‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 1

பகுதி ஒன்று : பெருநிலை – 1

விளக்கமுடியாத விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும் நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை. பிரம்மனின் குலத்து உதித்த சுயம்புமனுவின் மைந்தன் உத்தானபாதன் தன் இரண்டாம் மனைவி சுருசியை விரும்பினான். முதல்மனைவி சுநீதியை வெறுத்தான். ஏன் வெறுக்கிறேன் என்று கேட்டுக்கொள்ளும்போதெல்லாம் ஏன் விரும்புகிறேன் என்ற விடையின்மையையே சென்றடைந்தான். விளக்கமுடியாமையே அவ்வுணர்ச்சிகளுக்கு அச்சம்தரும் விரிவை அளித்து அவனை அதிலிருந்து விலகமுடியாமல் கட்டிப்போட்டது.

சுருசியும் சுநீதியும் இரட்டைப் பேரழகிகள். ஆகவே உத்தானபாதன் ஒருத்தியுடன் இருக்கையில் இன்னொருத்தியின் நினைவாகவே இருந்தான். சுருசியின் காமத்தில் இருக்கையில் சுநீதியை நினைத்து கசந்தான். அக்கசப்பால் அவளுடன் மேலும் நெருங்கினான். அவளுடைய உடலின் மறைவுகளுக்குள் புதைந்துகொண்டான். அதன் வழியாக அவள் உள்ளத்தை மேலும் நெருங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டான். சுநீதியுடன் இருக்கையில் சுருசியை எண்ணி ஏங்கினான். அந்த ஏக்கத்தால் அவளை மேலும் வெறுத்து அவளுடைய காதல்கரங்களை தட்டி விலக்கினான். சினமெழுந்த சொற்களைச் சொல்லி அவள் கண்ணீரைக் கண்டு அடங்கினான்.

விலக்குவதன் வழியாக சுநீதியை தவிர்க்கமுடியாமல் தன்னைத் தொடரச்செய்தான் உத்தானபாதன். முற்றிலும் ஆணவமழிந்து தன்னுணர்வின் இறுதித் துளியையும் அவன் முன் படைத்து அவள் சரணடைந்தாள். ஆகவே வென்று கடந்துசெல்லப்பட்டவளாக ஆனாள். திரும்பிப்பார்க்கப்படுபவளாக அவனருகே நின்றாள். அடைக்கலமாவதன் வழியாக சுருசியை பெரியவளாகச் செய்தான். வழிபடுவதன் வழியாக அவளுடைய ஆணவத்தை ஒவ்வொரு கணமும் ஊதிவளர்த்தான். அந்தப் பேருருவின் முன் மனம் பதைத்து மேலும் சிறுமைகொண்டான். வெல்லவேமுடியாததன் மீது எழும் தவிர்க்கமுடியாத பெரும்பித்தை தன்னுள் நிறைத்துக்கொண்டான். எண்ணி எண்ணி கனவுகாணப்படுபவளாக, மீளமீள வந்து சேருமிடமாக சுருசி அவன் முன் நின்றிருந்தாள்.

சுநீதியை வெறுப்பதன் வழியாகவே அவளை நெருங்கமுடிந்தது. வெறுப்பை வளரச்செய்து குரூரமாக ஆக்கி அதை குற்றவுணர்ச்சியாகக் கனியச்செய்து அதன்பின் கண்ணீருடன் அவளை அணைத்துக்கொண்டான். அத்தருணத்தைத் தாண்டாத அவ்வுணர்வெழுச்சியாலேயே அவளுடன் உறவுகொள்ள முடிந்தது. மாறாக சுருசியின் மீதான விருப்பத்தால் அவள்முன் சிறுமைகொண்டு அதனால் புண்பட்டான். அதைச் சீற்றமாக ஆக்கி அவளை வெறுத்துத் தருக்கி எழுந்து நின்றிருக்கையில் அவள் அளிக்கும் மிகச்சிறிய காதலால் முற்றிலும் உடைந்து அவள் காலடியில் சரிந்தான். சுநீதியின் முன் ஆண்மகனாக நிமிர்ந்து நின்றான். சுருசியின் முன் குழந்தையாகக் கிடந்தான்.

தன் தந்தையான சுயம்புமனுவின் முன் சென்று அமர்ந்து உத்தானபாதன் கேட்டான் “எந்தையே, விருப்பு வெறுப்பின் லீலையை அறிந்த மானுடர் எவரேனும் உள்ளனரா இப்புவியில்?” சுயம்புமனு புன்னகை செய்து “மானுடர் அனைவரும் அந்த லீலையை அறிவர். அதை ஏற்கமறுத்து பதறி விலகிக்கொண்டும் இருப்பர்” என்றார். திகைத்து கைகூப்பிய உத்தானபாதன் “நான் தவிக்கிறேன் தந்தையே. இந்த இருமுனை ஆடலால் என் வாழ்வே வீணாகிறது” என்றான்.

