அன்புள்ள ஜெயமோகன்,
“அசோகமித்திரன் காலச்சுவடுக்கு வருந்தி எழுதிய கடிதத்தில் இதுநாள் வரை அவரை எடுத்த மிகச்சிறந்த பேட்டிகளாக இரண்டைத்தான் சொல்கிறார். சுபமங்களா பேட்டிக்கு வினாக்களை நான் தயாரித்து கோமலுக்கு அனுப்பியிருந்தேன். கோமல் பேட்டியின் இறுதிவடிவை எனக்கு அனுப்பி நான் அதைச் செப்பனிடவும் செய்தேன்.” என்று உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறீர்கள்.
சுபமங்களாவில் வெளியான முதல் அசோகமித்திரன் நேர்காணலைச் செய்தது நான். கேள்விகள் என்னுடையவை. அதை கோமல் உங்களுக்கு அனுப்பவில்லை. இந்த நேர்காணல்தான் இளையபாரதி பதிப்பித்த சுபமங்களா நேர்காணல்கள் – கலைஞர் முதல் கலாப்ரியா வரை என்ற தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. நீங்கள் சுபமங்களாவுக்கு எடுத்த நேர்காணல் எப்போது என்று எனக்குத் தெரியாது. இது பற்றி விளக்கவும்.
அன்புடன்
ஞாநி
அன்புள்ள ஞாநி அவர்களுக்கு
கோமல் என்னிடம் போனில் கேட்டு அசோகமித்திரனிடம் கேள்விகளை அனுப்பும்படி சொன்னார். நான் எழுதியனுப்பினேன். இது என் நினைவிலிருக்கிறது.
அக்கேள்விகளில் சில அவரிடம் கேட்கப்பட்டிருந்தன. அவற்றை எனக்கு அவர் அனுப்பி சரிபார்க்கவும் சொன்னார். அப்பேட்டி நீங்கள் எடுத்தது என்பதை இப்போது நினைவுகூர்கிறேன். அதில் என் பங்கும் இருந்தது என்பது என் நினைவு.
சுபமங்களாவின் பெரும்பாலான பேட்டிகளில் என் கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கோமலுக்கும் எனக்குமான நட்பின் அடிப்படையில்.அதிகாரபூர்வமற்றவகையில் நான் அதில் பலபெயர்களில் எழுதியிருக்கிறேன்.
நீங்கள் அப்பேட்டியை எடுத்தவகையில் அந்தப்பங்களிப்பை நான் சொல்லமுடியாதுதான். மன்னிக்கவும். அந்த வரியை விலக்கிக்கொள்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் சொல்வது சரியல்ல. ஏனென்றால் அசோகமித்திரனிடம் பதில்கள் பெறப்பட்ட எல்லா கேள்விகளும் நான் கேட்டவை மட்டுமே. அவை அனைத்துமே என்னால் எழுதப்பட்டவை. முதல் செட் கேள்விகளுக்கு அசோகமித்திரனிடமிருந்து எழுத்துப்பூர்வமான பதில்கள் வந்ததும், அவை பற்றி நான் அசோகமித்திரனிடம் பேசினேன். சில துணைக்கேள்விகளை எழுப்பினேன். அவற்றுக்கும் அவர் பதில் அளித்தார். கோமல் என்னிடம் ஒரு கேள்வியைக் கூட கொடுத்து இதைக் கேளுங்கள் என்று அந்த நேர்காணலுக்கு மட்டுமல்ல, சுபமங்களாவுக்காக நான் செய்த சிட்டி, சோ நேர்காணல்கள் எதற்குமே சொன்னதில்லை. இறுதியில் சுபமங்களாவில் அச்சில் வந்திருக்கும் பிரதியும் முற்றிலும் என் கேள்விகள் மட்டுமே அடங்கியதாகும். நீங்கள் திருத்திக் கொண்டால் மகிழ்ச்சி. என்முதல் கடிதத்தையும் இந்தக் கடிதத்தையும் உங்கள் தளத்தில் வெளியிடலாம்.
அன்புடன்
ஞாநி
அன்புள்ள ஞாநி அவர்களுக்கு
நன்றி வெளியிடுகிறேன்.
