கோவையில்…

கோவைக்கு சும்மா பேசிக்கொண்டிருப்பதற்காகவே ஒருநாள் முன்னதாகக் கிளம்பிச்சென்றேன். ஜனவரி இருபத்தொன்றாம்தேதி இரவு எட்டரை மணிக்கு ரயில். ஆனால் என் மின்பயணச்சீட்டில் நேரம் இருக்கவில்லை. எட்டு என்று நினைத்துக்கொண்டேன். பகலெல்லாம் வேலை. துணிகளை இஸ்திரி போட்டேன். எனக்கும், பையனுக்கு நான்குநாட்களுக்கும். பெட்டிக்குள் எல்லாவற்றையும் எடுத்து வைத்தேன்.

அத்துடன் பல்வேறு விஷயங்களை எழுதிக்கொடுக்கவேண்டியிருந்தது. ஒரு சினிமாவுக்கு, இரு மலையாளச் சிற்றிதழ்களுக்கு. மலையாளத்தில் இன்று சிற்றிதழுக்கான தேவையே இல்லை என்று மலையாளிகள் எண்ணினாலும் பிடிவாதமாக சிலர் நடத்துகிறார்கள். அவர்களை ஆதரிப்பது என் புனிதகடமை என ஓர் எண்ணம். ஆனால் எழுதுவதற்குள் கை வலிக்கிறது. மலையாள எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறு சித்திரம். நண்டுகளின். புணர்ச்சிஒலிகளுக்கு புணரும் நண்டுகள்.

ஒருவழியாக எழுதிமுடித்து கிளம்பும்போதுதான் ராம்கி மொழியாக்கத்தில் வந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் நூல்கைப்பற்றிய கட்டுரையை முடிக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. முடிக்க முடியவில்லை, ஏழுமணி. அருண்மொழியிடம் சொல்லிக்கொண்டு பாய்ந்து கிளம்பினேன். ஆட்டோவில் ரயில்நிலையம்போனால் அங்கே நிதானம் தென்பட்டது.  குடிநீர்க்கடையில் கேட்டபோது ரயில்நேரம் எட்டரைதான் என்றார்கள். எல்லாரிடமும் ”ஆமா கிளம்பியாச்சு, இப்பதான்” என்றவகையில் செல்பேசி முடிக்க, ரயில்.

ரயில் கிளம்பியபோதே தூங்கிவிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். கண் விழித்தபோது கோவை ரயில் நிலையம். எல்லாரும் பெட்டிகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். என் கீழே ஒரு பெண் ஒருகையால் மார்புநடுவே சேலையை அழுத்தி மறு கையால் பெட்டியை இழுத்தாள். வரவில்லை, தன்னை மறந்து இருகையாலும் இழுத்தபோது ஏன் சேலையைப் பற்றியிருந்தாள் என்று புரிந்தது.

ரயில்நிலையத்திற்கு வெளியே அரங்கசாமியும் அருணும் காத்திருந்தார்கள். ரயில்நிலையம் அருகே முருகன் ஓட்டலில் அறை. விசாலமான ஆடம்பர  அறை. பேசிக்கொண்டிருக்க நிறைய இடம். மூவரும் சந்தித்த முதற்கணம் முதலே பேச ஆரம்பித்தோம். கீதை, காந்தி, விஷ்ணுபுரம்…

டீ வந்தது. எனக்கு கறுப்புடீ கொண்டுவந்தான் பையன் – வழக்கம் போல அது டிக்காஷன்தான். தமிழ்நாட்டில் பாலில்லா டீ குடிக்க இன்னமும் எவரும் பழகவில்லை. டீ எப்படி போடுவதென அருணுக்கு விளக்கினேன். மூன்று பொன்விதிகள்.

1. நீர் அதிகமாக கொதிக்கக்கூடாது, சுவை மாறுபடும். மீனின் கண் மாதிரி நீரில் குமிழி வரும்போதே இறக்கிவிடவேண்டும்.

2. குறைவாகவே டீத்தூள் போடவேண்டும், ஒரு டம்ளருக்கு கால் டீஸ்பூன் அதிகபட்சம். அடுப்பை விட்டு நீரை இறக்கியதுமே டீத்தூளை போட்டு மூடிவைக்கவேண்டும். அதிகபட்சம் 30 நொடிகள். அதற்குள் டீத்தூள் கீழே இறங்கிவிடும்.  உடனே வடிகட்டி விடவேண்டும். டீ என்பது அதன் முதல் ஊறல் மட்டுமே. சீனர்களுக்கு இரண்டாம் ஊறல் என்பது விஷம். விலங்குகளுக்குக் கூட கொடுக்க மாட்டார்கள். டீயை போட்டு நீரை கொதிக்கவைத்து குடிக்கும் நம் வழக்கம் அவர்களை பீதியுறச்செயும்.

