«

»


Print this Post

கோவை சந்திப்பு, சில கேள்விகள்


அன்புள்ள ஜெ,

நலமா? கோவையில் உங்களை தனியாக சந்தித்து பேச ஆசைப்பட்டேன் முடியவில்லை. அந்த கூட்டத்தில் நீங்கள் பேசிய விஷயங்கள் தொடர்பாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன நேரமிருந்தால் பதில் எழுதுங்கள் மகிழ்வேன்.

1. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டேன் “ ஒரு சமூக அசைவியக்கத்தின் உள்ளார்ந்த கூறுகள்தான் அந்த சமூகத்தின் மேல்தள அரசியலை (ground Politics) தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. மேல்தள அரசியலானது அச்சமூகத்தின் உள்ளார்ந்த கூறுகளை (கலை, பண்பாடு போன்ற அனைத்தையும்) ஓர் எல்லை வரை பாதிக்கவே செய்கிறது. இவை பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்தும் முரண்பட்டும் இயங்கும் சக்திகளாக இருக்கும் போது ஒரு கலைஞன் மேல்தள அரசியலை பேசமாட்டேன் எனச் சொல்வது எந்த அளவிற்கு சரி? “ என்று கேட்டேன் அதற்கு நீங்கள் அளித்த பதிலானது ஏற்கனவே உங்களது கட்டுரைகளில் நீங்கள் கூறியதாகவே இருந்தது. மேல்தள அரசியலின் போக்குகள் பற்றி ஒரு  அரசியல்வாதி, ஒரு சமூக விஞ்ஞானி போன்றோர் கூறும் கருத்துகள் போலத்தான் ஒரு விளைந்த கலைஞனாலும் சொல்ல இயலுமா? ஒருசமூகத்தின் உள்ளார்ந்த ஆன்மாவை மேல் தள அரசியல் எவ்வளவு பாதிக்கிறது என்பதை ஒரு கலைஞனை விட யார் அறிந்து கொள்ள முடியும்?   அவ்வாறு தன்னை பாதிக்கும் விஷயத்தின் இயல்பை பற்றி பேச வேண்டியது ஒரு கலைஞனாக நமது கடமையல்லவா?

2.தனக்கு தெரியாத விஷயங்களைக் கூட கலைஞனால் எழுதி விட முடியும் என்று கூறினீர்கள். என் அனுபவத்திலும் நான் உணர்ந்திருக்கிறேன் அது உண்மை. ஆனால் ஒரு கலைஞன் தன் கற்பனையால் (கற்பனை அல்லது தாரணை எது சரி?) எழுதுகிற அனைத்தும் உண்மையே என்று சொல்லிவிட முடியுமா? அல்லது நாம் இப்படி சொல்லிப்பார்க்கலாம் ஒரு இயற்பியல் விஞ்ஞானி கூறுகிற அனைத்தும் சரியாக இருக்க இயலுமா? ஆரியபட்டர், காளிதாசன் இருவர் சொல்வதில் யார் சொல்வது சரி எனில் காளிதாசன் சொல்வது சரி என்றீர்கள். அது ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கான தீர்ப்பாக வேண்டுமானால் இருக்க இயலும். காளிதாசன்கள் சொல்வதெல்லாம் உண்மை, ஆரிய பட்டர்கள் சொல்வதெல்லாம் தவறு என இருக்க முடியுமா? கலை, அறிவியல் என்ற இரண்டு மானுட அறிதல் முறைகளும் சமபலமானவை என்றே நான் கருதுகிறேன். நவீன இயற்பியல் 50+50=99.99 என்றே கூறுகிறது. இறுதி உண்மை என்பதை அவ்வளவு தீர்க்கமாக தர்க்கத்தாலோ தாரணையாலோ நெருங்க முடியுமா? 

