மூன்று கேள்விகள்

டியர் சார்,
வணக்கம். நாகர்கோயிலை அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களை சனிக்கிழமையன்று கோவையில் சந்தித்தது மிகுந்த சந்தோஷமும் உற்சாகமும் அளிப்பதாக இருந்தது. குறிப்பாக ஹோட்டல் அறையில் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அமெரிக்க தேசத்தில் இருந்து உருவாகி வந்திருக்கும் விமர்சனக் கோட்பாடுகள், நகுலனின் ‘ராமச்சந்திரன்’ கவிதையில் அமெரிக்க விமர்சன சாராம்சத்தோடு சு.ரா கொண்டிருந்த பார்வை, நாவல் உள்ளிட்ட இலக்கிய படைப்புகளின் வடிவம், யுவனின் மணற்கேணி வாசகனுக்குள் உருவாக்கும் சித்திரங்கள், கவிதையின் வடிவத்தில் நாம் இன்று அடைந்திருக்கும் புள்ளியியை நோக்கிய இரண்டாயிரம் ஆண்டுக்கான பயணம், சுகுமாரன் தமிழ்க் கவிதை வெளிக்குள் நிகழ்த்திய பிரவேசம், Abstract ஆன புரிதல் போன்றவற்றை குறித்து நீங்கள் பேசியவற்றை உரையாடலின் சுவாரசியமான பகுதிகளாக உணர்ந்தேன்.

அந்தச் சமயத்தில் உங்களின் மீதாக வைக்கப்படும் எதிர்மறை விமர்சனங்கள் பற்றிக் குறிப்பிட்ட என் பேச்சின் தொடர்ச்சியாக எனக்குள் இருந்த சில வினாக்களை அறையிலேயே கேட்டிருக்க வேண்டும் என பிறகு தோன்றியது. அவற்றை பின்னர் நிகழ்ந்த வாசகர் சந்திப்பில் தவிர்த்திருக்கலாமோ என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

உங்களின் மீதான எதிர்மறை விமர்சனங்களாக இலக்கியப்பரப்பில் வைக்கப்படுபவைகளில் நான் வாசகர் சந்திப்பில் குறிப்பிட்டவை:

1. ஜெயமோகன் தன் படைப்புகள் மீதான எந்த விதமான பரிச்சயமும் இல்லாத இணைய வாசர்களுக்காகவும் Compromise செய்து கொண்டு தனக்கான ஒரு பீடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

2. தன்னோடு இருப்பவர்கள் வாசகனாக இருப்பதை விரும்பும் ஜெ.மோ அவன் எழுத்தாளனாக விரும்புவதில்லை.

3. முந்தைய விமர்சனத்திற்கான துணை விமர்சனம். சமீபத்தில் வந்திருந்த இணையக் கட்டுரையிலிருந்து- ஜெயமோகன் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்காமல், தனக்கு உவப்பானவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்துபவர்.

இத்தகைய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்க்கொள்கிறீர்கள், இவை உங்களின் படைப்பூக்கத்தில் குறுக்கிடுகின்றனவா, இந்த மூன்று விமர்சனங்களுக்கு நீங்கள் பதில் அளிப்பதாக இருந்தால் என்ன சொல்வீர்கள். இதுதான் நான் பேசியது.

இதைச் சொல்லி முடிக்கும் போது பின்வரிசையில் நின்று கொண்டிருந்த என்னை முன்னால் அமர்ந்திருந்த சிலர் திரும்பி பார்த்த விதத்தில் கொஞ்சம் தடுமாறினேன். அடுத்த கணம் கோவை ஞானி அவர்கள் எழுந்து இந்த வினாக்கள் இலக்கியச் சூழலில் இருபது வருடங்களாக எழுப்படுபவை என்றும், இவை குழாயடிச் சண்டையின் நீட்சி என்றும், தாங்கள் இவற்றிற்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை என்ற போது திடுக்கிடலாக இருந்தது.

ஞானியோ அல்லது வேறு எவரோ அந்த இடத்தில் எழுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு இலக்கியக் கூட்டத்தில் வெட்டிப்பிரச்சினை செய்ய வந்திருக்கும் ஒரு இளைஞன் என்றே என்னைப் பற்றிய பிம்பம் உருவாகியிருக்கும் என்று மனம் யோசிக்கத் துவங்கிவிட்டது. நீங்கள் பதில் சொல்ல ஆரம்பித்திருந்தீர்கள். ஞானிக்கு என் நிலையை தெளிவாக்க அடுத்த முறை என்ன பேச வேண்டும் என்று மூளை வார்த்தைகளைப் பின்னிக் கொண்டிருந்ததால் உங்களின் பதிலை முழுமையாக உள்வாங்க முடியவில்லை.