3. ஏற்கனவே நீரில் சீனியை போட்டிருக்கக் கூடாது. வடிகட்டிய டீயில் சீனியை போட்டு ஸ்பூனால் கலக்க வேண்டும்.

அதுதான் டீ. நாம் நெடுங்காலமாக கொட்டைகளை வறுத்து பாலில் கலக்கி குடிக்கும் வழக்கம் கொண்டிருந்தோம். அது கீர் எனப்பட்டது. இந்தியாவுக்கு டீ,காபி வந்தபோது நாம் டீ கீர், காபிகீர் சாப்பிட ஆரம்பித்தோம். நம் நாக்கு பழகி விட்டது. நல்ல டீயை ஒருசில நொடிகள் முகர்ந்தபின்னரே குடிக்கவேண்டும்.

வெளியே சென்று ஆனந்தாஸ் ஓட்டலில் டிபன் சாப்பிட்டோம். கொஞ்சநேரத்தில் நண்பர்கள் வர ஆரம்பித்தார்கள். பழனியில் இருந்து கதிரேசன் வந்திருந்தார். ஓமனில் பணிபுரிகிறார். இணையம் மூலம் என்னை அறிமுகம்செய்துகொண்டு தீவிர வாசகராக ஆனவர். கோவை வாசகர் பாலசுப்ரமணியம் அதன்பின் வந்தார். கொங்குநாட்டின் குலதெய்வமரபுக்கும் சமணத்துக்குமான உறவைப்பற்றி பேசிக்கொண்டோம்.

கோவைஞானியை போய் பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பினோம். பாலசுப்ரமணியம் அவர்களின் தம்பி இரும்புக்கடை வைத்திருந்தார். அவரும் நல்லவாசகர். அவரையும் அழைத்துக்கொண்டு  இரு கார்களில் கோவை ஞானியின் வீட்டுக்குச் சென்றோம். அவர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நான் ஞானியைச் சந்தித்து இரு வருடங்கள் ஆகின்றன. எழுந்துவந்தபோது குளிர்ந்த மெல்லிய கைகளைப் பற்றிக்கொண்டேன். இருபதுவருடமாக பழகி நினைவை விட்டு அகலாத தொடுகை.

ஞானியிடம் ‘கொற்றவை’ குறித்து பேசினேன். கொற்றவையை தமிழாசிரியர்கள் எவருமே வாசிக்கவில்லை என்று ஞானி கொதித்தார். கொற்றவை பல திசைகளில் தமிழாய்வை எடுத்துச்செல்லக்கூடிய ஆக்கம்.  ஆய்வுகளுக்குரிய பல விதைகள் அதில் இருக்கின்றன என்றார். ‘இளங்கோ ஒரு சமணர் என்றுதான் சொல்கிறார்கள், நீங்கள் எப்படி அவரை ஒரு பௌத்த துறவி என்கிறீர்கள்? இளங்கோவடிகள்தான் ஐயப்பன் என ஏன் சொல்கிறீர்கள்?’ என்றார்.

நான் ‘ஓரு நாவலில் அப்படிச் சொல்வதற்கான முகாந்திரங்கள் மட்டுமே போதும் அவை வலிமையாகவே உள்ளன’ என்றேன். கேரளத்தில் உள்ள சாஸ்தாசிலைகள் எல்லாமே போதிசத்வர்கள்தான் என்பதை சிற்பங்களை வைத்து ஆய்வாளர் சொல்கிறார்கள். பல ஆயிரம் சாஸ்தாகள் அங்கே உள்ளனர். அவர்களில் ஒருவரே ஐயப்பன். அவரும் ஒரு போதிசத்வர். கைவிடப்பட்ட போதிசத்வர் சிலைகள் பின்பு சாஸ்த்தாக்களாக அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான புராணங்கள் உருவாக்கப்பட்டன. இதெல்லாம் நடந்தது 15 ஆம் நூற்றாண்டில்.