3.கடந்த பத்து ஆண்டுகளில் என்னை பாதிக்கும் கவிதைகள் ஏதும் வரவில்லை என்றும் முகுந்த் நாகராஜன் என்னை கவர்ந்த கவிஞர் என்றும் கூறினீர்கள். எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் கவிதை சில முக்கியமான மாற்றங்களை அடைந்திருக்கிறது. அது விரிவான   பொறுப்பான ஒரு ஆய்வுக்குப்பின் பேசப்பட வேண்டிய விஷயம். தமிழ்க் கவிதை முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பன்மைதுவத்தால் நிரம்பி வழிவது கடந்த பத்து ஆண்டுகளாகத்தான். அதில் முகுந்த் நாகராஜன் ஒரு முகம் அவ்வளவே. அது போல எண்ணற்ற முகங்கள் தற்போதைய நவீன தமிழ் கவிதைக்கு உண்டு. தற்போதைய தமிழ் சூழலின் பலமாகவும் பலவீனமாகவும் இந்த பன்மைத்துவமே உள்ளது.  உண்மையில் எல்லா தசமங்களைப் போலவே இந்த தசமத்திலும் சில நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். உங்களைப் போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் சூழலை சற்று அவதானித்து ஒரு கட்டுரை எழுதுவது எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.   

வணக்கத்துடன்

இளங்கோ கிருஷ்ணன்

ilangokrishnanthewriter.blogspot.com

அன்புள்ள இளங்கோ கிருஷ்ணன்,

உங்கள் கேள்விகளுக்கு என் நோக்கில் பதில் சொல்ல முனைகிறேன்.

1. ‘எனது அரசியல்’ என்ற கட்டுரையில் நீங்கள் கேட்ட இக்கேள்விக்கான என் பதிலை தெளிவாகவே சொல்லியிருக்கிறேன். பிறிதொரு கேள்விக்குப் பதிலாக கோவையிலும் அதையே சொன்னேன்.

எழுத்தாளன் அவன் எழுத்தாளன் ஆனதனால், அவனைக் கவனிப்போர் இருப்பதனால், எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லவேண்டுமென்பதில்லை. அது ஒருவகை அதிகப்பிரசங்கித்தனம். ஓர் எழுத்தாளானக நின்று மட்டுமே அவன் பேசவேண்டும். குடிமகனாக அவன் பேசும் விஷயங்கள்  எல்லா குடிமக்களும் பேசும்  சாதாரண விஷயங்களாகவே இருக்கும். அவற்றை அவன் எழுத்தாளன் என்ற அடையாளத்துடன் சொல்ல வேண்டியதில்லை.

அத்துடன் எழுத்தாளன் உணர்ச்சிகரமானவனாக, சஞ்சலங்கள் கொண்டவனாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பல தளங்களில் ஐயங்கள்  அல்லது தடுமாற்றங்கள் கொண்டவனாக அவன் இருக்கலாம். அந்நிலையில் அவன் மௌனமாக இருப்பதே நல்லது.

அன்றாட அரசியல் சார்ந்த தளங்களில் ஓர் அரசியல்விமரிசகன் சொல்லும் விஷயங்களுக்கு சீரான ஒரு வளர்ச்சிப்போக்கும் முழுமையும் இருக்கும். அந்த அரசியல்விமரிசகனின் தரப்பு இன்னது என நீங்கள் வகுத்துக்கொள்ள முடியும். எழுத்தாளன் அவ்வப்போது நிகழ்பவற்றுக்கு தன் ஆன்மாவை திறந்து வைப்பவனாகவே இருப்பான்.  அவனது எழுத்து உடனடியாக நிகழ வேண்டிய ஒன்று. ஆகவே அவனிடம் முரண்பாடுகள் அதிகம் இருக்கலாம்.

அனைத்தையும் விட முக்கியமாக ஒன்றுண்டு. எழுத்தாளன் எழுதும்போது அந்தப் படைப்பூக்கக் கணத்தில் அடையும் உச்சமே அவன். மற்ற நேரத்தில் அவன் சாமானியன். அந்தச் சாமானியன் அரசியல் குறித்தெல்லாம் சொல்லும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. உதாரணமாக தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான அனைவருமே நெருக்கடிநிலையை ஆதரித்தார்கள் -சுந்தர ராமசாமியைத் தவிர.

ஆக, அரசியல் போன்றவற்றில் எழுத்தாளன் ஈடுபடச் சாத்தியமான இடம் மிகக்குறைவான ஒன்று. அரசியலில் உள்ள விழுமியங்கள் குறித்து அவன் பேசலாம். அது பண்பாட்டுத்தளத்தை தீண்டும் இடங்களைப்பற்றிப் பேசலாம். அப்போதுகூட அவனை ஒருவிஷயம் சீண்டி உணர்வெழுச்சி பெறச்செய்யுமென்றால் மட்டுமே அவன் பேச வேண்டும்.

