நோபல்பரிசுகள் -விவாதம்

Kailash_Satyarthi

அன்புள்ள ஜெ

இந்த இணைப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். அறிவியல் தவிர்த்து அளிக்கப்படும் நோபல்பரிசுகள் எவையுமே புறவயமானவை அல்ல என்று கருதுகிறேன்.

இலக்கியவிருதுகள் எப்போதுமே ஐரோப்பிய விருதுகள்தான். ஐரோப்பிய [அமெரிக்க] படைப்புகளும், ஐரோப்பிய ரசனைக்கு உரிய படைப்புகளும்தான் வழமையாக விருதுக்குரியவையாக தேர்வுசெய்யப்படுகின்றன. விருதுபெற்ற படைப்பாளிகளில் முக்கால்வாசிப்பேருக்கு எந்த விதமான உலகளாவிய மதிப்பும் கிடையாது. இவ்வருடம் பரிசுபெற்ற பட்ரிக் மொடியானோ [Patrick Modiano]வை நான் வாசித்திருக்கிறேன். நான் வாசிக்கும் கலாசாலைக்கும் அவர் வந்திருக்கிறார்.ஒரு சராசரி ஐரோப்பிய எழுத்தாளர். இந்த வருடம் மட்டும் புத்தகக்கடைகளில் பேசப்படுவார்.

ஆனால் அதேசமயம் பரிந்துரைக்கப்பட்ட முரகாமி, ருஷ்தி போன்றவர்களுக்கு கொடுத்திருந்தாலும் தரமற்ற விருது என்றுதான் சொல்லப்படும். மொடியானோ ஐரோப்பிய எழுத்தாளர். இவர்கள் ஐரோப்பிய ரசனைக்காக எழுதும் எழுத்தாளர்கள். அவ்வளவுதான் வேறுபாடு.

அமைதிப்பரிசுகளைப் பொறுத்தவரை ஐரோப்பாவுக்கு சில அளவுகோல்கள் இருக்கின்றன. அதைவிட சில பிம்பங்கள் இருக்கின்றன. அவர்களைத்தான் அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். பெரும்பாலும் உலக அரசியலில் ஐரோப்பியநலன்களை பாதுகாத்தவர்களுக்கு அவ்விருதுகள் அளிக்கப்படுகின்றன. பிறருக்கு அளிக்கப்படும்போது அவர்கள் ஐரோப்பியர்களை கவர்ந்திருக்கவேண்டும் என்பதுதான் அளவீடாகக் கொள்ளப்படுகிறது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஐரோப்பியர்களுடன் சிறந்த தொடர்புகொண்டு அவர்களைக் கவரும் உத்திகளை கடைப்பிடிப்பவர்களுக்கும் அதற்குரிய பிம்ப உருவாக்க நடவடிக்கைகளைச் செய்பவர்களுக்கும்தான் இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன. காத்திரமான பணிகளைச் செய்தவர்கள் அடையாளம் கானப்படுவது மிகவும் குறைவு.

ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் [நான் இங்கே இருப்பதனால் எனக்கு நன்றாகவே சொல்லமுடியும் இவற்றைப்பற்றி] இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. இங்குள்ள சமூகவியலாளர்கள்.பொருளியலாளர்கள் போன்றவர்களை கவரவேண்டும். அதற்கு இவர்கள் ஏற்கனவே சொல்லிக்கொண்டிருக்கும் கொள்கைகளை தாங்களும் சொல்லவேண்டும். அல்லது அதற்கான நிரூபணப்பொருளாக இருக்கவேண்டும். அவர்கள் இவர்களை பலமுறை கருத்தரங்குகளுக்குக் கூட்டிவந்திருப்பார்கள். மேற்கோள்காட்டியிருப்பார்கள். ஒருகட்டத்தில் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வார்கள்

அது அந்த கல்வியாளர்களும் எழுத்தாளர்களும் சொல்லிவரும் கொள்கைகளை உலகளாவிய உண்மைகளாக ஆக்குவதற்காக செய்யப்படும் உத்திதான். ஒருவகை அதிகார உற்பத்தி. அல்லது வேறுவழியில் சொல்வது என்றால் அகங்கார சமனம். நோபல் பரிசுக்குழு ஒருவருக்கு விருது கொடுக்கும்போது அவரது கடந்தகாலச் சாதனையாக பார்ப்பது அவரைப்பற்றி ஐரோப்பாவில் கல்விமட்டத்திலும் புத்திஜீவி மட்டத்திலும் அதுவரை என்ன பேசப்பட்டிருக்கிறது என்பதுதான்

