அன்புள்ள ஜெமோ,
நலமா?
உங்களைப் போன்ற கடல் ‘எழுத்து ராட்சசர்’களுடன் ஒப்பிடும்போது என் போன்ற என் ஆர் ஐ எழுத்தாளர்கள் எழுதுவது கைம்மணளவிலும் சிறு துளியே. கலைமகள், விகடன் போன்றவற்றில் ஒரு சில விருதுகள், அவ்வப்போது நானும் கதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள், தொடர்கள் என்றெல்லாம் எழுதி வந்தாலும் எனக்கெல்லாம் ஒரு சில புதிர்கள் விடுபட்டதே இல்லை. எவ்வளவு முயன்றாலும், தமிழ் இலக்கிய, பதிப்பக மற்றும் சிற்றிதழ் சூழலை என்னால் இது நாள் வரை சரியாகப் புரிந்து கொள்ள முடிந்ததே இல்லை.
இன்றைய தமிழ் இலக்கிய, சிற்றிதழ் சூழல் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் எழுத்துலக குரோத, வன்மங்களைத் தவிரவும், இன்னும் என் போன்றோர் அனுபவித்த, அனுபவிக்கும் சில பல கோமாளித்தனங்களை கீழே தொகுத்துள்ளேன்.
‘சரஸ்வதி கடாட்சம்’ என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேடஸ் மெசேஜ் போட்டிருந்தேன். (பார்க்க:https://www.facebook.com/losangelesram/posts/10204638887512655 )
அதை விடக் கொடுமை, நான் மிகச் சரியாக ப்ரூஃப் பார்த்து அனுப்பி இருந்த ஒரு புத்தகத்தை, மறுபடியும் ப்ரூஃப் பார்க்கிறேன் பேர்வழி என்று ஒரு பக்கத்துக்கு முப்பது தப்புகளாவது சேர்த்து ஒரு குரூப்பே தொகுத்த அநியாயம்! இவர்களுக்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டாம், ஆனால் மிகக் குறைந்த அளவிலான தமிழ் இலக்கணப் பயிற்சி கூட இல்லையென்பது எனக்குப் பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது.
ஒரு பிரபல எடிட்டர் “யாரு என்ன அனுப்பிச்சாலும் கண்ணை மூடிக்கிட்டு படிக்காமலேயே ஒரு முப்பது பர்செண்டாவது நான் கட் பண்ணிப் போட்ருவேன், அப்பத்தான் எனக்கு சந்தோஷம்” என்று என்னிடம் பான் பராக் குதப்பிய வாயால் ஜம்பம் அடித்துக் கொண்டார்.
ஆனால், எதற்கெடுத்தாலும், பிறர் சொல்லுக்குச் செவி மடுக்காத ஒரு வறட்டு கௌரவத்திற்கு மட்டும் பதிப்பகங்களில் யாருக்கும் குறைச்சலே இல்லை. ஒரு அத்தியாயத்தைக்கூட ஒழுங்காகப் படிக்காமல் முரட்டுப் பிதற்றல்கள். அப்பப்பா! வாசிப்பனுபவம் என்றாலே கிலோ என்ன விலைதான்.
‘டிசம்பர் தர்பார்’ என்ற புத்தகத்தில் “ராஜா, இசைஞானியா?” என்றொரு அங்கதக் கட்டுரை. பதிப்பக உதவி ஆசிரியர், “எனக்கு தேனி, பண்ணைபுரம்லாம் குல தெய்வம் மாதிரி சார். நீங்க எப்படி இளையராஜாவ அவமதிக்கலாம்?” என்று பெரிய சண்டையே போட்டார்.
எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. மிகவும் பொறுமையாக “ஒரு தடவையாவது அந்த அத்தியாயத்தைப் படிங்க. தலைப்பை மட்டும் படித்து விட்டுக் குதிக்கக்கூடாது” என்றேன். ஊஹூம், கேட்கவோ, படிக்கவோ மறுத்து விட்டார். தெய்வ குத்தமாயிடுமாம்!
“நீங்கள் புத்தகமே போடாவிட்டாலும் பரவாயில்லை, ஒரே ஒரு வரியை மாற்றக்கூட நான் அனுமதிக்கமாட்டேன்” என்று நானும் பிடிவாதமாக மறுத்து விட்டேன்.
விஷயம் என்னவென்றால் நான் அதில் எழுதி இருந்தது முழுக்க முழுக்க மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரைப் பற்றி!