அதையே எழுத்தாளனின் அரசியல் என்கிறேன். எழுத்தாளனாக மட்டுமே நின்று கொள்ளும் தரப்பு அது. அது உறுதியான கோட்பாடுகள் அல்லது நிலைபாடுகளை நம்பியது அல்ல. ஒரு நல்ல கதையை எழுதும்போது ஏற்படும் அதே மன எழுச்சியுடன் ஓர் அரசியல் சிக்கலை அவன் எதிர்கொள்ளும்போது உருவாகும் அரசியல் அது. படைப்பைப்போலவே அங்கும் தன் மனசாட்சியை, ஆழ்மனதையே அவன் திறந்து வைக்கவேண்டும்.

அவ்வாறு அவன் சொல்லும் கருத்துக்கள் அரசியல் ஆய்வாளர்கள், இதழாளர்கள் சொல்லும் கருத்துக்கள் நிரப்பாத ஓர் இடத்தை நிரப்பக்கூடியனவாக இருக்கும். அவற்றுக்கென ஒரு தனித்தன்மை இருக்கும். சமயங்களில் தர்க்கமற்ற ,அபத்தமான கருத்துக்களாகவும் அவை இருக்கலாம். ஆனாலும் அவை முக்கியமானவை.

அப்படி  அரசியலை எழுதிய மலையாள எழுத்தாளர்களான  ‘ஆனந்த்’ ‘ஓ.வி.விஜயன்’ போன்றவர்களையே நான் எனக்கு முன்னுதாரணமாகக் கொண்டு வருகிறேன். அந்த வழியில் தொடர்ச்சியாக அரசியலைப்பற்றி எழுதியும் வருகிறேன்.

2 .கலைஞன் சொல்வதே சரி, பிறர் சொல்வது அல்ல என்று நான் சொல்லவில்லை. காவியகர்த்தனுக்கும் சாஸ்திர ஆசிரியனுக்கும் இடையே முரண்பாடு தெரிந்தால் காவியகர்த்தனையே பிரமாணமாகக் கொள்ளவேண்டும் என்று நம் மரபு சொன்னதென்றால் காவியகர்த்தனை வெறுமே கற்பனாவாதி என்று அது பார்க்கவில்லை என்றே பொருள். அதற்காகவே கோவையில் அதைச் சொன்னேன்.

காவியகர்த்தன் இருஅம்சங்களால் சாஸ்திர ஆசிரியனுடன் வேறுபடுகிறான். 1. தன் ஆழ்மனதை அவன் கருவியாக்குகிறான். பழைய மொழியில் சொல்வதானால் ஆன்மாவால் அறிகிறான் 2. அவன் ஒட்டுமொத்தமாகப் பார்க்கிறான். பகுப்பாய்வுசெய்வதில்லை. அதாவது அவனுடையது ஆய்வுண்மை அல்ல தரிசன உண்மை.

இதை இப்படிச் சொல்லலாம், ·ப்ராய்டா தஸ்தாயெவ்ஸ்கியா என்றால் எவரை நான் நம்புவேன்? கண்டிப்பாக தஸ்தாயெவ்ஸ்கியைத்தான்.

ஆனால் இது அறிவியலை நிராகரிப்பதாகாது. அறிவியல் செயல்படும் தளங்கள் வேறு. அங்கே அதன் கொடைகளும் வேறு. நல்ல இலக்கியம் சமகால அறிவியலின் சாரத்தை தன்னுள் வாங்கித்தான் முன்னேற முடியும். அறிவியல் அறிவது அறிவியலுண்மை. இலக்கியம் அறிவது இலக்கிய உண்மை என்று சொல்லலாம். உண்மைகள் எப்போதும் ஒன்றல்ல. அவற்றின் தன்மைகள் பல.

முதல்முழு உண்மை என்ற ஒன்று உண்டா? உண்டு என நம்புகிறவன் நான். An Absolutist. அது முழுமையான அறிதல் மூலம் சாத்தியமாவது.  அந்த முழுமை நோக்கிய பயணத்தில்  அறிவியலும் இலக்கியமும் துணைவரலாம். இலக்கியம் ஒருபடி மேலாக. ஏனென்றால் அதில் உள்ள முழுமைசார் அணுகுமுறை இன்றைய அறிவியலில் இல்லை.