வேறு ஒருவர் குறுக்கிட்டிருந்தால் அத்தனை சலனம் அடைந்திருக்க மாட்டேன் என்று என்னால் சொல்ல முடியும். ஞானி என்னும் ஆளுமை பற்றி நான் வாசிக்கத் துவங்கிய கட்டத்தில் இருந்து உருவாக்கியிருந்த பிம்பம் பிரம்மாண்டமானது. அத்தகைய ஒரு ஆளுமை நான் பேசியதற்கு எதிர்வினையாற்றுவதை எப்படி எதிர்கொள்வது என்பதை திட்டமிட வேண்டிய கட்டாயத்திற்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு தள்ளப்பட்டேன். அவை பதட்டமான நிமிடங்களாகவே எனக்குள் பதிந்திருக்கிறது.

எனது நோக்கம் வேறானது. இத்தகைய விமர்சனங்கள் உங்களை காயப்படுத்துகிறதா என்பதையும், அவற்றை எதிர்கொள்ளும் போது எப்படி கடந்து வருகிறீர்கள் என்பதையும் அறிய விரும்பும் நான் இத்தகைய கேள்விகளை மற்ற அனைத்து எழுத்தாளர்களிடமும் எழுப்பப் போவதில்லை. மிக விருப்பமான எழுத்தாளர்களிடம் மட்டுமே இந்த எதிர்மறை விமர்சனங்களை என்னால் நேரடி பேச்சில் முன் வைத்திருக்க முடியும். நாம் முன்னோடிகளாக கருதுபவர்கள், தங்களின் மீதான பல்வேறுவிதமான விமர்சனங்களையும் எப்படி தாண்டி வருகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் இருக்கும் எளிய ஆர்வத்தில் உருவாகும் வினாக்கள் அவை.

தமிழ் இலக்கியப் பரப்பில் தற்கால விமர்சன முறைகளின் அவலச் சூழல் பற்றி நாஞ்சில் நாடன் அவர்கள் குறிப்பிட்ட செய்திகளின் தொடர்ச்சியாகவும் என் பேச்சை அமைத்துக் கொள்ள நான் முயன்றதன் விளைவே எனக்குள் உருவான இந்த பதட்டத்தின் துவக்கப்புள்ளி.

நன்றி.
அன்புடன்,
வா.மணிகண்டன்.
www.pesalaam.blogspot.com

அன்புள்ள மணிகண்டன்,

இந்த வாதங்கள் மட்டுமல்ல இத்தகைய எந்த வாதங்களுமே என்னை பாதிப்பதில்லை. நான் உங்களிடம் மட்டுமல்ல அத்தனை நண்பர்களிடமும் கோருவதே அப்படி பாதிக்க அனுமதிக்காதீர்கள், பாதிப்பதை தடுக்க முடியவில்லை என்றால் முழுமையாக ஒதுங்கிவிடுங்கள், படிக்கவே படிக்காதீர்கள் என்பதே. சில்லறை விவாதங்கள் அளவுக்கு புனைவுத்திறனை பாதிக்கும் விஷயம் வேறில்லை. அதற்கு அடுத்ததாக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது சில்லறை விஷயங்கள் நம் படைப்பில் கண்டு பாராட்டப்படுவது.

இந்தக் குற்றச்சாட்டுகளையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் தமிழில் கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக விமர்சனங்கள் செய்துவருகிறேன். நேர்மையான ஒரு விமரிசகன் ஒரு படைப்பை நல்லது என்றால் அதன் வழியாக நூறு படைப்புகளை நிராகரிக்கிறான். அந்த நூறு பேருக்கும் மனக்கசப்பை அளிக்கிறான். அதிலும் நான் மிகக்கூர்மையாக, கறாராகச் சொல்பவன். அப்படியானால் எத்தனை கசப்பு இருக்க வேண்டும்? அந்தக் கசப்பு என் மீது இருப்பதில் ஆச்சரியமே இல்லை.

