அன்புள்ள ஜெ
வண்ணக்கடலை படித்துமுடித்துவிட்டு எழுதுகிறேன். அதில் வரும் அசுரர்களைப்பற்றிய விரிவான கதைகள் பிரமிக்க வைக்கின்றன. அசுர குலத்தின் மாண்பும் வீரமும் elemental power இன் வேகமும் அபாரம். அவர்கள் அழிவதும் அதனால்தான். ஏகலைவனின் அம்மா சொல்கிராள். மிதமிஞ்சிய கொடை மிதமிஞ்சிய கோபம் மிதமிஞ்சிய ஆசை ஆகியவையே அசுரகுணங்கள் என்றும் அவற்றால்தான் அவர்கள் அழிகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்
அசுரர்களின் நகரங்களின் வர்ணனைகளும் அவர்களின் பூர்வகதைகளின் வரலாறும் பிரமிக்கச்செய்கின்றன. அசுரர்களைப்பற்றி இத்தனை விரிவாக மகாபாரதத்தில் இருக்கிறதா? அசுரர்களின் வம்சவரிசையை சீராகச் சொல்லப்பட்டிருக்கிறதா? அசுரர்கள் கெட்ட சக்திகள். demons என்றுதான் நான் நினைத்திருந்தேன். அசுரர்கள் மனிதர்களைவிடப்பெரிய தேவர்களுக்கு சமானமான கீர்த்திகொண்டவர்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது
சாரங்கன்
அன்புள்ள சாரங்கன்,
மகாபாரதத்தை வைத்து மூன்றுவிஷயங்களை உறுதியாகச் சொல்லலாம்
1. அசுரர்களின் கதை முழுமையான வம்சாவளியுடன் மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
2. அசுரர்கள் ‘கெட்டவர்கள்’ இல்லை. பிரஹலாதன் கெட்டவனா என்ன? அசுரனின் மைந்தன் அல்லவா? அசுரர்களிலேயே எல்லாவகையானவர்களும் இருக்கிறார்கள். அசுரர்கள் மனிதர்களை விட எளிதாக தெய்வங்களை அணுகக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்
3. அசுரர்களிடமிருந்து புகழ்பெறற அரசகுலங்கள் உருவாகியிருக்கின்றன. அசுரகுல இளவரசியான சர்மிஷ்டையிலிருந்துதானே பாண்டவர்களே உருவானார்கள். கிருஷ்ணனின் யது வம்சத்திற்கும் மூலம் சர்மிஷ்டையின் ரத்தம்தானே? அதாவது அசுரகுலத்தில் இருந்தே அனைவரும் தோன்றிஇருக்கிறார்கள்.
அசுரர் என்ற சொல்லுக்கு அ- சுரர் என்று பொருள். சுரர் என்றால் மனிதர், நற்பண்புடையோர் என்று பொருள். அசுரர் என்பது எதிர்பதம்
ரிக்வேதத்திலேயே அச்சொல் உள்ளது. அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ஒன்று சமூகவியல் சார்ந்தது. இன்னொன்று புராணக்குறியீடு சார்ந்தது
சமூகவியல் சார்ந்து அசுரர்கள் ஆரியர் என தன்னை [மொழி அடையாளம் சார்ந்து] சொல்லிக்கொண்ட மக்கள் அல்லாதவர்கள். பழங்குடிகளாக இருக்கலாம்.
அசுரர்களில் அரசர்கள் உண்டு. பேரரசர்கள் உண்டு. அவர்கள் ஆரிய அரசர்களுடன் மண உறவும் கொண்டிருந்தனர். இதெல்லாம் மிக ஆரம்பகால வரலாறு, நாம் ஊகிக்க மட்டுமே முடியும்
குறியீடு சார்ந்து அவர்களை உயிராற்றலின் எதிர்ம்றைப்பண்பு மேலோங்கியவர்களாக கொள்ளலாம். புராண உருவகங்கள் அப்படி அந்த அடையாளத்தை பிற்காலத்தில் தொடர்ந்து வளர்த்தெடுத்தன
இன்றைய நவீன வாசகன் இவ்விரு அடையாளத்தையும் ஒருங்கே கையாளவேண்டிய நிலையில் இருக்கிறான். வழக்கமாக ஒன்றை மட்டுமே கையாள்வார்கள்.நவீன எழுத்தாளர் முதல் அடையாளத்தை. பௌராணிகர்கள் இரண்டாவதை.
ஒரேசமயம் இரு கோணங்களில் இரு அடையாளங்களையும் கையாள்கிறது வெண்முரசு
ஜெ