3 இலக்கியம் குறித்து, அல்லது இந்திய தத்துவம் குறித்து ஓர் நான் ஒரு கருத்தை எங்கு எப்படிச் சொன்னாலும் அதற்குப்பின்னால் ‘பொறுப்பான’ பல ஆண்டுக்கால அவதானிப்புகளும் ஆய்வும் உண்டு என நம்புங்கள். கவிதை குறித்தும் அப்படியே. என்னளவுக்கு தமிழ்க்கவிதையை வேறு யாரும் கவனிக்கிறார்கள் என்பதற்கு எழுத்தில் ஆதாரமில்ல்லை

கடந்த பத்தாண்டுகளில் என்னைப்பாதிக்கும் கவிதை ஏதும் வரவில்லை என்று நான் சொல்லவில்லை. பல கவிதைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். கவிஞர் என எவரும் வரவில்லை என்றே சொல்கிறேன்.

அதற்கான விளக்கங்கள் பல. ஒன்றைமட்டும் சொல்கிறேன். கவிதையின் ஆதாரமான செயல்பாடுகளில் ஒன்று பரிச்சயமழிப்பு. சொல்லும் விஷயங்களில் அது உருவாக்கும் பரிச்சயமழிப்பே கவிதையனுபவத்தின் முதல் மனஎழுச்சியை அளிக்கிறது. அதேபோல கவிமொழியில், கவி வடிவில் உள்ள பரிச்சயமழிப்பும் முக்கியமானது.

சென்ற பத்தாண்டுகளில் வந்த கவிதைகள் எதுவும் மன எழுச்சியூட்டுமளவுக்கு புதுமொழியுடன், புது வெளிப்பாட்டுடன் அமையவில்லை என்பதே உண்மை. இதை விமர்சன மொழியறியா வாசகன் அத்தனை கவிதைகளும் ஒன்றுபோலிருக்கின்றன என்று , சரியாகத்தான், குறிப்பிடுவான்.

கலாப்ரியா வந்தபோது, தேவதேவன் நுழைந்தபோது, சுகுமாரன் அறியப்பட்டபோது, ஏன் மனுஷ்யபுத்திரன் ஆரம்பித்தபோது புதியகவிமொழியின் ஒளியால்தான் அவர்கள் கவனம்பெற்றார்கள். இன்று கவிதைமொழியின் தனித்துவத்தால் தன்னை அடையாளம் காட்டும் எந்த இளம்கவிஞரும் இல்லை.

ஆகவேதான் முகுந்த் நாகராஜன் முக்கியமானவராக ஆகிறார். அவரது கவிதைகளின் முதல் இயல்பே அவற்றின் புத்தம் புதிய தன்மை. அதுகொடுக்கும் பிரகாசம். அவரது மொழியில் இருக்கும் சரளம் இன்றைய கவிதைகளின் சவால்களில் ஒன்று. நவீனக் கவிதை உலகமெங்கும் படிமங்களை விட்டு விலகி நுண்சித்தரிப்புகளால் ஆனதாக ஆகிக்கொண்டிருக்கிறது.  தமிழில் அழகிய நுண்சித்தரிப்புகள் கொண்ட கவிதைகள் முகுந்த் நாகராஜன் எழுதுபவை.

இந்தப் புதுமொழியை செயற்கையாக உருவாக்கிக் கொள்ள முடியாது. இது கவிதையின் பாடுபொருளுடன் இணைந்திருக்கிறது. நம்முடைய கவிதை இன்றும் நவீனத்துவ யுகத்திலேயே நின்றுகொண்டிருக்கிறது. ‘தனிமனிதனின் அந்தரங்க சிந்தனைகள்’ என்ற ஒரு பொத்தாம்பொதுவான வரையறைக்குள் ஏறத்தாழ எல்லா கவிதைகளையும் அடக்கிவிடலாம். அதற்குள் படிம உருவாக்கம், உருவக மொழி என கவிதை உருவாக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் கவிதை வாசிப்பவன் நான். இருபத்தைந்தாண்டுகளாக! பெரும்பாலான கவிதைகள் சலிப்பையே அளிக்கின்றன. முன்னரே வாசித்தவையாக, வேறு ஒருவர் எழுதி விட்டவையாக தோற்றம் அளிக்கின்றன. ஒருபோதும் கவிதை அந்த உணர்வை அளிக்கக்கூடாது. அதன் முதல் இயல்பே  பிறிதொன்றிலாததன்மை — அல்லது அந்த உணர்வை ஏற்படுத்தும் தன்மைதான். [அனன்யத என்று அதை பழைய இலக்கணம் சொல்லும்] அதுவே முதல் பரவசத்தை உருவாக்குகிறது.