விமரிசகன் ஒருவன் புனைகதைகளும் எழுதினான் என்றால் அது இன்னமும் சிக்கலானது. அந்த நூறுபேரும் வன்மத்துடன் பாய்வதற்காக அவன் தன் கதைகளை திறந்து வைக்கிறான் அல்லவா? அதை நான் இருபதாண்டுக்காலமாகச் செய்து வருகிறேன். அது ஒரு வெல்விளி.

அப்படி இருந்தும் என் படைப்புகளைப்பற்றி இன்று வரை ஆணித்தரமான மறுப்புகள் அல்லது நிராகரிப்புகள் எத்தனை வந்துள்ளன? போகிறபோக்கில் மேலோட்டமாக ஏதாவது சொல்வார்கள். சொல்பவனின் தகுதியின்மைக்குச் சான்றாக அந்த வரிகள் இருந்துக்கொண்டிருக்கின்றன. அல்லது சில்லறை பிழைகண்டுபிடிப்புகள் — அப்போதுகூட உருப்படியான பிழைகள் ஏதும் இன்றுவரை சுட்டப்பட்டதில்லை.

இது எனக்கு நானே வைத்துக்கொண்ட அறைகூவல், சோதனை. என்னை நானே தாண்டிச்செல்வதற்கான முயற்சி. தமிழ் அறிவியக்கத்தின் பெருபகுதியை எனக்கு எதிரான சக்தியாக நிறுத்திக்கொண்டு இந்த முரணியக்கத்தை நிகழ்த்துகிறேன். இதில் இக்கணம் வரை நான் மிக தூரத்தில் முன்னகர்ந்துகொண்டுதான் இருக்கிறேன் .இது புதுமைப்பித்தனும் தனக்கு விட்டுக்கொண்ட அறைகூவல்தான்.

இதையே இந்தக் கிசுகிசுக்கள் குறித்தும். இத்தனை எழுதும் ஓர் எழுத்தாள- விமர்சகனைப் பற்றி இத்தனை மேலோட்டமாக, ஆதாரமில்லாத சில விஷயங்களை கிசுகிசுக்க மட்டுமே முடிகிறதென்றால் அது எத்தனை பெரிய சான்று இல்லையா? உண்மையில் இவ்வரிகள் அளித்த மன எழுச்சியும் தன்னம்பிக்கையும் சாதாரணமானதல்ல.

இத்தகைய ஒரு தொடர் செயல்பாட்டில் பிழைகள் கண்டிப்பாக நிகழக்கூடும். கவனமின்மை காரணமாக பாரபட்சங்கள் நிகழக்கூடும். ஆனால் என் கடுமையான விமரிசகர்கள்கூட இத்தனை அபத்தமாக சிலவற்றை மட்டுமே சொல்லமுடிகிறது என்பது அதிகமாக ஏதும் பிழை நிகழவில்லை என்பதற்கான நற்சான்றிதழ்.

1. இந்த இணையதளத்தில் என்ன சமரசம் செய்துகொண்டிருக்கிறேன் என்பதை இதை வாசிக்கும் எவருமே மதிப்பிடலாம். என் எழுத்துக்கான எனக்கான தளம் இது. இதில் என் விருப்பப்படி எனக்கான வாசகர்களுக்காக மட்டுமே எழுதுவேன் என்று அறிவித்து இந்த இணையதளத்தை தொடக்கம் முதல் நடத்தி வருகிறேன். சென்ற இருவருடங்களில் வந்த பல மிகக் கனமான நூல்கள் அனைத்தும் இந்த இணையதளத்தில் வெளிவந்தவை. ‘ஈழ இலக்கியம் ஒரு பார்வை’ ‘இந்தியஞானம்’ ‘புதியகாலம்’ போன்று பல. இந்நூல்களை விட தரமான, கனமான எந்த நூல்கள் சென்ற இருவருடங்களில் தமிழில் வெளிவந்துள்ளன?

