‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 3

பகுதி ஒன்று : பெருநிலை – 3

“கிருதயுகத்துக்கும் முன்பு எப்போதோ அது நடந்தது” என்றார் தௌம்ரர். “நகர் நீங்கிய இளையோன் வனம்புகுந்து யமுனையின் கரையை அடைந்தான். மதுவனம் என்னும் மலைச்சாரலை அடைந்து அங்கு ஆயிரம் கிளைகளும் ஐந்தாயிரம் விழுதுகளும் கொண்ட மாபெரும் ஆலமரம் ஒன்றின் அடியில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு ஞானாசிரியர்கள் இருக்கவில்லை. ஊழ்கமும் அவன் பயின்றிருக்கவில்லை. அக்கணம் அவன் உள்ளத்தில் எழுந்த சொல்லையே அவன் சொன்னான். “வருக!”

அந்த ஒரு சொல் அவனுக்கு வழியும் திசையும் தொடுவானுமாகியது. தன் சித்தத்தை முற்றாக அதில் உறையச்செய்து அங்கே அமர்ந்திருந்தான். அவன் அகம் தன் அனைத்துச் சிறகுகளையும் ஒவ்வொன்றாக மடித்து அச்சொல்லில் சென்றமர்ந்தது. பின் அவன் அகமே அச்சொல்லானது. அவன் இருப்பும் அச்சொல்லாகியது. அவ்வழைப்பு அங்கே அமர்ந்திருந்தது. ஓங்கி உரத்து அது ஓர் ஆணையாக மாறியது.

ஆலமரத்தின் கிளிகள் உதிர்த்தவற்றை உண்டான். பனித்துளிகளையே பருகினான். உணவும் துயிலும் இழந்த அவன் உடல் உருகியது. மெல்லியதோல் மண்நிறமாகி மரப்பட்டைபோல் செதில்கொண்டது. கைநகங்கள் வளர்ந்து ஒன்றுடனொன்று பின்னி வேர்முடிச்சுகள் போலாயின. அவன் பற்கள் பழுத்து கருமைகொண்டு உதிர்ந்தன. கருகி காய்ந்து நெற்றுபோலாகி அங்கிருந்தது துருவனென்று வந்த உடல்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

துருவன் அரண்மனை நீங்கிய செய்தி அறிந்த சுநீதி மயங்கிச் சரிந்தாள். பன்னிருநாட்கள் அவள் தன்னினைவின்றியும் நினைவெழுகையில் உடைந்து கூவியழுதபடியும் மஞ்சத்தறைக்குள் கிடந்தாள். பின் அகம் தெளிந்தபோது அதுவரை அவள் கைகளில் இருந்த மைந்தன் அகத்தில் பற்றி ஏறி எரிந்துகொண்டிருந்தான். அவள் ஒவ்வொரு கணமும் வலிகொண்டு துடித்தது. அவனன்றி உலகில்லை என்றறிந்தாள். தேடிச்சென்று மீண்ட ஒற்றர்களை நோக்கி ஓடிச்சென்று அவர்களின் காலடியில் சரிந்து கண்ணீருடன் கைநீட்டி நல்ல செய்திக்காக மன்றாடினாள்.

அவள் விழிகள் நீர்மறந்து வெறிப்பு கொண்டன. கைவிரல்கள் நடுநடுங்கி ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டே இருந்தன. உதடுகள் ஓசையின்றி அசைந்து துருவனின் பெயரையே உச்சரித்தன. அவள் தோல் வெளுத்து உடல் மெலிந்தது. நடை மெலிந்து காற்றிலாடும் திரைச்சீலைபோலானாள். எந்நேரமும் சாளரத்தருகே நின்று சாளரக்கம்பிகளை நீலநரம்போடிய மெலிந்த கரங்களால் இறுகப்பற்றி மெல்ல நடுங்கியபடி வெளியே நோக்கிக்கொண்டிருந்தாள்.

சுநீதி வெளுத்துச் சோர்ந்து மெலிந்து கொண்டே செல்வதைக் கண்ட உத்தானபாதன் கனிவுடனும் கண்ணீருடனும் அவளைத் தேற்ற முயன்றான். அவள் அவனை அறியவேயில்லை. அவன் சொற்கள் அவளுக்கு முன் வீணே ஒலித்து அழிந்தன. ஒரு கணத்தில் அவள் அவனை உதிர்த்து வான்வெளியில் பல்லாயிரம்கோடிக் காதம் அப்பால் சென்றுவிட்டிருந்தாள். என்றுமே அவனை அவள் அறிந்திருக்கவில்லை என்பதுபோல. உயிரும் உள்ளமும் கொண்ட ஒரு மானுட உடல் சிலையென்றாகி விடும் விந்தை முன் அவன் சித்தம் திகைத்து நின்றுவிட்டது.

