்து ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டிருந்தேன். கணம்தோறும் வளர்ந்துகொண்டிருந்தேன். எதை தெய்வங்கள் மானுடருக்குப் பணித்துள்ள முதற்கடமை என்று சொல்லலாமோ அதைச் செய்துகொண்டிருந்தேன். ஞானத்தை அடைதலை. இனி அந்த வாழ்க்கை எனக்கில்லை என எண்ணும்போது இறப்பை நெருங்குவதாகவே உணர்கிறேன்.”
“மூடத்தனம்” என்றான் தருமன் சினத்துடன். “நீ என்ன நினைக்கிறாய்? இந்த வில்லும் அம்புமா கல்வி என்பது? மூடா, இது வெறும் பயிற்சி. கல்வி என்பது நூலறிவும் நூலை வெல்லும் நுண்ணறிவும் மட்டுமே. இந்த வானைப்பற்றி உனக்கென்ன தெரியும்? விண்ணகக் கோள்களை அறிவாயா? மண்ணை அறிந்திருக்கிறாயா? இதோ செல்லும் இந்தச் சிறு பூச்சியின் பெயரென்ன சொல்லமுடியுமா? நீ எதை அறிந்தாய்? உன்னை எவரும் கொல்லாதபடி இருக்கக் கற்றாய். பிறரைக் கொல்லும் கலையும் கற்றாய். இதுவா கல்வி என்பது? அப்படி எண்ணினாயென்றால் நீ உன்னையே சிறுமைப்படுத்துகிறாய்.”
தலைவணங்கி “ஆம் மூத்தவரே, தாங்கள் சொல்வது உண்மை” என்று சொல்லி விலகுவதன்றி ஒன்றும் செய்வதற்கில்லை என்று அர்ஜுனன் உணர்ந்தான். அப்பால் புல்வெளியை வெட்டிச்செதுக்கி உருவாக்கிய திறந்த மடைப்பள்ளியில் வண்டிகளில் வந்திறங்கிய பெரிய சமையல்பாத்திரங்களை கயிறுகட்டி மூங்கிலில் சுமந்து இறக்கிக்கொண்டிருந்த சேவகர்களின் எடைஏறிய குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. பெரிய உருளைக்கற்களை கொண்டுவந்து அடுப்புகள் செய்துகொண்டிருந்தனர். அங்கே பீமன் தலையில் ஒரு பெரிய முண்டாசுக்கட்டுடன் நின்றிருப்பதைக் கண்டான். அவ்வழி செல்லாமல் திரும்பி மீண்டும் துரோணரின் குருகுடிலுக்கே வந்தான்.
முன்மதியம் அஸ்தினபுரியில் இருந்து பீஷ்மரும் சகுனியும் வந்தனர். துரோணர் அவர்களை எதிர்கொண்டு வரவேற்று குருகுலத்தின் பெரிய விருந்தினர்குடிலில் தங்கவைத்தார். பின்மதியம் துரியோதனனும் கர்ணனும் தனி ரதத்தில் வந்தனர். அவர்களைக் கண்டதும் இளம்கௌரவர்கள் ஓடிச்சென்று மொய்த்துக்கொண்டனர். கர்ணனைக் கண்டு புன்னகையுடன் விலகிநின்ற நகுலனையும் சகதேவனையும் அவன் கை நீட்டி அழைத்தான். மேலும் ஒரு கணம் தயங்கிவிட்டு இருவரும் ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டனர். அவன் உரக்க நகைத்தபடி அவர்கள் இருவரையும் தூக்கி தன் தோளில் வைத்துக்கொண்டான்.
அவர்கள் இருவரும் வளைந்து இறங்க முயன்றனர். துரியோதனன் அவர்களை நிமிர்ந்து நோக்கி ஏதோ கேட்பதையும் அவர்கள் வெட்கியபடி மெல்லிய தலையாட்டலுடன் பதில் சொல்வதையும் அர்ஜுனன் கண்டான். நல்லவேளையாக அங்கே பீமன் இல்லை என்று அவன் எண்ணிக்கொண்டான். யானைகளுடன் அவன் கங்கைக்குச் சென்றிருந்தான். நகுலனும் சகதேவனும் வளர்ந்துவிட்டனர் என்று அர்ஜுனன் வியப்புடன் கண்டான். குண்டாசி துச்சாதனனிடம் தன்னை தூக்கும்படி சொன்னான். அவன் சிரித்துக்கொண்டே குதிரைச்சம்மட்டியை ஓங்கினான்.