சிரித்தபடி “அந்த இருமுனையாடல் இல்லையேல் உன் வாழ்வில் எஞ்சுவதுதான் என்ன?” என்று சுயம்புமனு கேட்டார். ”உணர்ச்சிக்கொந்தளிப்புகள் கொண்ட வாழ்க்கை அமைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு வேறேதும் தேவைப்படுவதில்லை வாழ்க்கையை நிறைக்க.” “இந்தவதையே என் வாழ்க்கையாகுமா?” என்றான் உத்தானபாதன். “வதையற்ற வாழ்க்கை நிகழ்வுகளுமற்றது. காற்று வீசாதபோது காற்றுமானி பொறுமையிழந்து காத்திருக்கிறது” என்றார் சுயம்புமனு.

நெடுமூச்சுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்த உத்தானபாதன் நீண்டநேரம் கழித்து எழுந்து தந்தையின் கால்தொட்டு வணங்கிக் கிளம்பும்போது “உன் ஒரு பக்கம் சிறந்த நீதி. இன்னொருபக்கம் அழகிய சுவை. அத்தனை ஆட்சியாளர்களும் நீதிக்கும் ருசிக்கும் நடுவே நிறுத்தப்பட்டவர்களே. அவர்களின் இயல்புக்குரியதை தேர்வுசெய்கிறார்கள். வரலாற்றை வெல்கிறார்கள், அல்லது வரலாற்றால் நசுக்கப்படுகிறார்கள்” என்றார் சுயம்புமனு.

திகைத்த விழிகளால் நோக்கிய உத்தானபாதனிடம் “நீதி ஆளும்படி கோருகிறது. ருசி அடிமையாகும்படி சொல்கிறது. நீதி ஆறுபக்கத்தையும் முழுமையாகப் பார்க்கமுடிவது. ருசியோ முடிவில்லாத பக்கங்கள் கொண்ட வைரம். ருசியின் மாயமே பிரம்மத்தின் படைப்புத்திறனுக்கு முதல்சான்று” என்றார் சுயம்புமனு. “சென்றுவருக! ஒருவன் கொண்டுவராத எதையும் இப்புவியில் அடையமுடியாது.”

அச்சொற்களை தன்னுள் ஓட்டியபடியே மீண்டுவந்தான் உத்தானபாதன். புரவியை நிறுத்தி அரண்மனை களமுற்றத்தைக் கடந்து மகளிர்மாட முற்றத்தில் நின்று இருபக்கத்தையும் நோக்கினான். அவன் எண்ணிமுடிவெடுப்பதற்குள்ளாகவே அவன் உடல் வழக்கம்போல இடப்பக்கம் திரும்பி சுருசியின் அரண்மனையை நாடியது. எந்த மானுடனாவது உடலின் வலம் இடத் தேர்வை அவனே செய்யமுடியுமா என அவன் வியந்துகொண்டான். அது அன்னைக் கருவுக்குள் உடல் ஊறத்தொடங்கும்போதே ஒருவனில் கூடுவதல்லவா?

உத்தானபாதன் பாதிவழியில் உடலின் கடிவாளத்தை உள்ளத்தால் இழுத்து நிறுத்தி நின்று திரும்பி சுநீதியின் அரண்மனை நோக்கி சென்றான். அவ்வேளையில் அவனை எதிர்பாராத அவள் ஏவல்சேடியின் சொல்கேட்டதுமே சிரிப்பும் பதற்றமுமாக ஓடிவந்து மூச்சிரைக்க அவன் முன் நின்றாள். அவளுடைய வியர்த்த முகத்தையும் மூச்சிரைப்பில் அசைந்த முலைகளையும் காதல்நிறைந்த விழிகளையும் கண்டதும் அவன் பெரும் இரக்கத்தை அடைந்தான். அவ்விரக்கம் அவனுள் காமம் எழாது செய்தது. இரக்கம் பனிப்புகைபோன்றது, காமத்தைப்போல பளிங்குப்பாறை அல்ல என அவன் அறிந்திருந்தான்.

“எண்ணவே இல்லை, இன்று நான் கருணைக்குரியவளானேன்” என்றாள் சுநீதி. எங்கோ எழுதிவைக்கப்பட்ட சொற்கள். “அடியவளின் அறைக்கு வரவேண்டும்” என்று அவன் கைகளைப் பற்றினாள். காலகாலமாக சொல்லப்பட்டு வரும் சொற்கள். இந்தச் சொற்களின் ஓரத்தில் சற்று வஞ்சம் இருந்திருந்தால், புன்னகையில் எங்கோ வன்மம் கலந்திருந்தால், விழிகளுக்குள் குரூரம் மின்னியிருந்தால் இவளுக்கு இக்கணமே அடிமையாகியிருப்பேன். எத்தனை குரூரமான விதியை இப்புவி இயற்றியவன் ஆக்கியிருக்கிறான். இப்புவியில் பேரன்பைப்போல சலிப்பூட்டுவது என ஏதுமில்லை.