இழக்கப்பட்டவை பேருருவம் எடுக்கும் கலை அறிந்தவை. அவள் விலகிச்சென்றபின் அவன் அறிந்தான், அவளே தன் அகத்தின் பெண்மைப்பேருருவம் என. அன்னை அருகிருக்கிறாள் என்ற உறுதியால் விளையாட்டுப்பாவை நோக்கிச் சென்ற குழந்தை தான் என. ஒருபோதும் அவளை அன்றி இன்னொருத்தியை அவன் உள்ளம் பொருட்படுத்தியதே இல்லை. அவளால் விரும்பப்படுபவன் என்பதையே தன் தகுதியாக எண்ணிக்கொண்டிருந்தது அவன் அகம். அவளிருக்கிறாள் என்பதையே தன் அடித்தளமாகக் கொண்டிருந்தது அதில் திகழ்ந்த அச்சம். பதற்றமும் பரிதவிப்புமாக தன் அத்தனை கரங்களாலும் அவளுடைய வாயில்களை முட்டிக்கொண்டிருந்தான். அவை முன்னரே சுவர்களாக ஆகிவிட்டிருந்தன.

அவளிடம் பேசமுடியாமலானபோது அவன் தன்னுள் பேசிக்கொள்ளத்தொடங்கினான். அவளிடம் மன்றாடும் முடிவற்ற சொற்களாக ஆகியது அகம். அவளுக்கு அவன் சொன்ன சொற்களெல்லாம் மெல்லமெல்ல கரைந்து உருண்டு அவள் பெயராகியது. சுநீதி சுநீதி என்று அவன் அகநா சொல்லிக்கொண்டே இருந்தது. அவள்பெயரின் அச்சம்தரும் பேருருவை அப்போதுதான் உணர்ந்தான். தக்க நீதி. ஒவ்வொன்றுக்கும் உரியதாக என எங்கோ காத்திருக்கும் மறுபக்கம். அழியாதது, மாறாதது, தேடிவருவது. முற்றிலும் நிகர் செய்வது.

அவள் கொண்டிருந்த பேரன்பு தன்னிடமல்ல, தன்னில் திகழ்ந்து தன் வழியாக துருவனிடம் சென்று முழுமைகொண்ட இன்னொன்றிடமே என்றறிந்தபோது பாம்பு உரித்துப்போட்ட சட்டையென தன்னை உணர்ந்தான். உயிரற்றது, காற்றில் நெளிந்து ஒருகணம் பாம்பாகி பின் மீண்டு வெறுமைகொள்வது.

அந்த வெறுமை வழியாக அவன் பெருகி நிறைந்துகொண்டிருந்தான். அனைத்து இடைவெளிகளையும் நிறைத்து எடைகொண்டான். அந்த மனநிலையில் சுருசியைக் காண்கையில் ஒவ்வொருமுறையும் திகைத்தான். எத்தனை எளிய பெண். எத்தனை சிறிய உலகத்தில் வாழ்பவள். தன் உடலை பிறர் நோக்குகையில் உள்ளத்தாலும் உள்ளத்தை அவர் நோக்குகையில் உடலாலும் திரையிட்டுக்கொள்வது என்ற மிக எளிய உத்தி ஒன்றை மட்டுமே அறிந்தவள். கொடியென எண்ணுகையில் பாம்பெனச்சீறி பாம்பென அணுகுகையில் கொடியெனச் சுருளும் வித்தை மட்டுமறிந்த விஷமற்ற பச்சைப்பாம்பு.

இவளையா, இவளிடமா என்று எண்ணிஎண்ணி திகைத்து வியந்து பின் எண்ணுகையிலேயே விழியில் ஒரு நகைப்பை அடைந்தான். அவன் முன்வந்து விழிதூக்கி அந்நகைப்பைக் கண்டதுமே சுருசி தன் அத்தனை படைக்கலங்களையும் இழந்து குளிர்ந்து நின்றாள். அதுவன்றி எதையும் அவனிடம் காணமுடியாமலானாள். தனித்திருந்து அவனை எண்ணுகையில் அந்த நகைப்பின் ஒளியே அவனாக மாறுவதை அறிந்தாள். அவன் அவள் முன் பெருகி வளர்ந்து சென்றான். எட்டாதவனாக, தொடமுடியாதவனாக.

அவள் அவனை வெல்ல மீண்டும் மீண்டும் முயன்றாள். அவள் உடல் அவன் முன் கேலிக்குரிய அசைவுகளாக மாறி கூசி விலகியது. பாவனைகள் அனைத்தும் அக்கணமே அனைத்து உள்ளடுக்குகளையும் இழந்து நடிப்புகளாகத் தெரிந்தன. சொற்களுக்கு முன்னரே சொல்லின் உட்பொருட்கள் வெளியே வந்து தெறித்து சிதறின. ஆனால் ஒவ்வொரு முறை தோற்றுச் சுருண்டு மீள்கையிலும் தள்ளிவிடப்பட்ட பாம்புபோல மேலும் சீற்றத்துடன் அவள் எழுந்தாள்.