கவுந்தி என்ற சமணத்துறவியை படைத்து கண்ணகியின் கூடவே அனுப்பியமையால் இளங்கோ சமணராக இருக்கலாம் என்று ந.மு.வேங்கடசாமிநாட்டார் ஊகித்தார். அந்த ஊகமே இன்றும் நீடிக்கிறது. மாற்று ஊகங்களுக்கான பல சாத்தியங்கள் உள்ளன. குணவாயில்கோட்டத்தில் அரசு துறந்து இருந்த இளங்கோவடிகளை வந்து சந்திப்பவர் பௌத்தரான சீத்தலை சாத்தனார். அவர் சொல்லியே இளங்கோ சிலம்பை எழுதுகிறார். அதுவே அவர்கள் இருவரும் ஒருமதம் என்பதற்கான முதல் சான்றாகக் கொள்ளலாம்.

சிலம்பும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என கொள்ளப்பட்டிருக்கின்றன. இருவேறு மதநூல்கள் அப்படி கொள்ளப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இளங்கோ கண்ணனைப் புகழ்ந்து பாடுகிறார். பொதுவாக சமணர்கள் இவ்விஷயத்தில் இறுக்கமானவர்கள். இப்படி சில ஊகங்களை நிகழ்த்த வாய்ப்பிருக்கிறது.

ஐயப்பனின் கதை இளங்கோவின் கதைக்கு மிக நெருக்கமானதாக உள்ளது. அக்கதை ‘காற்றில்’ இருந்திருக்கலாம். அதை ஐயப்பன் மீது ஏன் ஏற்றினார்கள்? அந்த போதிசத்வர் யார்? போதிசத்வர்கள் வாழ்ந்து முக்தி அடைந்தவர்கள். அப்படியானால் ஏன் ஐயப்பன் போதிசத்வராக ஆன இளங்கோவாக இருக்கலாகாது?

‘சரிதான்’ என்றார் ஞானி சிரித்தபடி. அவரிடம் விடைபெற்று அறைக்கு வந்தேன். அறையில் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் தங்கமணியும் வந்திருந்தார்கள். நாஞ்சில்நாடன் வந்திருந்தார். திருப்பூரில் இருந்து சந்திரகுமார் வந்தார். அதன்பின்னர் இதழாளார் செல்வேந்திரன். வார்த்தை இதழில் எழுதிய வ.ஸ்ரீநிவாசன். அறை நிறைய ஆரம்பித்தது. உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

மாலை ஏழுமணிக்கு நானும் நாஞ்சில்நாடனும் முத்தையாவும் வ.ஸ்ரீயும் கிளம்பி மூத்த தமிழறிஞர் ம.ரா.பொ.குருசாமி அவர்களின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தோம். 84 வயதான குருசாமி அவர்கள் ம.பொ.சி அவர்களின் தமிழரசுகழகத்தில் பணியாற்றியவர். மு.வரதராசனாரின் மாணவர். திருவிகவுடன் நேர்ப்பழக்கம் உடையவர். கம்பராமாயண செம்பதிப்புப் பணியில் பங்குகொண்டவர். திருவிக குறித்து பேசிக்கொண்டிருந்தோம்.

திருவிகவை கடைசிக்காலத்தில் கிட்டத்தட்ட ஓர் அனாதை முதியவராக காண நேர்ந்ததைப் பற்றி குருசாமி சொன்னார். நான் திருவிக அவரது சுயசரிதையில் தன் சகோதரர் புதல்விகளுடன் ‘வீடெல்லாம் பெண்கை நிறைய’ தான் வாழ்வதைப்பற்றி எழுதி முடித்திருப்பதைப்பற்றிச் சொன்னேன். குருசாமி ”பெண்களை நம்பி இருக்க முடியுமா? கடைசிக்காலத்திலே அவர்கிட்ட பணம் இல்லை. அப்படியே விட்டுவிட்டார்கள்” என்றார். ‘பெண்ணின்பெருமை’ என்ற  திருவிகவின் தலைப்பு மூளையில் மின்னி மறைந்தது.

கிளம்பும்போது நாஞ்சில்நாடன் வீட்டுக்குச் சென்றேன். இப்போது நாஞ்சில் நல்ல வசதியான வீட்டில் இருக்கிறார். அவருக்கென சொந்த அறையும் வாசிப்பிடமும் இப்போதுதான் அமைந்திருக்கிறது. அவர் அவரதுசாதனைப் படைப்புகளை எழுதும் நாட்களில் அவருக்கென ஒருநாற்காலியை ஒழுங்காகப்போடும் இடம் கூட இருக்கவில்லை. இன்று அவரது பெண் மருத்துவராகிவிட்டாள். அவள் அழகிய புதிய கார் வாங்கியிருந்ததைப் பார்த்தேன், மனநிறைவாக இருந்தது. புத்தகச் சந்தையில் ஏகபப்ட்ட நல்ல புத்தகங்களை வாங்கியிருந்தார் நாஞ்சில்.