அவளுடன் இருக்கையில் எல்லாம் சுருசியையே எண்ணிக்கொண்டிருந்தான். இவளுடன் இருப்பது இதமாக இருக்கிறது. இவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சென்று கச்சிதமாக அமர்வதற்கான பள்ளம் என் உள்ளத்தில் முன்னரே இருக்கிறது. இவளை விரும்புவதற்கு இனியொரு காரணத்தையும் நான் கண்டடையவேண்டியதில்லை. சுநீதி உள்ளே ஓடிச்சென்று தன் சிறுமைந்தன் துருவனை அழைத்துவந்தாள். “மைந்தா, உன் தந்தையை வணங்குக. அவரது அருளால் நீ அழியாப்புகழ் கொண்டவனாக ஆவாய்” என்றாள்.

வெளிறிய சிறுமார்பும் ஒடுங்கிய தோள்களும் கூர்ந்த சிறுமுகமும் கொண்ட சின்னஞ்சிறுவன். அவன் முகமெங்கும் விழிகளெனத் தோன்றியது. ஒருமுறைகூட அவனை அத்தனை கூர்ந்து நோக்கியதில்லை என்று எண்ணிக்கொண்டான். “வணங்குகிறேன் தந்தையே” என்று மெல்லியகுரலில் சொல்லிக்கொண்டு துருவன் வந்து உத்தானபாதனின் கால்களைத் தொட்டான். சிறு பல்லிக்குஞ்சு ஒன்று காலில் ஏறமுயல்வதுபோல அந்தத் தொடுகை அவனை கூசவைத்தது. உடல் விதிர்க்க கைகளை நீட்டி அவன் மென்மயிர்க்குடுமியைத் தொட்டு ஆசியளிக்கையில் பார்வையை விலக்கிக்கொண்டான்.

மைந்தன் சென்றபின் அவன் மஞ்சத்தில் அமர்ந்தான். சுநீதி அவனருகே அமர்ந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு “தங்களை இறைவடிவமாகவே எண்ணுகிறான் மைந்தன். இவ்விளவயதிலேயே ஒவ்வொன்றிலும் அவனுக்கிருக்கும் முழுமையான ஈடுபாட்டை சொல்லிச்சொல்லி வியக்கிறார்கள் அவன் ஆசிரியர்கள்” என்றாள். உத்தானபாதன் ஒருகணத்தில் தன்னுள் எழுந்த சினத்தை வியந்துகொண்டு பற்களை இறுக்கி அவளை நோக்கினான். மைந்தனைப்பற்றிப் பேசுவது போல கணவனின் காமத்தைக் களையும் இன்னொன்று இல்லை என்றுகூட அறியாத பேதையா இவள்!

அல்ல என்று மறுகணம் அறிந்தான். காமத்தின் உள்வழிகளை அறியாதவளாக இருக்கலாம், ஆனால் அவன் அகத்தின் வேறு ஆழ்நகர்வுகளை அறிந்திருக்கிறாள். அவள் விழிகளை நோக்கியபடி “அவனுக்கென்ன உடல்நலமில்லையா? மெலிந்திருக்கிறானே?” என்றான். அவள் நகைத்து “அவனுக்கு பிற குழந்தைகளுடன் விளையாடுவதில் ஆர்வமில்லை. உணவிலும் சுவையில்லை. பெரியவர்களுடன் இருப்பதை மட்டுமே விழைகிறான்” என்றாள். அந்நகைப்பில் அவனுக்குத் தெரிந்தது, அவள் அவன் அகத்தை புரிந்துகொள்ளவில்லை. அவளுடைய பெண்ணியல்பால் அறியாமலேயே அதைத் தொட்டுவிட்டிருக்கிறாள், அவ்வளவுதான்.

அக்கணம் அவள் தன் ஆழத்தை அறிந்திருந்தால்கூட நல்லது என்று அவனுக்குப் பட்டது. மறைக்கவிரும்பும் ஏதோ ஒன்று அவளிடம் எஞ்சுகிறது என்று அதற்குப்பொருள். அந்தக் கூர்முனையுடன் அவன் சற்று விளையாடமுடியும். சலிப்புடன் “நன்றாகப் படிக்கச்சொல்” என்றான். அந்தச் சொல்லில் இருந்த முறைமையின் மனவிலக்கத்தைக்கூட உணர்ந்துகொள்ளாதவளாக அவள் அன்பு அவளை ஆக்கியிருந்தது. “ஆம், அவன் கற்று வல்லவனாவான்” என்றாள். அவன் உள்ளம் பதைப்புடன் அடுத்த சொல்லை அவள் சொல்லமாட்டாளா என ஏங்கியது. ஆனால் ‘அவனே மூத்தவன், அரியணைக்குரியவன்’ என்று அவள் சொல்லவில்லை. அந்தச் சிறுதுளி நஞ்சுகூட அவளில் இருக்கவில்லை.

