இலக்கியமும் நோபலும்

ஜெ சார்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன்

சாமி

அன்புள்ள சாமி

நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் படித்த ஆசிரியர்களெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்.

இலக்கியப்பித்து ஓங்கியிருந்த காலகட்டத்தில் நோபல் ஆசிரியர்களை அப்போதே வாசித்துவிடுவேன். 1983ல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் என் முதல் ஏமாற்றம். அடுத்து பரிசு பெற்ற கிளாட் சீமோங் அடுத்த ஏமாற்றம். அவரது The Invitation என்னும் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை என் நண்பர் அப்துல் ரசாக் என்ற ரசாக் குற்றிக்ககம் மாஹி சென்று தேடிப்பிடித்து வாங்கிவந்தார்.அதை வாசிப்பதற்கு செலுத்திய உழைப்பு அதைவிட அதிகம். வீண். ஜான் கூட்ஸி பெரிய ஏமாற்றம். அந்த ஏமாற்றம் டோனி மாரிசன் ,நதீன் கார்டிமர், அலிஸ் மன்றோ வரை தொடர்கிறது. நடுவே வி.எஸ்.நைபால் என்ற போலி எழுத்தாளர் பரிசு பெற்றது மிகப்பெரிய ஏமாற்றம்.

அவர்கள் மோசமான எழுத்தாளர்கள் என்றல்ல பொருள். இலக்கியம் என்பது ஒரு குறிப்பிட்ட கால-இட-சூழலுக்கு உரியதாகவே முதல் தளத்தில் இருக்கும். அதை விட்டு மேலெழுந்து மானுடமளாவியதாக அபூர்வமாகவே ஆகும். தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி மானுடத்திற்கான எழுத்தாளர்கள். நாம் கஷ்டப்பட்டு ஏன் கனடாவின் குடும்பச்சிக்கலை அல்லது பிரான்ஸின் மரபுச்சிக்கலை தெரிந்துகொள்ளவேண்டும்? அதற்குக் கொடுக்கும் உழைப்பே வீண். நாம் இலக்கியம் வழியாகத் தெரிந்துகொள்வது நம்மை. மானுடத்தின் படைப்பாளிகள் மானுடமையம் நோக்கிப் பேசுகிறார்கள். அதற்கு கால -இட- பண்பாட்டு அடையாளமேதும் இல்லை. அவர்களை நம் எழுத்தாளர்களாகவே நாம் காண்போம். அவர்கள் தங்கள் வாழ்க்கையை விளக்குவதில்லை, நம் வாழ்க்கையை விளக்குவார்கள்

பல்வேறு காரணங்களால் நோபல் பரிசுகள் பெரும்பாலும் ஐரோப்பாவின் சிறிய எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இர்விங் வாலஸ் எழுதிய The Prize என்ற நாவல் நோபல் பரிசின் உள்விளையாட்டுகளைப்பற்றிய அற்புதமான சித்திரத்தை அளிக்கும் படைப்பு. அதில் எளிய ஐரோப்பிய எழுத்தாளர்களும் அமெரிக்க யூத எழுத்தாளர்களும் எப்படி எளிதாக நோபலை அடைந்துவிடுகிறார்கள் என்பதைச் சொல்லியிருப்பார்.செல்மா லாகர் லெவ் அதில் ஒரு கதாபாத்திரமாக வருவார்

ஆனால் நோபல் பரிசால் ஆவதொன்றும் இல்லை.நோபல் பரிசுபெற்ற படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் நாலைந்து வருடங்கள்கூட கவனிக்கப்படுவதில்லை. ஆலீஸ் மன்றோ,மோ யான்,தாமஸ் டிராண்ஸ்டூரூமர், ஹார்ட்டா முல்லர், ழீன் மேரி குஸ்தவ் லெ செலெஸியோ, டோரிஸ் லெஸ்ஸிங் போன்றவர்கள் சென்ற வருடங்களில் நோபல் பரிசு பெற்றவர்கள். அவர்களின் இடமென்ன?

ஆனால் நோபல் இல்லாமலேயே ஓரான் பாமுக், மரியா வர்கா லோஸா போன்றவர்கள் உலகமெங்கும் ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர்கள். நோபல் இல்லாமலேயே என் ஆன்மாவுக்கு நெருக்கமான எழுத்தாளராகிய ஐசக் பாஷவிஸ் ஸிங்கரை நான் கண்டுகொண்டிருப்பேன். உண்மை, நோபல் பரிசு பெறாமலிருந்திருந்தால் நஜீப் மஃபூசோ வோலே ஸோயிங்காவோ கவனத்தில் வந்திருக்கமாட்டார்கள். நான் போரிஸ் பாஸ்டர்நாகை கண்டடைந்திருக்க மாட்டேன். இவோ ஆண்ட்ரிசை கண்டடைந்திருக்க மாட்டேன்.நோபலின் முக்கியத்துவம் அதுவே

தொடக்க காலத்தில் இலக்கியத்தின் எல்லா வகைகளையும் வாசிக்கிறோம் ஒரு கட்டத்தில் நாம் நம்முடைய அகத்தேடலை நிறைவுசெய்யும் படைப்புகளை மட்டுமே தேட ஆரம்பிக்கிறோம். அந்தத் தேடலே நாம் எதை வாசிக்கவேண்டும் என முடிவு செய்கிறது. நோபல் சில அபூர்வ படைப்பாளிகளைச் சுட்டிக்காட்டுகிறது. அபூர்வமாக

ஜெ

முந்தைய கட்டுரைநமது கலை நமது இலக்கியம்
அடுத்த கட்டுரைநீலம் அட்டைகள்