துரோணர் விழிதிறந்து “ஓம்” என்றபடி எழுந்து தன் வில்லை எடுத்துக்கொண்டு கங்கைநோக்கி நடக்கத்தொடங்கினார். அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் அவரைப் பின்தொடர்ந்தனர். அன்று துரோணர் எதையும் கற்பிக்கமாட்டார் என்று அர்ஜுனன் எண்ணினான். அவருக்கும் மாணவர்கள் பிரிந்துசெல்வதில் துயர் இருக்கும். குறிப்பாக அவனைப்போன்ற ஒருவன். அவனை தன் முதல்மாணவன் என்று அவர் உலகுக்கு அறிவித்துவிட்டார். அது பாரதவர்ஷமே அறிந்த செய்தியாகிவிட்டது. ஒருவேளை அவர் அவனுக்கு ஏதேனும் அறிவுரைகள் சொல்லக்கூடும். அத்தனைநாள் கற்பித்தவற்றைத் தொகுத்துக்கொள்ள உதவும் சூத்திரங்களை சொல்லக்கூடும்.
ஆனால் துரோணர் நேராக முந்தையநாள் இரவில் அவர் சொல்லிவிட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடங்கினார். “ஓர் அம்பு என்பது நம்மிடமிருந்து இப்பருவெளி நோக்கிச் செல்வது என்று நேற்று சொன்னேன். இலக்குகளாக நம் முன் நின்றிருக்கும் அனைத்தும் பருவெளியே என்று உணர்க! அம்பு நமக்குள் எழுந்து நம்மைச்சூழ்ந்திருக்கும் அதைச் சென்று தொடுகிறது. அவ்வழியாக நாம் அதனுடன் தொடர்புகொள்கிறோம். விழியிழந்தவனின் விரல் பொருளைத் தொட்டுப்பார்ப்பதுபோல அம்பு இலக்குகளை அறிகிறது. சொல் பொருளில் சென்று அமைவதுபோல அம்பு இலக்குடன் இணைகிறது. அம்பு இப்புடவியை அறியும் கலையேயாகும்.”
அந்த இயல்புத்தன்மை அளித்த வியப்பைக் கடந்ததுமே, துரோணர் அவனுள் ஓடிக்கொண்டிருந்த ஐயத்துக்குத்தான் விடையளிக்கிறார் என்றும் புரிந்துகொண்டான். ஆனால் அதில் வியக்க ஏதுமில்லை. அவன் உள்ளம் எப்போதுமே அவருக்குத் தெரியும். ஒருபோதும் வினாவை அவன் கேட்டு அவர் பதில்சொல்லும்படி நிகழ்ந்ததில்லை. “அலகிலாதது பரம்பொருள். அதை மானுடன் அறிய ஓர் உருவம் தேவைப்படுகிறது. ஓர் இடம், ஓர் அடையாளம், ஒரு சொல் தேவையாகிறது. அது பரம்பொருளின் இயல்பு அல்ல. மானுடனின் எல்லையின் விளைவு” என்றபடி துரோணர் நடந்தார்.
“அதையே கல்விக்கும் சொல்லமுடியும். இப்பிரபஞ்சமென்பது என்ன? இது ஞானம். இதை அறிபடுபொருள் என ஒற்றைச்சொல்லில் வகுத்துரைக்கிறது நியாயசாஸ்திரம். பரம்பொருளே ஓர் அறிபடுபொருள்தான் அதற்கு. ஆம், அந்தத் துணிபை நாம் ஏற்றேயாகவேண்டும். மானுடன் அறிந்தது மிகச்சிறிய துளியாக இருக்கலாம். ஆனால் அறியக்கூடுவதுதான் அனைத்தும் என்ற தன்னுணர்வே அறிவை நிகழ்த்தும் ஆற்றலாக இருக்கமுடியும். அவன் என்றோ ஒருநாள் அறியப்போவதுதான் இங்குள்ள அனைத்தும். ஞானமோ முடிவிலி. ஞாதா என நின்றிருக்கும் மானுட உள்ளம் எல்லைக்குட்பட்டது. எல்லையற்றதை எல்லையுள்ளது அள்ளமுடியுமா?”