அவளது புண்பட்ட ஆணவம் தாளாமல் துடித்துக்கொண்டிருந்தது. மெல்லமெல்ல அது தன் எல்லையை அறிந்துகொண்டது. அதன்பின் இழப்பின் ஏக்கத்தால் அவள் நிறைந்தாள். கன்னியிளம் பெண்ணாக அவ்வரண்மனைக்கு வந்த நாள் முதல் அவள் அறிந்த உலகம் அவனே. அவனை வெல்வதற்காக அவள் கொண்ட படைக்கலங்களின் தொகையே அவளெனப்படுவதெல்லாம். அவள் அவனுக்கான ஓர் எதிர்வினை மட்டுமே.

கைவிட்டுச் சென்றுவிட்டதா என எண்ணியதுமே பதறுகிறது கை. அகம்பதறி அனைத்து நுட்பங்களையும் இழந்து அவள் பேதையானாள். பேதையாகும்தோறும் மேலும் மேலும் தோற்று சிறுமை கொண்டாள். இழக்கப்பட்டவை எடைமிகும் கலை அறிந்தவை. அவள் கணுக்கால்கள் தெறித்தன. நடை துவண்டது. நிற்க முடியாமல் சுவர்களைப்பற்றிக்கொண்டாள். இருக்கை கண்ட இடங்களில் அமர்ந்துகொண்டாள்.

அவன் முன் சென்று நின்றபோதெல்லாம் அகம் கொண்டிருந்த அனைத்தையும் அடி வைத்து கைகூப்பி கண்ணீர்மல்கினாள். அவள் விழிகளின் மன்றாட்டை அவன் கண்டான். அவன் அவள்மீது கழிவிரக்கம் கொண்டான். அக்கழிவிரக்கம் வழியாக அவளிடமிருந்து மேலும் விலகிச்சென்றான். அக்கழிவிரக்கத்தை அவள் சற்றேனும் பயன்படுத்திக்கொள்ள முயன்றால் கசப்பு கொண்டான். அவனுக்குப்பின்னால் நூறு நூறு பொருட்களில் விழுந்து பரிதவித்து வளைந்து நெளிந்து ஓடிச்செல்லும் நிழலாக இருந்தாள் சுருசி.

ஒருநாள் அவள் உத்தானபாதன் முன் மண்டியிட்டாள். அவன் முழங்காலில் முகம் சேர்த்து கண்ணீருடன் சொன்னாள் “என்னை விட்டுவிடாதீர்கள். என்னை வெறுக்காதீர்கள்.” அவன் அவளை வெறுக்கவில்லை. அவள் அவனுக்குப் பொருளாகவில்லை, அவ்வளவுதான். அவளை அணைத்து அவள் விழியில் வழிந்த நீரைத்துடைத்தான். ஆறுதல் மொழி சொல்லி முத்தமிட்டான். ஆனால் அவள் அவன் உள்ளம் விலகியிருப்பதைத்தான் ஒவ்வொரு அசைவிலும் தொடுகையிலும் அறிந்தாள். உள்ளம் அமையாத அத்தொடுகை அவள் பெண்மையை கூசவைத்தது.

அதை அவனும் அறிந்தான். “உன் முடிவிலா மாயங்களெல்லாம் உன்னை எதிர்ப்பவர்களால் உனக்கு அளிக்கப்படுபவை. முற்றாக அடிமைகொள்ளப்பட்டவனும் முழுமையாக விலகிச்சென்றவனும் உன் சிற்றுருவை அறிகிறார்கள்” என்று அவன் சொல்லிக்கொண்டான். அவனில் எழுந்த இரக்கத்தை அறியும்தோறும் அவள் சிறுமைகொண்டு சுருங்கிக்கொண்டிருந்தாள்.

தன்னை எஞ்சவைக்க அவள் அவனிடமிருந்து விலகத் தொடங்கினாள். விலகுவதை எண்ணிக்கொண்டிருப்பதே மெல்லமெல்ல விலக்கத்தை உருவாக்குமென அறிந்தாள். பின்பொருநாள் விலகுவதைப்போல எளியசெயல் ஏதேனும் உண்டா என வியந்துகொண்டாள். இருவருக்குமே இதமளித்தது அந்த விலகல். யாரோ என்றானபின் விழிகள் இயல்பாக தொட்டுக்கொள்ள முடிந்தது. எளிய உலகியல் சொற்களால் தருணங்களை இயல்பாகக் கடக்கமுடிந்தது. வடுக்கள் ஆறிய இடங்கள் இனிய நினைவுகளாகும் விந்தையை இருவரும் அறிந்தனர்.

சுநீதியோ துயரத்தால் மேலும் மேலும் ஆற்றல் கொண்டவளானாள். அவள் விழிகளில் அனல் சிவந்தது. மொழிகளில் வெம்மை எழுந்தது. தழல்முடி சூடிய கொற்றவை என அந்தப்புரத்தை ஆண்டாள். உருவி பீடத்தில் வைக்கப்பட்ட வாள்போலிருந்தாள். ஒற்றர்களும் படைத்தலைவர்களும் அவளையே பணிந்தனர். ஆணைகளேற்று காடுகள் தோறும் அலைந்தனர். துருவன் அமர்ந்த ஆலமரத்தடியையே நூறுமுறை சுற்றிவந்தனர். மரத்தால் மூடி உள்ளிழுக்கப்ப்பட்ட மைந்தனை அவர்கள் காணவில்லை.