நான் இன்றுவரை எழுதிய விஷயங்களின் உச்சநிலை வெளிப்பாடுகள் பல இந்த இணையதளத்திலேயே வந்துகொண்டிருக்கின்றன கீதைமுதல் இன்றைய காந்தி. இவ்விமரிசனங்களைச் சொல்பவர்களில் எத்தனைபேரால் இவற்றை சாதாரணமாக வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியும் என்றே எனக்கு தெரியவில்லை. இது எதையுமே படிக்காமல், புரிந்துகொள்ள முடியாமல் செய்யப்படும் ஒரு குத்து மதிப்பான பேச்சு மட்டுமே

பீடத்தை உருவாக்க இந்த இணையதளத்தை நான் நடத்துகிறேன் என்பதையும் இதன் பக்கங்களை வைத்தே மதிப்பிடலாம். இந்த இணையதளம் வாசகர்களை ‘தாஜா’ செய்து திரட்டுவதில்லை. அவர்களை சீண்டுகிறது, உடைக்கிறது, சோதிக்கிறது. இதில் ஏதேனும் ஒரு விஷயத்தால் சீண்டப்படாமல் எத்தனை வாசகர்கள் இதை வாசித்திருப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள் — நீங்கள் உட்பட. இது விவாதிக்கவே அறைகூவுகிறது

அதை மீறி ‘பீடம்’ உருவானால் அது காலம் கலைஞனுக்கு அளிக்கும் பீடம். அவனுக்குரிய பீடம் அது. உலகெமெங்கும் கலைஞர்கல் அமர்ந்திருக்கும் பீடம். அந்த பீடத்தின் முன் பிறர் தலைவணங்கித்தான் ஆகவேண்டும். முடியாதவர் மூலையில் அமர்ந்து பொருமவும் செய்யலாம்

2 நான் இன்றுவரை எந்தெந்த ஆக்கங்களை பற்றி பேசியிருக்கிறேன் என்று ஒரு பட்டியல் போட்டு அதில் எவர் என் நண்பர்களாக இருந்து எழுத ஆரம்பித்ததும் என்னால் விலக்கப்பட்டவர்கள் என்று சொல்லி நிரூபிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது? அப்படி ஒரே ஒருவரைப் பற்றி சொல்லட்டும் .

சமீபத்தில் நான் எழுதிய கட்டுரைகளை பார்ப்போம். யுவன் சந்திரசேகர், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் என் நண்பர்களாக இருந்து எழுத வந்து இன்றும் நண்பர்களாக நீடிப்பவர்கள். இப்படி குறைந்தது 10 பேரையாவது சொல்லமுடியும். இவர்களில் பலருக்கு அவர்களின் ஆரம்பகால எழுத்துக்களை வடிவமைக்க, பிரசுரிக்க நான்தான் உதவிசெய்திருப்பேன்.

அதேபோல சு.வெங்கடேசன் போன்றவர்கள் என் மிகப்பரிய எதிரிகளாக அறியப்பட்டவர்கள். அப்படி பேசியவர்கள், எழுதியவர்கள். பேசி எழுதி வருபவர்கள். அது அவர்களின் அரசியல்நிலைபாடு. கண்மணி குணசேகரன், ஜோ.டி.குரூஸ் போன்றவர்கள் எனக்கு அறிமுகமே இல்லாதவர்கள். இவர்களைப்பற்றி நான் எழுத இவர்களின் படைப்புகள் என்னைக் கவர்ந்ததே காரணம். அதேசமயம் எனக்கு தெரிந்தவர் என்பதற்காக என்னைக் கவராத ஒரு ஆக்கத்தை ஒருபோதும் நான் நன்று என்று சொல்வதில்லை.

காரணம் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். யாருமே வாசிக்காமல் ஒரு முன்னுரை, மதிப்புரை எழுதிவிட்டுச் செல்பவன் அல்ல நான். உடனடியாக சிலநூறு எதிர்வினைகள் எனக்கு வரும். அந்த வாசகர்கள் என் நேர்மையை, ரசனையை நம்புகிறார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டவன்.

3. எனக்கு ‘உவப்பானவர்களை’ தானே நான் எழுதமுடியும்? இலக்கியம் வழியாக, எழுத்து வழியாக உவப்பானவர்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு ‘உவப்பற்ற’வர்கள் என்னை கடுமையாக எழுதியவர்கள் தரமான ஆக்கங்களைக் கொடுத்தபோது அவர்களின் ஆக்கங்களை முதன்முதலில் எடுத்து அறிமுகம் செய்து முன்வைப்பவனாகவே இக்கணம் வரை இருந்திருக்கிறேன். ஷோபா சக்தியோ, சு வெங்கடேசனோ இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போமே… இன்றைக்கு எனக்கு உவப்பில்லாமல் இருப்பவர்கள், என்னை உவக்காதவர்கள் ஒரே ஒரு நல்ல ஆக்கத்தை எழுதி நான் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன் என்றால் அவர்கள் அதை சுட்டிக்காட்டலாமே