அறிந்த வழிகள். அவை ஆறுதலை அளிக்கின்றன. ஆறுதலோ சலிப்பை அளிக்கிறது. காலம் நீண்டு நீண்டு கிடக்கிறது அப்போது. கொல்லும்புலியுடன் கூண்டிலிருப்பவனின் காலம் எத்தனை செறிவானது. இளமையில் சுழற்றி அலைக்கழிக்கும் பெண் முதுமையில் சலிப்பூட்டுவாள்போலும். இவளிடம் என் முதுமையில் நான் வந்துசேர்வேன். காமம் இன்றி மட்டுமே அணுகமுடியும் ஒரு பெண் இவள். எத்தனை அச்சம்தரும் உண்மை இது! காமத்தை எழுப்பாதவளின் அழகுபோல பயனற்றது ஏதுமில்லை. பயனற்ற ஒவ்வொன்றையும் புறக்கணிக்கிறது அகம். அது குறுக்கே வருமென்றால் சினம்கொள்கிறது.

மறுநாள் காலை உத்தானபாதன் நீராடி அரச உடைகள் அணிந்துகொண்டிருக்கையில் சேடி உள்ளே வந்து இளைய அரசி திருமுகம் கோரியிருப்பதைச் சொன்னாள். அவன் ஆணையிடுவதற்குள்ளாகவே சுருசி உள்ளே வந்தாள். அவன் விரும்பும் ஆடை அணிந்திருந்தாள். அவனை பித்தாக்கும் நறுமணமலர் சூடியிருந்தாள். ஆயிரம் கரங்களால் அள்ளிக்கொள்ள அழைத்த உடலை நோக்கி அவன் காமம் எழுந்ததுமே அவனை ஒருபொருட்டாக எண்ணாத விழிகளைக் கண்டு சீண்டப்பட்டு திகைத்து நின்றான். இனி அவள் அவன் அனைத்து வாயில்களிலும் முட்டி முட்டி தன் தலையை உடைத்துக்கொள்ளும் கற்கோட்டை மட்டுமே.

அவள் வந்திருப்பது எதற்காக என அவன் அறிந்திருந்தான். அதை அவள் அவனிடம் நேரடியாகக் கேட்கவேண்டுமென அவன் விரும்பினான். கேட்டால் அது அவளில் விழும் ஒரு விரிசல். ஒரு பாதை. ஆனால் “இன்று தங்கள் முடிகாண் விழவு அல்லவா?” என்றாள். அவள் நினைப்பதிலிருந்து சொன்னதற்கு இருந்த அந்தப் பெருந்தொலைவில் அவன் சித்தம் திகைத்து நின்றது. “நாம் புதியதாக வென்ற எல்லைப்பகுதிகளில் இருந்து நம் புதியகுடித்தலைவர்கள் வந்து கூடியிருக்கிறார்கள். இங்குள்ள குடிச்சபையில் அவர்களுக்கான இடமென்ன என்று நாம் முடிவுசெய்யவேண்டியிருக்கிறது.”

அக்கணம் அவன் விழைந்ததெல்லாம் வாளை உருவி அவள் தலையை வெட்டி மண்ணில் வீழ்த்துவதைத்தான். அதைச்செய்ய முடிந்தால் எடை இழந்து மேகத்தில் மிதித்து விண்ணகமேறமுடியும். ஆனால் “ஆம், சொன்னார்கள்” என்றான். நாலைந்து நாட்களாகவே அமைச்சரவையில் பேசப்பட்டது அதுதான். “இங்குள்ள குடிச்சபையில் சிலரையாவது கீழே இறக்காமல் அவர்களை நாம் உள்ளே கொண்டுவர இயலாது. அவர்கள் எவர் என முன்னரே முடிவுசெய்துவிட்டு அவை புகவேண்டும். அவர்கள்மீது அவையில் குற்றச்சாட்டுகள் எழவேண்டும்” என்றாள்.

அவன் அவள் விழிகளை நோக்கினான். அங்கே அவள் விளையாடுகிறாள் என்பதற்கான சிறிய ஒளி தெரிந்தால் கூட போதும் என அவன் அகம் தவித்தது. ஆனால் அமைச்சுப்பணியை விளக்கும் தலைமை அமைச்சரின் விழிகள் போலிருந்தன அவை. “அக்குற்றச்சாட்டுகளை நம் அரசவையில் எவரும் எழுப்பலாகாது. குடிமக்கள் அவையில்இருந்தே அவை எழுந்தால் நன்று.” அவள் மெல்ல சரியும் தலைச்சரத்தைச் சரிசெய்ய அவளுடைய இடது முலை மெல்ல அசைந்து அதில் தவழ்ந்த முத்தாரம் வளைந்து குவட்டுக்குள் விழுந்தது.