ஒவ்வொருவரும் அவளுடைய முடிவிலா ஆற்றலை உணர்ந்தனர். அவளறியாத ஏதும் எங்குமிருக்க இயலாதென்பதுபோல. ஆடையில்லாது மட்டுமே அவள் முன் சென்று நிற்கமுடியும் என்பதுபோல. உத்தானபாதன் அவள் கூர்மையை அஞ்சினான். பேருருவை சுருக்கி ஓர் எளிய அன்னையாக அவள் தன் முன் வந்து நிற்கலாகாதா என ஏங்கினான். இடைநாழியில் அவள் நடந்து செல்கையில் அறியாது எதிரே வந்த சுருசி அஞ்சி சுவரோடு சாய்ந்து நின்று கைகூப்பினாள்.

ஒருநாள் சுநீதி ஒரு கனவு கண்டாள். காட்டில் பிறந்த உடலுடன் குருதி வழியும் தொப்புள்கொடியை தன் வாயில் வைத்து சுவைத்தபடி நின்றிருக்கும் துருவனை. “மைந்தா” என அவள் கூவ அவன் சிரித்துக்கொண்டே காட்டுக்குள் ஓடினான். அவள் கைநீட்டிப்பதறியபடி அவன் பின் ஓட அந்தக்காட்டின் அத்தனை இலைகளிலிருந்தும் குருதி ததும்பிச் சொட்டியது.

விழித்துக்கொண்ட சுநீதி எழுந்து தன் அரச உடைகளை உடலில் இருந்து கிழித்து வீசியபடியே அரண்மனை விட்டு ஓடினாள். அவள் சென்ற வழியெங்கும் ஆடைகளும் அணிகளும் பின்பு குருதியும் சிந்திக்கிடந்தன. அரசியல்லாமலானாள். குலமகளல்லாமலானாள். பின் பெண்ணென்றே அல்லாமலானாள். பேதை அன்னை மட்டுமாகி காடெங்கும் அழுதுகொண்டே அலைந்தாள்.

மைந்தனைக் கண்டடைய தன் விழியும் மொழியும் உதவாதென்று உணர்ந்தபின் பித்தியானாள். அது அவளை பறவைகளிடம் பேசவைத்தது. பறவைகள் அவளை அவனிருக்கும் இடத்துக்கு இட்டுவந்தன. அங்கே ஆலமரத்தின் சருகுகளும் மண்ணும் மூடி எழுந்த புற்றுக்குள் கருகி ஒடுங்கிய உடலாக அமர்ந்திருந்தவனே தன் மகன் என்று கண்டு அலறியபடி ஓடிச்சென்று அவன் காலடியில் விழுந்து கதறினாள். அவன் சடைகளும் ஆலமரத்தின் விழுதுகளும் பின்னிப்பிணைந்திருந்தன. அவன் சித்தமேயாகி எழுந்து கிளைவிரித்த ஆலமரம் பல்லாயிரம் நாக்குகளால் “வருக வருக” என விண்ணுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தது.

அவள் அவன் கால்களில் தன் தலையால் அறைந்தாள். அடிவயிற்றில் ஓங்கி ஓங்கி அறைந்து அவன் பெயர்சொல்லிக் கூவினாள். அவன் அவளுடைய ஒலிகள் கேட்பதற்கு நெடுந்தொலைவுக்கு அப்பாலிருந்தான். அவன் எதை எண்ணி எங்கிருக்கிறான் என அவள் அறியவில்லை. அவனில் அவள் உணர்ந்த அம்மைந்தனின் உடலோ உள்ளமோ எஞ்சியிருக்கவில்லை. ஆனாலும் அவள் அடிவயிறு அவனை தன் மைந்தனென்றே அறிந்தது.

பன்னிருநாட்களுக்குப்பின் விழிவிரித்து அவன் அவளை நோக்கியபோது ஆலமரவிழுதுக்கும் அவளுக்குமான வேறுபாட்டையே அவன் அறியவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். கைகூப்பி நின்றிருந்த அவள் தன் அகம் முழுக்க அவன் பெயர் மட்டுமே நிறைந்திருப்பதைக் கண்டாள். அதுவே தன் வழி என உணர்ந்து அதில் தன் அகத்தைக் குவித்தவளாக அவனருகே அமர்ந்துகொண்டாள். அவர்கள் மேல் காலம் சருகுகளாக உதிர்ந்து மூடியது. அவர்கள் மண்ணுக்குள் முற்றிலும் புதைந்துபோனார்கள்.

பிறகெப்போதோ துருவனை பிரம்மம் வந்து தொட்டது. விதைகீறி எழும் முளைபோல அவன் ஆன்மா விழித்தெழுந்து நின்றது. அது இது என்றிலாத ஒன்றாக அவன் முன் எழுந்த பரம்பொருள் அவனிடம் கேட்டது “நீ விழைவது என்ன?”