அமைதிப்பரிசு பெற்றவர்களையே பார்க்கலாம். முக்கியமான உதாரணம் அன்னை தெரஸா. அன்னை தெரசா ஒரு மதமாற்றப்பணியாளர் மட்டுமே. அவரது சேவை ஒருநகரத்தில் சுமாரான ஒரு மருத்துவமனையை நடத்தியது மட்டும்தான். அதைவிட பலமடங்கு பெரிய சேவை நிறுவனங்கள் இந்தியாவில் ஆரியசமாஜத்தாலும் ராமகிருஷ்ணமடத்தாலும் நடத்தப்பட்டு வருகின்றன. அவர்களின் சேவைக்கு முன்னால் தெரெஸாவெல்லாம் ஒன்றுமே இல்லை. புள்ளிவிவரங்களே வெளிப்படையாக உள்ளன.

images

அன்னை தெரசா நிதிக்கொடை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். உலகம் முழுக்க எல்லாவகையான அராஜக அமைப்புகளில் இருந்தும் அவர் நிதி பெற்றிருக்கிறார். எதற்கும் தணிக்கை கிடையாது.அந்த நிதியையும் அவர் செய்ததாக சொல்லப்படும் சேவையையும் ஒப்பிட்டாலே போதும் என்ன நடந்தது என்று தெரியும். இதை பல ஐரோப்பியரே எழுதியிருக்கிறார்கள்.

பஞ்சகாலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்திய கஞ்சித்தொட்டி இயக்கம் அன்னைதெரசாவின் இயக்கத்தைவிட நூறுமடங்கு பெரியது. வினோபாவின் பூதான இயக்கம் ஆயிரம் மடங்கு பெரியது. மட்டுமல்ல அது உலக அளவில் பெரிய முன்னுதாரணமும் கூட. குமரப்பா போன்றவர்கள் உலகத்தையே பாதித்தவர்கள். இன்றைய சுற்றுச்சூழல் செயல்பாடுகளுக்கெல்லாம் மூலவர்கள். அவர்களெல்லாம்ஐரோப்பிய மனங்களுக்கு ஒப்பவில்லை. காந்தியே ஒரு வேஷக்காரர் என்றுதான் ஐரோப்பிய கல்வியாளர்கள் நினைத்தனர். இரண்டுமுறை பரிந்துரைசெய்தும்கூட காந்திக்கு நொபல்பரிசு கொடுக்கப்படவில்லை

ஆனால் தெரெசா என்ற விம்பம் அவர்களால் கேள்வியில்லாமல் ஏற்கக்கூடியது. காரணம், தெரேசா ஏற்கனவே அவர்கள் வைத்திருக்கும் படிமம். இந்தியா போன்ற ‘பிற்பட்ட’ சமூகத்தின் அவலங்களுக்கு ஓர் ஐரோப்பியப்பெண் தீர்வு கொடுக்கமுடியும் என்று நம்புகிறார்கள். டார்ஜான்போல . ஃபேண்டம் போல. தெரெஸாவின் அமைப்பு எவ்வளவு சிறியது என்று அவர்களுக்கு ஒரு கேள்வியே இல்லை. அது தெரேசாவுக்குப்பின் சொத்துச்சண்டையால் சீரழிந்த செய்தியும் அவர்களுக்குப் பெரியவிஷயம் இல்லை.

முகமது யூனுஸ் இன்னொரு உதாரணம், அவர் ஒரு பொய்யான பிம்பம். வங்காளத்தில் அவர் எந்த பெரிய மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால் அதைப்பற்றி ஐரோப்பாவில் ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கிக்கொண்டார். இங்கும் இதுதான் அளவுகோல். பிற்பட்ட கீழைநாட்டுக்கு ‘பண்பட்ட’ ஐரோப்பிய மதிப்பீடுகள் கொண்ட ஒரு கனவான் மட்டுமே சேவை செய்யமுடியும்

இப்போது நோபல்பரிசு பெற்றிருக்கும் கைலாஷ் சத்யார்த்தியும் அப்படிப்பட்ட ஒரு பொய்யான பிம்பம்தான். அவர் ஒரு கருத்தரங்கஜீவி. ஐரோப்பிய கல்வித்துறை அமைப்புகளிலும் சர்வதேச அமைப்புகளிலும் கொள்கைமுழக்கம் போடுவார். அவர்களுடைய நிதியைப் பயன்படுத்தி திட்டங்கள் போடுவார். களப்பணி என்பதெல்லாம் தாள்வேலை மட்டும்தான். லட்சக்கணக்கான குழந்தைத் தொழிலாளார்களை மீட்டேன் என்கிறார். எங்கெ மீட்டார், என்ன செய்தார்? ஒரு செய்திகூட இல்லாமல் செய்தாரா என்ன?