பட்டுக்கச்சின் விளிம்பில் முலைகளின் மென்கதுப்பின் பிதுங்கலை நோக்கியபின் அவன் திடுக்கிட்டு விழி விலக்கினான். அப்பார்வையை அவள் அறிந்தால் அவன் முழுமையாகத் தோற்றுவிடுவான். அவள் பார்க்கவில்லை என்று ஆறுதல் கொண்டான். ஆனால் மிக இயல்பாக அவள் “விலக்கப்படும் குடித்தலைவர்களுக்கு அப்போதே வேறு ஒரு பதவி அளிப்பதும் வேண்டும்… அந்தப்பதவி பொருளற்றது என அவர்கள் காலப்போக்கில் அறிந்தால்போதும்” என்றபோது அவன் அறிந்துகொண்டான், அவள் உணர்ந்திருக்கிறாள் என.

இரும்புக் காலணியால் மிதிபட்ட சிறுவிரல் போல அகம் துடிக்க அவன் தன்னை விலக்கிக்கொண்டான். இவளுடன் எத்தனை காலமாக ஆடிக்கொண்டிருக்கும் ஆடல் இது. வென்றதேயில்லை. வென்று விலகும் சூதாடிகள் உண்டு, தோற்றுவிலகுபவர்களே இல்லை. தோல்வி சூதாட்டத்தில் இருக்கும் முடிவின்மையை அவனுக்குமுன் மீண்டும் நிறுவி அறைகூவுகிறது. தோற்றவர்கள் விலகுவதே இல்லை, தோற்கடிக்கும் விசையால் முற்றாக அழிக்கப்படும் வரை அவர்கள் அதனுடன்தான் இருப்பார்கள்.

இப்போது நான் செய்யக்கூடுவது ஒன்றே. அப்பட்டமான காமத்துடன் அவளை அணுகுவது. வெறும் ஆணாக, எளிய மிருகமாக. அவள் அதை அஞ்சுகிறாள் என நான் அறிவேன். காமம் தன்னியல்பிலேயே பாவனைகள் அற்றது. அந்த வெளிப்படைத்தன்மையை மானுடர் அஞ்சுகிறார்கள். ஆகவேதான் அதன்மேல் பாவனைகளை அள்ளிஅள்ளிப் போர்த்துகிறார்கள். ஆனால் வீறுகொண்டெழும்போது அது அனைத்தையும் கிழித்துவிட்டு வெற்றுடலுடன் வந்து நிற்கிறது. இறப்பைப்போலவே மானுடனால் ஒருபோதும் வெல்லமுடியாதது. ஆகவே எந்தவகையான தந்திரங்களும் தேவையற்றது.

சூதாடிகள் எதிரே மாபெரும் சூதாடி வந்து அமர்ந்தால் ஊக்கம் கொள்வார்கள். மூர்க்கமான பாமரனையே அஞ்சுவார்கள். அவள் அவனுடைய காமத்துடன் விளையாடுவாள், அதை காலடியில் போட்டு மிதிப்பாள். ஆனால் எங்கோ ஓரிடத்தில் தீ அனைத்தின்மேலும் கொடியேற்றிவிடுகையில் மெல்ல தோற்று அமைவாள். காமம் அவளை வெறும் உடலாக ஆக்குகிறது. வெறும் உடலாக ஆகும்போது நான் வெல்கிறேன். அவள் தோற்கிறாள். அத்தனை சொற்களுடன் அத்தனை பாவனைகளுடன் அவள் தன்னை உடலல்ல என்று ஆக்கிக்கொள்ளத்தான் முயல்கிறாளா?

அவள் சொல்வதேதும் புரியவில்லை என்று பாவனைசெய்யவேண்டும். அவள் உடலன்றி வேறேதும் தேவையில்லை என்று கிளர்ந்தெழவேண்டும். அள்ளிப்பற்றி அவள் ஆடைகளை பாவனைகளை களைந்து உடலாக்கி கையிலெடுக்கவேண்டும். சற்றேனும் வென்றேன் என உணரும் ஒரே இடம் அது. அவனை அறியாமலேயே அவன் உடலில் சிறிய அசைவாக அந்த எண்ணம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அவள் எழுந்து தலைச்சரத்தை நளினமாக மீண்டும் சரிசெய்து “நான் அணியறைக்குச் செல்கிறேன். அமைச்சர்களிடம் அனைத்து ஆணைகளையும் பிறப்பித்துவிட்டேன்” என்றாள்.

அவன் தலையசைத்தான். எப்போதும் அவளே களத்தை வரைந்து ஆட்டவிதிகளையும் வகுத்துக்கொள்கிறாள். இந்த ஆடலில் அரசுசூழ்தலை கணவனிடம் பேசும் அரசியாக தன்னை வைத்துக்கொண்டிருக்கிறாள். அதுவன்றி ஏதும் இங்கே நிகழாது. அவன் அப்படி எண்ணிய கணமே அவள் “நம் இளவரசனை இன்று அவையில் புதியகுடிகளிடம் அறிமுகம் செய்யப்போகிறேன்” என்றாள். மிகநுட்பமாக ஒரே சொல்லில் இளையவனை முடிக்குரியவனாக்கினாள். அவன் பேச வாயெடுப்பதற்குள் காமம் நிறைந்த விழிகளால் அவனை நோக்கி புன்னகைத்துவிட்டு சென்றாள்.