“நிலைபெயராமை” என்று அவன் சொன்னான். “மானுடனே, இப்பெருவெளியில் நிலைபெயாராத எதுவும் இல்லை என்றறிக. நீ நின்றிருக்கும் மண் ஒவ்வொரு கணமும் நிலையழிந்து கொண்டிருக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு மணல்பருவும் நிலைபெயர்கிறது. விண்ணை நிறைத்துள்ள முடிவிலா விண்மீன்திரள் நிலைமாறுகிறது. நிலைபெயராதது ஒன்றே. அதுவும் கூட தன்னை மாயையாக்கி நிலைபெயர்தலை நடிக்கிறது.”

“நிலைபெயராமை அன்றி பிறிதொன்றில் அமையேன்” என்றான் துருவன். “உன் கோரிக்கைக்காக இப்பிரபஞ்சப்பெருவெளியை நெய்து நிலைநிறுத்தி ஆட்டுவிக்கும் நெறிகளை அவிழ்த்துக் கட்ட முடியாதென்று உணர்க. அதுவன்றி நீ கோரும் நிலை எதையும் பெற்று நிறைக” என்றது அது. “நான் அமர்ந்தது அதற்காகவே. அதைப்பெற்றால் ஒழிய எழுவதில்லை. அது இயலாதென்றால் இங்கே முடிவிலி வரை அமர்ந்திருக்கவும் சித்தமே” என்றான் துருவன்.

ஆயிரம் வினாக்களால் அது அவனுக்கு அனைத்தையும் அளித்துப்பார்த்தது. அதுவன்றி பிறிதில்லை என அவன் சொன்னான். அதுஅங்கே நின்று தன்னையே நோக்கிக் கொண்டது. அதுவும் தன் ஆடலே என்று உணர்ந்து புன்னகை செய்தது. “அவ்வாறே ஆகுக” என்றது.

அப்போது விண்வெளி இடைவெளியின்றி நிறைத்திருந்த கோடானுகோடி ஆதித்யர்களும் அவர்களின் மைந்தர்களும் ஒருகணம் மின்னி அணைந்தனர். மண்ணிலுள்ள ஒவ்வொரு அணுவும் தன்னுள் ஏதோ ஒன்று நிகழ்ந்து மறைந்ததை உணர்ந்தது. புழுக்கள் ஒருகணம் எதிர்த்திசையில் நெளிந்து மீண்டன. பூச்சிகளின் சிறகுகள் அதிர்விழந்து எழுந்தன. துயில்பவர்கள் கனவொன்றைக் கண்டு மேனி சிலிர்த்தனர். கருக்குழந்தைகள் புரண்டன. பிரபஞ்சத்தை ஆக்கிய விதிமுறைகள் அனைத்தும் அக்கணத்தில் முழுமையாக மாறியமைந்தன.

“விண்ணிலுள்ள விஷ்ணுபதம் என்னும் புள்ளியில் நீ ஒளிமிக்க விண்மீனாக அமைவாய்” என்றது அது. “மையமற்றிருந்தது விண்ணகம். இக்கணம் முதல் நீயே அதற்கு மையமாவாய். உன்னைச்சுற்றி முடிவிலி சுழலும். ஒவ்வொன்றும் உன்னிலிருந்தே தொலைவை அறியும். உன்னைவைத்தே மாறுதலை உணரும். நிலைபேறு கொண்டவன் என்பதனாலேயே நீ காலமற்றவன். பிறிதென ஏதுமற்றவன். பிரம்மமும் உன்னையே இனி பற்றுக்கோளாகக் கொள்ளும். உனைத்தொட்டே இனி மாயையும் அளக்கப்படும். ஆம், அவ்வாறே ஆகுக” என்றது அது.

அதன்பின் அவனருகே அவனைநோக்கிக் கைகூப்பி நின்றிருந்த சுநீதியை நோக்கியது. “நீ வேண்டுவதை அளித்தேன். என்றென்றும் உன் மைந்தனருகே நீயும் ஒரு ஒளிர்விண்மீனாய் நின்றிருப்பாய். அவன் நிலைபேறுகொண்டவன் என்பதனாலேயே நீயும் அதை அடைந்தாய்” என்றது. விண்ணைக் கடந்து சென்ற இடியோசை ஒன்று ஆம் ஆம் ஆம் என அதை ஆமோதித்தது. தாங்கள் வாழ்ந்த பிரபஞ்சம் முற்றிலும் மாறிவிட்டதை அறியாமல் உயிர்கள் காலத்தில் திளைத்தன. விண்ணகப்பேரிருப்புகள் காலமின்மையில் சுடர்விட்டன.

தௌம்ரர் துருவனின் கதையைச் சொல்லி முடித்தார். ”வடமீனாக எழுந்த சிறுவனை வணங்குக. அவன் அடைந்த நிலைபேற்றையே ஊழ்கத்திலமர்வோர் ஒவ்வொருவரும் இலக்காக்குக. கன்னியர் அவன் பெயர் சொல்லி கற்பில் அமைக! கற்றறிந்தோர் அவனை எண்ணி விவேகத்தில் அமைக. படைக்கலம் கொண்டோர் அவனைநோக்கி விழிதூக்கி அறம் உணர்க!” அவரைச் சூழ்ந்திருந்த சீடர்கள் கைகூப்பி வணங்கினர்.