மீண்டும் அறைக்கு வந்தோம். இரவு இரண்டுமணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இரவு பன்னிரண்டுமணிக்குத்தான் சந்திரகுமார் கிளம்பிச்சென்றார். பின்னர் ஒவ்வொருவராகக் கிளம்பிச்சென்றார்கள். நாங்கள் தூங்கும்போது இரவு இரண்டு மணி ஆகியது.

மறுநாள் காலை ஆறரை மணிக்கு சென்னையில் இருந்து வழக்கறிஞர் செந்தில் வந்தார். வந்த நிமிடம் முதலே ஏதோ வில்லங்கநிலத்தில் அத்துமீறி ஆக்ரமிப்பதன் நுட்பங்களைப்பற்றி செல்போனில் யாரிடமோ தொழில்நேர்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நண்பர்களாக வர ஆரம்பித்தார்கள். காலை பத்தரை மணிக்கு அன்னலட்சுமி ஓட்டலின் மாடியில் உள்ள சந்திப்பு அறையில் மதிய உணவும் உரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. உண்மையில் ஒரு சின்ன சந்திப்புதான் உத்தேசிக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக அதிகரிக்க அதிகரிக்க அதை விரிவுபடுத்த வேண்டியிருந்தது.

அன்னலட்சுமியில் பதினொரு மணிக்கு கிட்டத்தட்ட நாற்பதுபேர் வந்துவிட்டிருந்தார்கள். கோவையின் முக்கியமான கலாச்சார இயக்கமான கோணங்கள் திரைப்பட இயக்கத்தில் இருந்து நண்பர்கள் வந்தார்கள். ஆனந்த் தமிழினியில் சினிமா பற்றி எழுதுகிறார். தியாகராஜன் அவர்களின் தியாகு புத்தகநிலையம்  கோவையில் முக்கியமான ஒரு மையம் என்றார்கள். அது ஒரு வாடகைநூல் நிலையம், நல்ல நூல்களுக்கானது. இரண்டுபேர் வாசிப்பதர்காகக்கூட ஆயிரம் ரூபாய் நூலை வாங்கிவிடுவார் என்றார்கள்.  அதைச்சார்ந்த நண்பர்கள். சுரேஷ் என்ற நண்பர். அதிகம் கேள்விகேட்டவர் அவர்தான். ஏராளமாக வாசித்திருந்தார். ‘விஜயா’ வேலாயுதம், உடுமலை டாட் காம் சிதம்பரம் என பல முக்கியமானவர்கள்…

கோவையில் தென்பட்ட உற்சாகம் எனக்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அரங்கசாமி, அருண், முத்தையா என்ற மூன்று தனிவாசகர்களின் ஆர்வத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக்கூட்டமும் சந்திப்பும் சட்டென்று ஓர் இலக்கிய அமைப்பாகவே ஆகிவிட்டது  ஆச்சரியமூட்டியது. திட்டமிட்டதற்கு மூன்றுமடங்கு நிதி வந்துவிட்டதனால் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் ஏதாவது நிகழ்த்தலாமென்று எண்ணமிருப்பதாகச் சொன்னார்கள். பலர் பணம் அளிப்பதாக வற்புறுத்துகிறார்கள் என்றார்கள். திருப்பூர், உடுமலைப்பேட்டை, பழனி என அருகாமை நகர்களில் இருந்து மட்டுமல்ல; இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காகவே பெங்களூரில் இருந்தும் ஹைதராபாதில் இருந்தும் டெல்லியில் இருந்தும்கூட வந்திருந்தார்கள்!

சந்திப்பு சம்பிரதாயங்கள் இல்லாமல் உற்சாகமாக ஆரம்பித்தது. நாஞ்சில்நாடனும் முத்தையாவும் அருகிருந்தார்கள். கேள்விகள் பலதிசைகளில் இருந்து பல கோணங்களில் வந்தன. என்ன காரணத்தால் தமிழ்ப்பண்பாட்டு விவாதங்களில் அதிகமும் சைவ வைணவ நூல்களே பேசப்பட்டு பிற நூல்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று கேட்டார்.