அவன் அப்படியே தளர்ந்து மஞ்சத்தில் அமர்ந்துவிட்டான். ஆட்டத்தை அமைத்தவள் அவன் கற்றுக்கொண்டிருக்கையிலேயே களத்தைக் கலைத்துவிட்டுச் சென்றாள். ஒருபோதும் அவன் அவளுடன் ஆடியதில்லை. ஆடமுனையும்போதே ஆட்டம் இன்னொன்றாக ஆகிவிட்டிருப்பதை உணர்வான். தோள்கள் மேல் பெரும் எடை அமைந்ததைப்போல சோர்ந்து கைகளில் தலையைத் தாங்கி அவன் அமர்ந்திருந்தான். அமைச்சர் வந்திருப்பதாக அணுக்கச்சேவகன் வந்து சொன்னபோது எழுந்துகொண்டான். இடைநாழியில் நடக்கும்போது தன் உடல் ஏன் இத்தனை எடைகொண்டு கால்தசைகளை இறுக்குகிறது என வியந்துகொண்டான்.

அவைநடைமுறைகளுக்கு பட்டத்தரசியாக சுநீதியையே குடிச்சபை ஏற்றுக்கொண்டிருந்தபோதிலும் சுருசி பட்டத்தரசிக்குரிய அனைத்து அவைமுறைமைகளையும் மெல்லமெல்ல தனக்கென ஏற்படுத்திக்கொண்டிருந்தாள். அவளுக்கும் குடையும் சாமரமும் அகம்படியும் நிமித்திகனும் இருந்தன. அவள் வரும்போதும் அமைச்சர்கள் தலைதாழ்த்தி வணங்க சேவகர்கள் வாழ்த்தொலி எழுப்பினர். குடிமூத்தவர்களும் அது அரசனின் எண்ணமென்று உணர்ந்தவர்களாக அதை ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டிருந்தனர்.

சுருசி அவைநுழைந்தபோது எழுந்த வாழ்த்தொலியில் சுநீதியின் உடல்பதறுவதை உத்தானபாதன் கண்டான். ஒவ்வொருமுறையும் இரண்டாவதாக வருவதற்கு சுருசி கொள்ளும் நுண்திறனை இவள் உணர்ந்திருக்கிறாளா என எண்ணினான். முற்றிலும் புறக்கணித்து அமர்ந்திருந்தால் சுருசியை அவள் வென்றுவிடமுடியும். பெருந்தன்மையுடன் புன்னகை புரிந்து அன்பைக் காட்டியிருந்தால் சுருசியை பற்றி எரியவைக்கக்கூட முடியும். ஆனால் ஒருபோதும் அதை சுநீதி உணர்பவள் அல்ல. அவளுடைய நேர்வழியில் இருந்து அந்த ஊடுவழிகள் பிரிவதில்லை.

அவை தொடங்கியதும் ஒவ்வொருமுறையும் போலவே மீண்டும் நிகழ்ந்தது. அவள் வெறுமொரு மகளிர்கோட்டத்து எளிய பெண் என்பதுபோல அமர்ந்திருந்தாள். அமைச்சர்களும் குடிகளும் அரசனை நோக்கி பேசினர். அமைச்சர்களின் பரிந்துரைகளுக்கும் ஆணைகோரல்களுக்கும் அவன் செவிசாய்த்து சிந்தித்தான். முறைப்படி பட்டத்தரசியிடம் மேற்கருத்து கோரினான். அவள் பரிவும் சமநிலையும் கொண்ட சொற்களில் தன் கருத்துக்களைச் சொன்னாள். அவள் சொல்லிக்கொண்டிருக்கையில் அக்கருத்துக்களை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பதுபோலிருந்தாள் சுருசி.

பின் மெல்ல உடலை அசைத்தாள். அவ்வசைவு எத்தனை மெல்லியதோ அத்தனை தூரம் அனைவராலும் அறியப்படும் என அறிந்திருந்தாள். விழிகள் சிலமுறை அவளை நோக்கித்திரும்பி விலகியதும் பணிவும் தயக்கமும் கலந்த புன்னகையுடன் “நான் ஒன்று சொல்லலாமா?” என்றாள். அவ்வினா எழுந்ததுமே சுநீதி முகம் சிவந்து சினம்கொண்ட அசைவுகளை அறியாமலேயே வெளிப்படுத்துவதை அணிகளின் ஓசைகள் வழியாக அறிந்த அவையினர் கண்கள் வந்து தொட்டுச்சென்றன.