“முடியும்” என்று துரோணர் சொன்னார். “அறிபடுபொருளுக்கு எல்லையில்லை என்பதனாலேயே அறியும் முறைக்கு எல்லையை அமைத்துக்கொள்க! உனக்கான ஒரேயொரு அறியும்முறை வழியாகவே நீ அனைத்தையும் அறிந்துகொள்ளமுடியும். இந்த கங்கையில் தோணியோட்டும் ஒருவன் துடுப்பின் வழியாக பரம்பொருளை அறியமுடியும். பாலில் மத்து கடையும் ஆய்ச்சி அதன்மூலம் மெய்ஞானத்தை அறியமுடியும். கழனியில் மேழிபற்றி அறியக்கூடுவன அனைத்தையும் அறிந்து ஆன்றவிந்த சான்றோரை நீ காணமுடியும். வானம் எத்தனை விரிந்ததானாலும் உன் விழிகளால் அல்லவா அதைக் காண்கிறாய்?விழிகளை அறிக, வானம் வசப்படும்” என்றார் துரோணர்.
இடைவரை நீரில் இறங்கி நின்று “அன்னையே காப்பு” என்று கூவி மூழ்கி எழுந்தார். அருகே நீரில் நின்ற அஸ்வத்தாமன் அவருக்கான மரவுரியை கையில் வைத்திருந்தான். நீர்த்துளிகள் தெறிக்க உடலை இறுக்கிக்கொண்டு அர்ஜுனன் நின்றான். துரோணர் நிமிர்ந்து வானை நோக்கினார். “அதோ தெரிகிறான் துருவன். பரம்பொருளுக்கும் கிடைக்காத நிலைபேறு அவனுக்குக் கிடைத்தது என்கிறார்கள் ரிஷிகள். அவனை மையமாக்கியே வானமும் பூமியும் இயங்குகின்றன. ஒளிமிகுந்த பால்வழியில் விஷ்ணுவின் பாதங்களில் அமர்ந்திருக்கிறான். யோகியர் ஒவ்வொரு மாதமும் துருவனை பார்த்தாகவேண்டும். கற்புள்ள மங்கையர் ஒவ்வொரு வாரமும் அவனைப் பார்க்கவேண்டும். படைக்கலமேந்திய வீரன் ஒவ்வொருநாளும் அவனைப்பார்க்கவேண்டும்.”
“ஏனென்றால் படைக்கலம்போல சஞ்சலம் தருவது பிறிதில்லை. காமம் சஞ்சலம் அளிப்பது. கல்வி மேலும் நிலையின்மையை அளிப்பது. ஆனால் படைக்கலமேந்தியவனின் அதிகார விழைவு அளிக்கும் சஞ்சலத்துக்கு எல்லையே இல்லை. விண்ணகத்து எழுந்த துருவனைப்பார். எங்கு நின்றிருக்கிறாய் என அது உனக்குக் காட்டும்” அர்ஜுனனிடம் சொன்னார். “இன்று காலை குருபூசை நிகழ்ச்சிகள் முடிந்ததும் நீ அஸ்தினபுரிக்குக் கிளம்புவாய். இனி உன்னுடன் நான் இருக்கமாட்டேன். எப்போதும் என் வடிவாக துருவன் உன்னுடன் இருப்பானாக!” என்றார் துரோணர். “ஆணை!” என்று அர்ஜுனன் கைகூப்பினான்.