அப்படி எனக்குப் படவில்லை என்று நான் பதில் சொன்னேன். தமிழில் அதிகம்பேசப்படும் நூல்கள் சங்க இலக்கியத்தில் நற்றிணை குறுந்தொகை அகநாநூறு புறநாநூறு அதன்பின் குறள் , சிலம்பு, கம்பராமாயணம் ஆகியவை. அவை தங்கள் இலக்கியத்தகுதியால் இயல்பாக அந்த இடத்தை அடைந்தன. மதநூல்களாக இருந்தாலும் கந்தபுராணமும் பெரியபுராணமும் அந்த இடத்தை அடையமுடியவில்லை. மதநூல்கள் என்பதற்காக இலக்கியச்சுவை குறைவான தேம்பாவணியை முன்னிறுத்த முடியாது. மேலும் சீறாப்புராணம் இன்று இஸ்லாமியர்களால் நிராகரிக்கப்படுகிறது. தேம்பாவணியை கிறித்தவர்களில் கத்தோலிக்கர் சிலர் அன்றி பிறர் முற்றிலும் புறக்கணிக்கிறார்கள் என்றேன்.

முத்தையா அந்நூல்களின் அன்னியத்தன்மை, இங்குள்ள பண்பாட்டுடன் ஒவ்வாத தன்மை முக்கியமான காரணம் என்றார். இது மணிமேகலைக்கும் பொருந்தும், அதன் பெரும்பகுதி எந்தவகையிலும் ரசிப்புக்குரியதாக இல்லை என்றார். தொடர்ந்து கதைகளின் ஒழுக்கவியல் பற்றி விவாதம் நடந்தது. நாஞ்சில்நாடன் ஒழுக்கம் எப்போதுமே ஒப்புநோக்குக்கு உரியது, அதை எழுத்தாளன் ஓர் அளவுகோலாகக் கொள்ள முடியாது என்றார்.

அங்கிருந்து தாவித்தாவிச் சென்றது விவாதம். ஊமைச்செந்நாய் முதல் விஷ்ணுபுரம் வரை. கீதை உரைகள் முதல் காந்தியவிவாதங்கள் வரை. அதன்பின் இரண்டு மணிக்கு உணவு. உணவுண்டபடியே மீண்டும் குழுகுழுவாக உரையாடல்கள். மீண்டும் அறைக்கு வந்தோம். கொஞ்சநேரம் ஓய்வெடுக்கலாம் என்றார் அரங்கசாமி. ஆனால் என் மனம் உற்சாகமாக தாவிக்கொண்டே இருந்தமையால் ஓய்வெடுக்க தோன்றவில்லை. அறையிலும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருந்தேன்.

மாலை ஐந்தரை மணிக்கு கோவை சன்மார்க்க சங்கம் சென்றோம். வள்ளலாருக்காக அமைக்கப்பட்ட சபை அது. விரிவான கூடம். ஆறுமணிக்கு கோவை ஞானி வந்தார். தொடர்ச்சியாக வாசகர்களும் நண்பர்களும் வந்தார்கள். வலைப்பூ எழுத்தாளர்கள் சென்ஷி, இளங்கோ கிருஷ்ணன், வா.மணிகண்டன் ,யாழினி,சஞ்சய்காந்தி,கவிஞர் தென்பாண்டியன், கவிஞர் இளஞ்சேரல், கவிஞர் இசை, கே.ஆர்.பாபு ஆகியோர் கலந்துகொண்டார்கள். நான் கூட்டம் முடிந்தபின் அவர்களைச் சந்திக்க முடியவில்லை.

மரபின் மைந்தன் முத்தையா சுருக்கமாக அறிமுகம் செய்தபின் நாஞ்சில்நாடன் பேசினார். எனக்கும் அவருக்குமான உறவைப்பற்றி. நான் அவரை உரிமையுடன் கடிந்துகொள்பவனாகவும் அவரது எல்லைகளை அவர் தாண்டிச்செல்ல உந்துதல் அளிப்பவனாகவும் எப்போதும் இருந்திருக்கிறேன் என்றார்.