“சொல்” என்று அவன் சொன்னதும் முதிரா இளம்பெண்ணின் பேதைமையும் நட்பும் நாணமும் கலந்த நளின அசைவுகளுடன் முகம் சிவந்து “இல்லை, ஒன்றுமில்லை” என்றாள் சுருசி. அப்போது அவளை முதிரா இளம்பெண்ணாகவே மனம் உணர்வதை எண்ணி வியந்தான். “சொல், அவையில் எல்லா கருத்தும் வரலாமே” என்றான். “இல்லை… நான்” என அவள் முகம் சிவந்து மூச்சிரைத்தாள். கையால் கூந்தலிழைகளை பின்னுக்கு நீவி “எனக்கு ஏதோ தோன்றியது… ஒன்றுமில்லை” என்றாள்.

“சொல்லுங்கள் அரசி. தாங்கள் எப்போதுமே சிறந்த கருத்துக்களைச் சொல்பவரல்லவா?” என்றார் அமைச்சர். அந்தப்புகழ்ச்சிக்கு நாணி “அய்யோ… அதெல்லாமில்லை” என்றாள் சுருசி. எல்லா அவையிலும் இதையே செய்கிறாள். ஒருமுறைகூட இது நடிப்பு என எவரும் உணராமல் அதை முழுமையாக நிகழ்த்துகிறாள். ஒவ்வொருமுறையும் தன் பாவனையில் புதிய ஒன்றை சேர்த்துக்கொள்கிறாள். இப்போது உதட்டை நாணத்தால் கடித்துக்கொண்டிருக்கிறாள்.

பலர் சொன்னபின் நாணத்தால் கனத்து திரிந்து உடைந்த சொற்களில் சுருசி பேச ஆரம்பித்தாள். திடமும் கூர்மையும் கொண்ட சொற்களை ஏந்தி அவள் நிற்பதை வருடக்கணக்காக கண்ட அவனுக்கே அம்மழலையே அவள்மொழி என அப்போது தோன்றியது. அவையில் ஒரு குலமூதாதை சொன்ன கருத்து ஒன்றை ஆதரித்துப்பேசினாள். அதை மெல்லமெல்ல விரித்து எடுத்து தன் கருத்தாக ஆக்கினாள். பின் மழலை விலகி அவள் குரலில் மதியூகிகளின் தெளிவான தர்க்கம் குடியேறியது. மிகமிகப் பொருத்தமான, மாற்றே இல்லாத தரப்பாக அதை அவள் நிலைநாட்டினாள். அப்போதுதான் அது சுநீதி சொன்னகருத்துக்கு முற்றிலும் மாறானது என அனைவரும் அறிந்தனர்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

வேறுவழியே இல்லாமல் உத்தானபாதன் அவளுடைய வெற்றியை ஏற்று பேசத் தொடங்கினான். “ஆம், அவள் சொல்வது ஒருவகையில் சரிதான், ஆனால்…” என்று தொடங்கினான். சுநீதியின் தரப்பை தான் எடுத்துப்பேசினான். அதைத்தான் அவன் ஆதரிப்பதாகக் கூறி ஆனால் அந்த அவையோர் முழுமையாக சுருசி சொன்னவற்றை ஆதரிப்பதனால் அவைக்குக் கட்டுப்படுவதாகச் சொல்லி முடித்தான். அவன் பேசத்தொடங்கியதுமே சுநீதி பெருமூச்சுடன் உடல்தளர்ந்து இருக்கையில் அமைந்துவிட்டாள். அது எங்கு சென்றுமுடியுமென அவளறியாதது அல்ல.

அவையில் மீண்டும் பொறாமை மிக்க மூத்தவளாக சுநீதியும் எளிமையும் அறிவும் கொண்ட இளையவளாக சுருசியும் நிறுவப்பட்டுவிட்டனர். உத்தானபாதன் சட்டென்று புன்னகை செய்தான். எப்போதுமே இது இப்படித்தான் நிகழ்கிறதுபோலும். புவி தோன்றிய காலம் முதலே வேங்கைகளால் மான்கள் கொன்று உண்ணப்படுகின்றன. நீதியை சுவை வெல்வதன் வரலாற்றைத்தான் காவியங்கள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அந்தப்புன்னகை அவனை எளிதாக தளர்த்திக்கொள்ளச் செய்தது. கால்களை நீட்டி அமர்ந்து அருகே நின்ற அடைப்பக்காரனிடமிருந்து ஒரு தாம்பூலத்தை எடுத்துக்கொண்டான்.

அவைச்சேவகன் வந்து இளவரசர்கள் வருவதாக அறிவித்தான். அவன் கையசைத்ததும் சங்கு முழங்கியது. வாயிலுக்கு அப்பாலிருந்து சுருசியின் மைந்தன் உத்தமன் கைகளை விரித்துக்கொண்டு ஓடிவந்தான். “தந்தையே நான்…” என்று கூவிக்கொண்டே வந்து கையிலிருந்த மரப்பாவையை போட்டுவிட்டு அரியணையை நெருங்கி அவனுடைய பட்டாடையின் நெளிவைப்பற்றி தொற்றி மேலேறி தொடையில் அமர்ந்துகொண்டு தலை நிமிர்த்தி அண்ணாந்து “நான் குதிரையை… ஒரு குதிரையை…” என்று சொல்லி கீழே பார்த்தான். “அந்தக்குதிரை இல்லை. பெரிய குதிரை” என்றான்.