நீராடி முடித்து கரையேறும்போது அர்ஜுனனிடம் அம்புகளைப்பற்றி சொல்லத்தொடங்கினார். “மலர்களைப் பறித்து காற்றில் வீசிப்பார். ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு வகையில் மண்ணில் விழும். மரமல்லி மலர் பம்பரம்போலச் சுழலும். செண்பகத்தின் காம்பு வந்து மண்ணில் தைக்கும். ஒவ்வொரு மலர்தலிலும் காற்று விளையாடும் அமைப்பு ஒன்று உள்ளது. அதன் அடிப்படையில் அம்புகளின் அடிச்சிறகை அமைக்கும் கலையை புஷ்பபாண சாஸ்திரம் என்கிறார்கள். வழக்கொழிந்துபோன கலை அது. மன்மதன் அந்த மலரம்புகளைக் கையாள்கிறான் என்ற கதையாக மட்டுமே அது எஞ்சியிருக்கிறது.”
“போருக்கான கலை அல்ல மலரம்புக்கலை, அலங்காரத்துக்கானது. விழாக்காலங்களில் விண்ணில் இலக்கை வீழ்த்தியபின் அம்புகள் தரையிறங்கும் அழகுக்காக கண்டடையப்பட்டது. நூற்றெட்டு மலர்களின் இதழமைப்புகள் அதில் வகுக்கப்பட்டுள்ளன. வில்லவனின் கையில் அம்பும் மலராகவேண்டும். மலரிலும் அவன் அம்பையே காணவேண்டும்.” துரோணர் வழக்கம்போல தன் சொற்களில் மூழ்கியவராக சொல்லிக்கொண்டே சென்றார். அதுவரை அவர் கற்பிக்காத புதிய பாடம். இனியேதும் எஞ்சியிருக்குமா என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். எப்போதும் சில எஞ்சியிருக்குமென தோன்றியது. “நொச்சிமலர் மிக மெல்ல உதிர்வது. அது ஓர் எல்லை. அங்கிருந்து தொடங்குகின்றது மலரம்புகளின் பட்டியல்…”
அவரது சொற்களை விழிகளாலும் செவிகளாலும் உடலாலும் உள்வாங்கியபடி அவர்கள் நடந்தனர். குடிலை அடைந்து துரோணர் மான்தோலாசனத்தில் ஊழ்கத்தில் அமர்ந்ததும் அர்ஜுனன் ஓடிச்சென்று அடுமனையில் அவருக்கான உணவை சமைக்கத் தொடங்கினான். நகுலனும் சகதேவனும் குளித்து புத்தாடை அணிந்து தலையில் சூடிய மல்லிகைமலர் மணக்க வந்தனர். சகதேவன் “மூத்தவரே, நான் கங்கையில் நடுப்பகுதி வரை நீந்தினேன்” என்றான். “நானும்” என்றான் நகுலன்.
அப்பால் குண்டாசியின் தலை தெரிந்தது. “வா” என்று அர்ஜுனன் அழைத்தான். குண்டாசி புன்னகையுடன் வந்து “பாதி வரைக்கும் நீந்தவில்லை மூத்தவரே, சற்று தூரம்தான்” என்றான். “போடா… நீதான் பயந்துபோய் திரும்பினாய்” என்று சொல்லி குண்டாசியின் குடுமியைப் பற்றினான் சகதேவன். “சண்டை போடக்கூடாது… மூவருமே நீந்தினீர்கள். நான் நம்புகிறேன்” என்றபடி அர்ஜுனன் விறகை ஏற்றிவைத்தான். “பிதாமகர் நீராடி வந்துவிட்டாரா?” என்றான். நகுலன் “பிதாமகரும் கிருபரும் மூத்தவர் இருவரும் நீராடச்சென்றனர். மாதுலர் சகுனியும் கௌரவமூத்தவரும் கர்ணரும் தனியாகச் சென்றனர். அப்போதுதான் பேரமைச்சர் சௌனகரும் விதுரரும் வந்தார்கள்” என்றான்.