தௌம்ரர் தொடர்ந்தார். பின்னர் நெடுங்காலம் கழித்து இமையமலை மடிப்பின் வெண்பனி அலைகளில் முற்றிலுமாகத் தொலைந்துபோன ஏழு முனிவர்கள் மண்ணில் இனி வழியேதுமில்லை என்று உணர்ந்து விண்ணை நோக்கினர். விண்ணின் ஆதித்யகோடிகள் ஒவ்வொரு கணமும் நிலைமாறி திசையழிந்துகொண்டே இருப்பதையே கண்டனர். அவர்களில் ஒருவரான பிரஸ்னர் தன் இறுதி தவவல்லமையை விண்ணின் விழியாகச் செலுத்தியபோது கண்டுகொண்டார், அவற்றில் ஓர் ஆதித்யன் நிலைமாறுவதே இல்லை என. திகைத்தெழுந்து கைகூப்பி பெருங்குரலெடுத்துக் கூவி தோழர்களை அழைத்து அதைச் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொருவராக அதை உணர்ந்ததும் அவர்கள் அங்கேயே பிரமித்து அமர்ந்து விட்டனர். அவர்களின் முன்னோர் அறிந்த பிரபஞ்சம் அல்ல அவர்களுக்குரியது என்று உணர்ந்தனர். அந்த ஒற்றை ஒளிப்புள்ளி விண்ணிலும் மண்ணிலுமுள்ள அனைத்தையும் திட்டவட்டமாக்கிவிட்டது. ஒவ்வொன்றும் காலத்தாலும் தூரத்தாலும் அளக்கப்படுவனவாக ஆகிவிட்டிருந்தன. “வானம் கனிந்து விட்டது. தன்மேல் ஏறிவிளையாட சிறுவரை அனுமதிக்கும் மதயானை போல நம் சித்தம் அதை அளக்க தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டது” என்றார் பிரஸ்னர்.

அன்றுவரை மானுட ஞானம் மாறுதலையே பிரபஞ்சமென அறிந்திருந்தது. ஒன்றின் மாறுதல் பிறிதொன்றின் மாறுதலால் மட்டுமே கணிக்கமுடிவதாக இருந்தமையால் நிலையான அளவுகள் எவையும் உருவாகவில்லை. சூரியனும் சந்திரனும் ஒவ்வொருநாளும் நிலைமாறின. ஆகவே திசைகள் அன்றன்று பிறந்து வந்தன. பருவங்கள் வந்தபின்னரே அறியப்பட்டன. வானம் நிலையற்றது, ஆகவே பூமியும் நிலையற்றது என்றே ரிஷிகள் எண்ணினர். “எந்த அறிதலும் அறியப்படும் அத்தருணத்துக்கு மட்டும் உரியதே. நிலையான ஞானம் என்பது விண்ணில் இல்லை என்பதனால் மண்ணிலும் இயல்வதல்ல” என்று பிருஹஸ்பதி ரிஷி சொன்ன வரிகளே ஞானத்தின் முதல் விதியாக இருந்தது.

“இதோ இந்த ஒற்றைவிண்மீன் மட்டும் நிலையானது என்றால், இதை வைத்து நாம் வகுத்து அறியும் ஞானமும் இதைப்போல நிலையானதாகவே இருக்கும். இது காலத்தாலும் இடத்தாலும் மாறாதது என்றால் நாம் உருவாக்கும் ஞானமும் எதிர்காலத்தின் முடிவின்மை வரை நீடிக்கக்கூடியதே” என்றார் பிரஸ்னர். “இதோ மானுடனுக்கு விண்ணகம் ஒரு பேரருளை வழங்கியிருக்கிறது. இன்று நாம் நாளைக்கான ஞானத்தை உருவாக்கமுடியும். நாளையை இங்கிருந்தே வகுக்க முடியும். நாளை என்ற ஒன்றை மானுடன் கைப்பற்றிவிட்டான்.”

பசிதாகத்தை அவர்கள் அறியவில்லை. அந்தப்பனிவெளியிலிருந்து மீளும் வழியறியாதிருப்பதை மறந்தனர். தன் இடையில் இருந்த மான்தோல் சுருளை எடுத்து அதன் வலதுமேல் மூலையில் சிவந்த மையால் ஒரு சிறு சுழியைப்போட்டு “மாறாதது” என்றார் பிரஸ்னர். அதற்கு பிந்து என்று பெயரிட்டார். “முதல்ஞானமே நீ என்றும் எங்கள் ஏடுகளில் வாழ்வாயாக!” என்றார்.

“சீடர்களே, அந்தப்புள்ளியில் பிறந்ததே வானியல்ஞானம். லட்சம் மந்திரங்களைக் கொண்ட பிரஹதாங்கப் பிரதீபம் என்னும் வானியல்நூல் அந்த ஒற்றைப்புள்ளியில் தொடங்கியது” என்றார் தௌம்ரர். “அந்தக் கடுங்குளிரில் பனிமேல் அமர்ந்து முகிலற்ற துல்லியமான நீல வானில் ஒளிவிட்ட விண்மீன்களை அவர்கள் அடையாளப்படுத்தினர். மாற்றமில்லாத துருவவிண்மீனுக்கு மிக அருகே இன்னொரு விண்மீன் அதைச் சுற்றிவருவதைக் கண்டனர். அது சுநீதி. அதன்பின் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைநோக்கி விண்மீன்கூட்டங்களை கணக்கிட்டனர்.”