அதன்பின் கேள்விகள். பலதரப்பட்ட கேள்விகள் எழுந்த  உத்வேகமான உரையாடல் ஒன்பதரை மணிவரை கிட்டத்தட்ட மூன்றுமணிநேரம் நீடித்தது. நவீனக் கவிதைகளைப் புரிந்துகொள்வது குறித்து, இந்திய ஒருமைப்பாடு குறித்து, என்னுடைய நாவல்களைப்பற்றி… அதிலும் என்னை ஆச்சரியப்படச் செய்தது விஷ்ணுபுரத்தையும் காடையும் நுட்பமாக வாசித்துக் கேள்விகேட்ட ஒரு இளம் வாச்கர். அஜிதனைப்போல இருந்தார், அதிகம்போனால் இருபது வயதிருக்கும். விஷ்ணுபுரத்தில் பிங்கலன், காடில் கிரிதரன் ஆகியோரின் காமத்தில் ஒரு ஈடிப்பஸ் அம்சம் கலந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அரங்குக்கு வரும்போது நான் சில விஷயங்களை முன்னரே எண்ணியிருந்தேன். ஒன்று, ‘நான் கடவு’ளுக்கு விருது கிடைத்ததை ஒட்டி அதைப்பற்றி அதிகமான பேச்சு இருக்கும் என.  அரங்கு எந்த அளவுக்கு சராசரியாகிறதோ அந்த அளவுக்கு சினிமா பற்றிய கேள்விகள் அதிகரிக்கும். என்னை ஒரு சினிமாக்கதாசிரியனாக மட்டுமே காணும் பார்வையளவுக்கு சங்கடமளிப்பது ஏதுமில்லை. அதை கட்டுப்படுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். அத்துடன் உயிர்மை, சாரு நிவேதிதா பற்றிய கேள்விகள் இருக்கும் என்ற எண்ணமும் இருந்தது. அவற்றையும் கட்டுப்படுத்தவேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆச்சரியமாக, சினிமாபற்றி ஒரு கேள்விகூட வரவில்லை. ஏழாம் உலகம் குறித்த கேள்விக்கு விடையாக நான்தான் நான் கடவுள் குறித்து சொன்னேன். வம்புகள் பற்றி ஒரு கேள்விகூட வரவில்லை. சாதாரணமாக என் மேல் சிலகுற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதைப் பற்றி வா.மணிகண்டன் ஒரு கேள்வி கேட்கப்போனபோது கோவை ஞானி கோபமாக எழுந்து ‘இருபது வருஷமா இதே வம்புதானா? எத்தனை முக்கியமான நாவல்கள் எழுதியிருக்கார். அதைப்பத்தி பேசுவோம். இந்த வம்புக்கு ஜெயமோகன் பதிலளிக்கக்கூடாது’ என்று சீறினார். வம்புசார்ந்த வினாக்கள் எழாமைக்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.

வந்திருந்த நூற்றியிருபதுபேரும் என் வாசகர்களாக இருந்தது உண்மையிலேயே ஆச்சரியமானது. ‘உங்கள் நூல் எதையும் வாசிக்கவில்லை’ என்றுசொல்லி பேச ஆரம்பிக்கும் தமிழ் வழக்கம் நிகழவேயில்லை. தன்னால் சில நிமிடங்கள் மட்டுமே அமரமுடியும், முதுகுத்தண்டுபிரச்சினை உண்டு என்று சொல்லியிருந்த ம.ரா.பொ.குருசாமி அவர்கள்கூட முழுநேரமும் அமர்ந்திருந்தார். அவை முழுக்கவனத்துடன் கடைசி வரை இருந்தது.

அறைக்குத்திரும்பினோம். அரங்கசாமி எங்களுடன் தங்கிக்கொண்டார். நான் ஜேபி பற்றிய கட்டுரையை அவசரமாக முடித்து அரங்கசாமியின் கணிப்பொறியில் இருந்து வலையேற்றினேன். அதில் சொல்ல எண்ணிய பல விஷயங்களை சொல்லவில்லை என்ற மனக்குறை இருந்தது. இரவு ஒருமணிக்குத்தான் தூங்கினோம். முகங்களும் சொற்களும் என் பிரக்ஞையை நெடுநேரம் ரீங்கரிக்கச் செய்தன.

http://picasaweb.google.com/aniagencies/JMOHAN#

http://picasaweb.google.com/universys/JeyamohanMeetCoimbatore230110#

முந்தைய கட்டுரைகோவை சந்திப்பு, சில கேள்விகள்
அடுத்த கட்டுரைஇளையராஜா, இ.பா, ஏ.ஆர்.ரஹ்மான்