“விதுரர் வந்துவிட்டாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம், அவர்கள் நள்ளிரவில் அஸ்தினபுரியில் இருந்து கிளம்பினார்களாம். வழியில் ஒரு புலி குறுக்கே வந்தது. வீரர்களின் பந்த வெளிச்சம் கண்டு அஞ்சி விலகிச்சென்றுவிட்டது என்றார்கள்” என்றான் சகதேவன். “மூன்று புலிகள்!” என்று கிரீச்சிட்ட குரலில் சொன்னபடி குண்டாசி குறுக்கே புகுந்தான். “என்னிடம் அமைச்சர் அவரே சொன்னார்.” சகதேவன் அவன் குடுமியை மீண்டும் பிடித்துக்கொண்டான். “போடா… பொய் சொல்கிறான். மூத்தவரே, புலியைப்பற்றி சற்று முன்பு நான்தான் இவனிடம் சொன்னேன்.”
துரோணர் உணவருந்தியதும் அர்ஜுனனிடம் “நீ சென்று ஆடையணிகளுடன் வா!” என்றார். தலைவணங்கி தன் குடிலுக்கு ஓடி புலித்தோல் ஆடை அணிந்து பட்டுக்கச்சை கட்டி குழலை பட்டுநூலால் சுற்றிக்கட்டி அதில் பாரிஜாதமலர் சூடி அணிகொண்டான் அர்ஜுனன். தன் வில்லுடன் அவன் வெளியே வந்தபோது வெளியே இசை முழங்கத் தொடங்கியிருந்தது. மலைச்சரிவில் யானைத்தோல் கூடாரங்களில் தங்கியிருந்த சூதர்கள் குளித்து புத்தாடை அணிந்து தங்கள் வாத்தியங்களுடன் மையமுற்றத்தில் தோரணத்தூண்களுக்குக் கீழே நின்று இசைத்துக்கொண்டிருந்தனர். மணியும் சங்கும் முழவும் கொம்பும் இணைந்த இசை கானக ஒலிகளில் இருந்து கடைந்து எடுத்த இசை போன்றிருந்தது.
அர்ஜுனன் சென்று முற்றத்தில் நின்றுகொண்டான். சௌனகர் ஆணைகளைப் பிறப்பித்தவாறே விருந்தினர்குடில் நோக்கி ஓடுவது தெரிந்தது. அவருக்குப்பின் அமைச்சர்கள் வைராடரும் பூரணரும் ஓடினார்கள். அவர் சென்றதும் அவர்கள் திரும்பி வந்து ஆணைகளை கூவத்தொடங்கினர். தருமன் நீலப்பட்டாடை அணிந்து மலர்சூடி வந்தான். “மந்தன் எங்கே பார்த்தா? காலையில் இருந்தே அவனைத் தேடுகிறேன். அவன் துரியோதனனை தனியாக எங்கேனும் சந்தித்து பூசலாகிவிடுமோ என்று அஞ்சுகிறேன்” என்றான். மூத்தவர் அதை விரும்புகிறாரா என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான்.
உடல் வலிமையற்றிருக்கையில் உள்ளம் அச்சம் கொள்கிறது, அச்சம் அனைத்து சிந்தனைகளையும் திரிபடையச்செய்துவிடுகிறது, எனவே உடலில் ஆற்றலற்ற ஒருவனால் நேரான சிந்தனையை அடையவே முடியாது என்று துரோணர் சொன்னதை அர்ஜுனன் நினைத்துக்கொண்டான். ஆனால் நேரான சிந்தனைதான் வெல்லும் என்பதில்லை. நேரான சிந்தனையே பயனுள்ளது என்றுமில்லை. சிந்தனையில் வளைவு என்பது எப்போதும் முக்கியமானதே. வேறுபாடே அதன் வல்லமையாக ஆகமுடியும் என்றார் துரோணர். “அஷ்டவக்ரர் என்னும் ஞானியை நீ அறிந்திருப்பாய். எட்டு வளைவுகள் கொண்ட உடல் அவருடையது. எட்டு வளைவுகளும் அவரது சிந்தனையிலும் இருந்தன. ஆகவே அவர் வேறு எவரும் கேட்காத வினாக்களைக் கேட்டார்.”
