நம் அறவுணர்ச்சி

அன்புள்ள ஜெ

இசை யின் அற்புதமான ஒரு கவிதை.

கிருஷ்ணன்

FishCartoon

நம் அறவுணர்ச்சிக்கு ஒரே குஷி

நம் அறவுணர்வு ஒரு அப்புராணி
நாம் வரைந்து வைத்திருப்பது போல்
அதற்கு புஜபலமில்லை.

நம் அறவுணர்வு ஒரு மெல்லிய பூனைக்குட்டி
ஒரு துண்டுமீனின் வாசனைக்கு
அது கூப்பிடும் இடத்திற்கு வருகிறது.

நாம் ஒருவரையொருவர்
அடித்துத் தின்கையில்
அது மாரடித்துக் கதறியது
நாம் அதன் முன்னே
” வலுத்தது வாழும் “
என்கிற நியதியை முன்வைத்தோம்.
”வ” னாவிற்கு ”வ” னா சரியாக இருப்பதால்
அதை ஏற்றுக்கொள்ளும் படியாகிவிட்டது அதற்கு.

நாம் ”வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிக்கான ”
வரிசையில் நிற்கையில்
அது வெகுண்டெழுந்து சீரியது.
நாம் அதை
“ உட்கார வைத்துப் பேசினோம் “
பிறகு அதுவே தான்
சும்மாடு தூக்கி
வீடு வீடாக இறக்கியது.

பதினோரு மணிக்காட்சிக்குப் போவதில்
நம் அறவுணர்வுக்கு சிக்கலொன்றுமில்லை.
ஆனால்
வெள்ளைப்பொடி கலந்து தரப்பட்ட குளிர்பானத்தை அருந்தி
அப்பாவிப்பெண்ணொருத்தி மயங்கிச் சரிகையில்
அது எழுந்து கொண்டு
”போய்விடலாம்”… ”போய்விடலாம்”
என்று நச்சரித்தது.
அப்போது அதன் காதில் நுட்பமான நீதியொன்று கிசுகிசுக்கப்பட்டது.
அதைக் கேட்டதும் அதற்கு குஷி பிறந்து விட்டது.
அதற்குள் மேலாடையும் கழற்றப்பட்டு விட்டது.

அறவுணர்வை கைதொழ வேண்டி
பழக்கதோஷத்தில்
நாம் அண்ணாந்து நோக்குகையில்
அது நம் காலடியில் நின்று கொண்டு
தொடையைச் சொரிகிறது.

—இசை

13

அன்புள்ள கிருஷ்ணன்

ஆம், அறவுணர்ச்சி ஒரு கோமாளியாக தன் கத்தியை மறைத்துக்கொண்டு நம் முன் வரவேண்டியிருக்கிறது இன்று

ஜெ

முந்தைய கட்டுரைகுழலிசை
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனை அவமதித்தல்