பாருங்கள் இந்திய ஊடகங்கள் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பைப்பற்றி எப்போதுமே பேசிவருகின்றன. ஏராளமான செய்திகள் போட்டு வருகின்றன.ஆனால் இவரது சாதனைகள் செய்தியானதே இல்லை. ஏனென்றால் இவர் இங்கே ஒன்றுமே செய்ததில்லை. இவரது பணி நிகழும் இடமே வேறு.

இதற்கு முன்னால் இவரைப்போன்ற ஒருவர் இருந்தார். எனக்கு அவரை ஆய்வுமாணவராகத் தெரியும். மு.அறம் என்று அவரது பெயர். பெரிய காந்தியவாதி என்று அறியப்பட்டிருந்தார். தமிழர். அவரும் மனைவியும் தமிழ்நாட்டில் பல பெரிய தொண்டுநிறுவனங்களை பெரும் செலவில் அமைத்திருக்கிறார்கள். அவற்றில் ஐரோப்பியர் வந்து தங்குவார்கள். கருத்தரங்குகள் நடக்கும். அவர் ஐரோப்பியக் கருத்தரங்குகளுக்குப் போவார். ஆனால் தொண்டு? எனக்கு சத்தியமாகத் தெரியாது.நோபல் பரிசுக்கு நிகரான Niwano Peace Prize அவருக்கு கொடுக்கப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் ஒரு சூட்சுமமும் உள்ளது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எந்த சமூகவியல் ஆய்வுநிறுவனத்திலும் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு பற்றிப் பேசலாம். மனிதாபிமான முகம் கிடைக்கும். அதை வைத்து கீழைநாடுகளின் உற்பத்துப்பொருட்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இறக்குமதி செய்வதை தடுப்பார்கள்.

உதாரணமாக இந்தியாவின் கம்பளங்கள், காக்ரா சோளிகள் ஐரோப்பியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியதுமே இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கை சூடுபிடித்தது. அவை தடைசெய்யப்பட்டன.நம்ப மாட்டீர்கள் கலம்காரி துணி ஓவியங்களைக்கூட அதைச்சொல்லி தடுத்திருக்கிறார்கள். ஆனால் இதே மனிதர்கள் நைக்கி சப்பாத்துக்கள் செய்யும் இந்தோனேஷியத் தொழிலாளர்கள் உலகிலேயே குறைந்த கூலிக்கு வேலைசெய்வதை, அதில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை கண்டுகொள்ளமாட்டார்கள். அதற்காகப்போராடினால் நோபல் கிடைக்காது.

இதை நான் சொன்னபோது ‘குடும்பத்தில் குழந்தைகள் வேலைசெய்வது குழந்தைத்தொழில் அல்ல. இந்தோனேஷியாவில் சப்பாத்துகளைச் செய்பவர்கள் வீடுகளில்தான் வேலைசெய்கிறார்கள்’ என்று ஒரு பேராசிரியர் சொன்னார். உண்மையாகவே.

சத்யார்த்தி ஒரு போலிப் பிம்பம். ஐரோப்பா நமக்கு ஊதிக்காட்டுகிறது. நாம் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு உள்ள சமூகம்தான். அதற்காக உண்மையில் உழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனல இந்த பிம்பம் நமக்கு நல்லது செய்வது அல்ல. நல்லவேளையாக நம் ஊடகக்காரர்கள் ஒருமாதம் கழித்து நோபல் பரிசை மறந்துவிடுவார்கள்

அருண்

அன்புள்ள அருணேந்திரன்

இதுபற்றி எனக்கு பெரிதாக ஏதும் தெரியவில்லை. நீங்கள் கொடுத்த சுட்டியையும் உங்கள் தரப்பையும் வாசித்தேன். என்னபிரச்சினை என்றால் இடதுசாரிப்பார்வை ஒன்று இப்படி எல்லாவற்றையுமே கசப்புட்னும் ஐயத்துடனும் பார்ப்பதாக உருவாகியிருக்கிறது. அவர்களுக்கு முதலாளித்துவச் சதி இல்லாத எதுவுமே இல்லை. நைக்கி ஷூக்களை செய்யும் உழைப்பாளிகளைப்பற்றி ‘ஒருபொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலில் படித்திருக்கிறேன்

இப்போதைக்கு உங்கள் தரப்பை தெரிந்துகொள்கிறேன்

ஜெ