“வருகிறார்கள்” என்று தருமன் மெல்லியகுரலில் சொன்னான். குடிலில் இருந்து துரியோதனனும் கர்ணனும் பேசிச்சிரித்தபடி வருவதை அர்ஜுனன் கண்டான். பின்னால் துச்சாதனன் வந்தான் அதற்கப்பால் பெருந்திரளாக மூத்த கௌரவர்கள் வந்தனர். “நம்மைப்பற்றிப் பேசிக்கொள்கிறார்களோ?” என்றான் தருமன். அர்ஜுனன் பதில் சொல்லவில்லை. அவன் கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். எப்போதும் போல எத்தனை உயரம் என்று முதலில் வியந்தது சிந்தை. பின் எவ்வளவு பேரழகன் என்று பிரமித்தது. அவன் தோள்களை, புயங்களை, மார்பை, இடையை, கண்களை, மென்மீசையை நோக்கிக்கொண்டே நின்றான்.
“என் கனவுகளில் அவன் பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் அணிந்தவனாகவே வருகிறான்” என்றான் தருமன். “ஒவ்வொரு முறை நேரில் காணும்போதும் அவன் மேல் எல்லையற்ற அச்சத்தை அடைகிறேன். அவன் நினைவே என்னை நடுங்கச் செய்கிறது. ஆனால் என் கனவுகளில் அவன் என் தேவனாக இருக்கிறான். அவன் சொல்லுக்குச் சேவை செய்கிறேன். அவன் அளிக்கும் சிறுபுன்னகையை பெருநிதியென பெற்றுக்கொள்கிறேன். அவன் என்னைத் தொட்டானென்றால் கண்ணீருடன் கைகூப்புகிறேன்.” அர்ஜுனன் திரும்பி தருமனைப் பார்த்தான். பாண்டவர் ஐவரும் கொள்ளும் உணர்வு அதுவே மூத்தவரே என்று சொல்ல எழுந்த நாவை அடக்கிக்கொண்டு விழிகளை விலக்கிக்கொண்டான்.
இளவரசர்கள் களமுற்றத்தில் கூடியதும் கொம்புகளும் முரசுகளும் சுதிமாறி ஓங்கி ஒலித்தன. சௌனகர் பீஷ்மரையும் கிருபரையும் சகுனியையும் அழைத்துக்கொண்டு வந்தார். சற்றுப்பின்னால் பிற அமைச்சர்களுடன் பேசியபடி விதுரர் வந்தார். “மந்தன் எங்கே?” என்றான் தருமன். அர்ஜுனன் சுற்றும்பார்த்தான். பீமனைக் காணவில்லை. “இங்கிதமும் முறைமையும் அறியா மூடன். இந்நேரம் அடுமனையிலோ யானைக்கொட்டிலிலோ இருப்பான்…” என்று தருமன் மெல்ல சொன்னான். “அவனை அழைத்துவர எவரையாவது அனுப்புகிறேன், இரு.” அதற்குள் அப்பால் வேங்கைமரங்களுக்குப்பின்னாலிருந்து பீமன் வருவது தெரிந்தது. எளிய தோலாடை மட்டும் அணிந்து விரிந்த தோள்களில் நீர்த்துளிகள் நிறைந்திருக்க யானைநடையில் வந்தான்.
குண்டாசி பீமனைச் சுட்டி ஏதோ சொல்ல இளைய கௌரவர்களும் நகுலனும் சகதேவனும் சிரிப்பை அடக்கினர். பீமனை நோக்கிய தருமன் “அவனைப்பார்த்தால் அரசகுமாரன் போலவா இருக்கிறது? காட்டிலிருந்து வந்தவன் போலிருக்கிறான்” என்றான். அர்ஜுனன் துரியோதனனைப் பார்த்தான். அவன் விழிகள் பீமனின் உடலில் ஊன்றியிருப்பதைக் கண்டு புன்னகைசெய்தான். அப்புன்னகையை அறிந்ததுபோல விழிகளை திருப்பிய துரியோதனன் அரைக்கணம் அர்ஜுனன் விழிகளை சந்தித்து விலக்கிக்கொண்டான். திரும்பி பீமனை நோக்கிய அர்ஜுனன் அவன் துரியோதனனைத்தான் பார்க்கிறான் என்று கண்டான்.