தமிழின் மிகப்பெரும்பாலான நவீனக்கவிதைகள் செயற்கையான இறுக்கம் கொண்டவையாக, மொழிச்சிடுக்குகள் கொண்டவையாக, போலியான தத்துவத்தோரணையுடன் [அதே இருத்த்லியல் சோகம்] உள்ளன. விதிவிலக்குகள் கூட சிறிய அளவில்தான் விதிவிலக்காகின்றன.

தமிழில் நல்ல கவிதைகள் வருகின்றனவா? ஆம். ஆனால் அவை பெரும்பாலும் சிறு வேறுபாடுகளை, சிறு நுட்பங்களை  மட்டுமே கொண்டுள்ளன. ஒருகவிஞனுக்கும் இன்னொரு கவிஞனுக்கும் இடையே உள்ளது சிறிய வேறுபாடு. அவனுடைய ஒருகவிதைக்கும் இன்னொன்றுக்கும் இடையே உள்ளதும் அதேபோல சிறிய வேறுபாடே.

நான் கவிஞனிடம் அதிகமாக எதிர்பார்ப்பவன். அவன் மொழியின் முன்னோடி விசை என எண்ணுபவன். சில்லறை நுட்பங்களை உருவாக்குபவனாக அவனைக் கண்டு திருப்தி கொள்பவனல்ல.

இந்த விஷயங்களைப்பற்றி மிக விரிவாக எழுதியிருக்கிறேன். ‘உள்ளுணர்வின் தடத்தில்’, ‘நவீனத்துவத்திற்குப் பின் கவிதை- தேவதேவனை முன்வைத்து’ ‘ஈழ இலக்கியம்’ போன்ற  விமரிசன நூல்களில். துரதிருஷ்டவசமாக பெரும்பாலான கவிஞர்கள் எதையுமே வாசிப்பதில்லை. ஆகவே அவர்களின் எல்லைகளும் பலவீனங்களும் அவர்களுக்கே தெரிவதில்லை.

விமரிசகனின் நிராகரிப்பை எதிர்பார்ப்பாக விளங்கிக் கொள்ளுங்கள். அது ஒர் அறைகூவலும்கூட

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/6363

6 comments

1 ping

Skip to comment form

 1. ஜெயமோகன்

  ஜெயமோகன்,
  பங்கெடுக்க முடியாமைக்கு வருத்தம் இருப்பினும், என் பிறப்பூர் கோவை நகர பயணம் இனியதாய் அமைந்ததில் மகிழ்ச்சி..
  சில விடயங்கள் நான் நேரிடுபவை.. தமிழ் நாவல், மற்ற தமிழ் படைப்புகளின் மீதுள்ள இரசனை இளைய தலைமுறையினரிடம் தற்போது அதிகரித்து வருவது கண்கூடு..
  எனினும் இருபது வயது பாலகன் / இளைஞன் உங்கள் வாசகனாய் இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது..
  பகிர்ந்தமைக்கு நன்றி.. :-)

  – ராஜீவ்

  நன்றி.

  பொதுவாக என் எழுத்துக்களுக்கு மிக இளம் வயது வாசகர்கள் இருப்பது அபூர்வம்.ஆகவே ஆச்சரியமாக இருந்தது

  ஜெ

 2. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெயமோகன்,

  தங்களை கோவை சந்திப்பில் சந்தித்தது மகிழ்ச்சி. சில கேள்விகள் கேட்க நான் நினைத்து இருந்தேன். பலர் இருக்கும்பொழுது என்னால் பேச முடியவில்லை. என்னுடைய கேள்விகள் இங்கு.