நீங்கள் பேட்டி எடுத்த நிலையில் நான் அப்படி ‘கிளெய்ம்’ செய்யக்கூடாதுதான்
ஆனால் நான் கேள்விகள் எழுதிக்கொடுத்தது உண்மை. [அந்த பேட்டிகள் எதையுமே நான் உரிமைகொண்டாடக்கூடாது என்பதே முறை. சுமபங்களா திடீரென ஆரம்பிக்கப்பட்டது. அதில் சிற்றிதழ்சார்ந்தாவர்கள் எழுத தயங்கிக்கொண்டிருந்தனர். ஆகவே என் பங்களிப்பு அதிகம் இருந்தது] அசோகமித்திரன் குறிப்பிட்ட இரு பேட்டிகளிலும் நான் இருப்பது ஒரு பெருமிதத்தை அளித்தது. அதன் விளைவாக அப்படிச் சொல்லியிருந்தேன்
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
மீண்டும் சொல்கிறேன். நீங்கள் கோமலுக்கும் சுபமங்களாவுக்கும் கேள்விகள் எழுதிக் கொடுத்திருந்தால் அது எனக்குத் தொடர்பில்லாத செய்தி. என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று என்னிடம் ஒருபோதும் கோமல் சொல்லமாட்டார். அவர் மட்டுமல்ல, என்னை நேர்காணல் எடுக்கும்படி கேட்கும் எந்த பத்திரிகை ஆசிரியரும் எந்த காலத்திலும் அப்படி செய்ததில்லை. அப்படிச் சொன்னால், நான் கோபப்படுவேன் என்பது அவர்கள் எல்லாருக்கும் எப்போதும் தெரியும். என் இயல்பை அறிந்து என்னை மதித்து நடந்தவர்களுடன் மட்டுமே நான் பணியாற்றியிருக்கிறேன். அதில் கோமலும் ஒருவர். எனவே சுபமங்களாவுக்காக நான் அசோகமித்திரனுடன் செய்த நேர்காணலில் உங்கள் பங்களிப்பு ஏதோ ஒரு விதத்தில் மறைமுகமாக இருந்திருக்கலாம், என்றெல்லாம் நீங்கள் கருதிக் கொண்டால், அது உங்கள் கற்பனையே அன்றி நான் சம்பந்தப்பட்ட நிஜம் அல்ல. இந்த சுபமங்களா நேர்காணலுக்கு சுமார் பத்து வருடம் முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட விரும்புகிறேன். எதிரொலி ஏட்டின் சார்பில் நானும் சின்னக் குத்தூசியும் ஜயேந்திரரை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது அவர் எங்களிடம் துக்ளக் இதழில் வெளியான விடுதலை வீர்மணியின் பேட்டிக்கு கேள்விகளை தான் தயாரித்து சோவுக்கு அளித்ததாக சொல்லிக் கொண்டார். அங்கேயே நான் அதை கேள்வி கேட்டேன். சோ சொந்தமாக கேட்கக் கூடியவராயிற்றே. உங்களிடம் ஏன் கேள்விகளை கேட்டு வாங்கப் போகிறார் என்று. அவர் தான்தான் கொடுத்ததாக சொன்னார். இதை நான் என் கட்டுரையில் எழுதினேன். அதைப் படித்துவிட்டு சோ அதிர்ச்சியடைந்து என்னிடம் போனில் இது பற்றி கேட்டார். நான் அதை நம்பவில்லை என்பதை அவரிடமும் சொல்லிவிட்டு அவர் மறுப்பு வெளியிடவேண்டுமென்று சொன்னேன். சோ அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு தன் இதழில் நானும் சின்னக் குத்தூசியும் பொய் எழுதியதாக தன் கருத்தை வெளியிட்டார். இதைக் கண்டித்து சோவுக்கு கடிதம் எழுதினேன். அதை அவர் பிரசுரிக்கவே இல்லை. பல வருடங்களுக்குப் பின் சுபமங்களாவுக்காக சோவை நானும் வாத்யார் ராமனும், வண்ணநிலவனும் ஒன்றாகப் போய் பேட்டி கண்டோம். அச்சில் என் பெயரும் வாத்யார் ராமன் பெயரும் இருக்கும். வண்ண நிலவன் சோவின் முன்னாள் உதவி ஆசிரியர் என்ற மரியாதைக்காக உடன்வந்தார். சோவிடம் ஏன் அந்தக் கடிதத்தைப் பிரசுரிக்கவில்லை என்று அந்த நேர்காணலிலும் நான் கேட்டதற்கு வாத்யார் ராமனும் வண்ணநிலவனும் சாட்சிகள். சோ இந்த முறை சிரித்துக் கொண்டு மழுப்பலாக பதில் சொன்னார். பேட்டியை வாத்யர் ராமன் எழுதினார். இந்தப் பகுதி அச்சில் வேண்டாமென்று கோமல் கேட்டுக் கொண்டதால் அது விடப்பட்டதாக பின்னர் எனக்கு அவரும் வாத்யார் ராமனும் சொன்னார்கள். என் இயல்புகள் கோமலுக்கு நன்றாகத் தெரியும். அவரையும் நான் என் நாடக இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். அசோகமித்திரனிடம் எந்தக் கேள்வி கேட்கவும் அவர் என்னிடம் சொல்லவில்லை. எனவே அந்த நேர்காணலில் உங்கள் பங்கு எதுவும் இல்லை என்பதே உண்மை. “அசோகமித்திரன் குறிப்பிட்ட இரு பேட்டிகளிலும் நான் இருப்பது ஒரு பெருமிதத்தை அளித்தது. ” என்கிறீர்கள். நியாயமான பெருமிதம் பாதி பங்குதான் – சொல் புதிதுவுக்காக.
அன்புடன்
ஞாநி
அன்புள்ள ஞாநி
விளக்கத்துக்கு நன்றி, நான் ஏற்றுக்கொள்கிறேன். அசோகமித்திரனை பேட்டிகாண கோமலுக்கு எண்ணமிருந்திருக்கலாம். அதற்காக என்னிடம் கேட்டிருக்கலாம். நான் தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதை ஒப்புக்கொள்கிறேன்
ஜெ