“துரியோதனன் கண்களில் தெரியும் அச்சம் மகிழ்ச்சி அளிக்கிறது பார்த்தா” என்றான் தருமன். இங்கு ஒவ்வொருவரும் தங்கள் எதிரியைத்தான் பார்க்கிறார்கள் என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். கர்ணன் ஒருவன் மட்டிலும் எவரையும் பார்க்காமல் தான் மட்டுமே இருப்பதுபோல தருக்கி நிமிர்ந்திருக்கிறான். உண்மையிலேயே இப்புவியில் எதிரிகளற்றவனா அவன்? என் வில் அவனுக்கு ஒரு பொருட்டே இல்லையா? அர்ஜுனனின் உடல் பதறத் தொடங்கியது. அக்கணமே வில்லெடுத்து கர்ணனை போருக்கழைக்கவேண்டும் என்று அவன் அகம் பொங்கியது.
என்ன இழிசிந்தை என அவன் தன்னையே கடிந்துகொண்டான். அத்தனை கோழையா நான்? என்னுள் இருப்பது இச்சிறுமைதானா? அவனுக்குள் அது சிறிதும் இல்லையா என்ன? ஏனென்றால் அவன் எதையும் விழையவில்லை. நாட்டை, வெற்றியை, புகழை. எதை இழக்கவும் அவனுக்குத் தயக்கம் இல்லை. ஆகவே அவனுக்கு எதிரிகளே இல்லை. எதிரிகளே இல்லாதவனைப்போல விடுதலை பெற்றவன் யார்?
பீஷ்மரும் கிருபரும் சகுனியும் களம் வந்து அமர்ந்தபோது அனைவரும் தலைவணங்கி வாழ்த்து கூவினர். விதுரர் பீஷ்மரை நோக்கிவிட்டு தலையசைக்க சௌனகர் சென்று துரோணரின் குடில் வாயிலில் நின்றார். சற்றுநேரத்தில் அஸ்வத்தாமன் துணைவர துரோணர் மான் தோலாடையும் மென்மயிர் கச்சையும் அணிந்து உச்சியில் சுருட்டிக்கட்டிய குடுமியில் மலர்சூடி சந்தன மிதியடி ஒலிக்க நிமிர்ந்து நடந்துவந்தார். மங்கல இசை எழுந்து அப்பகுதியை நிறைத்தது.
பீஷ்மரும் சகுனியும் சென்று துரோணருக்குத் தலைவணங்கி அவரை அழைத்துவந்தனர். கிருபரும் விதுரரும் அவரை வணங்கி ஆசனத்தில் அமரச்செய்தனர். வாழ்த்தொலிகள் சூழ்ந்து ஒலிக்க துரோணர் இறுகிய முகத்துடன் எதையும் பாராதவர் போல இருப்பதை அர்ஜுனன் கண்டான். துரோணரின் காலடியில் ஒரு வெண்பட்டு விரிக்கப்பட்டது. மலர்க்குவைகள் கொண்டுவந்து இருபக்கமும் வைக்கப்பட்டன. அவருக்கு வலப்பக்கம் குங்குமமும் களபமும் இட்டு அலங்கரிக்கப்பட்ட படைக்கலங்கள் வைக்கப்பட்டன.
பீஷ்மர் எழுந்து கைகூப்பியதும் இசை அவிந்து அவை அமைதிகொண்டது. அனைவரையும் வணங்கி முகமன் சொன்னபின்னர் “உத்தமர்களே, இன்று குருவந்தனம் செய்து கல்விநிறைவுகொண்டு அஸ்தினபுரியின் இளவரசர்கள் அரண்மனைக்கு மீளவிருக்கிறார்கள். அவர்களுக்கான உலகியல் கடன்கள் காத்திருக்கின்றன. ஊனுடல்களாக இங்கு வந்தவர்கள் அவர்கள். குருவருளால் ஞானமும் விவேகமும் கொண்டவர்களாக ஆகி விட்டிருக்கிறார்கள். அஸ்தினபுரியின் பிதாமகனாகிய நான் என் மைந்தர்கள் சார்பில் அதற்காக குருநாதர் துரோணரை வணங்கி நன்றி சொல்கிறேன்” என்றார்.