  1 . சந்திப்புக்கு ஒன்று இரண்டு பெண்களை (நாங்கள் சைட் அடிக்க அல்ல :) ) தவிர மகளிர் கூட்டம் வரவில்லை, என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

  2 . நமது குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்ய புத்தகங்கள் எழுதும் எண்ணம் உண்டா ? குழந்தைகளுக்கு இலக்கியங்களை அறிமுகம் செய்யாமல், அவர்கள் வளர்ந்த பின்னர் இலக்கியம் படிப்பது இல்லை என நாம் எப்படி குறை கூறலாம். தெனாலிராமன், முல்லா கதைகளை தவிர அவர்களுக்கு தமிழில் படிக்க என்ன புத்தகங்கள் இருக்கின்றன.

  3 . எழுத்தாளர்கள் எழுதும் புத்தகத்தை படிப்பது நமது மக்கள் தொகையில் சொற்பமே. நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் தான் படிக்கின்றனர். அப்படி இருக்கும்பொழுது நாஞ்சில் நாடன் அவர்கள், தமிழை செம்மொழி தளத்துக்கு நகர்த்துவதில் எழுத்தாளன்தான் பங்கு வகிப்பதாக கூறினார். எந்த எழுத்தையும் படிக்காத, ஆங்கிலம் பேச தெரியாத, இலக்கியம் தெரியாத, அரசியல் தெரியாத… ஆனால் தமிழ் பேச மட்டும் தெரிந்த எங்கள் கிராமத்து மக்களுக்கும் அதில் பங்கு உண்டு என்று நினைக்கின்றேன். அவர்கள்தான் அடுத்த தலை முறைக்கும் தமிழை கொண்டு செல்கின்றார்கள். அவர்களுக்கும் அதில் பங்கு உண்டுதானே ?

  அன்புடன்
  இளங்கோ

  அன்புள்ள இளங்கோ

  ஏன் பெண்கள் வரவில்லை என்பதற்கான காரணம் இரண்டு. ஒன்று ஆர்வமிருந்தாலும் ஆண்துணை இல்லாமல் வரமுடியாது. இலக்கிய ஆர்வமில்லாத ஆண்கள் பொதுவாக அப்படி ஒத்துழைப்பதில்லை. ஒரு வாசகி கைக்குழந்தையுடன் வந்திருந்தார், பார்த்திருப்பீர்கள்.

  இரண்டு என் எழுத்து பொதுவாக தமிழ்ப்பெண்களுக்குப் பிடிப்பதில்லை. நம் பெண்கள் எளிமையான உணர்ச்சித்தூண்டல்கள் கொண்ட வாசிப்புக்க்கு பழகியவர்கள்.

  தமிழில் குழந்தைக்கதைகள் அதிகம் இல்லை — பெற்றோர் அவற்றை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை. ஆனால் இனிமேல் வரும் என நினைக்கிறேன்.

  தமிழ் பேசும் மக்கள் இருப்பதனால்தான் தமிழ் வாழ்கிறது என்பது உண்மை. ஆனால் பண்பாட்டுக்குப் பங்களிப்பாற்றுபவர்களாலேயே அது வளர்கிறது

  ஜெ

 3. ஜெயமோகன்

  ஜெயமோகன் எதிர்ப்பாளர்கள் அவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்தால்….சப் என்று ஆகிவிட்டது…! இணையத்தில் மட்டும்தான் திட்டுவார்கள் போலிருக்கிறது. ஜெயமோகனிடம் ஹலோ கூட சொல்லாமல் வந்த தீவிர வாசகர் கந்தசாமி, அங்கு வாங்கிய ஜெயமோகனின் ‘காந்தி’ புத்தகத்தை வரிக்கு வரி என்னிடம் போனின் பாராட்டிக்கொண்டிருக்கிறார்…
  நல்ல கூட்டம்!