இந்த ஒட்டுமொத்த விவாதத்தையே இப்படிச் குறுக்கலாம். தமிழில் வெளிவந்த எந்த நல்ல ஆக்கத்தை நான் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் புறக்கணித்திருக்கிறேன்? எந்த மோசமான ஆக்கத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் தூக்கிப்பிடித்திருக்கிறேன்? இவர்கள் அதை எடுத்துச் சொல்லி, அதற்கான காரண காரியங்களை விளக்கி எழுதலாமே. அதற்கு நான் பதில் சொல்கிறேன். அதுதானே இலக்கிய விவாதத்தின் வழி?

என் ரசனை மிக வெளிப்படையானது. காரணகாரியங்களை விரிவாகச் சொல்லாமல் ஒரு படைப்பைக்கூட நான் விமரிசித்ததில்லை. அந்த காரண காரியங்களுக்கு ஒரு தெளிவான தொடர்ச்சி உண்டு. அதன் வழியாக துலக்கமாக தெரியும் என்னுடைய பார்வை ஒன்று உண்டு. அந்தப்பார்வை சீரானது. அதில் முரண்பாடிருந்தால் சுட்டிக்காட்டலாம். அதற்காகவே அவை பிரசுரிக்கப்படுகின்றன. மனம் போன போக்கில் ஒன்றை சொல்லவும் முடியாது விடவும் முடியாது. நான் சொன்ன பல்லாயிரம் வாசகர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

*

நீங்கள் கோவை அரங்கில் அக்கேள்விகளை அரங்கில் கேட்டதில் தவறில்லை. அது தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் ஞானி பொறுமை இழந்ததிலும் காரணம் உள்ளது. இருபது வருடங்களாக இதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் — வேறு வேறு எழுத்தாளர்கள். இதற்கு விரிவாக திட்டவட்டமாக மீண்டும் மீண்டும் பதில் சொல்லப்பட்ட பிறகும் புதிய குரல்கள் கிளம்பிவருகின்றன. ஒரு ஆதாரம் கூட காட்டாமல் இதையே சொல்கிறார்கள். அதை ஞானியும் இருபதாண்டுகளாக, நிகழ் நடந்த காலம் முதல், கண்டுவருகிறார்.

பலரது முயற்சியால் பல வருடங்கள் கழித்து ஒரு கூட்டம் நிகழும்போதும் இதையேதான் பேசவேண்டுமா என்றுதான் அவர் கேட்டார். நான் எழுதிய இத்தனை பெரிய நாவல்கள் இருக்கின்றன, இத்தனை கதைகளும் கோட்பாடுகளும் என்னால் எழுதப்பட்டிருக்கின்றன, அவற்றைப்பற்றி பேச்சே இல்லாமல் மீண்டும் வம்புகளைத் தவிர எதையுமே என்னிடம் கேட்பதற்கில்லையா என்றுதான் அவர் சினம் கொண்டார்.

அவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயம் இதுவே. மிக கோபமாகக் கூட சொல்லியிருக்கிறார். ‘நீங்கள் இந்த வம்புகளின் தளத்தைவிட்டு விஷ்ணுபுரம் வழியாக வெளியே போய்விட்டீர்கள். கொற்றவை வழியாக முற்றிலும் புதிய இடத்துக்கு சென்றுவிட்டீர்கள். அங்கே வரக்கூடியவர்களை தவிர எவருமே உங்களிடம் பேச தகுதியற்றவர்கள். மற்றவர்களை புறக்கணித்துவிடுங்கள். பதில் சொல்லாதீர்கள்’ என்று அவர் எனக்கு பலமுறை ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆணையைத்தான் அங்கேயும் சொன்னார். அது என் ஆசானின் ஆணை.

அதை மிகப்பெரும்பாலும் நான் கடைப்பிடிக்கிறேன். மேடையில் நேரடியாக கேட்கப்படும்போது தவிர்க்க முடியாது. ஆகவே தான் மீண்டும் இப்பதில்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஈரோட்டில்…
அடுத்த கட்டுரைஞானக்கூத்தன்