“ஓம் ஓம் ஓம்” என அனைவரும் முழங்கினர். பீஷ்மர் எழுந்துவந்து தன் இடையிலிருந்த வாளை உருவி துரோணர் முன் தாழ்த்தி வணங்கினார். அதன்பின் கிருபர் எழுந்து வந்து முகமன் சொல்லி “வடமீன் பகலிலும் தெரியும் நாளில் குருகுலநிறைவு கொண்டாடப்படவேண்டும் என்பது ஆன்றோர் முறை. இன்று அதோ விண்ணில் துருவன் தெரிகிறான். ஞானம் என்பது நிலைபெறுநிலை. துருவன் அருளால் அது கைகூடுவதாக! ஆசிரியரையும் துருவனையும் வணங்கி அருள்கொள்ளுங்கள்” என்றார்.
அதன்பின் அவரது வழிகாட்டலில் குண்டாசியும் நகுலனும் வந்து மஞ்சள்நீர் அள்ளி துரோணரின் காலில் மும்முறை விட்டு கழுவி மூன்றுமுறை மலர்தூவி ஐந்து அங்கங்களும் மண்ணில் பட விழுந்து எழுந்தனர். அவர் ஒரு மலர் எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் அருகிலிருந்த படைக்கலங்களில் அவர்களுக்குரியதை எடுத்து அவர் காலடியில் அதைத் தாழ்த்தி வணங்கிவிட்டு திரும்பி மேலே மங்கலான வானில் முகிலற்ற நீலப்பரப்பில் உப்புப்பரல்போலத் தெரிந்த துருவனை நோக்கி கங்கை நீரை மும்முறை மலருடன் அள்ளி விட்டு வணங்கி புறம் காட்டாமல் பின் வாங்கினர்.
அஸ்வத்தாமன் வணங்கிய பின் அர்ஜுனன் வணங்கினான். துரியோதனனுக்குப்பின் கர்ணனும் இறுதியாக தருமனும் வணங்கினர். அனைவரும் படைக்கலங்களுடன் அவர் முன் அரைவட்ட வடிவில் அணிவகுத்து நின்றிருந்தனர். பீஷ்மர் எழுந்து வணங்கி “குருநாதரே, நிகரற்ற செல்வமாகிய கல்வியை இவர்களுக்கு அளித்திருக்கிறீர்கள். அதன்பொருட்டு என் நாடும் குலமும் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறோம். இத்தருணத்தில் நீங்கள் கோரும் குருகாணிக்கையை உங்கள் பாதங்களில் வைக்க என் மைந்தர் கடமைப்பட்டிருக்கிறார்கள்” என்றார்.
துரோணரின் உடலெங்கும் மெல்லிய அலை ஒன்று கடந்துசெல்வதை அர்ஜுனன் கண்டான். நிமிர்ந்து தாடியை மெல்ல நீவியபடி அவர்களைப் பார்த்தார். அவர் விழிகள் அர்ஜுனனை வந்து தொட்டு நிலைத்தன. மெல்லிய குரலில் “நான் கோரும் குருகாணிக்கை ஒன்றே. பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்க்காலில் கட்டி இழுத்து என் காலடியில் கொண்டுவந்து போடுங்கள்” என்றார்.
திகைத்து முன்னகர்ந்த விதுரர் “குருநாதரே, பாஞ்சாலம் நமது நட்புநாடு. அது…” என ஆரம்பிக்க பீஷ்மர் “மறுசிந்தனைக்கே இங்கு இடமில்லை. அது குருநாதரின் ஆணை” என்றார். “ஆணையை ஏற்கிறேன் குருநாதரே” துரியோதனன் சொன்னான். கர்ணனும் அர்ஜுனனும் பீமனும் துச்சாதனனும் “ஆம்” என்று சொல்லி தலைவணங்கினர்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்