மறுநாள்காலையில் பனிவெளியில் அமர்ந்து விண்ணைநோக்கி கண்ணீருடன் வணங்கினார் பிரஸ்னர். மானுடனுக்கு அளிக்கப்பட்ட அப்பெருங்கருணையை எண்ணுந்தோறும் உள்ளம் நெகிழ்ந்து மேலும் மேலும் அழுதார். இரவில் கண்டு ஏட்டில் பொறித்த விண்மீன்கூட்டங்களை பகலில் ஒற்றைத்தோலில் எழுதிக்கொண்டனர். அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.

துருவன் ஒளிவிட்ட விஷ்ணுபதம் வடக்கின் மையம் என வகுத்தனர். அதிலிருந்து தெற்கு உருவாகியது. கிழக்கும் மேற்கும் உருவாயின. திசைகள் ஒன்றை ஒன்று வெட்டி வெட்டி விரிந்து பாதைகளை உருவாக்கின. அதைப் பற்றிக்கொண்டு அவர்கள் அந்தப்பனிவெளியில் இருந்து மீண்டு வந்தனர்.

இருபத்தைந்து வருடம் இமயமலைச்சாரலில் ஒரு சிறுகுடிலில் தன் மாணவர்களுடன் அமர்ந்து விண்ணை நோக்கிக் கணக்கிட்டார் பிரஸ்னர். சூரியரதம் உருளும் பாதையை ஒவ்வொருநாளுக்கும் துல்லியமாக வகுத்துரைக்க அவரால் முடிந்தது. சூரியனின் வழியறிந்தவர் என்பதனால் அவரையும் சூரியர் என்றே அழைத்தனர். தீதிலா வடமீனின் திறம் என்ன என்று நிமித்திகர் கண்டு சொன்னார்கள். தன் தவத்திறத்தால் விண்ணில் நிலைபேறடைந்த துருவனின் கதை அனைவருக்கும் தெரியவந்தது.

துருவனை மையமாக்கிக் கணிக்கப்பட்டமையால் சூரியதேவரின் வானியல் துருவகணிதம் என்று அழைக்கப்பட்டது. அது விண்ணக இருப்புகளின் திசைவழிகளை வகுத்தது. வான்மழையை வகுத்தது. வெள்ளத்தையும் வெயிலையும் வரையறைசெய்து சொன்னது. பயிர்களில் பூச்சிகளில் மிருகங்களில் திகழும் காலத்தின் தாளத்தைக் காட்டியது. அன்றுவரை நிலையில்லாத பெரும்பெருக்காக, கட்டற்ற கொந்தளிப்பாக இருந்த பிரபஞ்சம் தாளம் கைகூடிய பெருநடனமாக மாறித் தெரிந்தது. சிவனின் உடுக்கொலியைக் கேட்டவர் என்றனர் சூரியதேவரை.

துருவனை பிந்து என்றார் சூரியதேவர். அதை சூனியபிந்து என விரிவாக்கினார். அதை அடையாளப்படுத்த அச்சுழியையே குறித்தார். அதிலிருந்து முன்னகர்ந்து முடிவிலியை நோக்கிச்சென்றன எண்கள். அதிலிருந்து பின்னகர்ந்து முடிவிலியை நோக்கிச் சென்றன. சுழி வடிவில் எண்களின் மையமாக அமைந்த துருவனுக்குப்பின்னரே கணிதக்கலை பிறந்தது.

“நம் நூல்கள் அனைத்திலும் நாம் எழுத்தாணியால் வடமூலையில் ஒரு புள்ளிவைக்கிறோம். அது நம் முதல்பெருந்தெய்வம் துருவனுக்கு. இடதுகீழ்மூலையில் ஒரு புள்ளி வைக்கிறோம். அது நம் முதல்குருநாதராகிய சூரியதேவருக்கு. அவர்கள் அழியாப்புகழ்கொண்டவர்கள். அவர்களை வணங்குக” என்றார் தௌம்ரர். “பிரஹதாங்கப்பிரதீபம் சூரியதேவரால் ஆயிரம் பாடல்களில் இயற்றப்பட்டது. அதன்பின்னர் ஆயிரம் ரிஷிகள் அதை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். தன்னைத் தானே உண்டு பெருகும் உயிர்போல ஞானத்தை அளித்து ஞானத்தைப் பெற்று அது வளர்ந்துகொண்டிருக்கிறது.”