திடீர் திடீரென்று அவசர அவசரமாக எழுதச் சொல்லி உரிமையுடன் கூப்பிடும் பலரும், எழுதி அனுப்பியதும், “ஆர்ட்டிகிள் கிடைத்தது, நன்றி” என்று கூட ஒரு தகவல் அனுப்புவதில்லை.
அட, ஒரு வேளை பிரசுரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்களோ, வேறெங்காவது கேட்பவர்களுக்கு அனுப்பலாமா, அது தப்போ என்றெல்லாம் நாங்கள் குழம்பும் நிலை! கூப்பிட்டுக் கேட்டால் “அது போன மாசமே போட்டுட்டமே” அல்லது “எடிட்டர் பேத்தி பரத நாட்டிய அரங்கேற்றம் கவரேஜ் சார், உங்க தொடர் அடுத்த வாரத்திலேருந்து தொடரும்!”
“நீங்க ஒரு ரெண்டு லச்சம் போட்டாப் போதும் சார். நாமளே பப்ளிஷ் பண்ணி, நாமளே லைபேரி ஆர்டர் வாங்கி” என்று ஆசை காட்டும் திடீர், குபீர் பதிப்பாசிரியர்களை நான் அறிவேன். முக்கால்வாசியும் இவர்கள் போணி ஆகாத எழுத்தாளர்கள், தற்சமயம் பதிப்பாசிரியர்களாக உருமாற்றம் பெற்ற பச்சோந்திகள்.
காசு கொடுக்கும்வரை “உங்களுக்கு ஹெமிங்வே ஸ்டைல் இருக்கு சார், மார்க் ட்வெய்ன், ஆர்ட் புச்வால்ட் உங்ககிட்ட பிச்சை வாங்கணும்”, காசு போட மறுத்தால் “பிச்சைக்காரப்பய, இவன்லாம் எழுதலன்னு இங்க ஆரு அழுதா?” சில பல லட்சங்களைக் கோட்டை விட்ட ‘இளம், கிழம், மற்றும் மீடியம்’ தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் நான் அறிவேன். ‘ஐடி’ யில் பண்ணிய காசை இவர்கள் இலக்கியக் கரி ஆக்குகிறார்கள், பாவம்!
இன்றைய உங்கள் கட்டுரை
http://www.jeyamohan.in/?p=63610 எனக்குப் புரியாதிருந்த பல மர்ம முடிச்சுகளை, opinionated hypocrisy யை அவிழ்த்துப் போட்டு உடைத்திருக்கிறது!
நன்றி, வணக்கம்.
எல்.ஏ.ராம்.
அன்புள்ள ராம்,
பொதுவாக தமிழ் பெரிய இதழ்களின் பிரசுர அரசியலும் சிறிய இதழ்களின் பிரசுர அரசியலும் வெவ்வேறானவை. பெரிய இதழ்களில் நீடிக்கும் கோபம் , காழ்ப்பு என ஏதும் இருப்பதில்லை. எவருக்கும் எந்த அக்கறையும் இருப்பதில்லை, அவ்வளவுதான். நம் இதழாளர்களில் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குள் நுழையும் கனவுள்ளவர்கள். எஞ்சியவர்கள் பல்வேறுவகை செய்தித்தொடர்பாளர்கள். இலக்கியம் வாசிப்பு என்றெல்லாம் ஆர்வமுடையவர்கள் சொற்பம்
கூடவே பெரிய இதழ்களில் சாதியரசியல் உண்டு. நெடுங்காலம் பிராமண அரசியல் செல்வாக்குடன் இருந்தது. இன்று அது அனேகமாக பின்தள்ளப்பட்டுவிட்டது. இன்று உள்ளது தேவர்-நாடார் அரசியல். விகடன் அனேகமாக ஒரு தேவர் பத்திரிகை இன்று. வைரமுத்துவின் ‘மணிமுடி’ அவ்வாறு தயாரிக்கப்படுவதே. அதில் அறிமுகமாகும் எழுத்தாளர்களும் அவர்களே. சினிமா விமர்சனங்கள் வரை அந்தக் குறுகிய அரசியல் விகடனில் கோலோச்சுகிறது. அங்கே பணியாற்றும் சிலருடைய சொந்த சாதிப்பற்று அது.
மறுபக்கம் சிற்றிதழ்களில் உள்ளது குழு அரசியல். உயிர்மைகுழு காலச்சுவடு குழு என. அவர்கள் முழுமையான விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள்.
ஜெ