அவை முழுக்க முகங்கள் மலர மெல்லிய மகிழ்வொலிகள் எழுந்தன. உத்தானபாதன் குனிந்து மைந்தனின் மலர்சூடிய சென்னியை முகர்ந்து “குதிரைமேல் ஏறினாயா?” என்றான். “கரிய குதிரை… பெரியது. யானையை விடப்பெரியது” என்று அவன் கையை விரித்தான். நகைத்தபடி திரும்பி சுருசியிடம் “அரசவையில் பொய்யைச் சொல்லும் பயிற்சியில் தேறிவருகிறான்” என்றான் உத்தானபாதன்.

அவள் நகைத்து “அதை அரசுசூழ்தல் என்பார்கள்” என்றாள். “முடிசூடிவிட்டால் அச்சொற்களெல்லாம் உண்மையாகிவிடும்.” ஒவ்வொருமுறையும் அவையில் தவறாமல் அவள் அச்சொற்களைச் சொல்கிறாள் என அவன் அறிந்திருந்தான். எப்போதும் விளையாட்டும் சிரிப்பும் நிறைந்த தருணத்தில்தான். மறுக்கமுடியாத இடத்தை அவள் எப்படி கண்டடைகிறாள்? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தருணம். ஒருமுறைகூட அது பிழையானதாகவும் இருப்பதில்லை.

தயங்கி அவைநுழைந்த துருவனை அவையின் விழிகளேதும் பார்க்கவில்லை. தாயின் கால்கள் நடுவே நின்று அவள் மேலாடையை எடுத்துக் கடித்துக்கொண்டு தந்தையையும் தம்பியையும் மாறிமாறி நோக்கிக் கொண்டிருந்தான். தாய் அவனை மெல்ல தந்தையை நோக்கித் தள்ளினாள். அவன் உதட்டைச்சுழித்து உடலை வளைத்துத் திரும்பி அவள் மடியிலேயே முகம் புதைத்துக்கொண்டான்.

சுநீதியின் உடலில் எழுந்த அசைவை ஓரக்கண்ணால் கண்டு திரும்பிய அரைக்கணத்தில் உத்தானபாதன் அவள் தன் மைந்தன் துருவனை தன்னை நோக்கி தள்ளிவிடுவதைக் கண்டான். அவனுள் கடும் சினம் நுரைத்து எழுந்தது. அந்தச் செயலில் உள்ள நேரடித்தன்மையே தன்னைச் சீண்டியது என்று அவன் மறுகணம் உணர்ந்தான். தன்னை இன்னொருவர் கையாளும்போது ஆணவம் உரசப்படுதல்தான் அது.

சுநீதி அல்ல, சுருசிதான் உண்மையில் தன்னை முழுமையாகக் கையாள்கிறாள். எப்போதும் வெல்கிறாள். சுநீதி ஒவ்வொரு முறையும் இரக்கமின்றி தோற்கடிக்கப்படுகிறாள். சுருசி மிகத்தேர்ந்த சதுரங்கத்தில் அவனை வைத்து ஆடுகிறாள். சுநீதி எளிய வட்டாட்டத்துக்கு அவனைக் கொண்டுசெல்கிறாள். ஆனால் அச்சொற்களும் அகம் நிகழ்த்தும் மாயமே என அவன் உணர்ந்தான். அவன் அந்த விளக்கமுடியாத ஆடலை எளிய தர்க்கங்களாக ஆக்கமுயல்கிறான்.

வலத்தொடையில் துருவனின் கைகள் படிந்தபோதுதான் அவன் அறிந்தான். குனிந்து நோக்கியபோது அடிபட்டுப் பழகிய நாய்க்குட்டியின் பாவனை கொண்ட கண்களைக் கண்டான். அத்தருணத்தை உணர்ந்து கூசிய ஒளியற்ற புன்னகை. அக்கணம் எழுந்த கடும் சினத்துடன் “சீ, விலகு” என்று அவன் துருவனை தள்ளி விட்டான். நிலைதடுமாறி பின்னால் சென்று மல்லாந்து விழப்போன துருவனை அருகே அமர்ந்திருந்த சுநீதி பதறி பற்றிக்கொண்டாள். அவன் மெல்லிய விம்மலோசையுடன் பாய்ந்து அன்னையின் மடியில் முகம் புதைத்து அவள் ஆடையை இறுகப்பற்றிக்கொண்டான்.

வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

முந்தைய கட்டுரைமரபிலிருந்து நவீன எழுத்து
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’- 2