  ஜீவா JEEVA

 4. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ,
  தங்கள்
  வலைமனையில் இப்போது பின்னூட்டம் போடும் வசதி கொண்டு வந்த சிறிது நாளிலேயே இது நல்லது தானா என்று எனக்கு தோன்ற ஆரம்பித்திருக்கிறது. முன்பு மின்னஞ்சல் செய்து அதனை தங்கள் விளக்கங்களுடன் வெளியிடுவது உங்கள் வழக்கம். இப்போது வரும் பின்னூட்டங்கள் சில சிந்திக்க வைப்பதாக இருந்தாலும் சில பின்னூட்டங்கள் தங்கள் தங்கள் எழுத்தை படித்த பின் உண்டாகும் மன நிலையை கலைக்கிறது. இப்போது ஒருவரை ஒருவர் சாட வேறு ஆரம்பித்திருக்கிறார்கள்.
  யூட்யூபில்
  நல்ல சங்கீதம் கேட்டு அதன் கீழே இந்தியர்களும் பாக்கிஸ்தானியர்களும், வட/தென்னிந்தியர்களும், மல்லுக்களும் தமிழர்களும் கண்றாவியாக அடித்துக்கொள்ளுவதை போல போய் விடுமோ என்று தோன்றுகிறது. கிண்டல் செய்வதுக்கும், திட்டுவதுக்கும் ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள் உள்ளன. தங்கள் வலைமனையை ஏன் அதற்கு உபயோகிக்க அனுமதிக்க வேண்டும்?
  அன்புடன்
  சிவா
  – ஹ்யூஸ்டன்
  Stride

  அன்புள்ள சிவா

  ரொம்பவும் மட்டுறுத்த வேண்டாமென நினைத்தோம். இனிமேல் இன்னமும் கறாராக இருக்கிறோம். வாசகர் கடிதங்கள் பலவகை. அவை சூழலின் சிந்தனைப்போக்கையும் மனநிலையையும் காட்டுகின்றன. ஆனால் ஒன்றை கவனித்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதும் கடிதங்களில் ஒரு விதமான பொறுப்புடன் விரிவாக, தர்க்கபூர்வமாக எழுதியவர்கள் சிலர்கூட பின்னூட்டமிடும்போது மட்டும் சரசரவென எதையாவது கிறுக்கிவிட்டுச் செல்கிறார்கள். பின்னூட்டமனநிலையே அதுதான்போலும்…

  ஜெ

 5. Arangasamy.K.V

  //இணையத்தில் மட்டும்தான் திட்டுவார்கள் போலிருக்கிறது//

  //இப்போது ஒருவரை ஒருவர் சாட வேறு ஆரம்பித்திருக்கிறார்கள்.//

  இது உடனடி எதிர்வினையினாலான மனநிலை என நினைக்கிறேன் , கொஞ்ச நேரம் தாண்டிவிட்டால் அந்த வேகமான வார்த்தைகள் மறைந்து கொஞ்சம் யோசித்து எழுதுவார்கள் போலும் .

  பின்னூட்டங்களை இன்னும் கொஞ்சம் இறுக்கியே பிடிக்கலாம் . உங்களையோ அல்லது யாரையுமோ தாக்கும் (விமர்சிக்கும் அல்ல) பின்னூட்டகளுக்கு தடா போட்டால் சரியாகுமா ?

 6. sivagnanam

  என்ன ஜே எம்
  உங்கள் எழுத்து பொதுவாக தமிழ் பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று எழுதி விட்டீர்களே? நான் அறிந்த வரையில் உங்களுக்கு பெண் வாசகர்தாம் அதிகம். எந்த இலக்கிய தரம் வாய்ந்த எழுத்துக்கும் பெண் வாசகர்தாம் அதிகம். அதுதான் என் அனுபவம், நான் கண்டது.

  உங்கள் கணிப்பு தவறாக இருக்கலாம். ஒன்று, நீங்கள் கீழே எழுதியது.

  “ஏன் பெண்கள் வரவில்லை என்பதற்கான காரணம் இரண்டு. ஒன்று ஆர்வமிருந்தாலும் ஆண்துணை இல்லாமல் வரமுடியாது.”
  என்ன ஒரு கொடுமை? ஆண்துணை இல்லாமல் வர முடியாத காரணத்தினால் பெண்கள் வரவில்லை, அதனாலேயே உங்கள் எழுத்தை விரும்பவில்லை என்ற முடிவுக்கு வந்து விட ஏதுவாய் உள்ளதே?
  சிவா சக்திவேல்
  us

 1. விஷ்ணுபுரம் அமைப்பு – இனியவை

  […] கோவை சந்திப்பில் பேசியவை -கடிதம் […]

Comments have been disabled.