“துருவனின் வம்சம் இன்றும் உள்ளது” என்றார் தௌம்ரர். “அவர்களின் குலக்கதைகளின்படி நிலைபேறடைந்த துருவன் அவர்கள் குலத்திலேயே மீண்டும் வந்து பிறந்தார். சிருமாரன் என்ற பிரஜாபதியின் மகளாகிய பிராமியை மணம்புரிந்தார். கல்பன் வத்ஸரன் என்னும் மைந்தர்களுக்குத் தந்தையானார். வாயுவின் மகளாகிய இளா என்ற பெண்ணை மீண்டும் மணம் முடித்து உத்கலன் என்னும் மைந்தனைப்பெற்றார். மூன்றாவதாக சம்பு என்ற பெண்ணை மணந்து சிஷ்டி, பவ்யன் என்னும் மைந்தரை அடைந்தார்.

சிஷ்டியின் மனைவியாகிய ஸுச்சாயா என்பவள் ஐந்து மைந்தர்களைப் பெற்றாள். ரிபு, ரிபுஞ்சயன், விப்ரன், விருகலன், விருகதேஜஸ் என்ற ஐந்து மைந்தர்களும் துருவனின் புகழை ஓங்கச் செய்தனர். ரிபுவின் மனைவியாகிய பிருஹதி சாக்‌ஷுஷன் என்ற மைந்தனைப் பெற்றாள். வீராணப்பிரஜாபதியின் மகளாகிய புஷ்கரணியை மணந்த சாக்‌ஷுஷன் மனுவைப் பெற்றான். வைராஜபிரஜாபதியின் மகளாகிய நட்வலையை மணந்த மனு பத்து மைந்தர்களுக்குத் தந்தையானான்.  குரு, புரு, சதத்துய்மனன், தபஸ்வி, சத்யவான், சுசி, அக்னிஷ்டோமன், அதிராத்ரன், சுத்யும்னன், அபிமன்யூ என அவர்கள் அறியப்பட்டார்கள்.

தௌம்ரர் சொன்னார் “குருவின் மனைவி ஆக்னேயிக்கு அங்கன், சுமனஸ், கியாதி, கிருது, அங்கிரஸ், சிபி என ஆறு மைந்தர்கள் பிறந்தனர். அங்கனின் மனைவி சுநீதைக்கு வேனன் பிறந்தான். வேனனுக்கு வைன்யன் பிறந்தான். வைன்யனின் மைந்தனே பிருது. பூமியை அவன் வென்று தன் மகளாக்கினான். ஆகவே பிருத்வி என பூமி அழைக்கப்படுகிறது என்று அறிக!”

அவர் முன் அவரது மாணவர்கள் அமர்ந்திருந்தனர். “விண்ணில் துருவன் அமர்ந்திருக்கும் இடத்தில் வெளிநிறைத்து விரிந்திருக்கும் விஷ்ணுவின் பாதத்தின் விரல்நுனி அமைந்திருக்கிறது என்கிறார்கள் ரிஷிகள். ஆகவே அதற்கு விஷ்ணுபதம் என்று பெயர். முன்பு மாபலியிடம் மூன்றடி மண்கேட்டு வாமனனாக வந்த விஷ்ணு விண்ணளாவ கால்தூக்கியபோது அந்த விரல்நுனி சென்று விஷ்ணுபதத்தை இங்கிருந்து தொட்டது என்று பராசரரின் புராணசம்ஹிதை சொல்கிறது.”

தௌம்ரர் புராணசம்ஹிதையை விளக்கினார் “சப்தரிஷி மண்டலத்துக்கும் மேலிருக்கிறது துருவ மண்டலம். அவன் வலப்பக்கம் அவன் அன்னை உறைகிறாள். இந்திரன், அக்னி, காசியபர், தருமன் ஆகியோர் அவனைச்சூழ்ந்துள்ளனர். அழிவற்றவனும் நிலைபெயராதவனுமாகிய துருவனே விண்மீன் வெளியின் ஆதார மையம். மேழியில் எருதுக்கள் கட்டப்பட்டிருப்பதைப்போல வான்கோள்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. வான்வெளியில் பறவைகளென அவை பறந்தலைகின்றன. விண்ணின் அழியா நியதிகளின்படி அவை இயங்குகின்றன.”

“ஒளிமயமான காலசக்கரம் குடைபோலக் கவிந்துள்ளது. குண்டலம் போல உருக்கொண்டு சுழல்கிறது. சக்கரத்தின் கீழ்நுனியில் துருவன் இருக்கிறான். மையத்தில் பிரம்மன். விளிம்புகளில் அக்னி, இந்திரன், யமன் இருக்கின்றனர். மறு விளிம்பில் தாதாவும் விதாதாவும். ஏழுமுனிவர்களும் சக்கரத்தின் இடைப்பட்டை. இடதுதோளில் தென்வலத் தாரகைகள். காலசக்கரமோ விண்வடிவோன் சுட்டுவிரலில் அமர்ந்துள்ளது. அவனை நினைத்து அமைந்துள்ளன அனைத்தும். அவை வாழ்க!” தௌம்ரரின் மாணவர்கள் ‘ஓம் ஓம் ஓம்’ என்று முழங்கி வணங்கினர்.


வெண்முரசு அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரையாருடைய ரத்தம்?
அடுத்த கட்டுரைபிரயாகை- தொடக்கம்